Sunday, 30 August 2026

அதிகாரத்தின் தத்துவம்

 



சதுரங்கவாழ்க்கை 10 

அதிகாரத்தின் தத்துவம்

அந்த வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்த கதிரின் தலைக்குப் பின்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அவன் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஒளிவட்ட த்துக்கு நடுவில் அவன் முகத்தில் தெரிந்த அந்தத் தெளிவும் என்னைப் பார்த்ததுமேற்பட்ட புன்னகையும் ஒரு அதிருப்தியைக் கொடுத்தது. ஏனென்று தெரியவில்லை. நான் என்னையறியாமலேயே பெருமூச்சு விட்டேன். ஒருவேளை நான் ஒவ்வொருமுறையும் மோசமானதை எதிர்பார்க்கிறேனா? அவன் சீக்கிரம் நன்றாகிவிட வேண்டுமென எதிர்பார்ப்பதைப் போல அவன் மோசமாகிவிடுவானோ என்ற அச்சமும் எனக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. மனதின் இருகூரான நாக்கு வாழ்வையும் மரணத்தையும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்துகிறது. மனதின் ஆழத்தில் அவன் இறந்து போவானென்றோ, அல்லது இறந்து போக வேண்டுமென்றோ ஒரு எதிர்பார்ப்பு இருள் வான மின்னல்க்கீற்றாய் கண்சிமிட்டிப் போகிறது.

அவனுடைய புன்னகையின் ஓரத்தில் மரணம் ஒளிந்திருக்கிறதோ என்று கூடத் தோன்றும். அதே புன்னகை முகத்துடன் அவன் கண்ணாடிச்சவப்பெட்டியில் படுத்திருப்பதைப் போல ஒரு காட்சி பளிச்சென தோன்றி மறைந்தது. ச்சே! என்ன மனமிது? நான் தலையை உலுக்கி அந்தக் காட்சியை விரட்டினேன். ஆனால் அது மறையவில்லை. ஒளிந்து கொண்டது. அவ்வளவு பிடிவாதம். என் முகத்தில் எந்தக் கலவரத்தையும் காட்டக்கூடாதென நினைத்தேன். பல நேரங்களில் உரையாடல் நம் உள்ளத்தின் உணர்ச்சிகளுக்குத் திரைபோட்டுக் காப்பாற்றிவிடும். மேடையில் நடிக்கும் நடிகனாக மாறிவிடுகிறோம். பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றும்.

நடிப்பென்று சொல்வது போலியாக என்ற அர்த்தத்திலில்லை. அப்படி நடித்தால் மட்டுமே நம்முடைய சமூகம் ஒப்புரவுடன் இயங்குமென்றும் தோன்றுகிறது. சமூக  இயக்கத்திற்கான அடிப்படையே சமூக ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் பாவனை தான். தனக்குப் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்பதைத் தாண்டி சமூகம் சொல்கிற விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதென்றும் சொல்லலாம். பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடிக்கும்போது அது இயல்பான நடைமுறையாக மாறுகிறது. அந்த இயல்புகள் காலம் காலமாகத் தொடரும்போது பண்பாடாக, மரபாக, பாரம்பரியமாக, சடங்குகளாக, சாங்கியங்களாக, சம்பிரதாயங்களாக மாறிவிடுகிறது. அதுவே பொதுப்புத்தியாகவும் மாறிவிடுகிறது. அதுதான் சிவில் சொசைட்டியின் பலமும் பலவீனமும்.

