இலவச ராஜா
உதயசங்கர்
கலியூர் நாட்டை கலி ராஜா ஆண்டு
வந்தார். அவர் ஆடம்பரமாக வாழவேண்டும் என்று ஆசைப் பட்டார். உழைக்காமல் ஆடம்பரமாக இல்லையில்லை
அவசியமாகக்கூட வாழமுடியுமா? முடியாதில்லையா! கலியூர் ராஜா ஆடம்பரமாக வாழ வழி என்ன என்று
அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தார். அமைச்சர்களுக்கும் அந்த ஆசை இருக்காதா? அவர்கள்
கலிராஜாவிடம், ” நாம் சேர்ந்து ஆலோசிக்கலாம் ராஜாவே! “ என்றார்கள். மூன்றுபகல் மூன்றுராத்திரி
ஆலோசனை செய்தார்கள். கடைசியில் ஒரே ஒரு திட்டத்துடன் வந்தார்கள். கலி ராஜாவும் அந்தத்திட்டத்தைக்
கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
மறுநாள் கலி நாட்டு மக்கள் தூங்கி
எழுந்த போது நாடு முழுவதும் விளம்பரப்பலகைகள் ஒளி வீசின.
இலவசம்! இலவசம்! இலவசம்!
நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி!
கலிராஜாவின் பிறந்த நாளுக்காக நாட்டு மக்களுக்கு விசிறி இலவசம்! கோடைகாலத்துக்கு ஏற்ற
நெகிழி விசிறி இலவசம்!.
மக்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
ஆனால் காசில்லாமல் ஓசிக்கு விசிறி அரசாங்கம் கொடுக்கிறது என்றதும் அவ்வளவு பேரும் அடித்துப்பிடித்து
போய் நாள் முழுவதும் வெயிலில் வரிசையில் நின்று, சண்டை போட்டு அந்த விசிறியை வாங்கிக்
கொண்டு வந்தார்கள். ஒரு வாரம் கழிந்ததும் எல்லோர் வீடுகளிலும் வரி வசூல் அதிகாரிகள்
வந்து காற்று வரி கேட்டார்கள். மக்கள் கேட்டபோது, விசிறி இலவசம். ஆனால் அதிலிருந்து
வரும் காற்றுக்கு வரி கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் சொன்னதைக் கேட்ட மக்கள் வரியைக்
கொடுத்தார்கள். அவர்கள் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டியில்,
“ இலவச விசிறி தந்த வள்ளல் கலி
ராஜா! “ என்ற விளம்பரம் ஓடியது. அதில் ஒரு பெரியவர், ஒரு பெண், ஒரு குழந்தை எல்லோரும்
பேசினார்கள். விசிறி இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையே இருண்டு போயிருந்தது. வள்ளல் கலி
ராஜா கொடுத்த விசிறியினால் தான் ஒளி வீசுகிறது. விசிறி கொடுத்தவருக்கு காற்றுவரி கூடக்
கொடுக்கக்கூடாதா? நான் கொடுப்பேன் காற்று வரி! நானும்! நானும்! அப்ப நீங்க? என்று உணர்ச்சிகரமாகப்பேசினார்கள். அதை இருபத்திநாலு
மணி நேரமும் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் நானும் கொடுப்பேன் காற்றுவரி என்று தானாகவே
சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
இதற்கு ஒரு வாரத்துக்குப் பிறகு
நாட்டுமக்கள் எல்லோருக்கும் வீட்டிற்கு விறகு இலவசம் என்று கலிராஜா மறுபடியும் விளம்பரம்
செய்தார். மக்கள் அடித்துப்பிடித்து இலவச விறகு வாங்கிக் கொண்டு வந்தனர். அதற்கு ஒரு
வாரத்துக்குப் பின்னர் விறகு எரியும்போது வருகிற தீ வரி என்று அதிகாரிகள் வந்து வசூல்
செய்தனர். மக்களும் காற்று வரி சரி என்றால் தீ வரியும் சரிதான் என்று கொடுத்தார்கள்.
இப்படியே மக்கள் இலவசங்களை வாங்கிப்
பழகி விட்டனர். அதனால் எங்கு சென்றாலும் இலவசம் வேண்டும் என்றார்கள்.
காய்கறி வாங்கினால் கறிவேப்பிலை
இலவசம் .
