Thursday 8 August 2019

அப்பாவின் கைத்தடி




அப்பாவின் கைத்தடி
உதயசங்கர்

வீடு ஏன் அவ்வளவு வெளிச்சமாக இருந்தது என்று ரேவதிக்குத் தெரியவில்லை. இராத்திரி பனிரெண்டு மணி மில் சங்கு ஊதி கொஞ்சநேரம் ஆகியிருக்கும். எப்போதும் மேலே உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டில் உள்ள ஓட்டைகள் வழியேயும், மண் சுவருக்கும் கூரைக்கும் நடுவே உள்ள அரையடி இடைவெளி வழியாகவும் வெளிச்சம் பொழிந்து கொண்டேயிருக்கும் என்றாலும், இன்று இரவிலும் பகலைப்போல அப்படி இருந்தது அல்லது அப்படி இருப்பதாக ரேவதிக்குத் தோன்றியது. தோணல்கள் தானே வாழ்க்கையைக் கொண்டு செலுத்துகிறது. ரேவதியின் ஒட்டிய கன்னங்கள் இரண்டு பக்கமும் லேசாக விரிந்தன. அவள் இன்னும் சற்று நேரத்தில் மூன்று மணி மில் சங்கு ஊதியவுடன் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும். மில் வாசலுக்கு அடுத்த ஹூசைன்பாய் டீக்கடை முக்கில் கட்டையன் காத்துக்கொண்டிருப்பான். காத்துக்கொண்டிருக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வரை அவர்களுடைய கால்மாட்டில் அப்பா படுத்திருந்தார். அவர் சட்டடியாகப் படுத்து ஆறு மாதங்களாகி விட்டது. அதற்கு முன்னால் அவர் கையில் ஒரு கைத்தடியை வைத்துக் கொண்டு நடமாடிக்கொண்டிருந்தார். ஆனால் படுத்தபிறகும் அவருடைய பக்கத்தில் அந்தக் கைத்தடி கிடந்தது. எப்போது வேண்டுமானாலும் எழுந்து நடந்து விடுவதைப்போல. பலமுறை அப்பாவின் கால்களைத் தட்டிவிட்டிருக்கிறது. ஆனாலும் அவர் அந்தக் கைத்தடியை விடுவதாயில்லை. பிறந்ததிலிருந்து கூடவே இருக்கிறமாதிரி ஒரு பாசம். கைத்தடியில்லை என்றால் அவருக்குப் பயம் வந்து விடும். வழிதவறிவிடுவோமோ என்று பயப்படுவார். பல நேரங்களில் அவர் கைத்தடியை வைத்திருக்கிறதா? அல்லது அவரைக் கைத்தடி வைத்திருக்கிறதா? என்ற சந்தேகம் வரும்.  அந்தக் கைத்தடியை வைத்துத்தான் ரேவதி இரண்டாவது முறையாக வீட்டைவிட்டு வெளியேறிய போது அடித்தார். அது நடந்து நாலைந்து வருடம் இருக்குமா? அவன் தீப்பெட்டிக்கம்பெனியில் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்தான். அது நடந்திருந்தால் இந்நேரம் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகியிருப்பாள். ஆனால் அன்று அப்பாவிடம் மாட்டிக்கொண்டாள். அவள் எழுந்து போகும்போது அப்பா குறுக்கே வைத்திருந்த கைத்தடி காலைத்தட்டி விட கீழே விழுந்துவிட்டாள். விழுந்தவள் அந்த அறையின் ஒரு பகுதியாக இருந்த அடுக்களையில் உள்ள பாத்திரங்களைக் கடமுடா என்று உருட்டிவிட்டாள். பார்த்தவுடன் புரிந்து கொண்டார் அப்பா.
“ யார் அவன்? என்ன ஆளுக..? “ என்று கத்தினார்.
அவள், “ தெரியாது “ என்றாள்.
