Saturday, 26 September 2026

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல்

 

 ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல்

உதயசங்கர்



ஒரு படைப்பை எப்படி அறிந்து கொள்வதென்றால் என்ன? எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ, சூசகமாகவோ, குறியீடாகவோ, படிமமாகவோ அது படைக்கப்பட்ட காலத்தைப் பிரதிபலித்தே தீரும். படைப்பின் காலமென்பது படைப்பாளி வாழும் காலம். வர்க்கங்களின் வரலாறே மனிதகுலவரலாறு என்று புரிந்து கொண்டோமானால் படைப்பாளி என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறார். அந்தச் சமூகத்தின் உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்னென்ன? என்பதை அவருடைய படைப்பில் காணமுடியும்.

ஒவ்வொரு சமூகமும் அதற்கே உரித்தான சமூக விழுமியங்களை உருவாக்கிக் கொள்கிறது. இந்தப் புதிய விழுமியங்கள் அந்தச் சமூகத்தின் உற்பத்திச்சக்திகள், உற்பத்தி சாதனங்கள், உற்பத்தி உறவுகளைப் பொறுத்து மாறிக் கொண்டேயிருக்கும். அப்படி மாறும்போது அப்படியே பாம்பு தோலுரிப்பதைப் போல முற்றிலும் பழைய விழுமியங்களைத் தொலைத்து விடாது. பழைய சமூகத்தின் விழுமியங்களில் புதிய சமூகத்துக்கேதுவான விழுமியங்களைத் தக்கவைத்துக் கொண்டு புதிய சமூகத்தின் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும். படைப்பிலும் இதைக் காணமுடியும். மாறிக் கொண்டேயிருக்கும் சமூகத்தின் விழுமியங்களை படைப்பும் பிரதிபலிக்குமென்பதைப் புரிந்து கொண்டால் ஒரே படைப்பில் பழமையும் புதுமையும் ஊசலாடுவதைப் புரிந்து கொள்ள முடியும்.

எந்த ஒரு படைப்பும் முழுமையானதல்ல. இயற்கையும் அப்படித்தான். படைப்பு தன்னளவில் முழுமையானதாகவும் அதே நேரம் முழுமையற்றதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. படைப்பின் குறைகளும் நிறைகளும் எழுத்தாளனின் நோக்கம், அகஎழுச்சி, அர்ப்பணிப்பு, பயிற்சி, உழைப்பு ஆகியவற்றைப் பொறுத்துக் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 
     
ஒரு படைப்பு படைக்கப்பட்டதினாலேயே முழுமை பெறுவதில்லை. படைக்கப்பட்ட படைப்பு வாசிக்கப்படும்போது தான் முழுமை பெறுகிறது. அதுவரை அது ஒரு உயிரற்ற சடப்பொருள். ஒருவகையில் அதற்கு உயிர் கொடுப்பது வாசகன் தான். அவன் அந்தப் படைப்பை வாசிக்கத்தொடங்கிய அடுத்த நொடி படைப்பின் இதயம் துடிக்கத் தொடங்குகிறது. அதன் ரத்த நாளங்களில் படைப்பின் ரசம் ஓடத் தொடங்குகிறது. அதன் உடல் வலிவடைகிறது. அதன் தசைகளின் அழகு பொலிவுறுகிறது. அதன் ஆகிருதி மெல்ல வாசகனின் மனதில் உருப்பெறுகிறது. எனவே வாசகன் இல்லையென்றால் அல்லது வாசிப்பு இல்லையென்றால் எத்தகைய உன்னதப்படைப்பாக இருந்தாலும் அது செத்த சவத்துக்கொப்பானது தானென்பதை எழுத்தாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு படைப்புக்கு உயிர் கொடுக்க படைப்பின் தன்மையை அறிந்து கொள்ள வாசகர் மிக முக்கியமானவராகிறார்.

