Saturday, 11 November 2017

மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிக்கொண்டிருந்த பேனா இன்னும் மூடப்படவில்லை –

மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிக்கொண்டிருந்த பேனா இன்னும் மூடப்படவில்லை –

உதயசங்கர்
” காலத்தின் மனசாட்சி தான் நல்ல இலக்கியம். சமகாலத்துப்பிரச்னைகள், துயரங்கள், சீரழிவுகள், சிதைவுகள், மக்கள் வாழ்வின்னல்கள், பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் உன்னத இலக்கியம் பற்றியெல்லாம் பேனா ஜம்பம் அடிக்கிறவர்களை வெறுக்கக்கற்றுக் கொள்ள வேண்டும் மக்களைப்பற்றிக் கவலைப்படுகிற கலை இலக்கியம் தான் அசலான மக்கள் இலக்கியமாக இருக்க முடியும். “  - பூமாயன் சிறுகதைத்தொகுப்பு முன்னுரையில் மேலாண்மை பொன்னுச்சாமி.
1972- நவம்பர் மாதச்செம்மலரில் பரிசு என்ற சிறுகதையின் மூலம் தன் எழுத்துப்பயணத்தைத் துவக்கிய செ.பொன்னுச்சாமி தன்னுடைய இறுதி நாட்கள் வரை எழுதிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிற மேலாண்மை பொன்னுச்சாமி ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள மேலாண்மறை என்ற குக்கிராமத்திலிருந்து இலக்கியத்துக்குள் அடி எடுத்து வைத்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருடைய பால்யகாலமும் இளமைக்காலமும் அவ்வளவு உவப்பானதல்ல. ஊர் ஊராக சைக்கிளில் சென்று புளி விற்றிருக்கிறார். கருப்பட்டி விற்றிருக்கிறார். கருவாடு விற்றிருக்கிறார்.
வாழ்க்கையோடு மல்லுக்கட்டிக்கொண்டு இடதுசாரித்தோழர்களுடைய தொடர்பினால் வாசிக்கவும் எழுதவும் தொடங்கியிருக்கிறார். அப்போது ஒன்றாக இருந்த ராமநாதபுரம் மாவட்டச்செயலாளராக செயலாற்றிய தோழர்.எஸ்.ஏ.பி. அவருக்கு ஆசானாக இருந்திருக்கிறார். மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் எழுதி வைத்திருந்த ஒரு குயர் நோட்டை வாசித்து அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார். எஸ்.ஏ.பி. வாசித்ததில் இருந்து தேர்ந்தெடுத்து செம்மலருக்கு அனுப்பச்சொல்லி வழிகாட்டியிருக்கிறார். அப்படித்தான் மேலாண்மை பொன்னுச்சாமி என்கிற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் உதித்தார்.
 பெருந்தமிழ் வாசகப்பரப்பிற்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் எளிய கிராமப்புற மக்களின் வாழ்க்கைப்பாடுகளை, பிரச்னைகளைத் தன்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் வெளிப்படுத்துகிற எழுத்தாளுமையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.70-களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை உயர்சாதியினர் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம் முடிவுக்கு வரத்தொடங்கியிருந்தது. தமிழிலக்கியம் இதுவரை கண்டிராத புதிய திசைகளிலிருந்து புதிய குரல்கள் புதிய வாழ்க்கைப்பாடுகளைப் பேசத்தொடங்கியிருந்தது. குறிப்பாக நாகம்மாவை எழுதி வட்டார இலக்கியப்போக்கைத் துவக்கி வைத்த ஆர்.ஷண்முகசுந்தரம், வட்டார இலக்கியப்போக்கை ஆழமாக ஏர் பிடித்து உழுது பதமாக்கிய கி.ராஜநாராயணன், தொடர்ந்து பயிர்செய்து படைப்புகளை அறுவடை செய்த  பொன்னீலன், நாஞ்சில்நாடன், பூமணி, என்ற படைப்பாளிகளுக்குப் பின்னால் வறண்ட கரிசல் மண்ணிலிருந்து எளிய மக்களின் குரலாக ஒலித்த குரல் மேலாண்மை பொன்னுச்சாமியின் குரல்.
அதேபோல முற்போக்கு இலக்கியத்தில் தொமுசி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், விந்தன், கு.சி.பா. என்று படைப்பாளிகளின் வரிசையில் தன்னை முற்போக்கு எழுத்தாளன் என்ற பிரகடனத்தோடு இணைத்துக் கொண்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. எழுதி எழுதியே தன்னுடைய எழுத்தைச் செதுக்கியவர். அவரைச்சுற்றி அவர் கண்ட மக்களின் வாழ்க்கை அவருக்குள் ஏற்படுத்திய நெருக்கடியே அவரை எழுதத்தூண்டியது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மக்களின் வாழ்க்கைப்பாடுகளிலிருந்து சற்றும் விலகாமல் தன்னுடைய கதைகளை எழுதியவர்.
