மீனாளின் நீல நிறப்பூ
உதயசங்கர்
பத்து நிமிடங்களுக்கும் மேலாக
ராகவன் காலிங் பெல்லை அடித்துக்கொண்டே வாசலில் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கும்போது
மீனாள் உள்ளே சமையலறையில் மளிகைச்சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷெல்பின் முன்னால்
நின்று பேசிக்கொண்டிருந்தாள்.. காலிங்பெல் அடித்து கொண்டேயிருந்தது. அவளுக்கும் கேட்டது.
ஆனால் அவளுக்கு முன்னால் கண்ணாடி பாட்டிலில் இருந்த கடுகு அவளிடம்
“ அதெல்லாம் உன் பிரமை.. காலிங்
பெல் அடிக்கவில்லை.. நீயே யோசித்துப்பார். சின்னவயசில் ராத்திரி தூங்கிக் கொண்டிருக்கும்
போது இரண்டு மிருகங்களின் உறுமல் சத்தம் கேட்டது என்று அலறியிருக்கிறாய்… அப்போதெல்லாம்
உன் அம்மா திட்டியிருக்கிறாளே.. என்னடி பிரமையா உனக்கு? என்று திட்டினாளே! மறந்து விட்டாயா?.....”
“ எனக்கென்னவோ நிஜமாவே காலிங்
பெல் சத்தம் கேட்கிற மாதிரியே இருக்கு..”
கடுகுக்குக் கோபம் வந்து முகத்தைத்
திருப்பிக் கொண்டது. இப்படித்தான் மீனாள் சொல்வதை யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள்.
அருகில் இருந்த துவரம்பருப்பு தன்னுடைய குரலை உயர்த்தியது.
“ ஏம்மா மீனா என்னையை மறந்துட்டீயே…
நாளைக்கு ஒரு நாள் சாம்பார் வைக்கலாம்.. அவ்வளவுதான் இப்பவே வாங்கி வச்சுக்கோ.. உன்
மாமனார் கிட்டே வாங்கிட்டு வரச்சொல்லி ஞாபகப்படுத்திக்கோ.. சும்மா அசடு மாதிரி ஷெல்பை
பார்த்துகிட்டே நிற்காதே..”
“ காலிங் பெல் சத்தம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு
கேட்குதில்லை.?.”
” ஆமா கேக்கும்.. கேக்கும்.. இவளுக்கு
மட்டும் தனியா கேக்கும்..”
அவள் உடனே து.பருப்பு பாட்டிலை
எடுத்துப் பார்த்தாள். அவளுடைய முந்தானையால் பாட்டிலை ஒரு தடவை துடைத்தாள். பாட்டிலைத்
தூக்கி வெளிச்சத்தில் பார்த்தாள். உண்மைதான் ஒரு நாளுக்குத்தான் சாம்பார் வைக்கலாம்.
அவளுடைய விரல் பட்ட இடத்தில் ரேகையின் தடம் படிந்திருந்தது. உடனே அதற்காகவே வைத்திருந்த
துணியை எடுத்துத் துடைத்தாள். மறுபடியும் சன்னல் வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தாள்.
முகத்தில் ஒரு சிறு திருப்தி. இருந்த இடத்தில் து.பருப்பு பாட்டிலை வைக்கும்போது து.பருப்பு
“ என்ன பதிலைக்காணோம்..” என்று
கேட்டது. ஒரு கணம் அடுக்களை வாசல்பக்கம் முகத்தைத்திருப்பி காதைத் தீட்டினாள். இப்போதும்
காலிங்பெல் சத்தம் கேட்டது. தலையை ஆட்டி அந்தச் சத்தத்தை விரட்டினாள். து.பருப்பு இன்னமும்
அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
” எனக்கு மாமாவைப் பார்த்தாலே பயம்மாருக்கு… அவர்
பார்க்கும்போது உடம்பில ஏதோ ஊர்ற மாதிரி இருக்கு… எதேச்சையா காப்பியோ.. பாலோ.. கொடுக்கும்போது
அவர் விரல் பட்டாலே அதில ஒரு கெட்ட எண்ணம் என்னைத் தொட்டுப் பேசுது..”
