இருளும் ஒளியும்
உதயசங்கர்
அவனும் அவனுடைய தம்பியும் இடிந்த கட்டிடத்துக்குள் நுழையும் போது ஏற்கனவே அங்கே இருள் இருந்தது. தம்பி பயந்து போய் விட்டான். அவன் அண்ணனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். எதுவும் தெரியவில்லை. கீழே என்ன இருக்கிறது? எதிரில் என்ன இருக்கிறது? தரையில் தான் நடக்கிறோமா? அடுத்துப் பள்ளம் இருக்கிறதா? மேடு இருக்கிறதா? எதுவுமே தெரியவில்லை.
இருள். ஒரே இருள். கன்னங்கரேலென்று அப்பியிருந்தது. அண்ணனுக்கும் பயம் தான். ஆனால் அவன் பயப்படுவது தெரிந்தால் தம்பி அழத் தொடங்கிவிடுவான். அதனால் மனதைத் திடப்படுத்திக் கொண்டு கண்களை விரித்துப்பார்த்தான். சுருக்கிப்பார்த்தான்.
சிறிய வெளிச்சமாவது தெரிகிறதா?
இல்லை. வெளிச்சத்தின் ரேகை கூடத் தெரியவில்லை. அண்ணன் கீழே தரையில் உட்கார்ந்தான். கைகளால் துழாவினான். ஏதாவது தட்டுப்படுகிறதா? ஒருவேளை ஏதாவது பூச்சி பொட்டு இருந்தால்? ஒரு கணம் கைகளை விருட்டென்று எடுத்தான். ஆனால் வேறுவழி?
பகல் முழுவதும் வானிலிருந்து விழுந்த குண்டுவீச்சுகளுக்குப் பயந்து ஒளிந்து ஒளிந்து ஓடினார்கள். இரவில் எங்காவது தலைசாய்க்க வேண்டும். எங்கும் இடிந்த கட்டிடங்களும் இருளும் தான் மிச்சமிருந்தன..
எப்படியாவது வெளிச்சம் வேண்டுமே. இங்கே ஒரு தீப்பெட்டியோ, விளக்கோ இருக்கலாம். அதை எடுத்துவிட்டால் இந்த இருளை விரட்டி விடலாம். முழுவதுமாக விரட்ட முடியவில்லை என்றாலும் ஒரு மூலையில் பதுங்கச் செய்யலாம் இல்லையா?
இந்த யுத்தம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. அப்படி முடியும்போது யாராவது உயிருடன் இருப்பார்களா என்றும் தெரியவில்லை. அப்படியே சிலர் உயிருடன் இருந்தாலும் குழந்தைகள் இருப்பார்களா என்று தெரியவில்லை.
” ஹ்ஹ்ஹா ஹ்ஹ்ஹா ” இருள் சிரித்தது. அதன் சிரிப்பு இன்னும் பயமுறுத்துவது போல இருந்தது. அண்ணன் கைகளால் துழாவிக் கொண்டே முன்னேறிப் போய்க் கொண்டிருந்தான். அவன் பின்னாலேயே அண்ணனின் சட்டையைப் பிடித்தபடி தம்பியும் போனான். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது. முடிவற்ற இந்த இருளை விரட்ட முடியுமா?
அவனுக்குச் சோர்வாக இருந்தது. ஒருவேளை இந்த இருள் அவனையும் தம்பியையும் அப்படியே விழுங்கி விடுமோ? திரும்பிப்பார்த்தான். அவன் எந்தப் பாதை வழியே வந்தான் என்று தெரியவில்லை. எந்தத் திசையிலிருந்து வந்தான் என்று தெரியவில்லை. அவன் முன்னேப் போகப்போக இருள் போர்வையால் போர்த்தியது போல இருந்தது. வெகுதூரம் வந்து விட்டோமோ?
வெளிச்சத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால்? அப்படியே இருளுக்குள் மூழ்கி விட வேண்டியது தான்.
மீண்டும் இருளின் சிரிப்பு கேட்டது.
திடிரென்று கைகளில் எதுவோ தட்டுப்பட்டது.
ஆமாம். அது ஒரு தீப்பெட்டி. உடனே மனதில் புது உற்சாகம் பிறந்தது.