தெரியாது என்ற வார்த்தையைக் கேட்டதுதான் தாமதம் அப்பாவின் கைத்தடி ஆவேசமாக அப்பாவின் கையைத்தூக்கியது. அடி என்றால் அந்த அடி இந்த அடி என்றில்லை. ரேவதி எழுந்து நடமாட ஒரு வாரம் ஆகிவிட்டது. நல்லவேளை இதையெல்லாம் பார்ப்பதற்கு அம்மா இல்லை. தீப்பெட்டிக்கம்பெனிக்குப் போய்விட்டு வந்து வாசலில் உட்கார்ந்தாள்.
“ ஈசுவரி.. நெஞ்சைக்கரிக்கிற மாதிரி இருக்கு. குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் போட்டுக் கொண்டா..”
என்றாள் அம்மா. ஈசுவரியக்கா வெந்நீர் போட்டுக் கொண்டுவருவதற்குள் கீழே சாய்ந்திருந்தாள்.
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தாள் ரேவதி. பக்கத்தில் படுத்திருந்த ஈசுவரியக்கா ம்ம்ம் என்று முனகிக்கொண்டே உடம்பை முறுக்கினாள். பார்த்தால் வலிப்பு வந்த மாதிரி இருந்தது. அவ்வளவு அசதி அவளை அமுக்கிக்கொண்டிருந்தது. உடல் அசதியை மீறி அவள் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. இப்போது ஈசுவரி இரண்டு வாரமாய் மில் வேலைக்குப்போகிறாள். காண்டிராக்ட் கூலி. இன்னும் ஒரு பைசா வாங்கிக்கையில் பார்க்கவில்லை. உள்ளே ஆண்கள் செய்கிற அத்தனை வேலையையும் செய்யச்சொல்கிறார்கள். ஈசுவரியின் உதட்டுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த தெத்துப்பல் எல்லோரையும் தொந்திரவு செய்கிறது. தொத்தலான அந்த உடம்பில் எந்தச்சதைப்பிடிப்பும் இல்லை. தோலை எலும்புகளின் மீது ஒட்டி வைத்த மாதிரி இருந்தாள் ஈசுவரி. மில்லுக்குள் அவளை ஏறிட்டுப்பார்க்கக்கூட யாரும் கிடையாது. அவள் இருப்பதைப் பொருட்படுத்தாமல் கெட்டவார்த்தைகளைப் பேசுவதும், கெட்டவார்த்தைக்கதைகளைச் சொல்லிச் சிரிப்பதும் கூட நடக்கும். மிஷின்கள் ஓடும் சத்தத்தில் அவர்கள் பேசுவது ஈசுவரிக்குச் சரியாகக் கேட்காது. ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் தான் காதில் விழும். அவர்களுக்கு எல்லாவார்த்தைகளும் எப்படி தெளிவாகக் கேட்கிறதோ? காதில் விழும் அந்த ஒன்றிரண்டு வார்த்தைகளே அவளுடைய அடிவயிற்றில் ஒரு இளக்கத்தை ஏற்படுத்தும். அவளுக்கு அந்தக்கணத்தில் ஏற்படும் கிறக்கத்துக்காக அவள் ஏங்க ஆரம்பித்தாள். அந்தக் கதைகளைக் கேட்பதற்காக ஆண்கள் வேலை பார்க்கும் இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தாள். இப்போதும் அந்த முனகல் வந்தது. அந்த முனகலோடு ஒரு சிரிப்பு உதடுகள் பிரிந்து ஏக்கத்துடன் ஒரு சிரிப்பு வந்து மறைந்தது. அதென்ன? சிரிக்கும்போது எல்லாமனிதர்களும் அழகாகி விடுகிறார்கள்.