எப்போதுமே பொதுச்சமூகத்தில் சாமானியர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை. அதிகாரமில்லாத இடத்தில் மனிதனின் குணம் பணிந்து விடுகிறது. அதுவும் பாவனை தான். உண்மையைப் போன்ற நடிப்பு தான். ஆனால் பொதுச்சமூகத்தில் சிறிது அதிகாரம் கிடைத்தாலும் சாத்தான் தன் வாலை ஆட்டிப் பார்க்கிறது. பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாதி மதத்தலைவர்கள், ரவுடிகள், எல்லாருமே அவரவருக்குரிய இடத்தைப் பொறுத்து சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ அதிகாரத்தை ருசிப்பவர்களாக.  இருக்கிறார்கள். அதிகாரத்தை ருசிக்க மிக முக்கியமான தேவை. அந்த அதிகாரத்தைப் பிரயோகித்துப் பார்க்க இன்னொருவர்  தேவைப்படுகிறார். எனவே தான் இத்தனை சட்டங்கள், விதிகள், தண்டனைகள், என்று நினைக்கிறேன். சாமானியர்களுக்குத் தான் சட்டங்கள். அதிகாரமிக்கவர்களுக்கு விதிமீறல் தான் விதிகள்.

அதிகாரம் ஒரு அமைப்பினுடைய அல்லது ஒரு தனிமனிதனின் உடமையாக இருப்பதில்லை அது ஒரு செயல்முறை உறவாக இருக்கிறது. எல்லாரிடமும் அதிகாரம் செயல்படுகிறது. இடம் பொருள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். அரசு நிர்வாகம், தொழில்நிறுவனங்கள், நீதி, சட்டம், காவல், ராணுவம், பள்ளி, கல்லூரி, மதம், சாதி அமைப்புகளே கூட அறிவுத்துறைகளே கூட அதிகாரத்தைக் கட்டமைக்கின்றன. அதிகாரம் மற்றும் எதிர்ப்பு இரண்டும் தொடர்புடையவை

 

அதிகாரம் நிலையான ஒன்றல்ல. அதிகார உறவுகள் மாறிக்கொண்டே இருப்பதால் அவற்றுக்கு எதிரான எதிர்ப்புகளும் உருவாகின்றன. எப்படி உட்கார வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்போது வேலை செய்ய வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும் போன்ற சமூக ஒழுங்குகள் கூட அதிகாரத்தின் நுண்ணிய செயல்பாடுகளாக இருக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம். உடலே அதிகாரத்தின் முக்கிய தளம். அதனால் தான் ஆண் உடல் பெண் உடலின் மீது அதிகாரம் செலுத்துகிறது. ஆசிரியர் மாணவர்களின் உடல் மீது அதிகாரம் செலுத்துகிறார். மருத்துவர் நோயாளிகளின் உடல் மீது அதிகாரம் செலுத்துகிறார்.  பெரியவர்கள் குழந்தைகள் உடல் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள்.  போலீஸ் கைதிகளின் உடல்களின் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள்.  அதிகாரம் வெறும் சட்டங்களின் மூலம் சமூகத்தை மட்டுமல்லாமல் தனி மனிதர் உடல்களின் மீது செயல்படுகிறது.

 

இது ஒரு இருண்மையான நிலை. ஒருவர் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்துபவராகவும் அதிகாரத்தினால் பாதிக்கப்படுபவராகவும் இருக்கிறார். இந்த இருண்மை நிலைதான் அதிகாரத்தின் தத்துவம்.

அதனால் தான் அனைவருமே அதிகாரத்துக்கு ஆசைப்படுகிறார்கள். தன் வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தை அடைவதையே தங்கள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அதிகாரத்துக்கு ஆசைப்படவேண்டும்? அதிகாரம் மற்றவர்களின் உடலையும் , மனதையும், கட்டுப்படுத்துகிறது. அரூப ரூபத்திலோ, சாத்வீகமாகவோ, பலவந்தமாகவோ, பலப்பிரயோகம் செய்வதே அதிகாரத்தின் ஒரே வேலைத்திட்டமாக இருக்கிறது.

அதனால் தான் மனிதர்கள் இந்த அதிகாரத்துக்காகத் தான் வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு இட த்தில் அதிகாரம் படைத்தவர் இன்னொரு இட த்தில் சாமானியராக மாறிவிடுவார். ஒரு இடத்தில் சாமானியராக இருப்பவர் இன்னொரு இடத்தில்  அதிகாரமிக்கவராக மாறிவிடுவார். இந்தப் கள்ளன்போலீஸ் விளையாட்டுத் தான் ஏதோ ஒரு வகையில் சமூகத்தின் ஓட்டத்தைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறதோ?