இரண்டு தோசை வாங்கினால் ஒரு வடை
இலவசம்
கோழிக்கறி வாங்கினால் முட்டை இலவசம்
இரண்டு சேலை வாங்கினால் ஒரு சேலை
இலவசம்
இரண்டு டர்கர் வாங்கினால் ஒரு
டஸ்ஸா இலவசம்
என்று நாடு முழுவதும் இலவச அறிவிப்புகள்
வெளிவந்து கொண்டிருந்தன. மக்களும் இலவச அறிவிப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு வாரம் எந்த இலவச அறிவிப்பும் வரவில்லை என்றால் வேண்டும் வேண்டும் இலவசம் வேண்டும்
என்று போராட்டம் செய்தனர்.
கலிராஜா இல்லாத வரிகளை எல்லாம்
போட்டார். அரண்மனைகள் பத்து கட்டினார். காலை, முற்பகல், மதியம், முன்மாலை, மாலை, முன்னிரவு,
இரவு, என்று வேளைக்கு ஒரு அரண்மனையில் தங்கினார். தங்கத்தினால் சட்டை, மேலாடை, உள்ளாடை,
என்று செய்து போட்டுக் கொண்டார். மந்திரிகளோ கலிராஜாவை விட ஒரு படி மேலே போனார்கள்.
அரசாங்க நிலத்தை எல்லாம் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். அதிகாரிகளும் வரிவசூல்
செய்த பணத்தில் ஊழல் செய்தனர்.
மக்கள் இலவசங்களுக்காகக் காத்துக்
கிடந்தனர். வேலைக்குப் போகவில்லை. வரி கொடுக்க முடியவில்லை. சோம்பேறியாக மாறி விட்டார்கள்.
எல்லோர் வீடுகளிலும் சோம்பல் தேவதை கூப்பிடாமல் வந்து சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.
இலவசங்கள் குறைந்தன. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டார்கள். சோம்பல் தேவதைக்கே
போரடித்து விட்டது. அவள் அவளுடைய அக்காவான அறிவு தேவதையை அழைத்தாள். கலியூர் மக்களின்
நிலைமையைச் சொன்னாள்.
கலியூர் நாட்டில் மழைக்காலம் தொடங்க
இருந்தது. விவசாயம் செய்யாமல் நிலங்கள் தரிசாகக் கிடந்தன. மறுநாள் அறிவுதேவதை மாறுவேடத்தில்
ஒரு விளம்பரம் செய்தாள்.
“ இதனால் சகலருக்கும் அறிவிப்பது
என்ன வென்றால் நாட்டில் உள்ள நிலங்களில் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி
மேற்கொள்பவர்களுக்கு ஒரு கோப்பை கம்மங்கூழ் இலவசம்.”
“ நிலங்களில் உள்ள கல், களை, குப்பை,
இவற்றைப் பொறுக்கிக் கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு அவற்றின் எடையளவு கேப்பை தானியம்
இலவசமாகக் கொடுக்கப்படும் ”
“ மண்ணைக்கிளறித் தோண்டுபவர்களுக்கு
சாப்பாடு இலவசம் “
“ விதை விதைப்பவர்களுக்கு அரிசி இலவசம் “
என்று நாளுக்கொரு விளம்பரம் செய்தாள்.
இப்போது நாடு முழுவதும் விவசாயம் நடந்தது. பயிர்கள் செழித்தன. விளைச்சல் பெருகியது.
அப்போது மறுபடியும் ஒரு விளம்பரம் வந்தது.
“ உழைப்பினால் விளைந்த பயிர்களைப்
பாருங்கள்! இது உங்கள் உழைப்பு. உழைப்பே உயர்வு! இலவசங்கள் வேண்டாம்! ஏமாறாதீர்கள்!
ஏமாற்றாதீர்கள்! “
அறிவுத்தேவதையின் தந்திரத்தை நினைத்து
மக்கள் மகிழ்ந்தனர். அவர்கள் உழைப்பின் அருமையை உணர்ந்து கொண்டார்கள்.
இப்போதும் கலிராஜா இலவசங்களுக்காக
விளம்பரம் செய்கிறார். ஆனால் ஒரு ஈ காக்கா கூட இலவசங்களை வாங்கப்போவதில்லை. இலவசங்களை
வாங்காததினால் வரிகள் போட முடியவில்லை. நாளாக நாளாக கலிராஜாவும் எளிமையே பெருமை என்ற
உண்மையை உணர்ந்தார். மனம் மாறினார். கலியூர் மக்கள் மகிழ்ந்தனர்.
( நன்றி - வண்ணக்கதிர் )
No comments:
Post a Comment