Wednesday 8 March 2017

திருட்டு விளையாட்டு

திருட்டு விளையாட்டு

உதயசங்கர்

காட்டூர் நாட்டில் வெகுகாலமாக ராஜா இல்லை. ராஜா என்று ஒருவர் வேண்டும் என்று மக்கள் நினைக்கவும் இல்லை. மக்கள் சபை கூடும். அவர்களுடைய தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்வார்கள். யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. யாரும் யாரிடமிருந்தும் திருடவில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். காட்டூர் நாட்டுக்குப் பக்கத்தில் திருட்டூர் என்ற நாடு இருந்தது. இரண்டு நாட்டையும் நடுவில் ஒரு காடு பிரித்தது. திருட்டூர் நாட்டில் திருட்டு சாதாரணம். திருடர்கள் திருடிவிட்டு அந்தக்காட்டில் மறைந்து கொள்வார்கள். ஆனால் ஒருபோதும் அவர்கள் காட்டூர் பக்கம் வந்ததில்லை.
 ஒருநாள் திருட்டூரிலிருந்து திருடிவிட்டு காட்டுக்குள் ஒளிந்து ஓடிவந்த நாலுதிருடர்கள் காட்டூர் பக்கமாக வந்து விட்டார்கள். அவர்கள் நான்குபேரில் ஒருத்தன் பேர் பக்கா, இன்னொருத்தன் பேர் முக்கா, மற்றவன் பேர் அரைக்கா, இன்னுமொருவன் பேர் காக்கா. காட்டூருக்குள் நுழைந்த அவர்களுக்கு ஆச்சரியம். ராஜா இல்லை. மந்திரி இல்லை. தளபதி இல்லை. காவலர்கள் இல்லை. பொருட்கள் எல்லாம் வைத்த இடத்தில் வைத்தமாதிரி இருந்தன. யாரும் திரும்பிக் கூடப்பார்க்கவில்லை. எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்காத்திருடன் பல்லை இளித்தபடியே சொன்னான்,
” இப்படி ஒரு நாட்டுக்கு நான் ராஜாவானால் எப்படி இருக்கும்?”
என்றான். உடனே முக்காத்திருடன் சிரித்தபடியே,
“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் மந்திரியானால் எப்படி இருக்கும்? “
என்றான்.  அதைக்கேட்ட அரைக்காத்திருடன் புன்னகையோடு,
“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் தளபதியானால் எப்படி இருக்கும்?
என்றான். கொஞ்சமும் சிரிக்காமல் காக்காத்திருடன்,
“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் காவலனானால் எப்படி இருக்கும்?”
என்றான். நான்குபேரும் யோசித்தார்கள். திட்டம் போட்டார்கள். திருட்டூர் நாட்டிலுள்ள சில்லரைத்திருடர்களுக்குத் தகவல் சொன்னார்கள். காட்டூருக்கு வந்தால் நிறையப் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்றார்கள். உடனே சில்லரைத்திருடர்கள் காட்டூரை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள். காட்டூர் நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது பக்கா, முக்கா, அரைக்கா, காக்கா, திருடர்கள் வெகுளியான காட்டூர் மக்களிடம் சென்று,
“ உங்களைக் காப்பாற்ற ஒரு தலைவன் வேண்டும், ஆலோசனை சொல்ல ஒரு மந்திரி வேண்டும், காவல்படைக்கு ஒரு தளபதி வேண்டும், காவலுக்கு காவலர்கள் வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நல்லவர்களாக இருக்கிற உங்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.. எங்களுக்கு நீங்கள் எதுவும் தரவேண்டாம்.. நாங்கள் உங்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கிறோம்… “
என்றார்கள். காட்டூர் நாட்டு மக்களும் அதைக்கேட்டு மகிழ்ச்சியில் கை தட்டினார்கள். உடனே நான்கு திருடர்களும் சேர்ந்து காட்டூர் நாட்டுக்குள் வந்த சில்லரைத்திருடர்களை விரட்டியடித்தனர். காட்டூர் மக்களும் மகிழ்ந்தனர். பிறகு காட்டூர் நாட்டின் ராஜாவாக பக்காத்திருடன் முடி சூடினான். மந்திரியாக முக்காத்திருடன் பதவி ஏற்றான். தளபதியாக அரைத்திருடன் பதவி ஏற்றான். காவலனாக காக்காத்திருடன் பதவி ஏற்றான். பதவி ஏற்றதும் நான்கு திருடர்களும் சேர்ந்து மக்களுக்கு விளையாட்டுப்போட்டி ஒன்றை அறிவித்தனர்.
என்ன விளையாட்டு தெரியுமா? திருட்டு விளையாட்டு. மற்றவர்களுக்குத் தெரியாமல் அடுத்தவர் பொருளை யார் திருடிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குப் பரிசு. என்று முரசறைந்து அறிவித்தனர். அவ்வளவுதான் காட்டூர் நாட்டு மக்கள் ஒவ்வொருத்தரும் ராத்திரியில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் பொருளை எடுத்து மறைத்து வைத்தனர். மறுநாள் அரண்மனைக்குக் கொண்டு போய் தாங்கள் திருடிக் கொண்டு வந்த பொருட்களைக் காட்டி பரிசுகள் பெற்றனர். இப்படியே திருடித்திருடி மக்களுக்கு எந்தப்பொருளையும் நேர்வழியில் வாங்க மறந்தனர். எல்லாவற்றையும் திருடினர். நாடு முழுவதும் ராத்திரியில் விழித்து திருடுவதற்காக அலைந்து கொண்டிருந்தனர். ஒருவர் திருடிய பொருளை மற்றவர் திருடினர். அவர் எடுத்துக் கொண்டு வந்ததை மறுபடியும் இன்னொருத்தர் திருடினார். இப்படியே நாடு முழுவதும் திருட ஆரம்பித்தது.