என்ற அவளைப்பார்த்து தொலி உளுந்து
கெக்கெக்கே என்று சிரித்தது.
“ மீனா.. உனக்கு எல்லாமே பிரமை
தான் உன்னோட ஆறு வயசில ஒரு நாள் மதியம் பக்கத்து வீட்டு ஆண்ட்டி வீட்டுக்குப் போயிருந்தே..
ஆண்ட்டி இல்லை..ஆனால் அங்கிள் வா அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாம்னு சொல்லி ஒரு
சாக்லேட் கொடுத்தாரு.. விளையாடிகிட்டிருக்கும் போதே கவுனை அவுக்கச்சொன்னாரு.. அங்கிள்
உன்னோட உடம்பை முரட்டுத்தனமா அமுக்கினாரு.. உனக்கு உடம்பு வலித்தது… அழுகையா வந்துச்சி..
நீ அழ ஆரம்பித்தபோது…. ஆண்ட்டி வந்துட்டாங்க.. அவங்க போட்ட சத்தத்துல நீ கூப்பாடு போட்டு அழுதுட்டே.. பத்து
நாள் காய்ச்சல் வந்து கிடந்தே.. டைபாய்டு காய்ச்சல்னு சொல்லி ஆசுபத்திரியில் சேர்த்து
மறுபடியும் வந்தே… அதுக்கப்புறம் அப்பா தொட்டாக்கூட உனக்கு அந்த அங்கிள் தொட்ட மாதிரியே
இருந்துச்சி.. அருவெறுப்பா.. ஐய்யோ…உவ்வே… அந்த அங்கிள் பண்ணினதையே இன்னமும் நீ நினைச்சிகிட்டே
இருக்கே…”
மறுபடியும் காலிங்பெல் சத்தம்
கேட்டது. மீனாள்,
“ எனக்குக் குழப்பமா இருக்கு..
காலிங்பெல் சத்தம் கேட்டுகிட்டேயிருக்கே..”
“ நீ எப்ப குழப்பம் இல்லாம இருந்தே..?
இல்லாட்டி கலியாணம் முடிஞ்சி ஒரு வாரத்துக்கு ராகவனைத் தொடவிடலையே… எனக்கு ஒரு மாதிரி
இருக்கு.. எனக்கு ஒரு மாதிரி இருக்குன்னு சொல்லியே பக்கத்தில அண்டவிடலை… அவன் கடைசியில
என்ன செய்ஞ்சான்..வலுக்கட்டாயமா உன்னோட உறவு வச்சுகிட்டான்..”
என்று ப்ரு காபித்தூள் சொன்னதைக்
கேட்ட மீனாளின் கண்களில் கண்ணீர் திரண்டது.
“ நான் என்ன பண்ணட்டும்… எனக்கு
ஆம்பிளகளைக் கண்டாலே பிடிக்கல… பிளஸ் டூ படிக்கும்போது டியூஷன் போய்க்கிட்டிருந்தேன்…
முத்தாரம்மன் கோயில் பக்கத்தில இருந்த ஒயின்ஷாப்பிலேர்ந்து வெளியே வந்த ஒரு பொறுக்கி
நடுரோட்டில என்னைக்கட்டிப்பிடிச்சி…அதுதான் எனக்குத்தெரியும்.. நான் கத்திக்கூப்பாடு
போடறேன்… ரோட்டில போற ஒருத்தர் கூட பக்கத்தில வரலை.. நானே மல்லுக்கட்டி அவங்கிட்டேருந்து
பிடுங்கிட்டு ஓடினேன்… வீட்டுக்குப்போகிற வரை அழுதுகிட்டே போனேன்.. அம்மாட்ட சொன்னேன்..
