வேலை நிறுத்தம் வெற்றி!
உதயசங்கர்
நள்ளிரவு நேரம் . ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் அடுக்களையில் ஒரு சத்தம் கேட்டது. தம்ளர் லேசாக அசைந்த சத்தம். கிணுங்.. உடனே அருகிலிருந்த தோசைக்கரண்டி
“ யெப்பா கொஞ்சம் தூங்கவிடப்பா.. இப்போது தான் எனக்குக் கொஞ்சம் ஓய்வு எனக்குக் கிடைக்கும்.. மறுபடியும் காலையில் எழுந்த தும் தோசைச் சுடப் போக வேண்டும்.. சரியான தோசைக்குடும்பம்..”
என்று உடம்பை நெளித்த து. அப்ப்டி நெளிக்கும்போது மேலே இருந்த தட்டின் மீது தலை மோதி விட்டது. உடனே பால்செம்பு கடமுட கடமுட என்று கத்தியது.
“ டேய்.. யார்டா அது என்னைச் சீண்டிப்பார்க்கறது? நான் யார் தெரியுமில்ல.. என் ஊர் எதுன்னு தெரியுமில்ல.. “
என்று அங்குமிங்கும் அசைந்து வீடு கட்டியது. குழம்புச்சட்டி தன் மீதுள்ள மணத்தைத் தானே முகர்ந்தபடி,
“ அட அட.. என்னமா குழம்பு வைக்கிறாங்க! என்ன மணம்! எனக்கே சாப்பிடணும்போல இருக்கே..”
என்று புன்னகை பூத்தது. உடனே அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டுகள்,
“ உனக்கென்னம்மா மகராசி.. சட்டியில் குழம்பு இருக்கிற வரைக்கும் மவுசு தான்.. ஆனால் எங்களைப் பாரு.. இந்த வீட்டில யாராச்சும் சாப்பிட்ட தட்டைக் கழுவுறாங்களா? நாள் முழுவதும் சிங்குக்குள்ளேயே கிடந்து நாறணும்.. பாவம் இந்த அம்மா.. இராத்திரி அவ்வளவு பாத்திரத்தையும் கழுவி எடுக்கும்போது தான் எங்களுக்கு மூச்சு விட முடியுது..”
ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு பேசியதால் வார்த்தைகள் புரியவில்லை. ஆனாலும் குக்கர் எப்படியோ அதைப் புரிந்து கொண்டது.
“ நான் காலை, மதியம், இரவு மூணு வேளையும் விசில் ஊதிக்கிட்டே இருக்கணும்.. பக்கத்திலே இருந்தாக்கூட இந்த வீட்டு ஆண்கள் என்னன்னு கூடக் கேட்க மாட்டாங்க.. அதுக்கும் அந்த அம்மா தான் வரணும்..”
குழம்புக்கரண்டி, ஸ்பூன்கள், வாணெலி, கண்கரண்டி, அன்னக்கரண்டி, தாளிப்புக்கரண்டி என்று அனைத்துக் கரண்டிகளும் ஒரே நேரத்தில் பேச ஆரம்பித்தன.
அப்போது அடுக்களைக்குள் யாரோ வரும் சத்தம் கேட்ட து. உடனே எல்லாம் கப்சிப் என்று அமைதியாகிவிட்டன. உள்ளே வந்த அந்த வீட்டம்மா ,
“ அடைக்கு ஊறப்போடணும்னு நெனச்சேன்.. மறந்துட்டேன்..” என்று வாய்விட்டு சொல்லியபடியே பருப்பையும் அரிசியையும் அளந்து சருவச்சட்டியில் போட்டார். கண்களில் தூக்கம் அப்பியிருந்தது. தள்ளாடியபடியே நடந்து போய் படுத்து விட்டார்.
அப்போது அடுக்களையிலிருந்த கேஸ் அடுப்பு பேசியது.
” நண்பர்களே! இந்தப் பெண் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே அடுக்களையில் சமையல், பாத்திரம் கழுவுதல், சுத்தப்படுத்துதல் வேலைகளைச் செய்கிறார். கல்லூரி படிக்கும்போதும் சரி, வேலைக்குப் போனபின்பும் சரி, திருமணம் முடிந்த பிறகும் சரி.. அடுக்களையில் தான் அவளுடைய ஓய்வு நேரம் கழிகிறது. ஏன் அப்படி? என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? “
யாரும் எதுவும் பேசவில்லை. அமைதி. எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாத்திரக்கூடையின் அடியில் கிடந்த டீ பில்டர் ஏதோ முனகியது.
