Friday, 31 March 2017

விகடன் விருது -2016

விகடன் விருது -2016

மகிழ்ச்சி


2016-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த சிறார் இலக்கிய நூலாக மாயக்கண்ணாடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அதற்கான விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கம் வணிக வளாகத்திலுள்ள பிரம்மாண்டமான அரங்கில் நேற்று நடைபெற்றது. மாயக்கண்ணாடி நூலுக்கான விருதினை குழந்தைகள் நாடகச்செயற்பாட்டாளர் வேலுசரவணனும், கவிஞர் சுகிர்தராணியும் வழங்கினார்கள். மாயக்கண்ணாடி நூலினை புதுமையான முறையில் தயாரித்திருந்த நூல்வனம்பதிப்பக உரிமையாளரும் என் அன்புத்தம்பியுமான மணிகண்டனை மிக்க நன்றியுடன்  நினைவு கூர்கிறேன்.

இந்த நூலினைக்கவனப்படுத்திய தமிழ் இந்து பத்திரிகை, ஏற்கனவே மாயக்கண்ணாடி நூலுக்கு விருது வழங்கிய கலை இலக்கியப்பெருமன்றத்துக்கும், விகடன் குழுமத்துக்கும் மிக்க நன்றி!

தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களுக்கு இந்த விருதினைச் சமர்ப்பிக்கிறேன்.
நன்றி-
புகைப்படம் - பிரபு காளிதாஸ்

Wednesday, 29 March 2017

அவரவர் இடமே சொர்க்கம்..

அவரவர் இடமே சொர்க்கம்..

