சிரிக்கும் காகம்
உதயசங்கர்
முட்டையிலிருந்தே வெளிவரும்போதே
கோணமூக்கு காக்காவுக்கு குறும்பு அதிகம். கூட்டில் எப்போதும் தன்னுடைய சகோதரசகோதரிகளிடம்
வம்பு இழுத்துக் கொண்டேயிருக்கும். எல்லோரும் கரமுர கரமுர என்று கத்திக் கொண்டேயிருப்பார்கள்.
அம்மாக்காக்கா எவ்வளவோ சொல்லிப்பார்த்தது. கேட்பதாக இல்லை. மற்றவர்களுக்கு இரை கொடுக்கும்போது
தட்டிப்பறித்து விடும். அருகில் இருப்பவரைக் கொத்தித் தள்ளி விடும். ஒரு தடவை அதன்
மூத்த சகோதரனை கூட்டிற்கு வெளியே தள்ளி விட்டது. நல்லவேளை. கூட்டின் விளிம்பில் கால்கள்
சிக்கிக்கொண்டதால் பிழைத்தது. அம்மாக்காக்காவுக்குப் பொறுக்க முடியவில்லை. அடிக்கடி
“ காகாகா க்க்ர்ர்ர்ர்..ஒழுங்கா..இரு..காகா…க்ர்ர்ர்ர்ர்..கோணமூக்கா..ஒழுங்கா..இரு..”
என்று கத்திக் கொண்டே இருந்தது.
குஞ்சுகளுக்கு எப்படா இறகுகள் முளைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தது. அந்த நாளும்
வந்தது. கோணமூக்கனுக்கு இறகுகள் முளைத்து பறக்கத் தொடங்கியது. கூட்டிலிருந்து ஒவ்வொன்றாய்
பறந்து வெளியேறியது.
இயற்கையின் துப்புரவுத்தொழிலாளர்கள்
காகங்கள் தானே. எல்லாக்கழிவுகளையும் தின்று சுத்தப்படுத்துகிற வேலையை காகங்கள் செய்கின்றன
இல்லையா. ஆனால் கோணமூக்குக்காக்காவுக்கு தானாகக் கிடைக்கிற உணவின் மீது நாட்டம் இல்லை.
எவ்வளவு கிடைத்தாலும் அருகில் போகாது. மற்ற காகங்கள் உணவுப்பொருளைக் கண்ட உடன் காகாகாகா
என்று கரைந்து எல்லோரையும் அழைத்து விடும். எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். கோணமூக்கன்
மட்டும் தூரமாய் நின்று வேடிக்கை பார்க்கும். அப்படியே ஒய்யாரமாய் நடை பழகும். அப்போது
அதன் அருகில் வேறு ஏதாவது காக்கா வாயில் உணவுடன் வந்து விட்டால் போதும் அவ்வளவு தான்.
உடனே அந்தக்காக்காவின் வாயில் இருந்து பிடுங்கிக் கொண்டு பறந்து போய்விடும்.
கோணமூக்கனுக்குச் சின்னவயதில்
இருந்தே பிடுங்கித் தின்பது பழக்கமாகி விட்டது.
அதனால் எல்லாக்காகங்களும் கோணமூக்கனைக் கண்டால் அடித்துப் பிடித்து ஓடிப் போயின. அதுமட்டுமில்லை.
ஒளித்து வைக்கும் பழக்கமும் இருந்தது. கிடைக்கிற வடைத்துணுக்குகள், ரொட்டித்துண்டுகள்,
இட்லித்துண்டுகள், எதுவாக இருந்தாலும் அவற்றை கற்கள் குவிந்திருக்கும் இடத்தில் கோணமூக்கால்
கல்லைப் புரட்டி அதற்குக்கீழே ரொட்டித்துண்டை வைக்கும். மறுபடியும் கல்லைப்புரட்டி
அதை மூடி வைத்து விடும். ஆனால் உடனே அந்த இடத்தை மறந்து விடும். மறுபடியும் பசிக்கும்போது
இடத்தைத் தேடி கற்களை எல்லாம் புரட்டிப்போடும். ம்ஹூம்…. புரட்டிப்போட்ட கற்களைப் பார்த்து
“ காகாகா..நீங்க தின்னுட்டீங்களா? க்க்கா கா..” என்று கத்தும்.