அதுக்கு அவ நீ ஏண்டி அந்தத்தெரு வழியே போனேங்கிறா…. அப்பாவோ.. ஒம்மக ஒழுங்கா போயிருக்க
மாட்டாங்கிறாரு… “
முந்தானையால் கண்களில் வழிந்த
கண்ணீரைத் துடைத்தாள். பெருமூச்சு வந்தது. குக்கர் விசிலடித்தது. அவளுக்கு அந்தச்சத்தம்
எப்போதும் பிடிக்கும். ஒவ்வொரு விசிலும் வருவதற்கு முன்னால் சுர்ர் சுர்ர்னு சிணுங்கிக்கிட்டிருக்கும்
போது எந்தச் சிணுங்கலுக்கப்புறம் விசில் வரப்போகிறதென்று அவள் சரியாகச்சொல்லிவிடுவாள்.
சிலசமயம் அந்த விசிலோடு சேர்ந்து அவளும் விசிலடிப்பாள். ஐந்து விசில் வந்துவிட்டது.
அடடா.. நாலு விசிலுக்கு மேலே வைத்தால் இந்த அரிசி கொஞ்சம் குழைந்து விடுகிறது. எல்லாம்
இந்தப் ப்ரூ பாட்டிலிடம் பேசியதால் வந்த வினை. குக்கர் இருந்த பெரிய பர்னரை அணைத்தாள்.
சின்ன பர்னரில் இருப்புச்சட்டியைப் போட்டு எண்ணெய் ஊற்றினாள். எண்ணெய் அப்படியே சூடாக
சூடாக குமிழ்குமிழாக நுரை வந்தது. நுரை அடங்கியதும் எடுத்து வைத்திருந்த கடுகு உளுந்தம்பருப்பைப்
போட்டாள். கருப்பு வெள்ளை நிறத்தில் அடடா… டப் டிப் டப் டிப் என்று கடுகு வெடித்தது.
சின்னதாக நறுக்கி வைத்திருந்த சின்ன வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் போட்டு கண்ணகப்பையால்
கிண்டினாள். வெங்காயம் பொன்னிறமாய் பொரிந்ததும் பாகற்காய் சீவல்களைப் போட்டு புரட்டி
விட்டுக்கொண்டேயிருந்தாள். பச்சை நிறம், கருப்பு, வெள்ளை, வெளிறிய ரோஸ் நிறம், கரும்பச்சை
என்று நிறங்கள் எல்லாம் சேர்ந்து கலவையாக தெரிந்த நிறம் மீனாளுக்குப் பிடித்திருந்தது.
அவள் காய்கறி நறுக்கும்போது ஒவ்வொரு நிறமாக அருகருகில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பாள்.
காரட்டின் சிவப்புக்குப் பக்கத்தில் வெண்டைக்காயின் பச்சை. பீட்ரூட்டின் கருஞ்சிவப்புக்கு
அருகில் வெண்பச்சை முட்டைக்கோஸ், என்று நிறங்களின் அழகை ரசித்துக் கொண்டேயிருப்பாள்.
ஒவ்வொரு பொருளாய் போடப்போட நிறம்
மாறிக்கொண்டிருந்தது. பாகற்காயில் ரெண்டு உப்பையும் போட்டாள். மாமாவுக்கு அன்றாடம்
பாகற்காய் வேண்டும். டையபடிக்ஸ். லேசாய் நீர் தெளித்து மூடி வைத்தாள். அப்படி நிமிரும்போதுதான்
“ மீனா “ என்ற சத்தம் கேட்டது. உண்மையில் கேட்கத்தான் செய்கிறது. அவள் திரும்பும் போது
அடுக்களைச்சுவரில் ஒட்டியிருந்த டைல்ஸிலிருந்து ஒரு முகம் தோன்றியது. கோரமாய் இருந்த
அந்த முகத்தில் இருந்த புள்ளிகள் அம்மை தழும்புகள் விழுந்த மாதிரி மேடும் பள்ளமுமாய்
தெரிந்தன. அந்த முகத்தைப் பார்த்தமாதிரியும் இருந்தது. பார்க்காதமாதிரியும் இருந்தது.