உதயசங்கர்
புலியூருக்கு வெளியே ஒரு பெரிய புதர்க்காடு இருந்தது. கருவேலமரங்களும், உடைமரங்களும், விளாமரங்களும் வேப்ப மரங்களும் அங்கங்கே இருந்தன. ஆனால் பெரும்பாலும் மஞ்சணத்திச் செடிகள், ஆவாரம்பூச்செடிகள், எலுமிச்சை புற்கள், கோரைப்புற்கள், வேலிக்காத்தான் செடிகள், ஊமத்தை, ஓரிதழ் தாமரை, ஆடு தின்னாப்பாளை, முசுமுசுக்கைக்கொடி, காட்டு அவரைக்கொடி, தூதுவளைக்கொடி, என்று பலவகை காட்டுச் செடிகளும், கொடிகளும் நிறைந்திருந்தன. காட்டு எலிகள், வெருகுப்பூனை, முயல்கள், குள்ளநரிகள், சுருட்டைப்பாம்பு, கட்டுவிரியன், கொம்பேறிமூக்கன், சாரைப்பாம்பு, நல்லபாம்பு, போன்ற பாம்புகளும், பூரான், சேடான், தேள், ஆட்காட்டிக்குருவி, கரிச்சான் குருவி, தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, தேன்சிட்டு, பனங்காடை, மரங்கொத்தி, மயில், மைனா, என்று பறவைகளும், கடுகைக்காட்டிலும் சிறியதாகவும் உள்ளங்கையளவு பெரியதாகவும் உள்ள பூச்சிகள் அந்தக்காட்டில் வாழ்ந்தன.
காட்டுக்கு அருகிலேயே வெள்ளாமைக்காடுகளும் இருந்தன. நாலைந்து பம்பு செட்டு கிணறுகளும் இருந்தன. பகலில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். இரவில் பம்புசெட்டு அறைக்கு வெளியில் விளக்கு எரியும். காட்டின் எல்லையில் இருந்த வேலிக்கருவைப்புதரில் ஒரு சுருட்டைப்பாம்பு முட்டைகள் இட்டு அடைகாத்தது. முட்டைகள் ஒவ்வொன்றாய் பொரிந்து குட்டிக்குட்டியாய் பாம்புகள் வந்தன. அவ்வளவு அழகாக இருந்தன. தோலின் வழவழப்பும் பளபளப்பும் அவற்றின் அழகை இன்னும் கூட்டின. அம்மாசுருட்டைப்பாம்புக்குப் பெருமையாக இருந்தது. அதன் ஏழு முட்டைகளும் பொரிந்து குஞ்சுகள் வந்துவிட்டன. போனதடவை பத்து முட்டைகளில் ஐந்து முட்டைகளை சாரைப்பாம்புஅண்ணன் தின்று விட்டான். ஐந்து குஞ்சுகள் வெளிவந்த சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வந்த மயில் ஒன்றைக் கொத்திக் கொண்டு போய் விட்டது. அதனால் இந்தமுறை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அம்மாசுருட்டைபாம்பு நினைத்தது.
முட்டையிலிருந்து வெளிவந்த குட்டிசுருட்டைப்பாம்புகள் துருதுருவென்று அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்தன. அவற்றிற்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. அம்மாசுருட்டைப்பாம்பு லேசாக விசிலடித்த மாதிரி குரல் கொடுத்தது. உடனே எல்லாக்குட்டிசுருட்டைபாம்புகளும் அம்மாவின் பக்கத்தில் வந்தன. அம்மாசுருட்டைப்பாம்பு பேசியது.
” எல்லோரும் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இந்தப் பெரிய காடு தான் நம்முடைய வீடு. இந்தக்காட்டுக்குள் உங்களுக்குத்தேவையான எல்லாம் கிடைக்கும். பூச்சிகள், முட்டைகள், ஏராளமாகக் கிடைக்கும். நமக்கு எதிரிகளும் உண்டு. அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு நான் சொல்லித்தாரேன். நமக்கு விஷம் கிடையாது. ஆனால் பூச்சிகளைக் கடிக்கலாம். ஒரே ஒரு எச்சரிக்கை. இந்தக்காட்டின் எல்லையைத் தாண்டக்கூடாது. சரியா? “
என்று சொன்னது. தலையை ஆட்டி ஆட்டி குட்டிசுருட்டைப்பாம்புகள் கேட்டுக் கொண்டிருந்தன. அதில் இருந்த ஒரு வாலு அம்மாவிடம்,
“ ஏன் காட்டை விட்டுப்போனா என்ன ஆகும்? “ என்று கேட்டது. அம்மாசுருட்டைப்பாம்பு அதைப்பார்த்து,
“ நாம் எல்லோரும் இயற்கையன்னையின் குழந்தைகள். இயற்கை தன்னுடைய குழந்தைகளுக்கு சில விதிமுறைகளைச் சொல்லி வைத்திருக்கிறாள்….”
என்று சொன்னது. உடனே மற்ற குட்டிசுருட்டைப்பாம்புகளும் சேர்ந்து கொண்டன.
“ யெம்மா..யெம்மா… அந்த விதிமுறைகளைச் சொல்லும்மா… சொல்லும்மா..”
என்று கொஞ்சின. அம்மாசுருட்டைப்பாம்பு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
“ ஒண்ணு பசிக்கும்போது மட்டும்தான் இரையைக் கொல்லவேண்டும்.ரெண்டாவது காட்டில் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது. எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு. மூணாவது புலியோ எலியோ பாம்போ பூரானோ ஈசலோ சிலந்தியோ எல்லோருக்கும் ஒரு இடம் உண்டு. இதுதான் இயற்கையன்னையின் விதிகள்.. என்ன புரிஞ்சிதா! “
என்று அம்மாசுருட்டைப்பாம்பு கேட்டது. எல்லோரும் தலையாட்டினார்கள். ஆனால் கேள்வி கேட்ட வாலு மட்டும் தலையாட்டவில்லை. அதற்கு அம்மா சொன்னதில் நம்பிக்கையில்லை. திருட்டு முழி முழித்துக்கொண்டு முன்னும்பின்னும் அலைந்து கொண்டிருந்தது.
இரவு வந்தது. அம்மாசுருட்டைப்பாம்பு குட்டிகளைக்கூட்டிக் கொண்டு எப்படி பூச்சிகளைப்பிடிப்பது என்று கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தது. காட்டின் எல்லையை ஒட்டி வெளிச்சம் தெரிந்தது. வாலு மட்டும் வெளிச்சத்தைத் திரும்பிப் பார்த்தது. ஏ யப்பா…என்ன வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் எத்தனை எத்தனை பூச்சிகள்! கொய்கொய்ன்னு பறந்து கொண்டிருந்தன. இங்கே இருட்டுக்குள் அலையறதை விட அங்கே போனால் வாயைத் திறந்து வைத்தால் கொத்துக்கொத்தாய் பூச்சிகள் வந்து விழுமே என்று நினைத்தது. அப்படியே கூட்டத்திலிருந்து ஜகா வாங்கி அந்த வெளிச்சத்தை நோக்கி வேகவேகமாக ஊர்ந்து சென்றது.
வெளிச்சம் ஒரு பம்பு செட்டு மோட்டார் அறையின் தலைமீதிருந்த விளக்கில் இருந்து வந்து கொண்டிருந்தது. மெல்ல வெளிச்சத்தில் ஊர்ந்து சென்ற வாலுசுருட்டைப்பாம்புக்குட்டிக்கு முன்னால் ஏராளமான பூச்சிகள் விழுந்து கிடந்தன. அவசர அவசரமாய் அந்தப்பூச்சிகளை விழுங்கியது. வயிறு நிறைந்து விட்டது. ஆனாலும் விடவில்லை. மேலும் மேலும் என்று தின்று கொண்டேயிருந்தது. நாளைக்கு அம்மாவையும் சகோதர, சகோதரிகளையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்தது. அதனால் அசையக்கூட முடியவில்லை. அப்போது மோட்டார் அறையிலிருந்து வெளியே ஒரு ஆள் வந்தான். அவன் காலடிச்சத்தத்தை உணர்ந்தது வாலு. ஆனால் வேகமாக ஓட முடியவில்லை. அதற்குள் அந்த ஆள் பாம்பு..பாம்பு.. என்று கத்திக்கொண்டே அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி ஒரு பெரிய கம்பை எடுத்து அந்தக்குட்டிப்பாம்பை அடிக்க வந்தான். அவன் போட்ட சத்தம் கேட்டு இன்னொருத்தன் ஓடிவந்து குட்டிசுருட்டைப்பாம்பைப் பார்த்து “ டேய் நல்லபாம்பு…நல்லபாம்பு.. “ என்றான். குட்டிக்கு எப்படியாவது தப்பிக்கவேண்டும் என்று பதறியது. உடனே தலையைத்தூக்கி சீறியது. அவ்வளவு தான். இரண்டுபேரும் கொஞ்சதூரம் தள்ளிப்போய் நின்றார்கள். அவர்களில் ஒருத்தன்,
“ படம் எடுக்குது பாருடா….”
“ நல்லபாம்பு மாதிரி தெரியலடா.. சாதாரணப்பாம்பு மாதிரி தான் தெரியுது..”
“ எந்தப்பாம்பா இருந்தாலும் சரி கண்ணுல பட்டிருச்சில்ல.. அடிச்சிக்கொன்னிரணும்..” என்று மற்றவன் சொன்னான். இரண்டு பேரும் அடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
குட்டிசுருட்டை மெல்ல மெல்ல ஊர்ந்து இருட்டைப் பார்த்துப் போய்க்கொண்டிருந்தது. பார்க்கும்போது காடு வெகுதூரத்திலிருந்தது. போய்ச் சேரமுடியுமா? குட்டிசுருட்டைக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. இயற்கையன்னையின் விதிகள் ஞாபகம் வந்தன. சரி.. அவ்வளவு தான் நம்மகதை என்று நினைத்தது வாலு.
கம்பை வைத்திருந்தவன் குட்டிசுருட்டைக்கு மேலே கம்பை உயர்த்தினான். நடப்பதை எல்லாம் காட்டின் தேவதை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு குட்டிசுருட்டையின் மீது இரக்கம் தோன்றியது. உடனே அவள் வாயினால் காற்றை ஊதினாள். விர்ரென்று காற்று அங்கே வீசியது. மின்சாரக்கம்பிகள் காற்றில் அலைமோதின. தீப்பொறிகள் கிளம்பின. திடீரென அந்த இடமே இருள் மயமாகி விட்டது. இருளைப் பார்த்ததும் அந்த மனிதர்கள் பயந்து போனார்கள். குட்டிசுருட்டை வேகம் வேகமாக உடலை இழுத்துக்கொண்டு காட்டின் எல்லையைக் கடந்து காட்டினுள்ளே நுழைந்தது.
அம்மாசுருட்டைப்பாம்பு மற்ற குட்டிகளோடு வாலுவைத் தேடிக்கொண்டு எதிரே வந்தது. வாலுவைப் பார்த்ததும் கோபத்துடன்,
“ எங்கே போயிருந்தே இவ்வளவு நேரம்..? “ என்று கேட்டது. அதற்கு அந்த வாலு என்ன சொன்னது தெரியுமா?
“ அம்மா இனி நான் வெளிச்சத்துக்குப்போகமாட்டேம்மா..”