என்னால் கட்டுப்படுத்தமுடியாத எண்ணச்சுழலில் சிக்கிக் கொண்டேன். எதிரில் கதிர் உட்கார்ந்திருக்கிறான். நான் அவனைப் பார்த்துச் சிரிக்க முயற்சிக்கிறேன். ஆனால் முகம் குழப்பத்தை வெளிப்படுத்துகிறது. கதிர் என்னை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் ஏதாவது பேசுவேன் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். நான் இந்தச் சுழலிலிருந்து தப்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சுழல் மேலும் மேலும் தன்னுடைய ஆழத்துக்குள் இழுக்கிறது..

சாமானியர்கள் அவருக்கு எங்கே இடம் கிடைக்கிறதோ வீடு, அடுக்களை, படுக்கையறை, பள்ளி, அலுவலகம், வேலைத்தளம், என்று அங்கே அதிகாரத்தின் கொடியைப் பறக்க விடுகிறார்கள். என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்த்த கடைநிலை ஊழியனின் இணையர் ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்து அந்த ஊழியரின் மேலதிகாரியிடம் சொன்ன புகார்,

“ சார்.. வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே அவர் கொண்டுவர்ற சாப்பாட்டுப் பையை வாங்கறதுக்குக் காத்திருக்கணும் சார்.. அவர் சட்டையைக் கழட்டினா.. அதை வாங்கி மாட்டணும் சார்.. தண்ணீயோ, சாப்பாடோ, அவர் எங்கே இருக்காரோ அங்கே கொண்டுபோய் கொடுக்கணும் சார்… சொல்றத உடனேச் செய்யலன்னா.. அவ்வளவு தான்.. நான் மெமோ கொடுப்பேன்கிறாரு.. சும்மா சும்மா அடிச்சிக்கிட்டேருக்காரு… இங்கே வான்னுக் கூப்பிட்டு எந்தக் காரணமுமில்லாமல் அடிக்கிறாரு.. பிள்ளைகள் அவரைப் பார்த்தாலே ஒண்ணுக்கு வெளிக்கி போய்ராங்க.. சார்.. மூச்சுக்கு முன்னூறு தடவை நான் வீட்டு அதிகாரி.. வீட்டு அதிகாரி.. என்று சொல்லிக்கிட்டேருக்காரு..அதிகாரின்னா அப்படித்தான் இருக்கணும்.. நீங்க ஒரு வார்த்தைப் பதில் பேசக் கூடாதுன்னு சொல்லி அடிக்கிறாரு சார்… சின்னப்பிள்ளைக கூட அன்பா ஒரு வார்த்தைப் பேசறதில்ல.. இதுல தண்ணியைப் போட்டாச்சுன்னா நாங்க யாரும் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது… சார்.. நீங்க தான் அவருக்கு நல்ல புத்தி சொல்லணும்..சார்..”

என்றார். அதைக் கேட்ட எங்களுக்கு ஒரே சிரிப்பு. அடக்கமுடியாமல் சிரித்தோம். அந்த அம்மாவுக்கு எதுவும் புரியவில்லை. அதிகாரி ஞே ன்னு முழித்துக் கொண்டிருந்தார். அந்த அதிகாரி எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்த ஊழியரைக் கூப்பிட்டு முதுகில் அடிப்பார். கையில் கிள்ளுவார். அவர் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. கோபமாக இருந்தாலும் சரி. அதைப் பார்க்கும் எங்களுக்கு அருவருப்பாக இருக்கும். அந்த ஊழியரிடமே சொன்னோம்.

“ ஒரு தடவை.. இப்படியெல்லாம் செய்யாதீங்கன்னு சொல்லிருங்க.. பால்பாண்டி.. இல்லைன்னா ஒரு தடவை பதிலுக்கு ஒரு வப்பு வைச்சிருங்க..”