படைப்பின் முழுமை என்பது அது இயங்கும்போதே நிகழும் செயல். ஒரு படைப்பை அறிந்து கொள்வதற்கான அடிப்படையென்பது அந்தப் படைப்பு வாசகர்களின் மனங்களில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறதென்பதைத் தெரிந்து கொள்ளுதலெனலாம்.  ஒவ்வொரு படைப்பும் வாசகர்களுடன் உரையாடல் நடத்துகிறது. அந்த உரையாடலின் வலிமை, அர்த்தஞானம், ஆழம், பாதிப்பு தற்காலப்பொருத்தப்பாடு போன்றவையே அந்தப் படைப்பைச் சமூகத்தில் பரவலாக்குகிறது.

ஒவ்வொரு படைப்பும் இருபக்கமேளம் போன்றது. ஒருபக்கம் படைப்பாளியென்றால் இன்னொரு பக்கம் வாசகர் இருக்கிறார். இருபக்கங்களிலும் தாளம் சுதி பிசகாமல் இசைக்கப்படும்போது தான் அந்தப் படைப்பின் வீரியம் தெரியும். ஆக படைப்பு, வாசகர், சமூகம்  இந்த மூன்றின் இயங்கியல் தான் படைப்பில் தொழில்படுகிற மிக முக்கியமான விஷயங்கள். இதில் சமூகம் என்ற புறவயமான யதார்த்தம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. புறச்சமூகம் தான் எழுத்தாளரின் மனதிலும் வாசகனின் மனதிலும் அவர்களறியாமலே சார்புநிலைகளை உருவாக்குகிறது.

இந்தச் சார்புநிலைகள் ஒரு படைப்பை எழுதும்போதும் சரி வாசிக்கும்போதும் சரி படைப்புக்குள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொழில்படும். ஆக ஒவ்வொரு படைப்பும் பெரும்பாலும் அந்தந்தக் காலத்தைப் பிரதிபலிக்குமென்பதையும் அந்தக் காலத்திலிருந்து படைப்பாளி ஆசைப்படும் எதிர்காலத்தையும் பிரதிபலிக்குமென்பதையும் புரிந்து கொள்ளலாம். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தின் கலவையாகவே ஒரு படைப்பு உருவாகிறதென்பதைப் புரிந்து கொண்டால் இவற்றுக்கிடையில் செயல்படும் இயங்கியலை ஆய்வு செய்யலாம்.  அதனால் தான் ஒரு படைப்பு காலங்கடந்து நிற்பதும் அல்லது ஒரு படைப்பு அந்தக் காலத்திலேயே மறக்கப்படுவதும் நடக்கும். சமூகத்தின் மறதியில் சிக்குண்ட பல படைப்புகள் சில காலமோ, பல காலமோ கழித்து மீண்டும் கண்டுபிடிக்கப்படுவதும் நடக்கும். ( வள்ளுவர், அயோத்திதாசர், தமிழ் ஒளி, ப.சிங்காரம், புதுமைப்பித்தன் இன்னும் பலர் ) அதுவரை அந்தப் படைப்புகள் நீளுறக்க நிலையில் இருக்கும். இதற்கொரு முன்நிபந்தனையுமிருக்கிறது. அதாவது அந்தப் படைப்புகள் மறுகண்டுபிடிப்புச் செய்யப்பட்டு வாசிக்கப்படுவதற்கான காரணங்கள் அந்தப் படைப்பிலேயே இருக்க வேண்டும். எனவே தான் ஒவ்வொரு படைப்பும் தன்னுடைய வாசகரை / வாசகர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது.

வாசிக்கும் வாசகர் அந்தப் படைப்பின் காலம், பின்புலம், அதன் அழகியல், நோக்கம், அரசியல், தத்துவம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும்போது உண்மையான படைப்புகளுக்கும் போலியான படைப்புகளுக்கும், படைப்பல்லாத படைப்புகளுக்குமிடையிலுள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உண்மையான படைப்பை அறிந்து கொள்ளவும் முடியும்.

நன்றி - புக் டே

.

1 comment:

  1. ஒரு படைப்பை புரிந்து கொள்ளும் விதத்தை எளிமையாக விளக்கும் கட்டுரை. சிறப்பு

    ReplyDelete