காட்டின் தேவதை கலகலவெனச் சிரித்தாள்.
நன்றி- தமிழ் இந்து மாயாபஜார்

Tuesday, 21 March 2017

இலவச ராஜா

இலவச ராஜா

உதயசங்கர்

கலியூர் நாட்டை கலி ராஜா ஆண்டு வந்தார். அவர் ஆடம்பரமாக வாழவேண்டும் என்று ஆசைப் பட்டார். உழைக்காமல் ஆடம்பரமாக இல்லையில்லை அவசியமாகக்கூட வாழமுடியுமா? முடியாதில்லையா! கலியூர் ராஜா ஆடம்பரமாக வாழ வழி என்ன என்று அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தார். அமைச்சர்களுக்கும் அந்த ஆசை இருக்காதா? அவர்கள் கலிராஜாவிடம், ” நாம் சேர்ந்து ஆலோசிக்கலாம் ராஜாவே! “ என்றார்கள். மூன்றுபகல் மூன்றுராத்திரி ஆலோசனை செய்தார்கள். கடைசியில் ஒரே ஒரு திட்டத்துடன் வந்தார்கள். கலி ராஜாவும் அந்தத்திட்டத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
மறுநாள் கலி நாட்டு மக்கள் தூங்கி எழுந்த போது நாடு முழுவதும் விளம்பரப்பலகைகள் ஒளி வீசின.
இலவசம்! இலவசம்! இலவசம்!
நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி! கலிராஜாவின் பிறந்த நாளுக்காக நாட்டு மக்களுக்கு விசிறி இலவசம்! கோடைகாலத்துக்கு ஏற்ற நெகிழி விசிறி இலவசம்!.
மக்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் காசில்லாமல் ஓசிக்கு விசிறி அரசாங்கம் கொடுக்கிறது என்றதும் அவ்வளவு பேரும் அடித்துப்பிடித்து போய் நாள் முழுவதும் வெயிலில் வரிசையில் நின்று, சண்டை போட்டு அந்த விசிறியை வாங்கிக் கொண்டு வந்தார்கள். ஒரு வாரம் கழிந்ததும் எல்லோர் வீடுகளிலும் வரி வசூல் அதிகாரிகள் வந்து காற்று வரி கேட்டார்கள். மக்கள் கேட்டபோது, விசிறி இலவசம். ஆனால் அதிலிருந்து வரும் காற்றுக்கு வரி கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் சொன்னதைக் கேட்ட மக்கள் வரியைக் கொடுத்தார்கள். அவர்கள் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டியில்,
“ இலவச விசிறி தந்த வள்ளல் கலி ராஜா! “ என்ற விளம்பரம் ஓடியது. அதில் ஒரு பெரியவர், ஒரு பெண், ஒரு குழந்தை எல்லோரும் பேசினார்கள். விசிறி இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையே இருண்டு போயிருந்தது. வள்ளல் கலி ராஜா கொடுத்த விசிறியினால் தான் ஒளி வீசுகிறது. விசிறி கொடுத்தவருக்கு காற்றுவரி கூடக் கொடுக்கக்கூடாதா? நான் கொடுப்பேன் காற்று வரி! நானும்! நானும்! அப்ப நீங்க?  என்று உணர்ச்சிகரமாகப்பேசினார்கள். அதை இருபத்திநாலு மணி நேரமும் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் நானும் கொடுப்பேன் காற்றுவரி என்று தானாகவே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
இதற்கு ஒரு வாரத்துக்குப் பிறகு நாட்டுமக்கள் எல்லோருக்கும் வீட்டிற்கு விறகு இலவசம் என்று கலிராஜா மறுபடியும் விளம்பரம் செய்தார். மக்கள் அடித்துப்பிடித்து இலவச விறகு வாங்கிக் கொண்டு வந்தனர். அதற்கு ஒரு வாரத்துக்குப் பின்னர் விறகு எரியும்போது வருகிற தீ வரி என்று அதிகாரிகள் வந்து வசூல் செய்தனர். மக்களும் காற்று வரி சரி என்றால் தீ வரியும் சரிதான் என்று கொடுத்தார்கள்.
இப்படியே மக்கள் இலவசங்களை வாங்கிப் பழகி விட்டனர். அதனால் எங்கு சென்றாலும் இலவசம் வேண்டும் என்றார்கள்.
காய்கறி வாங்கினால் கறிவேப்பிலை இலவசம் .
இரண்டு தோசை வாங்கினால் ஒரு வடை இலவசம்
கோழிக்கறி வாங்கினால் முட்டை இலவசம்
இரண்டு சேலை வாங்கினால் ஒரு சேலை இலவசம்
இரண்டு டர்கர் வாங்கினால் ஒரு டஸ்ஸா இலவசம்
என்று நாடு முழுவதும் இலவச அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன. மக்களும் இலவச அறிவிப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு வாரம் எந்த இலவச அறிவிப்பும் வரவில்லை என்றால் வேண்டும் வேண்டும் இலவசம் வேண்டும் என்று போராட்டம் செய்தனர்.
கலிராஜா இல்லாத வரிகளை எல்லாம் போட்டார். அரண்மனைகள் பத்து கட்டினார். காலை, முற்பகல், மதியம், முன்மாலை, மாலை, முன்னிரவு, இரவு, என்று வேளைக்கு ஒரு அரண்மனையில் தங்கினார். தங்கத்தினால் சட்டை, மேலாடை, உள்ளாடை, என்று செய்து போட்டுக் கொண்டார். மந்திரிகளோ கலிராஜாவை விட ஒரு படி மேலே போனார்கள். அரசாங்க நிலத்தை எல்லாம் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். அதிகாரிகளும் வரிவசூல் செய்த பணத்தில் ஊழல் செய்தனர்.
மக்கள் இலவசங்களுக்காகக் காத்துக் கிடந்தனர். வேலைக்குப் போகவில்லை. வரி கொடுக்க முடியவில்லை. சோம்பேறியாக மாறி விட்டார்கள். எல்லோர் வீடுகளிலும் சோம்பல் தேவதை கூப்பிடாமல் வந்து சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டாள். இலவசங்கள் குறைந்தன. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டார்கள். சோம்பல் தேவதைக்கே போரடித்து விட்டது. அவள் அவளுடைய அக்காவான அறிவு தேவதையை அழைத்தாள். கலியூர் மக்களின் நிலைமையைச் சொன்னாள்.
கலியூர் நாட்டில் மழைக்காலம் தொடங்க இருந்தது. விவசாயம் செய்யாமல் நிலங்கள் தரிசாகக் கிடந்தன. மறுநாள் அறிவுதேவதை மாறுவேடத்தில் ஒரு விளம்பரம் செய்தாள்.
“ இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்ன வென்றால் நாட்டில் உள்ள நிலங்களில் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஒரு கோப்பை கம்மங்கூழ் இலவசம்.”
“ நிலங்களில் உள்ள கல், களை, குப்பை, இவற்றைப் பொறுக்கிக் கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு அவற்றின் எடையளவு கேப்பை தானியம் இலவசமாகக் கொடுக்கப்படும் ”
“ மண்ணைக்கிளறித் தோண்டுபவர்களுக்கு சாப்பாடு இலவசம் “
“ விதை விதைப்பவர்களுக்கு  அரிசி இலவசம் “
என்று நாளுக்கொரு விளம்பரம் செய்தாள். இப்போது நாடு முழுவதும் விவசாயம் நடந்தது. பயிர்கள் செழித்தன. விளைச்சல் பெருகியது. அப்போது மறுபடியும் ஒரு விளம்பரம் வந்தது.
“ உழைப்பினால் விளைந்த பயிர்களைப் பாருங்கள்! இது உங்கள் உழைப்பு. உழைப்பே உயர்வு! இலவசங்கள் வேண்டாம்! ஏமாறாதீர்கள்! ஏமாற்றாதீர்கள்! “
அறிவுத்தேவதையின் தந்திரத்தை நினைத்து மக்கள் மகிழ்ந்தனர். அவர்கள் உழைப்பின் அருமையை உணர்ந்து கொண்டார்கள்.
இப்போதும் கலிராஜா இலவசங்களுக்காக விளம்பரம் செய்கிறார். ஆனால் ஒரு ஈ காக்கா கூட இலவசங்களை வாங்கப்போவதில்லை. இலவசங்களை வாங்காததினால் வரிகள் போட முடியவில்லை. நாளாக நாளாக கலிராஜாவும் எளிமையே பெருமை என்ற உண்மையை உணர்ந்தார். மனம் மாறினார். கலியூர் மக்கள் மகிழ்ந்தனர்.