” ஐயோ.. சார்.. அவர் என்னை ஊரை விட்டுத் தூக்கிருவாரு.. மெமோ கொடுத்துருவாரு..”

என்று அப்பாவியாகச் சொன்னார்.

எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் மனிதர்கள் அதிகாரத்தை உருவாக்குகிறார்கள். அல்லது அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதிகாரம் எப்போது தோன்றியிருக்கும்? எப்படித் தோன்றியிருக்கும்? உயிரின் இயல்பே அதிகாரம் தானா? அதிகாரம் இல்லாமல் வாழமுடியாதா? யோசித்துப் பார்த்தால் விலங்குகள் பறவைகள் உலகத்தில் இணை சேர்வதற்கான அதிகாரத்துக்காக ஒரே குழுவைச் சேர்ந்த விலங்குகளே சண்டையிட்டு மடிகின்றன. அந்த அதிகாரத் தேட்டத்தின் பரிணாம வளர்ச்சி தான் மனிதர்களிடமும் வந்திருக்குமோ.

தன்னுடைய இனப்பெருக்கச்சக்தியால் முதலில் பெண்கள் குழுவை வழிநடத்தும் அதிகாரத்தைப் பெற்றார்கள். வேட்டைச் சமூகம், ஆதிப்பொதுவுடமைச் சமூகம் பெண்களின் வழிகாட்டுதலில் நடந்தது. ஒரு சிறிய அளவிலான பொறுப்புள்ள அதிகாரம் அந்தச் சமூகத்துக்குத் தேவையாக இருந்தது. அந்த அதிகாரம் தான் வழிகாட்டியது. அதுவும் அதிகாரம் தானென்றாலும் அது யாரையும் அடிமைப்படுத்தவில்லை. அடக்கி ஒடுக்கவில்லை.  தங்கள் இனக்குழுவைத் தக்கவைத்துக் கொள்ள மட்டுமே பயன்பட்டது. ஏன் நிலவுடமைச்சமூகம் தோன்றுவதற்கு முன் உருவான இனக்குழுச் சமூகத்தில் கூட ஆதிப்பொதுவுடமையின் எச்சங்களிருந்தன. இனத்தைக் காக்கும் வீரம் மட்டுமே தலைமையேற்கத் தகுதியாகக் கருதப்பட்டது. போரிட்டு மடிந்த வீரர்களே நடுகற்களாக வணங்கப்பட்டார்கள். தெய்வங்கள் எங்கிருந்தோ வரவில்லை. அவர்களுடன் வாழ்ந்து மறைந்தவர்களே தெய்வங்களானார்கள். அப்போதும் தலைவன் என்றொருவன் இருந்தாலும் அவன் தனிப்பெரும் அதிகாரம் படைத்தவனாக இல்லை. அந்த அதிகாரம் இனத்தைக் காப்பாற்றவும், வழிநடத்தவும், மட்டுமே பயன்பட்டது.

எப்போது நிலவுடமைச் சமூகம் தோன்றியதோ தனி மனிதர்கள் தன்னுடைய இனத்தையே அடிமைப்படுத்தவும் தன்னுடைய சுயலாபத்துக்காக மற்றவர்களை அடிமைப்படுத்தவும் தொடங்கிய போது மனிதர்களிடம் வர்க்கம் தோன்றிவிட்டது. மேல் கீழ், உயர்வு தாழ்வு, ஆண்டான் அடிமை, பண்ணையார், கூலி, போன்ற சொற்கள் மொழியில் சேர்ந்து அதிகாரத்தை நிலை நிறுத்தின.  முதலில் தங்களுடைய இனக்குழுவைக் காப்பாற்றுவதற்காக நட த்தப்பட்ட போர்கள் பின்னர் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது.