மனிதவாழ்வின் அவலங்களை மட்டுமல்ல அவனுடைய உன்னதங்களையும் எழுதிப்பார்த்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி. உள்மனிதன் என்ற கதையில் காலை நேர டவுண்பஸ் நெருக்கடி, கோபம், தாபம், வசவுக்காடு, என்று பஸ்ஸே எரிச்சலுடன் நகர்ந்து கொண்டிருக்கும். திடீரென பிரசவவலி வந்த பெண்ணின் அவஸ்தையில் பஸ்ஸே தாயாக மாறி பணிவிடை செய்யும். அந்தப்பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்தபிறகு மறுபடியும் பஸ் கசகசவென மாறிவிடும். மனிதன் அவசியம் நேரும்போது தன்னுடைய உன்னதத்தைக் காட்டுகிறான். அந்த உன்னததருணத்தை அவனே தாங்க முடியாமல் மறுபடியும் சாதாரணணாகி விடுகிறான். அதேபோல மயிலும் கிளியும் என்ற கதையில் கரிசக்காடுகளில் வெள்ளாமையை அழிச்சாட்டியம் பண்ணுகிற கிளிக்கழுதைகளையும், மயில்ச்சனியன்களையும் விரட்டுவதற்கு அங்கும் இங்கும் ஓடி அம்மா படுகிறபாட்டைப் பார்த்து பரிதவிக்கிற மகன் கிளிகளையும் மயில்களையும் கொல்வதற்காக மருந்து வாங்கி வைக்கிறான். தற்செயலாய் கேட்கிற அம்மாவின் உரையாடலில் பொங்கும் தாய்மையுணர்வு அந்தக்கிளிகளையும் மயில்களையும் கூட தன் பிள்ளைகளைப்போல நினைக்கிற பரிவு அவனிடம் மாற்றத்தை உருவாக்கி விடுகிறது.
. 1970-களில் துவங்கப்பட்ட செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த கே.எம்.முத்தையாவைத் தன்னுடைய ஞானத்தந்தையாக குறிப்பிடுவார் மேலாண்மை. கே.எம்.முத்தையாவின் ஊக்கமும் உற்சாகமும் அவரை நேரடி அரசியலில் இருந்து தீவிர எழுத்துப்பணிக்குத் திருப்பியது. ஒரு நேரத்தில் ஒரே செம்மலரில் மேலாண்மை பொன்னுச்சாமியின் இரண்டு கதைகள் கூட வந்திருக்கின்றன. முற்போக்கு சிறுகதைகள் என்றால் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர் முதலில் தோன்றுகிற அளவுக்குத் தன்னுடைய அயராத உழைப்பால் எழுத்துப்பணியைச் செய்தார்.
2.
 70-களில் கோவில்பட்டியில் இருந்த பால்வண்ணம், ஆர்.எஸ்.மணி, தேவப்ரகாஷ், போன்ற நண்பர்களிடம் ஒவ்வொரு மாதமும் செம்மலரில் வெளிவந்த அவருடைய கதைகளைப் பற்றிய கருத்துகளையும் விமரிசனங்களையும் கேட்பதற்காக ஊரிலிருந்து சைக்கிளை மிதித்து வருவாராம். அவர்களும் அவருக்கு டீ,வடை, வாங்கிக் கொடுத்து கடுமையான விமரிசனங்களை அவரிடம் சொல்வார்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வாராம். அவர்கள் சொன்னதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த கதையை எழுதி செம்மலருக்கு அனுப்பி வைப்பார். அந்தக் கதை வந்ததும் மறுபடியும் கோவில்பட்டிக்கு வருவார். இப்படி அவர் விமரிசனங்களை விரும்பி வாங்கியிருக்கிறார். அதை அவருடைய அனைத்துத் தொகுப்புகளிலும் கூடப் பார்க்க முடியும். முன்னுரையின் முடிவில்
 “ உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு இன்னும் மையூற்றும். நீங்கள் கண்டுணர்ந்து சொல்கிற குறைகளும் கூட என்னைச் செதுக்கி மேலும் கூர்மையாக்கும். இரண்டுமே இலக்கியத்துக்குச் சிறப்பு செய்யும். “
என்று எழுதியிருக்கிறார்.
 அவர்களுக்குப்பின்னால் நேரடியாக புதுமைப்பித்தனிலிருந்து வாசிப்பைத் துவங்கிய என்னைப் போன்றவர்களின் கருத்துக்களையும் விமரிசனங்களையும் கேட்டுக் கொள்வார்.
விமரிசனங்களைக் கண்டு அஞ்சி நடுங்குகிற – விமரிசனங்களைத் தவிர்க்க நினைக்கிற-எழுத்தாளர்கள் மத்தியில் விமரிசனங்களைத் தேடிப்போய் வாங்குகிற எழுத்தாளராக இருந்தார் மேலாண்மை பொன்னுச்சாமி. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு சாகித்ய அகாடமி விருது பெறுகிற அளவிற்கான படைப்புகளை எழுதியிருக்கிற மேலாண்மையின் அர்ப்பணிப்பு எல்லோரும் பின்பற்றத்தக்கது. கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனின் வழி தன்னை ஒரு கதை சொல்லியாக நிலை நிறுத்திக்கொண்டவர். யதார்த்தவாதம், விமரிசன யதார்த்த வாதம், சோசலிச யதார்த்தவாதம், என்ற இலக்கியக்கோட்பாடுகளில் உரத்து நின்று எழுதியவர்.