( நன்றி - வண்ணக்கதிர் )






Saturday, 18 March 2017

சிரிக்கும் காகம்

சிரிக்கும் காகம்

உதயசங்கர்
முட்டையிலிருந்தே வெளிவரும்போதே கோணமூக்கு காக்காவுக்கு குறும்பு அதிகம். கூட்டில் எப்போதும் தன்னுடைய சகோதரசகோதரிகளிடம் வம்பு இழுத்துக் கொண்டேயிருக்கும். எல்லோரும் கரமுர கரமுர என்று கத்திக் கொண்டேயிருப்பார்கள். அம்மாக்காக்கா எவ்வளவோ சொல்லிப்பார்த்தது. கேட்பதாக இல்லை. மற்றவர்களுக்கு இரை கொடுக்கும்போது தட்டிப்பறித்து விடும். அருகில் இருப்பவரைக் கொத்தித் தள்ளி விடும். ஒரு தடவை அதன் மூத்த சகோதரனை கூட்டிற்கு வெளியே தள்ளி விட்டது. நல்லவேளை. கூட்டின் விளிம்பில் கால்கள் சிக்கிக்கொண்டதால் பிழைத்தது. அம்மாக்காக்காவுக்குப் பொறுக்க முடியவில்லை. அடிக்கடி
“ காகாகா க்க்ர்ர்ர்ர்..ஒழுங்கா..இரு..காகா…க்ர்ர்ர்ர்ர்..கோணமூக்கா..ஒழுங்கா..இரு..”
என்று கத்திக் கொண்டே இருந்தது. குஞ்சுகளுக்கு எப்படா இறகுகள் முளைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தது. அந்த நாளும் வந்தது. கோணமூக்கனுக்கு இறகுகள் முளைத்து பறக்கத் தொடங்கியது. கூட்டிலிருந்து ஒவ்வொன்றாய் பறந்து வெளியேறியது.
இயற்கையின் துப்புரவுத்தொழிலாளர்கள் காகங்கள் தானே. எல்லாக்கழிவுகளையும் தின்று சுத்தப்படுத்துகிற வேலையை காகங்கள் செய்கின்றன இல்லையா. ஆனால் கோணமூக்குக்காக்காவுக்கு தானாகக் கிடைக்கிற உணவின் மீது நாட்டம் இல்லை. எவ்வளவு கிடைத்தாலும் அருகில் போகாது. மற்ற காகங்கள் உணவுப்பொருளைக் கண்ட உடன் காகாகாகா என்று கரைந்து எல்லோரையும் அழைத்து விடும். எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். கோணமூக்கன் மட்டும் தூரமாய் நின்று வேடிக்கை பார்க்கும். அப்படியே ஒய்யாரமாய் நடை பழகும். அப்போது அதன் அருகில் வேறு ஏதாவது காக்கா வாயில் உணவுடன் வந்து விட்டால் போதும் அவ்வளவு தான். உடனே அந்தக்காக்காவின் வாயில் இருந்து பிடுங்கிக் கொண்டு பறந்து போய்விடும்.
கோணமூக்கனுக்குச் சின்னவயதில் இருந்தே  பிடுங்கித் தின்பது பழக்கமாகி விட்டது. அதனால் எல்லாக்காகங்களும் கோணமூக்கனைக் கண்டால் அடித்துப் பிடித்து ஓடிப் போயின. அதுமட்டுமில்லை. ஒளித்து வைக்கும் பழக்கமும் இருந்தது. கிடைக்கிற வடைத்துணுக்குகள், ரொட்டித்துண்டுகள், இட்லித்துண்டுகள், எதுவாக இருந்தாலும் அவற்றை கற்கள் குவிந்திருக்கும் இடத்தில் கோணமூக்கால் கல்லைப் புரட்டி அதற்குக்கீழே ரொட்டித்துண்டை வைக்கும். மறுபடியும் கல்லைப்புரட்டி அதை மூடி வைத்து விடும். ஆனால் உடனே அந்த இடத்தை மறந்து விடும். மறுபடியும் பசிக்கும்போது இடத்தைத் தேடி கற்களை எல்லாம் புரட்டிப்போடும். ம்ஹூம்…. புரட்டிப்போட்ட கற்களைப் பார்த்து “ காகாகா..நீங்க தின்னுட்டீங்களா? க்க்கா கா..” என்று கத்தும்.
கோணமூக்கு காக்காவுக்கு தான் ரெம்ப புத்திசாலி என்று நினைப்பு. காலையில் எல்லாக்காகங்களும் மின்சாரக்கம்பியில் வரிசையாக உட்கார்ந்து பள்ளிக்கூடம் நடத்துவார்கள். அப்போது வயதான தாத்தாக்காகம் பழைய பழையக் கதையான பாட்டி வடைசுட்ட கதையில் தங்களுடைய மூதாதையரை நரி ஏமாற்றிய கதையைச் சொல்லும். உடனே கோணமூக்குக்காக்கா கோபத்துடன் ஏமாற்றிய நரியைப் பார்த்து காகாகாகா..க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என்று கத்தியது. தாத்தாக்காகம் இப்போது ஜாடியில் குறைவாக இருந்த தண்ணீரைக் குடிக்க கற்களைப் போட்டு தண்ணீரை மேலே வரவழைத்து குடித்த கதையைச் சொல்லும். உடனே கோணமூக்குக்காக்கா மகிழ்ச்சியில் கத்திக்கூப்பாடு போடும். உற்சாகத்தில் ஒரு சின்ன வட்டம் அடிக்கும். மற்ற காகங்கள் எல்லாம் என்ன இந்தப்பயலுக்கு கோட்டி பிடிச்சிருச்சா? என்று நினைப்பார்கள்.
ஒரு நாள் கோணமூக்கன் நகரத்தில் உள்ள தெருவில் பசியுடன்  மின்சாரக்கம்பியில் உட்கார்ந்து தெருவை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அப்பா வாங்கிக் கொடுத்த உளுந்துவடையைக் கையில் வைத்துக் கொண்டு அபி நடந்து வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த கோணமூக்கனுக்கு வாயில் எச்சில் ஊறியது. அவ்வளவு தான். ஒரே தவ்வலில் பறந்து போய் அபியின் கையில் இருந்த உளுந்துவடையைக் கவ்விக் கொண்டு மறுபடியும் மின்சாரக்கம்பியில் வந்து உட்கார்ந்து கொண்டது. வாயில் வடையுடன் கீழே பார்த்தது. அபி ஒரு கணம் மேலே வடையுடன் கம்பியில் உட்கார்ந்திருக்கிற காக்காவைப் பார்த்தான். மறுகணம் கீழே விழுந்து அழுது புரண்டான்.
தெருவில் அழுது புரண்டுகொண்டிருந்த அபியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் வயிறும் பசித்தது. என்ன செய்வது? கோணமூக்குக்காக்கா மெல்ல பறந்து வந்து அபியின் அருகில் இறங்கியது. அபியிடம் அந்த வடையைக் கொடுத்தது. வடை கையில் வந்த அடுத்த நொடி அபி சிரித்தான். வாயெல்லாம் பல்லாக ஹிஹிஹி என்று சிரித்தான். அதைப்பார்த்த கோணமூக்குக்காக்காவும் சிரித்தது. அபி வடையைத் தின்று கொண்டே இரண்டடி நடந்தான். பிறகு திரும்பி வந்து வடையைப் பிய்த்து கோணமூக்கனுக்குக் கொடுத்தான். வடையை காக்கா வாயில் வாங்கியதும் அபிக்குச் சிரிப்பு பொங்கியது. கெக்க்க்கெக்கெக்கே என்று சிரித்தான். வடையை விழுங்கிய கோணமூக்கனும் சிரித்தான்.
காக்க்க்கேக்க்கேக்கா…! காகாகாகேக்கே!