ரேவதி அக்காவைப் பார்த்தபடியே கிடந்தாள். பாவம் ஈசுவரி! இந்தத்தரித்திரம் பிடித்த வீட்டை விட்டு அவளும் விடுதலையடைய வேண்டும். அக்கா உனக்கும் ஒருத்தன் இருப்பான். அந்த மில்லிலேயே கூட இருக்கலாம். எப்படியாச்சும் தப்பித்துவிடு. அவளுடைய கண்கள் சுவற்று ஆணியில் தொங்கவிட்டிருந்த பிக்‌ஷாப்பர் பையைப் பார்த்தாள். பை சிரித்தமாதிரி இருந்தது. இந்த முறை எப்படியும் வெளியே போயிருவேன் என்று பையிடம் சொல்லி சடைத்துக்கொண்டாள். அருகில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் கைத்தடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தது. மூணாவது முறையாக அவள் வீட்டைவிட்டு ஓடிப்போகத் திட்டம் போட்டிருக்கிறாள். அவளுக்கு எல்லாமே மூன்றாவது முறை தான் கிடைக்கிறது. முக்கா முக்கா மூணு ஆட்டை அவளுடைய பாலிய காலத்திலிருந்து பின்தொடர்கின்ற ஒரு விளையாட்டு மந்திரம். பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலும் விளையாட்டாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி, பரீட்சையாக இருந்தாலும் சரி, ஒப்பிக்கிறதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் மூணு தடவை செய்யணும். அப்போது தான் அவளுக்குத் திருப்தி வரும். முதல்தடவையே அவள் சரியாகச் செய்து விட்டாலும் அவள் விடுவதில்லை. திரும்பத்திரும்பச் செய்து கொண்டிருப்பாள்.
இந்த முறை கட்டையனே வரவில்லை என்றாலும் அவள் போய் விடுவாள். எங்கே போக முடியும்? அவளுக்குத் தெரிந்து திருநெல்வேலி தான் அவள் போயிருக்கிற தூரத்து ஊர். வடக்கே போனதேயில்லை. கட்டையன் என்ன திட்டம் வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை. கட்டையனின் பெயர் என்ன என்றே நினைவிலில்லை. அவன் அப்படியொண்ணும் கட்டையுமில்லை. யாரோ கூப்பிட்டிருக்கிறார்கள். அந்தப்பெயரே அவனுக்கு நிலைத்து விட்டது. அந்தப் பகுதியில் உள்ள கிளப்புக்கடைகளுக்குத் தண்ணீர் எடுத்து ஊற்றுவான். டேபிள் துடைப்பான். விறகு கொண்டு வந்து போடுவான். சொல்கிற எடுபிடி வேலைகளைச் செய்வான். வீட்டுக்கு விருந்தாட்கள் வந்தால் கடனுக்கு டீ வாங்க அவள் உசேன்பாய் கடைக்குப் போவாள். அங்கே ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பான். டீக்கிளாசுகளைக் கழுவிக்கொண்டோ, அருகில் உள்ள வணிகவளாகங்களில் ஆர்டர் செய்த டீ தூக்கை எடுத்துக்கொண்டோ போய்க்கொண்டிருப்பான். அவன் ஒருபோதும் அவளை ஏறிட்டுக்கூடப் பார்த்ததில்லை. ஆனால் அவள் அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவன் பார்க்கும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
எந்த பெரிய லட்சியங்களும் இல்லாத கட்டையன் அவளைப் பார்த்ததும் லட்சியவாதியானான். அவளுக்கு வளையல், ரிப்பன், பிளாஸ்டிக் கம்மல்கள் வாங்கிக்கொடுத்தான். கிளப்புக்கடையிலிருந்து பலகாரங்களை தெரிந்தும் தெரியாமலும் கொடுத்தான். எல்லாவற்றையும் விட அவளை ரகசியமாகச் சந்திக்கும் பீக்காட்டில் அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்தான். அவளுடைய வார்த்தைகள் அவனுடைய உடம்பில் வண்ணத்துப்பூச்சிகள் ஊர்வதைப் போல புளகாங்கிதமடைய வைத்தது. மெலிந்து முற்றிய வெண்டைக்காய் போலிருந்த அவளுடைய விரல்களைத் தொட்டபோது அவனுடைய உயிரில் ஒரு கொதிநிலை கூடியது. அவனுடைய கண்களில் பொங்கிய தாபத்தை ரேவதி அவன் விரல்களின் வழியாக உணர்ந்தாள். அவன் அவளுடைய எந்தப்பேச்சுக்கும் மறுப்பு சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் வார்த்தைகளை அவளிடமே தொலைத்தவனாக இருந்தான். அவளே அவனுடைய வார்த்தையாக இருந்தாள். அவளுக்கு முன்னால் ஒரு பணிவான வேலைக்காரனைப் போலவே கட்டையன் நடந்து கொண்டான். அவளுக்குக் கர்வமாக இருந்தது. பெருமிதம் அவளுடைய உதடுகளில் ஒரு புன்னகையாகத் தங்கிவிட்டது. எப்படியாவது கட்டையனைப் பிடித்துக்கொண்டு கரையேறிவிட வேண்டும் என்று நினைத்தாள். இனி இந்த நரகத்தில் இருக்க முடியாது. அப்பா படுக்கையில் விழுந்தபிறகு பட்டபாடுகள். நினைக்கும்போதே பயத்தில் நடுங்குகிறது.