நிலவுடமைச் சமூகத்தின் உச்சபட்ச அதிகாரம் அரசர்களையே கடவுளராக்கியது. அதிகாரம் பரம்பரை பரம்பரையாகக் கைமாற்றப்பட்டது. மக்கள் அதிகாரத்தின் கொடுந்தீயில் வெந்து மடிந்து கொண்டேயிருந்தார்கள். அதன் நவீன வடிவமாகத் தான் முதலாளித்துவம் தோன்றி நாடுகளைச் சந்தைகளாக்கும் வெறி உருவாகியது. ஹிட்லர் தொடங்கி தற்கால அரசியல் வாதிகள் வரை மனிதகுலத்துக்குப் பேரழிவை உருவாக்கும் போர்களை நடத்துவது எதனால்? அதிகார வெறியினால் தானே. அதிகார உணர்வு தானே சுரண்டலையே உருவாக்குகிறது. சுரண்டலுக்கான ஆயுதமாக இருப்பதும் அதிகாரம் தானே. எனக்கென்னவோ மனித குலம் இன்னும் என்னென்ன மாற்றங்களைக் கண்டடைந்தாலும் அதன் ஆதாரமான பிரச்னையாக அதிகாரமே இருக்கப்போகிறது என்று தோன்றுகிறது.

அதிகாரம் தான் வன்முறையை உணர்வை வளர்க்கிறது. பயங்கரவாதங்களை தியாகங்களாகப் போற்றுகிறது. தனிநபர் வன்முறை, அரசவன்முறை இரண்டுமே வாழும் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. தேசியம், தேசபக்தி என்ற வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருப்பது அதிகாரமே. இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சாதிப்பற்று, மதப்பற்று, இவற்றுக்கும் இனவெறி, மதவெறி, சாதிவெறி, மொழிவெறி, தேசவெறி  இவற்றுக்குமிடையில் ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது. பற்று வெறியாக மாற ஒரு நொடி போதும். பகுத்தறிவு குருட்டுத்தனமான மூடநம்பிக்கையாக மாற ஒரு வதந்தி போதும். யோசித்துப் பார்த்தால் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும் பெண்களும் தானே. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கோரக்காட்சிகளை மறக்க முடியுமா? யுத்தத்தினால் தன் உயிரைக் காப்பாற்ற நிர்வாணமாய் ஓடி வரும் வியட்நாம் குழந்தையின் புகைப்படம் உலகின் மனசாட்சியை உலுக்கவில்லையே. ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டினால் நோய்வாய்ப்பட்ட இறந்த சடாகோவின் அமைதிக்கொக்கு உலகில் அமைதியைக் கொண்டுவரவில்லையே. ஹிட்லரின் கொலைமுகாமுக்கு இருநூறு அனாதைக் குழந்தைகளுடன் சென்று விஷவாயுக்குடோனில் உயிரைவிட்ட ஜேனஸ் கோர்ச்சக்கின் அமைதி உலகின் மனசாட்சியை அசைக்கவில்லையே. இலங்கையில் உக்ரைனில், காஸாவில் காரணமே தெரியாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் குரல் இந்த பூமியை நடுங்கச் செய்யவில்லையே. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் அதிகாரம் தானே. ஒரு பட்டனில் உலகை அழிக்கும் அணுகுண்டுகளை வைத்திருக்கும் மனம் எத்தகைய மனம்? கொடுங்கோலர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். வரலாற்றுப்புத்தகங்களில் குழந்தைகளின் பெண்களின் இரத்தம் படியாத பக்கங்கள் இருக்கிறதா?