( நன்றி- சுட்டி விகடன் )

Thursday, 9 March 2017

சஞ்சீவி மாமா

 சிறார் இலக்கியம்
சஞ்சீவி மாமா

சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளரான கோ.மா.கோ.இளங்கோவின் சிறார் நாவலான சஞ்சீவி மாமா சிறார் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. யதார்த்தமான வாழ்வியலோடு பேச்சிராசுவின் பாலிய கால வாழ்வின் நினைவுகளை பேசுகிறது. எல்லோருடைய இளம்பருவத்திலும் சமூகத்தின் ஏற்றதாழ்வுகளைப் பற்றிய கேள்விகள் அரும்பியிருக்கும். பேச்சிராசு அவர்களுடைய ஊரில் உள்ள துப்புரவுத்தொழிலாளர்களைப் பற்றி யோசிக்கிறான். அதிலும் குறிப்பாக சஞ்சீவி மாமாவுடனான அவனுடைய உறவு, சொக்கத்தாயுடன் அவன் பேசும் உரையாடல், தன்னுடைய சொந்த சாதி கடைப்பிடிக்கும் சாதிவேற்றுமையைக் கண்டு ஏற்படும் கோபம், இயலாமை, என்று பேச்சிராசுவின் கதாபாத்திரம் தனித்துவத்தோடு விளங்குகிறது. 80-களில் இருந்த ஒரு சிற்றூரின் வாழ்வு அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நுட்பமான விவரணைகள் நாவலின் தரத்தை உயர்த்துகின்றன. தமிழ் சிறார் இலக்கியத்தில் தலித்துகளின் வாழ்வைப் பற்றி இவ்வளவு நெருக்கமாகப் பேசிய முதல் நாவல் சஞ்சீவி மாமா. மிக முக்கியமான வரவு.
வாழ்த்துக்கள் கோ.மா.கோ.இளங்கோ!
நாவலாசிரியரின் சுயவரலாற்றுக்குறிப்புகளும், பாலிய காலப்புகைப்படமும் கூடுதல் பலம் சேர்க்கிறது.