எப்போதும் அடுக்களை டைல்ஸைத் துடைத்துக்
கொண்டேயிருக்க வேண்டும். அந்த வழுவழுப்பும் பளபளப்பும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் இப்போது அதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அந்த முகத்தைப் பார்க்கப்பிடிக்கவில்லை.
அதனால் நிமிர்ந்து பார்க்காமல் இருப்பு சட்டியிலிருந்த பாகற்காயை மீண்டும் மீண்டும்
கிண்டிக்கொண்டேயிருந்தாள். கரண்டியில் எடுத்து ஒரு துண்டை நசுக்கிப் பார்த்தாள். நசுக்கிப்பார்த்த
துண்டை வாயில் போட்டாள். வெந்து விட்டது. அப்பாடா
சமையல் முடிந்து விட்டது என்று ஆசுவாசமும் வந்தது. அய்யய்யோ அதற்குள் முடிந்து விட்டதே
என்ற ஏக்கமும் வந்தது. கேஸ் ஸ்டவ்வை அணைத்தாள். பாத்திரங்களை கழுவப்போட்டாள். பாத்திரங்களின்
கணங்..கணங்..சத்தம் அவளுக்கு உற்சாகமாக இருந்தது. திரும்பவும் பாத்திரங்களை எடுத்துப்
போட்டாள். அதே சத்தம். அவள் முகத்தில் புன்னகை தோன்றியது. சிங்கில் இருந்த பைப்பைத்
திறந்து விட்டாள். தண்ணீர் நுரையாகப் பொங்கியது. அந்த நுரைத்தண்ணீரில் கைகளை நீட்டினாள்.
கைகளில் தண்ணீர் படுகிற உணர்வேயில்லை. மேலே கரண்டிகள் வைத்திருந்த ஸ்டாண்டிலிருந்து
ஒரு குரல் கேட்டது.
“ எவ்வளவு நேரமா கத்திக்கிட்டிருக்கேன்….
கதவைத் திறக்காளான்னு பாரு..”
அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
உயரே ஓடிக்கொண்டிருந்த ஃபேன் மிக மெலிதான சத்தத்தில் முனகியது.
“ என்னைச் சுத்தம் செய்ஞ்சி எவ்வளவு
நாளாச்சி..”
அவள் நிமிர்ந்து பார்க்க ஃபேன்
தன் மீது படிந்துள்ள தூசியைக் காட்டியது. உயரே சுவரின் மூலையில் சிறிய நூலாம்படை இருந்தது.
அவள் முகத்தில் அதிருப்தியின் ரேகை ஓடியது. அவளுக்குத் தூசியோ, நூலாம்படையோ, அழுக்குத்துணிகளோ,
இருக்கக்கூடாது. அவளே ஒரு நாளைக்கு நாலுவேளை குளிப்பாள். ஒவ்வொரு முறை குளிக்கும்போதும்
துணிகளைத் துவைப்பாள்.
சமையலறை அவளுக்கு பாதுகாப்பாக
இருந்தது. இது அவளுடைய உலகம். இந்த உலகத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைவதில்லை. அவளுக்கு
மட்டும் தான் தெரியும். எப்போது சிலிண்டர் காலியாகும்? கோதுமை மாவு எத்தனை சப்பாத்திக்கு
வரும்? எவ்வளவு உப்பு போட்டால் சாம்பார் மணக்கும்? கொத்துமல்லித்துவையலுக்கு எவ்வளவு
புளி வைக்க வேண்டும்? பொன்னி அரிசிக்கு எத்தனை விசில் வைக்க வேண்டும்? டிகாஷன் காப்பித்தூள்
எப்படி இருக்க வேண்டும்? இதெல்லாம் அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
இரவில் இருண்டு அழுது வடிந்து
கொண்டிருக்கிற அடுக்களை அவள் நுழைந்ததும் தாயைக்கண்ட சேயைப் போல பொங்கிச் சிரிக்கும்.
