போட்டி போடலாமா?
உதயசங்கர்
” சரி… என்ன போட்டி போடலாமா? “
என்றது மின்னி எறும்பு. அது உணர்கொம்புகளை ஆட்டி ஆட்டி கீச்சிட்ட து. வரிசையாகச் சென்று கொண்டிருந்த மற்ற எறும்புகள் எதுவும் அதைக் கவனிக்கவில்லை.
அவை எல்லாம் குடுகுடுகுடு என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போய்க் கொண்டிருந்தன.
மின்னி எறும்பு முன்னாலும் போகாமல் பின்னாலும் போகாமல் நிற்பதைப் பார்த்த
காவல் எறும்பு,
“ ஏய் மின்னி.. என்ன
வேணும்? முன்னால் போ..”
என்று கத்தியது. ஆனால் மின்னி எறும்பு என்ன செய்த து தெரியுமா? வரிசையை விட்டு விலகி நின்றது. அதைக் கடந்து செல்கிற
ஒவ்வொரு எறும்பிடமும்
“ நீ போட்டிக்கு வாரியா? நீ போட்டிக்கு வாரியா? “ என்று சவால் விட்டுக் கொண்டிருந்த து. கடைசியில் வந்த சின்னி எறும்பு நின்று மின்னி எறும்பின் உணர்கொம்புகளைத் தடவிக் கொடுத்த து.
“ ஏன் மின்னி எதுக்கு போட்டி? “
என்று கேட்ட து.
“ நாம இப்போ எடுக்கப்போறோமில்ல.. கரப்பான்பூச்சி அதை யார் முதல்ல போய் தொடுறான்னு போட்டி. வைச்சுக்குவோமா?.”
“ யார் தொட்டா என்ன? நாம் எல்லாரும் சேர்ந்து தானே சாப்பிடப் போறோம்..”
“ ஏய் சின்னி.. எங்கூட போட்டிக்கு வாரியா இல்லையா? போட்டின்னு வைச்சாத்தான் யாருக்குத் திறமை இருக்குன்னு தெரியும்..”
“ தெரிஞ்சி என்ன செய்யப் போறோம்? “
“ என்ன செய்யவா? வாழ்க்கையே ஒரு போட்டி தானே.. யார் பலசாலி? யார் அறிவாளி? யார் பணக்காரன்? இப்படித்தானே மனிதர்கள் போட்டி போடுறாங்க..”
இதைக்கேட்ட சின்னிக்குச் சிரிப்பு வந்து விட்ட து.
“ ஹிஹிஹி.. நீ மனிதர்கள் பேசறதைக் கேட்டியா.. மனிதர்கள் பாவம்..”
மின்னிக்குக் கோபம் வந்து விட்ட து.
“ ஏய் வாயை மூடு.. மனிதர்கள் நம்மை விட அறிவாளிகள்.. அவர்களுக்கு எல்லாம் தெரியும்.. நேற்று நான் போயிருந்த வீட்டில் ஒரு அம்மா மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மகனே எல்லாப்போட்டிகளிலும் நீ வெற்றி பெற வேண்டும்.. படிப்பில், விளையாட்டில்.. எல்லாவற்றிலும் நீ தான் முதலாவதாக இருக்க வேண்டும்..என்று சொன்னாரே..”
என்று நீட்டி முழக்கிச் சொல்லும் போது மேடைப்பேச்சாளரைப் போலவே உடலை அசைத்த து. சின்னிக்குச் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு,
“ அதுக்கு அந்தப் பையன் எதுவும் சொல்லவில்லையா? “
“ ஏன் மா? என்று கேட்டான். அதுக்கு அந்த அம்மா அப்ப தான் உனக்கு நல்ல வேலை கிடைக்கும்.. நிறைய பணம் சம்பாதிக்கலாம்.. நல்ல பொண்ணு கிடைக்கும்.. வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.. அப்படின்னு சொன்னாங்க..”
“ அப்படியா சொன்னாங்க.. அப்ப.. வா.. போட்டி போடலாம்..” என்று சின்னியும் போட்டிக்குத் தயாரானது.