Wednesday, 8 March 2017

திருட்டு விளையாட்டு

திருட்டு விளையாட்டு

உதயசங்கர்

காட்டூர் நாட்டில் வெகுகாலமாக ராஜா இல்லை. ராஜா என்று ஒருவர் வேண்டும் என்று மக்கள் நினைக்கவும் இல்லை. மக்கள் சபை கூடும். அவர்களுடைய தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்வார்கள். யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. யாரும் யாரிடமிருந்தும் திருடவில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். காட்டூர் நாட்டுக்குப் பக்கத்தில் திருட்டூர் என்ற நாடு இருந்தது. இரண்டு நாட்டையும் நடுவில் ஒரு காடு பிரித்தது. திருட்டூர் நாட்டில் திருட்டு சாதாரணம். திருடர்கள் திருடிவிட்டு அந்தக்காட்டில் மறைந்து கொள்வார்கள். ஆனால் ஒருபோதும் அவர்கள் காட்டூர் பக்கம் வந்ததில்லை.
 ஒருநாள் திருட்டூரிலிருந்து திருடிவிட்டு காட்டுக்குள் ஒளிந்து ஓடிவந்த நாலுதிருடர்கள் காட்டூர் பக்கமாக வந்து விட்டார்கள். அவர்கள் நான்குபேரில் ஒருத்தன் பேர் பக்கா, இன்னொருத்தன் பேர் முக்கா, மற்றவன் பேர் அரைக்கா, இன்னுமொருவன் பேர் காக்கா. காட்டூருக்குள் நுழைந்த அவர்களுக்கு ஆச்சரியம். ராஜா இல்லை. மந்திரி இல்லை. தளபதி இல்லை. காவலர்கள் இல்லை. பொருட்கள் எல்லாம் வைத்த இடத்தில் வைத்தமாதிரி இருந்தன. யாரும் திரும்பிக் கூடப்பார்க்கவில்லை. எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்காத்திருடன் பல்லை இளித்தபடியே சொன்னான்,
” இப்படி ஒரு நாட்டுக்கு நான் ராஜாவானால் எப்படி இருக்கும்?”
என்றான். உடனே முக்காத்திருடன் சிரித்தபடியே,
“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் மந்திரியானால் எப்படி இருக்கும்? “
என்றான்.  அதைக்கேட்ட அரைக்காத்திருடன் புன்னகையோடு,
“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் தளபதியானால் எப்படி இருக்கும்?
என்றான். கொஞ்சமும் சிரிக்காமல் காக்காத்திருடன்,
“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் காவலனானால் எப்படி இருக்கும்?”
என்றான். நான்குபேரும் யோசித்தார்கள். திட்டம் போட்டார்கள். திருட்டூர் நாட்டிலுள்ள சில்லரைத்திருடர்களுக்குத் தகவல் சொன்னார்கள். காட்டூருக்கு வந்தால் நிறையப் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்றார்கள். உடனே சில்லரைத்திருடர்கள் காட்டூரை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள். காட்டூர் நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது பக்கா, முக்கா, அரைக்கா, காக்கா, திருடர்கள் வெகுளியான காட்டூர் மக்களிடம் சென்று,
“ உங்களைக் காப்பாற்ற ஒரு தலைவன் வேண்டும், ஆலோசனை சொல்ல ஒரு மந்திரி வேண்டும், காவல்படைக்கு ஒரு தளபதி வேண்டும், காவலுக்கு காவலர்கள் வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நல்லவர்களாக இருக்கிற உங்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.. எங்களுக்கு நீங்கள் எதுவும் தரவேண்டாம்.. நாங்கள் உங்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கிறோம்… “
என்றார்கள். காட்டூர் நாட்டு மக்களும் அதைக்கேட்டு மகிழ்ச்சியில் கை தட்டினார்கள். உடனே நான்கு திருடர்களும் சேர்ந்து காட்டூர் நாட்டுக்குள் வந்த சில்லரைத்திருடர்களை விரட்டியடித்தனர். காட்டூர் மக்களும் மகிழ்ந்தனர். பிறகு காட்டூர் நாட்டின் ராஜாவாக பக்காத்திருடன் முடி சூடினான். மந்திரியாக முக்காத்திருடன் பதவி ஏற்றான். தளபதியாக அரைத்திருடன் பதவி ஏற்றான். காவலனாக காக்காத்திருடன் பதவி ஏற்றான். பதவி ஏற்றதும் நான்கு திருடர்களும் சேர்ந்து மக்களுக்கு விளையாட்டுப்போட்டி ஒன்றை அறிவித்தனர்.
என்ன விளையாட்டு தெரியுமா? திருட்டு விளையாட்டு. மற்றவர்களுக்குத் தெரியாமல் அடுத்தவர் பொருளை யார் திருடிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குப் பரிசு. என்று முரசறைந்து அறிவித்தனர். அவ்வளவுதான் காட்டூர் நாட்டு மக்கள் ஒவ்வொருத்தரும் ராத்திரியில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் பொருளை எடுத்து மறைத்து வைத்தனர். மறுநாள் அரண்மனைக்குக் கொண்டு போய் தாங்கள் திருடிக் கொண்டு வந்த பொருட்களைக் காட்டி பரிசுகள் பெற்றனர். இப்படியே திருடித்திருடி மக்களுக்கு எந்தப்பொருளையும் நேர்வழியில் வாங்க மறந்தனர். எல்லாவற்றையும் திருடினர். நாடு முழுவதும் ராத்திரியில் விழித்து திருடுவதற்காக அலைந்து கொண்டிருந்தனர். ஒருவர் திருடிய பொருளை மற்றவர் திருடினர். அவர் எடுத்துக் கொண்டு வந்ததை மறுபடியும் இன்னொருத்தர் திருடினார். இப்படியே நாடு முழுவதும் திருட ஆரம்பித்தது.
நான்கு திருடர்களும் சும்மா இருப்பார்களா? அவர்களும் ராத்திரி முழுவதும் காட்டூர் முழுவதும் அலைந்து திரிந்து திருடினார்கள். பக்காத்திருடனான ராஜா மலைகளைத் தோண்டித் தன்னுடைய அந்தப்புரத்தில் கொண்டு போய் வைத்தான். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சாப்பிட்டான். முக்காத்திருடனான மந்திரி  ஆறுகளை பொட்டலங்களாக கட்டி வெளிநாட்டுக்கு விற்றான். அரைத்திருடனான தளபதி நிலங்களை சுருட்டி மடக்கி தன்னுடைய பெட்டிகளில் அடைத்து வைத்தான். காக்காத்திருடனான காவலன் காடுகளில் இருந்த செம்மரங்கள், சந்தன மரங்களை வெட்டி அநுமதிச்சீட்டோடு திருட்டூர் நாட்டுக்குக் கடத்தினான். இப்படி காட்டூரும் திருட்டூராக மாறிக் கொண்டிருந்தது.
எல்லோரும் உழைக்காமல் திருடிக்கொண்டிருந்தால் என்னா ஆகும்?
காட்டூரில் வறுமை குடி வந்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அடித்துக் கொண்டனர். ஆனாலும் இரவில் திருடுவதை நிறுத்தவில்லை. நான்கு திருடர்களும் தினம் நகர்வலம் வரும்போது இதைக் கண்டு ரசித்தனர். காட்டூர் மக்கள் திருடர்களாக மாறியதைக் கண்ட உழைப்புதேவதை வருந்தியது.
மறுநாள் இரவில் நிலா வரவில்லை. சூரியன் உதித்தது. எங்கும் இருளே இல்லை. யாராலும் திருட முடியவில்லை. மறுநாளும் அப்படியே இரவிலும் சூரியனே உதித்தது. ஒருவாரத்துக்குப் பின்னர் மக்கள் தங்களுடைய வேலைகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். இந்த ஒருவாரத்தில் தாங்கள் எப்படியெல்லாம் நடந்திருக்கிறோம் என்று யோசித்தனர். அவமானமாக இருந்தது. உழைப்புதேவதைக்கு நன்றி சொல்லினர். ஆனால் நான்கு திருடர்களும் சும்மா இருப்பார்களா?
யாரும் உழைக்கக்கூடாது திருடித்தான் வாழவேண்டும் என்று சட்டம் போட்டான் பக்காத்திருடனான ராஜா. அந்த சட்டத்தை மீறினால் என்ன என்ன தண்டனைகள் என்று முரசறைந்து அறிவித்தான் முக்காத்திருடன். அந்தத்தண்டனைகளை நிறைவேற்ற அரைத்திருடனும் காக்காத்திருடனும் ஆயுதங்களோடு தயாரானார்கள்.
இதைக் கண்ட உழைப்பு தேவதைக்குக் கோபம் வந்தது. உழைப்புதேவதை காட்டூர் மக்களின் உடம்பில் புகுந்தது. அவ்வளவு தான் ஆவேசம் கொண்ட காட்டூர் மக்கள் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள். அந்தப்புரத்தில் துண்டு துண்டுகளாகப் பதுக்கி வைத்திருந்த மலைகளை எல்லாம் ஒன்று சேர்த்து அந்தந்த இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மலையில் போட்டு புதைத்து விடுவதாக மிரட்டினார்கள். பக்காத்திருடன் பயந்து கொண்டே சரி சரி என்றான்.  முக்காத்திருடன் பொட்டலங்களாக போட்டு வைத்திருந்த ஆறுகளை விடுவித்தனர். காட்டூர் நாட்டில் பெய்யும் மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகி விடாமல் ஆறுகளில் குளங்களில் கண்மாய்களில் குட்டைகளில் கொண்டு சேர்க்க வேண்டும். இல்லையென்றால் அவனை கரை புரண்டோடும் ஆற்றில் தள்ளி விடுவோம் என்று பயமுறுத்தினர். அவனும் பயந்து போய் சரி சரி என்றான். நிலங்களை சுருட்டி மடக்கி வைத்திருந்த அரைத்திருடனைப் பிடித்து நிலங்களை விரித்தனர் அதில் அவன் வருடம் முழுதும் உழுது பயிர் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவனை நிலத்தில் புதைத்து விடுவோம் என்று பயங்காட்டினார்கள். அவனும் பயந்து போய் சரி சரி என்றான். மரங்களை வெட்டிக்கடத்திய காக்காத்திருடனுக்கு காட்டூர் நாடு முழுவதும் கோடி மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவித்தனர். இல்லையென்றால் மரங்களை அவன் பிளந்தது போல அவனைப் பிளந்து விடுவோம் என்று பயமுறுத்தினார்கள். அவனும் பயந்து போய் சரி சரி என்றான்.
இப்போது காட்டூர் நாட்டுமக்கள் உழைக்கின்றனர். மகிழ்ச்சியாகச் சிரிக்கின்றனர். உழைப்புதேவதையும் சிரிக்கின்றாள்.
நன்றி- வண்ணக்கதிர், தீக்கதிர்