அவளும் சிரிப்பாள். சில நாட்களில் நடுராத்திரி கூட படுக்கையறையிலிருந்து எழுந்து வந்து
அடுக்களை விளக்கை எரிய விட்டு பார்த்துக் கொண்டே நிற்பாள். அங்கே இருக்கும்போது அவளுக்குள்
ஒரு கதகதப்பு தோன்றும். அவளுடைய அம்மாவின் மடியில் தலை புதைக்கும்போது தோன்றுமே அதே
மாதிரி.
அவள் கைகளைக் கழுவத் தண்ணீரைத்
திறந்து விட்டாள். தண்ணீர் அவளிடம் சளசளவென்று,
“ நேத்திக்கி போட்ட மோட்டார்..
மறந்துராதே.. இன்னக்கி மோட்டார் போடணும்…”
என்று சொல்லிக்கொண்டே கீழிறங்கியது.
அவள் தெரியும் தெரியும் என்று தலையாட்டினாள். கைகளை சேலையில் துடைத்துக் கொண்டே தரையில்
கால்களை நீட்டி உட்கார்ந்தாள். இப்போதெல்லாம் கீழ்முதுகில் வலி சுளீரென்று வந்து வந்து
போகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பையில் கட்டி வந்து கர்ப்பப்பையை எடுத்து
விட்டபிறகு தான் இந்த வலி. முதுகைச் சுவரோடு சேர்த்து அழுத்தினாற்போல உட்கார்ந்தால்
கொஞ்சம் பரவாயில்லை. உட்கார்ந்து நீண்ட பெருமூச்சு விட்டாள். தலை கிர்ரென்றது. அப்படியே
மார்போனைட் ஒட்டிய தரையில் தலை சாய்த்தாள்.
அவளுடைய கன்னத்தில் மார்போனைட்டில்
இருந்த நீலநிறப்பூ மென்மையாகத் தொட்டது. உடம்பே குளிர்ந்தமாதிரி சில்லிட்டது. அவள்
கிறங்கிப்போய் கண்களை மூடினாள். அவள் ஒரு பூந்தோட்டக்கடலில் மிதந்து கொண்டிருந்தாள்.
வண்ண வண்ண நிறங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்தன. விதவிதமான பூச்சிகளின்
ரீங்காரம் காதுகளை நிறைத்தது. மஞ்சள் நிறவண்ணத்துப்பூச்சிகள் கூட்டமாய் பறக்கவும் பூக்களில்
உட்காரவுமாய் இருந்தன. தேன்சிட்டுகளின் கீச்சட்டம் ஏற்ற இறக்கங்களோடு இசையென இசைத்தது.
அவள் எல்லையில்லாத அந்தத் தோட்டத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடைய முதுகில் முளைத்திருந்த
சிறகுகள் அவள் பறக்கும் பூக்களின் வண்ணங்களில் பிரதிபலித்தது. அவளுடைய முகத்தில் அபூர்வமான
ஒரு அழகு மிளிர்ந்தது. அவள் பூக்களின் தேனைக் குடிக்க விரும்பினாள். அந்தத் தேன்சிட்டைப்போல
விர்ரென்று காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்க விரும்பினாள். தூக்கணாங்குருவிக் கூட்டில்
படுத்து உறங்க விரும்பினாள்.மூடிய இமைகளுக்குள் மீனாளின் கண்பாப்பாக்கள் அங்கும் இங்கும்
அலைந்து கொண்டிருந்தன. நெற்றி சுருங்கிச் சுருங்கி விரிந்தது. மீனாள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.
அவள் முகத்தில் அழகிய புன்னகை பூத்திருந்தது. அது நீலநிறத்திலிருந்தது.
வெளியே கூட்டம் கூடி கதவை உடைத்துக்
கொண்டிருந்தார்கள்.
நன்றி - செம்மலர்
அற்புதம்... ரசித்தேன்
ReplyDelete