விரல்களால் தீப்பெட்டியைத் திறந்து உள்ளே துழாவினால் இரண்டே இரண்டு குச்சிகள் மட்டுமே இருந்தன. மெல்ல ஒரு குச்சியை எடுத்து தீப்பெட்டியில் உரசினான் அண்ணன்.
திடுக்கென்று ஒளிச்சுடர் தோன்றியது. ஒளிச்சுடரைக் கண்டதும் சட்டென்று இருள் அந்த இடத்திலிருந்து ஓடியது. ஆனால் சும்மா இருக்கவில்லை. வெளியில் வீசிக் கொண்டிருந்த காற்றை அழைத்தது.. காற்று ‘ ஊஊஊஊ ‘ என்று ஊளையிட்டபடி ஓடி வந்தது. தீக்குச்சியின் ஒளிச்சுடர் காற்றில் ஆடியது.
அண்ணன் கைகளால் அதைக் காப்பாற்ற நினைத்தான். அணைவதற்குள் சுற்றிப் பார்த்தான். நேரே மூலையில் ஒரு விளக்கு இருந்தது. அப்படியே அந்த விளக்கை நோக்கி தவழ்ந்து போனான். தீக்குச்சி அணைந்தாலும் அதன் கங்கு மினுமினுங்கிக் கொண்டிருந்தது. கைவிரல் சுடும்வரை குச்சியைக் கையில் பிடித்துக் கொண்டு நகர்ந்தான்.
விளக்கை நெருங்கி விட்டான். விளக்கில் எண்ணெய் இருக்க வேண்டும். அந்த விளக்கினை ஆட்டிப் பார்த்தான். அடித்தூரில் லேசாய் அசைவு தெரிந்தது. அதுபோதும்.
இருள் இப்போது முன்னைவிட வேகமாக வந்து மூடியது. அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போவதைப் போல தலை முதல் கால்வரை சுருட்டி எடுத்தது..
இதுவரை தைரியமாக இருந்த தம்பி அழத்தொடங்கினான்.
“ அண்ணே பயமாருக்குண்ணே..”
அண்ணன் தம்பியின் கையை ஆறுதலாய் பிடித்தான். இருளுக்கு இன்னமும் கோபம் தீரவில்லை. தன்னுடைய பெரிய வாயைத் திறந்து கொண்டு அவர்களை நெருங்கியது.
இதோ விழுங்கப் போகிறேன். விழுங்கப்போகிறேன் என்று அருகில் வந்தது.
அண்ணன் இன்னொரு தீக்குச்சியைப் பற்ற வைத்தான். குச்சியில் எரிந்த சுடரைப் பத்திரமாக விளக்குக்கு மாற்றினான்.
அந்தச் சுடரை அப்படியே விளக்கு சிந்தாமல் சிதறாமல் வாங்கிக் கொண்டது.
அந்த இடமே ஒளியினால் துலங்கியது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று இருள் கைகளைப் பிசைந்து கொண்டு தூரமாய்ப் போய் பதுங்கிக் கொண்டது. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் சுடர் அணைந்து விடும். அப்போது இருவரையும் விழுங்கிவிடலாம் என்று நினைத்தது. காற்றிடம் அந்தச் செய்தியைச் சொல்லி அனுப்பியது.
காற்று வேகமாக வந்து சுடரின் மீது மோதியது. சுடர் ஆடியது. அலைக்கழிந்தது. அணையப் போவது போல மங்கியது. அண்ணன் தைரியமாகக் காற்றை மறித்தான். தம்பியும் தன் பிஞ்சுக்கைகளால் சுடரைச் சுற்றி வேலி போட்டான். காற்றினால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்வாங்கிச் சென்று இருளிடம் முறையிட்ட து. இருள் ” பொறு நேரம் வரட்டும் ” என்றது.
தம்பியின் கைகள் சோர்ந்து விட்டன. அண்ணன் திரும்பி இருள் பதுங்கியிருப்பதைப் பார்த்தான். வெளியே பார்த்தான். விடிவெள்ளி தெரிந்தது.
தம்பியிடம் சொன்னான்.
“ தம்பி! இன்னும் கொஞ்ச நேரம் தான். வெளிச்சம் வந்து விடும் “
தம்பியின் முகத்தில் புன்னகை பூத்தது.
அந்தப் புன்னகையின் ஒளியைப் பார்த்த இருள் அவமானத்தால் அப்படியே மறையத் தொடங்கியது.

No comments:
Post a Comment