Tuesday, 7 March 2017

மண்ணாக மாறிய பொன்

மண்ணாக மாறிய பொன்

உதயசங்கர்

காணாவூர் நாட்டில் திருடர்களே கிடையாது. அவ்வளவு நல்ல நாடா என்று நினைக்காதீர்கள் ஏனென்றால் அந்த நாட்டு மக்களிடம் பணம் கிடையாது. பணம் இருந்தால் தானே திருடர்கள் திருட முடியும்! அந்த நாட்டு தோலிருக்க சுளை முழுங்கி ராஜாவும், பொன்னுக்கு வீங்கி மந்திரிகளுமே அந்த வேலையைப் பார்த்துக் கொண்டார்கள். மக்களிடம் இருந்து வரி, வட்டி, என்று வசூல் செய்து நாட்டு கஜானாவை பொற்காசுகளால் நிரப்பி விட்டார்கள். ஆனாலும் பேராசை விடவில்லை. மேலும் மேலும் மக்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டுவரி, வாசல் வரி, சன்னல்வரி, கதவுவரி, உணவுவரி, தோட்டவரி, காய்வரி, கனிவரி, உட்காரும் வரி, நிற்கும்வரி, நடைவரி, படுக்கும்வரி, உறங்கும் வரி, இரவு வரி, பகல்வரி, என்று ஏராளமான வரிகளைப் போட்டார்கள். அப்புறம் இந்த வரிகள் எல்லாம் தினசரி மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு நாள் பத்து வெள்ளி குறையும். மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைவார்கள். ஆனால் மறுநாள் முப்பது வெள்ளி கூடிவிடும். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு தான் வேலைக்கு போவார்கள். தொலைக்காட்சியில் அவ்வப்போது தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா தோன்றி உரைவீச்சு வீசுவார். அதில் பெரும்பாலும் இன்னும் ஆயிரம்வருடங்கள் கழித்து காணாவூர் நாடு உலகின் தலைசிறந்த நாடாக மாறி விடும். அதுவரை மக்கள் இந்த சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கண்களில் கண்ணீர் வழிய உணர்ச்சிகரமாகப் பேசுவார். வேறுவழியின்றி மக்களும் பொறுத்துக் கொண்டார்கள். வேறு என்ன செய்ய முடியும்?
 அரண்மனை கஜானாவில் நிரம்பிய தங்கத்தை தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா என்ன செய்தார் தெரியுமா? தங்க இழைகளால் ஆன ஆடைகளில் வைரங்களைப் பதித்து காலை, மாலை, இரவு, என்று விதம் விதமாக உடுத்தினார்.
மக்கள் இருக்கும் ஓரிரு கைத்தறி ஆடைகளை அன்றாடம் துவைத்து உடுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ராஜாவோ ஒரு முறை உடுத்திய உடையை மறுமுறை உடுத்த மாட்டார். மந்திரிகள் உள்ளாடைகளைக் கூட தங்கத்தினால் போட்டார்கள். அது மட்டுமல்ல.  அரண்மனையில் இருபத்திநாலு மணிநேரமும் விழாக்கள் நடந்து கொண்டிருந்தது. இதுக்குத்தான் விழான்னு இல்லை. தோலிருக்க சுளை முழுங்கி ராஜா உறங்கி எழுந்ததுக்கு விழா. பல் தேய்ப்பதுக்கு விழா. குளித்தால் விழா. சாப்பிட்டால் விழா, பிறந்த நாள் விழா, பள்ளி சென்ற நாள் விழா, படிப்பு முடித்த நாள் விழா, அரண்மனை விழா, அந்தப்புர விழா, என்று…..கேட்கவே வேண்டாம்.. எப்போதும் விழாக்கள் தான். இப்படி இன்ன காரணம் என்றில்லாமல் அரண்மனையில் விழாக்கள் நடத்தி மக்களிடம் இருந்து வசூலித்த வரிகளை ஆடம்பரமாய் செலவு செய்தார்கள்.
இவ்வளவு இருந்தும் ஒரு நாள் தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா நகர்வலம் வரும்போது ஒரு வீட்டில் திருமணவிழா நடந்து கொண்டிருந்தது. அந்த விழாவுக்கு வந்தவர்கள் மணமக்களுக்கு பரிசுப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த தோலிருக்க சுளை முழுங்கி ராஜா இவ்வளவு வரிகளைப் போட்டும் இவ்வளவு பணம் மக்களிடம் இருக்கிறதே என்று பொறாமைப்பட்டார். உடனே பொன்னுக்கு வீங்கி மந்திரிப்பிரதானிகளைக் கூப்பிட்டார். இரண்டு பகல், இரண்டு இரவு ஆலோசனை செய்தார்கள். எதுக்கு தெரியுமா? மக்களிடம் இருக்கும் அத்தனை தங்கம் வெள்ளிக் காசுகளை பறிக்க வேண்டும். கடைசியில் ஒரு பொன்னுக்கு வீங்கி மந்திரி தான் புதிய யோசனையைச் சொன்னார். “ பேசாமல் அத்தனை தங்க, வெள்ளிக்காசுகளைச் செல்லாதுன்னு சொல்லிருவோம்… எல்லோரும் ஒரு வாரத்துக்குள்ளே அவங்கவங்க கிட்டே இருக்கிற காசுகளை அரண்மனை கஜானாவில் கொண்டு வந்து கொடுத்துரணும்…அதுக்குப் பதில் அவங்களுக்கு பானை ஓட்டுச்சில்லுகளைக் கொடுத்துருவோம்… இனி அது தான் காசுன்னு சொல்லிருவோம்…எப்பூடி? “
என்று சொன்னான். உடனே இன்னொரு பொன்னுக்கு வீங்கி மந்திரி,
“ எல்லோரும் தங்க, வெள்ளிக்காசுகளைக் கொண்டு வந்து கொடுத்த பிறகு ஓட்டுச்சில்லுக்காசுகள் செல்லாதுன்னு சொல்லிருவோம்… அப்புறம் மக்களிடம் எந்தப்பணமும் இருக்காதுல்ல..ஹி.ஹிஹி…”