அவருடைய சிக்கல், சிடுக்குகள் இல்லாத எளிய முறையிலான கதை சொல்லல் தான் அவருடைய பாணி என்று சொல்லலாம். மத்தியதரவர்க்க எழுத்தாளர்களிடம் இருக்கும் ஒருவித எழுத்துப்பாசாங்கு அவரிடம் கிடையாது. நேரிடையாகக் கதை சொல்வார். தான் கண்ட கேட்ட கிராமத்து மனிதர்களைப் பற்றி, ( பூமாயன் ) ஆண் பெண் உறவுச்சிக்கல்களைப் பற்றி ( மன உடைப்பு, விளக்குமாறு ) கிராமங்களில் வாழும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி ( ஊர்ப்பண்பு)  அவருடைய கதைகளில் கையாண்ட விதமும், மனித உணர்வுகளின் பேதங்களை மட்டுமல்ல, உன்னதங்களையும், உணர்ச்சித்ததும்பல்களையும்,உரத்துச்சொன்ன மகத்தான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி. தன்னுடைய படைப்புகளில் கலை அமைதி, வடிவ நேர்த்தி, உள்ளடக்கப்பொருத்தம் என்று பெரிய அளவில் கவலைப்பட்டவரில்லை. உணர்ச்சி கொப்பளிக்கும் நிகழ்வுகள், விவாதங்கள், உரத்துப்பேசும் கரிசல் மனிதர்கள், என்று ஒரு கிராமத்தையே  தன்னுடைய படைப்புகளில் உலவவிட்டவர்.
கல்கி, பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பரந்த வாகசப்பரப்புக்குள் வந்த மேலாண்மை பொன்னுச்சாமி, ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகள் எழுதி பெரும் புகழ் பெற்றார். மானுடம் வெல்லும், சிபிகள், கூரை, உள்மனிதன், பூக்காத மாலை, பூச்சுமை, மானுடப்பிரவாகம், மனப்பூ, மின்சாரப்பூ, பூமாயன், போன்ற 20-க்கும் மேற்பட்ட சிறுகதை நூல்களையும், கோடுகள், தழும்பு, மரம், பாசத்தீ, போன்ற குறுநாவல் தொகுப்புகளையும், முற்றுகை, இனி, அச்சமே நரகம், ஊர்மண், போன்ற நாவல்களையும், சிறுகதைப்படைப்பின் உள்விவகாரம் என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. தான் ஒரு இடது சாரி எழுத்தாளன் என்பதை எந்த ஒரு இடத்திலும் உரத்துப்பேசுகிறவர். எல்லோர் மீதும் மிகவும் உரிமையுடன் பழகுகிற, ஆலோசனை சொல்கிற, ஆலோசனை கேட்கிற எளிய மனிதர்.
1975- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். தமுஎகச அமைப்பை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பெரும் ஈடுபாடு காட்டியவர். தமுஎகச வின் தலைவராகவும், துணைப்பொதுச்செயலாளராகவும், துணைத்தலைவராகவும் பலமுறை தேர்வு செய்யபட்டவர். முற்போக்கு எழுத்தாளர் படை ஒன்றினை உருவாக்க கடுமையாக உழைத்தவர். எழுத்தும் இயக்கமும் என்று இடையறாது இயங்கியவர். சிறந்த படைப்புகளை மனம் திறந்து பாராட்டுவார். வெகுளித்தனமான அவருடைய உரையாடல் எல்லோரையும் மிக நெருக்கமாக்கிக் கொள்ளும். என்மீது தனிப்பட்ட அக்கறையும் அன்பும் கொண்ட மேலாண்மை பொன்னுச்சாமியிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் ஒரே நேரத்தில் இரண்டு டீ குடிப்பார். வெளிப்படையான வெள்ளந்தியான அவருடைய எளிய குணம் என்னை ஆச்சரியப்படுத்தும். இதோ டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்கிறேன். என்னருகில் இருந்த நண்பர் கேட்டார்,
”“ என்ன அதிசயமா அடுத்தடுத்து ரெண்டு டீ குடிக்கிறீங்க?..”
நான் மேலாண்மை பொன்னுச்சாமி என்ற மகத்தான படைப்பாளிக்கு, தமிழ் இலக்கியத்துக்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்த எழுத்தாளுமைக்கு விடை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
போய் வாருங்கள் எங்கள் அருமைத்தோழரே!
உங்கள் எழுத்துகளை நாங்கள் இப்பொழுதும் எப்பொழுதும் வாசித்து உங்களை நினைவு கூர்வோம்!
நன்றி - தீக்கதிர் இலக்கியச்சோலை




No comments:

Post a Comment