ஒவ்வொரு கொடுங்கோலனும் ஒரு நாள் அழிந்தே போவானென்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் அதிகாரம் ஒவ்வொருவரையும் கொடுங்கோலனாக்குகிறது. குண்டூசி முனையளவு அதிகாரம் கிடைத்தால் இங்கே ஒவ்வொருவரும் ஹிட்லர் தான் என்ற மனுஷ்யபுத்திரனின் கவிதையின் சாரம் ஞாபகத்துக்கு வருகிறது. ஆமாம். அந்தக் கொடுங்கோலன் அழிவதற்கு முன்னால் எத்தனை ஆயிரம் எத்தனை லட்சம் சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள், தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள். அந்தக் கொடுங்கோலர்களின் அதிகாரவெறியின் அடிப்படை வெறுப்பு தானே. மற்றமை குறித்த வெறுப்பை மனிதமனதில் விதைக்கிறார்கள். மற்றமை! ஆமாம். இனத்தால் வேறுபட்டவர்கள், நிறத்தால் வேறுபட்டவர்கள், மதத்தால் வேறுபட்டவர்கள், மொழியால் வேறுபட்டவர்கள், வர்க்கத்தால் வேறுபட்டவர்கள், பாலினத்தால் வேறுபட்டவர்கள், உயிரினத்தால் வேறுபட்டவர்கள்.

தன்னைத் தவிர மற்றவர்களை வெறுக்கும் மனித குணம் மரபணுவிலேயே இருக்கிறதா? தன்னைத் தவிர மற்றவர்களை இழிவுபடுத்தும் இயல்பை எப்படிப் பெறுகிறார்கள். மனிதன் உயிரியல்பிலேயே வன்முறையாளனா? அதிகாரவெறி கொண்டவனா? ஆதிக்கவுணர்வுள்ளனா? அன்பு, அமைதி, பாசம், நேசம், நட்பு எல்லாம் பாவனைகள் தானா? அல்லது பயன் கருதிப் போடுகிற வேடங்கள் தானா? தனிமனிதனாக நியாயவான்களாகத் தெரிகிற மனிதர்கள் கும்பலாகச் சேர்ந்தால் எப்படி பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள்? கொலைகாரர்களாக மாறுகிறார்கள்? அப்போது அவர்களுடைய மனதில் என்ன ரசாயன மாற்றம் ஏற்படுகிறது? எந்த உணர்வு அவர்களை ஆட்டிப்படைக்கிறது? அருள் வந்த பூசாரி பலி கொடுக்கும் ஆட்டை பரவசத்துடன் பார்ப்பதைப் போல தன் முன்னால் உயிர்ப்பிச்சைக் கேட்கும் மனித உயிரைப் பார்க்கும்போது ஏற்படுமோ? கலவியின் உச்சத்தில் வரும் இன்ப உணர்வைப் போன்ற உணர்வு ஒரு குழந்தையைக் கொலை செய்யும் போது தோன்றுமோ? கர்ப்பிணியின் வயிற்றிலிருக்கும் குழந்தையைக் குத்தி வெளியில் எடுக்கும் அந்த மனிதனிடம் கேட்க வேண்டும். அப்போது உன் மனதில் என்ன நினைத்தாய்?

எது மனிதர்களின் ஆன்மாவை ஆட்டிப்படைக்கிறது? கடவுள் சாத்தான் என்ற இருண்மை நிலையெல்லாம் மனிதர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள உருவாக்கிய புனைவுகள். மனிதனுடைய அடிப்படை உணர்வே தானென்ற ஆதிக்க உணர்வு தான். தன்னைத் தவிர வேறு எதுவும் யாரும் முக்கியமில்லை. தனிமனிதனாகவும் சரி, கூட்டமாகவும் சரி . உண்மையில் சனநாயகமென்பதும் கூட புனைவு தானோ. நாகரீகம் என்பதெல்லாம் மனிதர்கள் அணியும் ஆடைகள் தானோ. ஆடைகளைக் களைந்தால் உள்ளே இருக்கும் மனிதன் யார்?

தனிமனிதனைச் சரி செய்தால் உலகம் சரியாகும். உலகைச் சரி செய்தால் தனிமனிதன் சரியாவான். மனித குலத்தின் எட்ட முடியாத இலக்காகவே இருக்கிறதோ.