மின்னியும் சின்னியும் ஒரே கோட்டில் நின்றன. ஒன் டூ த்ரி என்று மின்னி சொன்னதும் வேகவேகமாக தடபுட தடபுட என்று ஓடின. ஓடும்போது முதலில் வரிசையாகச் சென்று கொண்டிருந்த மற்ற எறும்புகளைத் தாண்டின. சிறிது தூரம் ஓடியபிறகு தான் இருவரும் எங்கே வந்திருக்கிறோம் என்று தெரியாமல் திகைத்து நின்றன. எறும்புகள் சுரக்கும் வாசனை எதுவும் இல்லை. அந்த வாசனையைப் பின்பற்றித் தானே எல்லோரும் உணவு, இருப்பிடம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும்.
திடுக்கிட்டு நின்று பார்த்தால் இருட்டாக இருந்த து. வழி தெரியவில்லை. சின்னி அங்கும் இங்கும் ஓடி ஓடி வாசனையைத் தேடியது. ஆனால் மின்னி இப்போதும்
“ போட்டின்னா போட்டி தான்.. யார் வெற்றி பெர்றாங்கன்னு பார்ப்போம்..”
என்று சொல்லிக் கொண்டே முன்னே ஓடியது. திடீரென்று விளக்கு எரிந்த து. இரண்டு கால்கள் தெரிந்தன. ஒரு விளக்குமாறு தெரிந்த து. ஒரு பெருங்காற்று வீசியதைப் போல மின்னியும் சின்னியும் அப்படியே காற்றில் பறந்தன.
“ இந்த எறும்புத்தொல்லை தாங்க முடியல.. முதல்ல எறும்புப்பொடி போடணும்..”
என்ற குரல் கேட்ட து.
இரண்டு எறும்புகளும் அவ்வளவுதான் தொலைந்தோம்.. என்று நினைத்தன. அந்த விளக்குமாறு அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தது. வேகம் வேகம்.. என்று மின்னி கத்தியது. உயிர் பிழைப்பதற்காக இரண்டு எறும்புகளும் ஓடின.
அப்போது அந்த வாசனை வந்தது. எறும்புகளின் வாசனை. அவ்வளவுதான் அந்த வாசனையை முகர்ந்து கொண்டே இருட்டுக்குள் ஓடின.
எதிரே நின்று கொண்டிருந்த காவல்கார எறும்பு அவர்களை நிறுத்தியது.
“ தம்பிகளா.. வாழ்க்கைங்கிறது போட்டியில்லை.. அது ஒரு பயணம்.. நாம் எல்லாரும் சேர்ந்து போகிற பயணம்.. எல்லாரும் திறமைசாலி தான்..என்ன புரிஞ்சிதா? மனிதர்கள் பேராசைக்காரர்கள்.. உயர்வு, தாழ்வு பெரியது சிறியது என்று யோசிப்பார்கள்.. அவர்களுக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஆசை தீராது.. “
என்று சொல்லி அழைத்துச் சென்றது. சின்னியும் மின்னியும் யோசித்துக் கொண்டே ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொண்டு சென்றன.
மறுநாள் அந்த வீட்டில் அப்பா மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்,
“ மகேசு.. எப்படியாச்சும் இந்தத் தடவை ரோகித்தை விட நல்ல மார்க்கு வாங்கி பர்ஸ்ட் ரேங்க்..எடுத்துரு.. உனக்கு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கித் தாரேன்..”
மின்னியும் சின்னியும் அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே,
“ வாழ்க்கை ஒரு பயணமே
வாழ்ந்து பார்க்கலாம் வா
பூமிப்பந்தின் விருந்தினர் நாம்
பூத்துக் குலுங்குவோம் வா
இருக்கும் நாள்வரை நாம்
நன்மை செய்வோம் வா..
இந்தப் பயணம் நல்ல பயணம்
என்று சொல்வோம் வா வா
என்று பாடிக் கொண்டே இனிப்பைத் தேடிச் சென்றன.
நன்றி - வண்ணக்கதிர்

No comments:
Post a Comment