சங்க காலத்தமிழர் வாழ்வியலை இளையோருக்கு அறிமுகப்படுத்தும் பறம்பின்
பாரி –
ஞா.கலையரசி
கடையெழு வள்ளல்களில் சிறந்தவனான பாரி, அறம்,கொடை, நட்பு, வீரம் ஆகியவற்றின்
அடையாளமாகத் திகழ்ந்த வரலாற்றையும், அவன் வேள்பாரியாக உருவாவதற்கு முன், அவன் குணாதிசயங்கள் எப்படி
இருந்திருக்கும் என்பதையும், சங்கப் பாடல்களை
அடிப்படையாகக் கொண்டு, இந்நாவல்
விவரிக்கின்றது.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் இளையோர் நாவல்களில்
தொடர்ச்சியாக வரும் கதாநாயகன் கேப்டன் பாலுவே, இதிலும் நாயகன். பாலுவுக்கு இப்போது மீசை முளைத்துவிட்டது. கல்லூரியில் இளங்கலைத் தமிழ் பயிலும் பாலு, தமிழின் தொன்மையைப்
படித்துப் பெருமிதமும், வியப்பும் அடைகிறான்.
பாலு ஒரு நாள் “பாரி பாரியென்று பல ஏத்தி’ என்ற கபிலரின்
பாடலை வாசிக்கிறான். அவன் மனத்தைக் கபிலர், பாரியின் நினைவுகள் ஆக்கிரமிக்கின்றன. மூவேந்தர்களைத்
தனியொருவனாகக் களத்தில் சந்தித்து, மண்ணைக் கவ்வ வைத்த பாரியின் வீரமும், துணிச்சலும் பாலுவை
வியப்புக்கு உள்ளாக்குகிறது.
பாரியின் நினைவுகளுடன் தூங்கிவிட்ட பாலுவின் அருகில், ஆதன் தோன்றுகின்றான்.
ஏற்கெனவே ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலில், பாலுவை ஆதன் தான், சிந்துசமவெளி நாகரிகக் காலத்துக்குக் கூட்டிச்
சென்று, தமிழர்களின் நாகரிகத்
தொன்மையை விளக்கியவன்.
இந்நாவலிலும் ஆதன் கேப்டன் பாலுவை பாரியின் இளமை
காலத்துக்குக் கூட்டிச் செல்கின்றான். பாலு பழங்கால உடையுடுத்திய திரையனாகவும்
ஆதன் சாத்தனுமாக மாறுகின்றனர். பாரியும் பதின்பருவத்து இளைஞனாக இருக்கின்றான்.
அப்போது பாரியின் தந்தை வேள் எவ்வி, வேளிர்குலத் தலைவனாக இருக்கின்றான்.
பச்சை மலைத்தொடரின் இயற்கையழகு, வேளிர்குடிகளுக்கு இருந்த
குலச்சின்னங்கள், குடிகள் இயற்கையை
வழிபடும் விதம், வெட்சிப்போர், கரந்தைப் போர், கொற்றவைப் பாட்டு, வெறியாட்டம், சேவல் போர் போன்ற சங்ககாலத் தமிழரின் வாழ்வியலையும், இளையோர் தெரிந்து கொள்ளும்
விதமாக ஆசிரியர் இந்நாவலில் விவரிக்கின்றார்.
பாரியின் உற்ற தோழர்களாகத் திரையனும், சாத்தனும்
இருக்கின்றார்கள். இளைஞர்கள் மூவரும் சிறு விலங்குகளை வேட்டையாடும் சமயம், சிலர் காட்டுக்குள்
நுழைந்து திருட்டுத்தனமாக மரங்களை வெட்டுகின்றனர். பாரி சிவிங்கிப்புலிகளின்
உதவியுடன் அவர்களை உயிருடன் பிடிக்கின்றான். சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், வறுமையினால் திருட்டுத்
தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்பதையறிந்து, அவர்களை மன்னிப்பதுடன், பக்கத்தில் இருக்கும் கற்குகைகளில் தங்கி விவசாயம்
செய்யவும், பாரி சம்மதம்
தெரிவிக்கின்றான்.
இந்த நிகழ்வின் மூலம், மனுவின் பெயரால், இப்போது இருக்கும் சாதிப் பாகுபாடுகளின் வேர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
தொடங்கிவிட்டன என்பதையும், ஆசிரியர் இந்தச்
சம்பவம் மூலம் இளையோர்க்குச் சொல்லியிருக்கின்றார்.
கரந்தைப் போர் என்ற அத்தியாயம், பறம்பு மலைக்குள்
திருட்டுத்தனமாக நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற பாண்டிய வீரர்களிடமிருந்து
ஒரு மனித உயிரைக் கூடக் கொல்லாமல், பாரி எப்படிச் சிறப்பாக போர் வியூகம் அமைத்து, வெற்றி காண்கிறான் என்பதைச்
சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும்
விவரிக்கிறது.
இளமையிலேயே பாரி பறம்பு மலையின் இயற்கையோடு இரண்டறக்
கலந்திருந்தான் என்பதையும், அம்மலையின் ஒவ்வொரு
அசைவும் அவனுக்குத் தெரிந்திருந்தது என்பதையும், இரக்க குணமும் மனிதநேயமும் கொண்டவனாக பாரி
இருந்தான் என்பதையும், இந்நாவல் மூலம்
இளையோர்க்கு ஆசிரியர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். பாரி குறித்து மட்டுமின்றி, பழந்தமிழர் வாழ்வியல்
குறித்தும் இளையோர் தெரிந்து கொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.
பறம்பின் பாரி
இளையோர் நாவல்
ஆசிரியர்:- உதயசங்கர்
வெளியீடு:- வானம் பதிப்பகம், சென்னை-89 +91 91765 49991
விலை ரூ 120/-

No comments:
Post a Comment