எனக்கு எப்போதுமே குழப்பமாக இருக்கும். நம்பிக்கை வைக்கவும் முடியவில்லை. நம்பிக்கை இழக்கவும் முடியவில்லை. மனிதன் மட்டும் தான் இந்த பூமியின் விநோதமான உயிரி.

எனக்கு மேலே யாரும் கிடையாது. எனக்குக் கீழே யாரும் கிடையாது என்ற அம்பேத்கரின் சொற்களின் பின்னாலிருக்கும் வரலாற்றில் இழிவுபடுத்தப்பட்ட மனிதர்களில் குரல் கேட்கவில்லையா? தன் தலைக்கு மேலே ஆயிரம் கால்கள் மிதித்துக் கொண்டிருந்தாலும் தான் மிதிப்பதற்கு ஒரு தலை வேண்டுமென்ற ஆசை எப்படித் தோன்றுகிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சொல்ல வேண்டிய அவசியம் எப்படி வந்தது? இந்த ஆதிக்கவுணர்வினால் தானே வந்திருக்கும். இதனால் மனித குலம் ஏதாவது நன்மை அடைந்திருக்கிறதா? இதனால் இந்த பூமி வளம் பெற்றிருக்கிறதா? மனிதர்கள் மாறியிருக்கிறார்களா? இன்னும் கொடியவர்களாக, இன்னும் குரூரமிக்கவர்களாக, இன்னும் கொடுங்கோலர்களாகத் தானே மாறியிருக்கிறார்கள்.

இத்தனை தத்துவங்கள்! இத்தனை மதக்கோட்பாடுகள்! இத்தனை கண்டுபிடிப்புகள்! இத்தனை நாகரீகங்கள்! மனிதர்களிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லையே.

என்ன விசித்திரம்!

ஒரு சிலரின் அதிகாரவெறிக்காக பலருடைய வாழ்க்கை சூறையாடப்படுவதை மக்கள் உணரவில்லையா? விஷமென்று தெரிந்தும் அதை அருந்தும் மனதை எப்படிக் கணிப்பது? மனிதர்கள் உண்மையில் கெட்டவர்கள் தானா? சுயநலம், அதிகாரம், ஆதிக்கம், சுரண்டல், வன்முறை, இவற்றின் மொத்த உருவமாகத்தான் மனிதர்கள் இருக்கிறார்களா? அதனால் தான் வாழ்நாள் முழுவதும் எங்கெல்லாம் வாய்ப்புகிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்த குணங்களை செயல்படுத்துகிறார்கள். செய்முறைப்பயிற்சிக்கு வீட்டில் பெண்களும் குழந்தைகளும் இலவசமாகக் கிடைக்கிறார்கள்.

இயற்கை அனைத்துயிர்களையும் இயற்கையாக  மரணமடையவே படைக்கிறது. ஆனால் மனிதன் பெரும்பாலான உயிர்களையும் அற்பாயுசிலேயே மரணப்பள்ளத்தாக்கில் தள்ளுகிறான். உணவின்றி சாகிறவர்கள், குடிநீரின்றி சாகிறவர்கள், தங்க இடமின்றி சாகிறவர்கள், மருத்துவ வசதியின்றிச் சாகிறவர்கள், வன்முறையால் சாகிறவர்கள், யுத்தத்தால் சாகிற உயிர்கள், யுத்தம் மனிதர்களின் மீது மட்டுமல்ல, இயற்கையின் மீதும் தொடுக்கப்படும்போது இயற்கையிலிருந்தே அழிந்து போகிற உயிர்கள், யோசித்துப் பார்த்தால் ஹோமோசேப்பியன்ஸ் என்ற பகுத்தறிவுள்ள மனித இனம் தோன்றாமலிருந்தால் இயற்கை இன்னும் அழகாக இருக்குமோ.

தலையை உதறி அந்தச் சுழலை விரட்டினேன். எல்லாம் ஒரு நிமிடம் தான்.  என் மனதில் ஓடிய எண்ணங்களின் சித்திரத்தை எப்படி கதிர் உணர்ந்தானோ தெரியவில்லை.