கோணமூக்கு காக்காவுக்கு தான் ரெம்ப
புத்திசாலி என்று நினைப்பு. காலையில் எல்லாக்காகங்களும் மின்சாரக்கம்பியில் வரிசையாக
உட்கார்ந்து பள்ளிக்கூடம் நடத்துவார்கள். அப்போது வயதான தாத்தாக்காகம் பழைய பழையக்
கதையான பாட்டி வடைசுட்ட கதையில் தங்களுடைய மூதாதையரை நரி ஏமாற்றிய கதையைச் சொல்லும்.
உடனே கோணமூக்குக்காக்கா கோபத்துடன் ஏமாற்றிய நரியைப் பார்த்து காகாகாகா..க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
என்று கத்தியது. தாத்தாக்காகம் இப்போது ஜாடியில் குறைவாக இருந்த தண்ணீரைக் குடிக்க
கற்களைப் போட்டு தண்ணீரை மேலே வரவழைத்து குடித்த கதையைச் சொல்லும். உடனே கோணமூக்குக்காக்கா
மகிழ்ச்சியில் கத்திக்கூப்பாடு போடும். உற்சாகத்தில் ஒரு சின்ன வட்டம் அடிக்கும். மற்ற
காகங்கள் எல்லாம் என்ன இந்தப்பயலுக்கு கோட்டி பிடிச்சிருச்சா? என்று நினைப்பார்கள்.
ஒரு நாள் கோணமூக்கன் நகரத்தில்
உள்ள தெருவில் பசியுடன் மின்சாரக்கம்பியில்
உட்கார்ந்து தெருவை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அப்பா வாங்கிக் கொடுத்த உளுந்துவடையைக்
கையில் வைத்துக் கொண்டு அபி நடந்து வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த கோணமூக்கனுக்கு
வாயில் எச்சில் ஊறியது. அவ்வளவு தான். ஒரே தவ்வலில் பறந்து போய் அபியின் கையில் இருந்த
உளுந்துவடையைக் கவ்விக் கொண்டு மறுபடியும் மின்சாரக்கம்பியில் வந்து உட்கார்ந்து கொண்டது.
வாயில் வடையுடன் கீழே பார்த்தது. அபி ஒரு கணம் மேலே வடையுடன் கம்பியில் உட்கார்ந்திருக்கிற
காக்காவைப் பார்த்தான். மறுகணம் கீழே விழுந்து அழுது புரண்டான்.
தெருவில் அழுது புரண்டுகொண்டிருந்த
அபியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் வயிறும் பசித்தது. என்ன செய்வது? கோணமூக்குக்காக்கா
மெல்ல பறந்து வந்து அபியின் அருகில் இறங்கியது. அபியிடம் அந்த வடையைக் கொடுத்தது. வடை
கையில் வந்த அடுத்த நொடி அபி சிரித்தான். வாயெல்லாம் பல்லாக ஹிஹிஹி என்று சிரித்தான்.
அதைப்பார்த்த கோணமூக்குக்காக்காவும் சிரித்தது. அபி வடையைத் தின்று கொண்டே இரண்டடி
நடந்தான். பிறகு திரும்பி வந்து வடையைப் பிய்த்து கோணமூக்கனுக்குக் கொடுத்தான். வடையை
காக்கா வாயில் வாங்கியதும் அபிக்குச் சிரிப்பு பொங்கியது. கெக்க்க்கெக்கெக்கே என்று
சிரித்தான். வடையை விழுங்கிய கோணமூக்கனும் சிரித்தான்.
காக்க்க்கேக்க்கேக்கா…! காகாகாகேக்கே!
( நன்றி- சுட்டி விகடன் )
No comments:
Post a Comment