நான்கு திருடர்களும் சும்மா இருப்பார்களா? அவர்களும் ராத்திரி முழுவதும் காட்டூர் முழுவதும் அலைந்து திரிந்து திருடினார்கள். பக்காத்திருடனான ராஜா மலைகளைத் தோண்டித் தன்னுடைய அந்தப்புரத்தில் கொண்டு போய் வைத்தான். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சாப்பிட்டான். முக்காத்திருடனான மந்திரி  ஆறுகளை பொட்டலங்களாக கட்டி வெளிநாட்டுக்கு விற்றான். அரைத்திருடனான தளபதி நிலங்களை சுருட்டி மடக்கி தன்னுடைய பெட்டிகளில் அடைத்து வைத்தான். காக்காத்திருடனான காவலன் காடுகளில் இருந்த செம்மரங்கள், சந்தன மரங்களை வெட்டி அநுமதிச்சீட்டோடு திருட்டூர் நாட்டுக்குக் கடத்தினான். இப்படி காட்டூரும் திருட்டூராக மாறிக் கொண்டிருந்தது.
எல்லோரும் உழைக்காமல் திருடிக்கொண்டிருந்தால் என்னா ஆகும்?
காட்டூரில் வறுமை குடி வந்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அடித்துக் கொண்டனர். ஆனாலும் இரவில் திருடுவதை நிறுத்தவில்லை. நான்கு திருடர்களும் தினம் நகர்வலம் வரும்போது இதைக் கண்டு ரசித்தனர். காட்டூர் மக்கள் திருடர்களாக மாறியதைக் கண்ட உழைப்புதேவதை வருந்தியது.
மறுநாள் இரவில் நிலா வரவில்லை. சூரியன் உதித்தது. எங்கும் இருளே இல்லை. யாராலும் திருட முடியவில்லை. மறுநாளும் அப்படியே இரவிலும் சூரியனே உதித்தது. ஒருவாரத்துக்குப் பின்னர் மக்கள் தங்களுடைய வேலைகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். இந்த ஒருவாரத்தில் தாங்கள் எப்படியெல்லாம் நடந்திருக்கிறோம் என்று யோசித்தனர். அவமானமாக இருந்தது. உழைப்புதேவதைக்கு நன்றி சொல்லினர். ஆனால் நான்கு திருடர்களும் சும்மா இருப்பார்களா?
யாரும் உழைக்கக்கூடாது திருடித்தான் வாழவேண்டும் என்று சட்டம் போட்டான் பக்காத்திருடனான ராஜா. அந்த சட்டத்தை மீறினால் என்ன என்ன தண்டனைகள் என்று முரசறைந்து அறிவித்தான் முக்காத்திருடன். அந்தத்தண்டனைகளை நிறைவேற்ற அரைத்திருடனும் காக்காத்திருடனும் ஆயுதங்களோடு தயாரானார்கள்.
இதைக் கண்ட உழைப்பு தேவதைக்குக் கோபம் வந்தது. உழைப்புதேவதை காட்டூர் மக்களின் உடம்பில் புகுந்தது. அவ்வளவு தான் ஆவேசம் கொண்ட காட்டூர் மக்கள் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள். அந்தப்புரத்தில் துண்டு துண்டுகளாகப் பதுக்கி வைத்திருந்த மலைகளை எல்லாம் ஒன்று சேர்த்து அந்தந்த இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மலையில் போட்டு புதைத்து விடுவதாக மிரட்டினார்கள். பக்காத்திருடன் பயந்து கொண்டே சரி சரி என்றான்.  முக்காத்திருடன் பொட்டலங்களாக போட்டு வைத்திருந்த ஆறுகளை விடுவித்தனர். காட்டூர் நாட்டில் பெய்யும் மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகி விடாமல் ஆறுகளில் குளங்களில் கண்மாய்களில் குட்டைகளில் கொண்டு சேர்க்க வேண்டும். இல்லையென்றால் அவனை கரை புரண்டோடும் ஆற்றில் தள்ளி விடுவோம் என்று பயமுறுத்தினர். அவனும் பயந்து போய் சரி சரி என்றான். நிலங்களை சுருட்டி மடக்கி வைத்திருந்த அரைத்திருடனைப் பிடித்து நிலங்களை விரித்தனர் அதில் அவன் வருடம் முழுதும் உழுது பயிர் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவனை நிலத்தில் புதைத்து விடுவோம் என்று பயங்காட்டினார்கள். அவனும் பயந்து போய் சரி சரி என்றான். மரங்களை வெட்டிக்கடத்திய காக்காத்திருடனுக்கு காட்டூர் நாடு முழுவதும் கோடி மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவித்தனர். இல்லையென்றால் மரங்களை அவன் பிளந்தது போல அவனைப் பிளந்து விடுவோம் என்று பயமுறுத்தினார்கள். அவனும் பயந்து போய் சரி சரி என்றான்.
இப்போது காட்டூர் நாட்டுமக்கள் உழைக்கின்றனர். மகிழ்ச்சியாகச் சிரிக்கின்றனர். உழைப்புதேவதையும் சிரிக்கின்றாள்.
நன்றி- வண்ணக்கதிர், தீக்கதிர்


No comments:

Post a Comment