என்று சொன்னான். அதைக்கேட்ட தோலிருக்க சுளைமுழுங்கி ராஜாவுக்கு சந்தோசமாகி விட்டது. உடனே அதற்கு ஒரு விழா எடுத்துக் கொண்டாடினார். நள்ளிரவில் மக்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் நடுநிசியில் முரசறைந்து தங்கம், வெள்ளி, காசுகள் செல்லாது என்றும் தெருவுக்குத் தெரு வைத்திருக்கும் அண்டாக்களில் அவரவர் கைவசம் வைத்திருக்கும் காசுகளைப் போட்டு விட்டு, அரசு அலுவலர் தரும் ஓட்டுச்சில்லுகளை வாங்கிக் கொண்டு போகவேண்டும். காசுகளைப் பதுக்கினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று காவலர்கள் கூவினார்கள்.
காலையில் எழுந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கால்காசு, அரைக்காசு என்று சேர்த்து வைத்திருக்கும் அத்தனை தங்கம், வெள்ளிக்காசுகளை கொண்டுபோய் அண்டாக்களில் போட்டார்கள். சிலர் ஓலமிட்டு அழுதார்கள். சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்த காசு போகிறதே என்று அழூதார்கள். அண்டா ஸ்டாண்டில் இருந்த அரசு அலுவலர் கொடுத்த ஓட்டுச்சில்லுகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள். சிலர் வாங்கி வரும்போதே ஓட்டுச்சில்லுகளை கைதவறி கீழே போட்டு விட்டார்கள். ஓட்டுச்சில்லுகள் அப்படியே தூள் தூளாக நொறுங்கிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஓட்டுச்சில்லுகளை முதலில் கடையில் வாங்கவில்லை. அதை எப்படிப் பத்திரப்படுத்துவது என்று தெரியவில்லை? மக்கள் குழம்பிப் போனார்கள்.
காணாவூர் அருகிலுள்ள காட்டில் குபரே மாளிகை கட்டி வாழ்ந்து வந்த குபேரனின் தேவதைகளுக்கு மக்களின் அழுகைச் சத்தம் கேட்டது. தேவதைகள் காணாவூர் நாட்டின் மீது பறந்து மக்களின் நிலைமையைப் பார்த்து வருந்தினார்கள். அவர்களுக்கு தோலிருக்க சுளைமுழுங்கி ராஜாவின் மீது கோபம் வந்தது. அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அரண்மனைக்குப் பறந்து சென்றார்கள்.
அங்கே தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா, அவனுடைய பொன்னுக்கு வீங்கி மந்திரிகளோடு தங்க நாணயக்குவியல்களின் மீது படுத்து உருண்டு புரண்டு கொண்டிருந்தார்கள்.
“ ஹா..ஹாஹாஹா… எல்லாத்தங்கமும் இனி என்னிடம் வந்து விடும்… நான் தங்கராஜா..இனி நான் தங்கராஜா.. ” என்று சிரித்துக் கொண்டிருந்தான். மந்திரிகளும் பல்லிளித்துக் கொண்டு, “ ஹா..ஹா…ஹா… நாங்க இனி தங்கமந்திரிங்க..” என்று கத்திக் கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த குபேரதேவதைகளுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவர்கள் தங்களுடைய சேலையிலிருந்து ஒரு நூலை உருவிப்போட்டார்கள். அவ்வளவு தான். அத்தனை தங்கமும் மண்ணாக மாறிவிட்டது. தோலிருக்க சுளை முழுங்கி ராஜாவும், பொன்னுக்கு வீங்கி மந்திரிகளும் மணல் குவியல்களில் புரண்டு கொண்டிருந்தார்கள். அதிர்ச்சி அடைந்த தோலிருக்க மலை முழுங்கி ராஜா எழுந்து அரண்மனைக்குள் ஓடினார். அவருடைய சேர்த்து வைத்திருந்த ஆபரணங்களைத் தொட்டார். அவை மண்ணாகி விட்டது. வயிறு பசிக்கிறது என்று சாப்பாட்டு மேசைக்குப் போனார். உணவைத் தொட்டார். அதுவும் மண்ணாகிவிட்டது. அந்தப்புரத்திற்குப் போனார். ராணியைத் தொட்டார். ராணி மண்சிலையாகி விட்டார். ஆசையோடு ஓடி வந்த குழந்தையைத் தூக்கினார். குழந்தையும் மண்ணாகி பொலபொலவென உதிர்ந்து விட்டது.
தோலிருக்க சுளை முழுங்கி ராஜா ஆசைப்பட்டு தொட்ட எல்லாம் மண்ணாகி விட்டது. பொன்னுக்கு வீங்கி மந்திரிகளும் தொட்டது எல்லாம் மண்ணாகி உதிர்ந்து விட்டன. எல்லோரும் அழுது கொண்டே அரண்மனைக்கு ஓடி வந்தனர். அரண்மனை கொலுமண்டபத்தில் தோலிருக்க சுளை முழுங்கி ராஜாவும் அழுது கொண்டே சிம்மாசனத்தில் உட்கார்ந்தார். அதுவும் மண்ணாகி உதிர தரையில் விழுந்தார். எல்லோரும் தரையில் உட்கார்ந்து ஆலோசித்தனர்.

 மக்களிடம் வாங்கிய தங்கம், வெள்ளிக்காசுகளைத் திரும்பக் கொடுக்கச் சொல்லி உடனே ஆணையிட்டார். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குபேர தேவதைகளும் அரண்மனை மீது உருவிப் போட்ட அவர்களுடைய சேலை நூலைத் திரும்ப எடுத்துக் கொண்டனர். மண்ணானது எல்லாம் மீண்டும் உயிர் பெற்றன. காணாவூரில் ஆனந்தம் அலையடித்துக் கொண்டிருந்தது.
நன்றி - மாயாபஜார் தமிழ் இந்து.