“ நாட்டில வன்முறை அதிகமாயிருச்சில்ல.. எங்க பார்த்தாலும் வன்முறை தான். ஏன் மனிதர்கள் இப்படிச் சண்டை போட்டு தங்கள் இன்னுயிரை அழித்துக் கொள்கிறார்களோ. மருத்துவமனையில் பத்து நாள் இருந்தால் உயிரின் அருமை தெரியும்..”

என்றான். அப்போது அவன் முகம் கனிந்திருந்தது. கண்களில் உயிரின் ஒளி நட்சத்திரமாய் மின்னியது.

நான் தான் அவனை உற்சாகப்படுத்த எங்கள் இளமைக்கால நினைவுகளைத் தூண்ட நினைத்தேன்.

“ டேய்.. கண்ணனை உனக்கு ஞாபகமிருக்கா? “

“ எந்தக் கண்ணன்? “

“ அதாண்டா.. ஸ்கொயர் கட் கண்ணன் “

எதையோ ஞாபகத்துக்குக் கொண்டுவர முயற்சிப்பவன் போல நெற்றியைச் சுருக்கினான். டக்கென்று கண்கள் பிரகாசமாக,

“ யாரு அந்த அய்யர்பிள்ளையைச் சுத்திக்கிட்டிருந்தவனா? “

அதைச் சொல்லும்போதே சிரித்தான். அந்தச் சிரிப்பு அபூர்வமாக இருந்தது. உயிரின் ஆனந்தம் சிரிப்பு தானே.

( தொடரும் )

 

 

 


3 comments:

  1. இன்றைய சமூகத்தின் இயங்கியல் தத்துவைத்தையே ஒரு விவாதமாக மாற்றியிருக்கிறது இந்த பகுதி. பல நேரங்களில் இந்த உலகின் எண்ணற்ற குரூரங்களை ஒரு சேர மனம் எண்ணிப் பார்க்கும் போது மனித இனத்தின் மீது கோபமும், அழிந்து போகட்டும் என்று சாபம் விடவும் தான் தோன்றும்.

    'செய்முறைப்பயிற்சிக்கு வீட்டில் பெண்களும் குழந்தைகளும் இலவசமாகக் கிடைக்கிறார்கள்'

    இந்த வரிகள் ஒரு வித dark humour ஆக மனதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

    எந்த ஒரு இயற்கை பேரிடரை விடவும், மனித இனத்தின் சக மனிதர்களின் மீதான வன்முறையும், இயற்கையின் மீதான வன்முறையுமே இங்கு எண்ணற்ற மனிதர்கள் உயிர் இழக்க காரணமாக இருக்கிறது என்பதை வேதனையுடன் நினைவுபடுத்துகிறது.

    நல்ல வேளையாக
    ஸ்கொயர் கட் கண்ணன் கடைசியில் வருகிறார், இத்தனை கணத்தை சுமப்பதிலிருந்து நம்மை கொஞ்சம் விடுவிக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துப் பகிர்வுக்கு நன்றி தோழர். எந்தச் சமூக அமைப்பு வந்தாலும் அடிப்படைப்பிரச்னை அதிகாரத்தைக் கையாள்வதாகத் தான் இருக்குமென்று தோன்றுகிறது.

      Delete
  2. மிக சிறப்பான கட்டுரை தோழர். அதிகாரத்தை அலசும் பார்வை உடல் அரசியல், வெறுப்பு என்றஉளவியல் அதன் சல்லி வேர்களான ஜாதி மத இன வர்க்க வகைமைகளை சுட்டிக்காட்டி, இறுதியில் ஹோமோசெபியன்ஸ் தோன்றாமல் இருந்தால் உலகம் அழகாக இருந்திருக்குமோ என்ற கேள்வியுடன் முடித்து இருப்பது, எளிய வாசகனும் அதிகாரத்தின் மூலக்கூறுகளை உணரச் செய்து இருப்பது மிக மிக சிறப்பு தோழர்

    ReplyDelete