“ ஸ்ஸ் அப்பா… கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா… மூச்சு விட முடியலை..நான் ஒன்னு சொல்லணும்..”
உடனே மற்ற பாத்திரங்கள் கொஞ்சம் விலகின. இப்போது டீ பில்டர்,
“ சமையல் என்றாலே பெண்கள் தான் செய்ய வேண்டும்? “
என்று சொன்னது. உடனே தோசைக்கல்,
“ எவஞ்சொன்னது? “ என்று கர்ச்சனை செய்த து.
அப்போது ஓரமாய் ஒதுங்கியிருந்த இடியாப்ப உழக்கு,
“ யாரோ சொன்னாங்க.. செய்ய வைச்சாங்க.. ஆனால் பாருங்கள் பெண்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் அடுக்களையில் செலவழிக்கிறாங்க.. வாழ்நாளில் பாதிநேரம் சமையலில் தான் கழியுது “ என்று வருத்தத்துடன் சொன்னது.
“ ஆமப்பா வந்துட்டாங்க.. எப்படின்னாலும் யாராவது சமைச்சு தானே ஆகணும்..”..
என்று சொன்ன கண்கரண்டியை எல்லோரும் முறைத்தனர். அப்போது புதிதாக வாங்கியிருந்த பீங்கான் தட்டு சொன்னது,
“ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.. சமூகச்சமையலறைக்கூடம் அமைத்தால் வீட்டில் சமையலறையே தேவையில்லை.. நேரம், செலவு, பொருட்கள் எல்லாம் மிச்சப்படும்..”
“ எல்லோருக்கும் ஒத்து வருமா? “ என்றது கிண்ணம்.
“ ஏன் வராது? முயற்சி செய்து பார்க்கலாம்..” என்று பீங்கான் தட்டு சொன்னது.
“ அதெல்லாம் பின்னாடி பார்க்கலாம்.. இப்ப முதல்ல இந்த அம்மாவை எப்படிக் காப்பாத்தலாம்? அதைச் சொல்லுங்க..”
“ என்ன செய்யலாம்? ” என்றது போணிச்சட்டி.
“ வேலைகளை எல்லோரும் பகிர்ந்து செய்தால் நேரமும் மிச்சமாகும் அந்த அம்மாவின் ஓய்வு நேரமும் அதிகமாகும் இல்லையா? “
“ சரிதான்.. அப்ப நாம் வேலைநிறுத்தம் செய்ஞ்சுடுவோம்..” என்று துள்ளிக்குதித்தது குழம்புக்கரண்டி.
வேலை நிறுத்தம்!
மறுநாள் காலையில் எல்லாப்பாத்திரங்களும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எல்லாம் அப்படியே ஒட்டிக் கொண்டது போல இருந்தன. அந்த அம்மாவின் வீட்டுக்காரர் எடுத்தால் மட்டும் அசைந்தன. அவர் பற்ற வைத்தால் மட்டும் கேஸ் ஸ்டவ் எரிந்தது. அவர் அரிசியைப் போட்டால் மட்டும் குக்கர் வேலை செய்த து. மிக்சி, கிரைண்டர், எல்லாம் அப்படித் தான். அன்று முழுவதும் அவர் தான் சமையல் வேலை செய்தார். அருகில் அந்த அம்மாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களுடைய பையனும் வேலை செய்தான்.
அப்போது தான் அப்பாவுக்கும் மகனுக்கும் புரிந்தது.
அந்தப் பெண் எவ்வளவு வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அன்று இரவு அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள்.
“ இனி நாம் வேலைகளைப் பகிர்ந்து செய்வோம்..” என்று சொன்னார்கள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாத்திரங்களுக்கு மகிழ்ச்சி.
இரவில் எல்லோரும் தூங்கிய பிறகு,
வேலை நிறுத்தம் வெற்றி! வேலை நிறுத்தம் வெற்றி! என்று பாட்டுப்பாடி ஆடின பாத்திரங்கள்.
நீங்களும் வீட்டில் அம்மாவுக்கு உதவி செய்வீர்கள் தானே.
நன்றி - வண்ணக்கதிர்

நல்லதோர் கதை.... இப்படியான வேலை நிறுத்தம் பல வீடுகளில் தேவையாக உள்ளது.
ReplyDeleteஉண்மை தான். வரும் விரைவில் வரும். மிக்க நன்றி
Delete