அப்பாவின் கண்களுக்கு எதிரே அந்தப் புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப்புகைப்படத்தில் அப்பா, அம்மா, கவுன் போட்ட ஈசுவரியக்கா, கைக்குழந்தையாய் ரேவதி, ஏரோப்பிளேனில் உட்கார்ந்திருப்பதைப்போல கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்கள். நேஷனல் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படம். அப்போது ஊருக்குள் மூன்று இடங்களில் கிளப்புக்கடை நடந்து கொண்டிருந்தது. காந்திமதி கிளப்புக்கடை, முருகன் கிளப்புக்கடை, சுகுணவிலாஸ் கிளப்புக்கடை என்று மூன்று கடைகள் ஓகோவென்று ஓடிக்கொண்டிருந்தது. அப்பா காலையில் ஒரு கடையில், மத்தியானத்தில் ஒரு கடையில், இரவில் ஒரு கடையில் என்று ஓடிக்கொண்டிருந்தார். பணத்தை எண்ணமுடியாமல் அப்படியே துணிப்பைகளில் கட்டி பலநாட்கள் பர்மாத்தேக்கில் செய்யப்பட்ட மிகப்பெரிய பீரோவில் கிடக்கும். கட்டில், நாற்காலி முக்காலி, என்று எல்லாம் பர்மாத்தேக்கில் செய்தது. எல்லாம் புளியங்குளம் மாரியப்பன் ஆசாரியின் கலை.. அப்படி ஒரு வேலைப்பாட்டை அதுக்கப்புறம் எந்த ஆசாரியிடமும் பார்க்கவில்லை என்று அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். வீடு நிறைய ஆட்கள். சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள், வந்தவர்கள், போனவர்கள், எப்போதும் கூட்டமாய் இருக்கும். பலபேரின் முகம்கூட தெரியாது.
ஊர் மாறியது. புதிதாய் ஹோட்டல்கள் வந்தன. பவன்கள் வந்தன. பழைய கிளப்புக்கடைகள் இப்போது வயதான குமரியாகத் தெரிந்தன. சன்னம் சன்னமாக வியாபாரம் குறைந்தது. அப்பாவின் வைராக்கியம் மீதத்தை அழித்தது. கையில் எதுவும் இல்லாமல் போனபிறகும் கடன்வாங்கி கோவில்பட்டி ரயில்வேஸ்டேஷனில் மரக்கறி உணவகத்தைத் தொடங்கினார். தினசரி இரண்டே இரண்டு பயணிகள் அங்கே டிபன் காசு கொடுத்து வாங்கினார்கள். கடனைக் கட்டமுடியாமல் வீட்டை விற்று முடித்தார். நேருநகரில் ஒரு இடத்தைத் தரைவாடகை பேசி அங்கே ஆஸ்பெஸ்டால் ஷீட்டை வாங்கி ஒரு அறையைக் கட்டினார். அங்கேயும் கூட வாசலில் இட்லிக்குண்டானை வைத்து இட்லி வியாபரம் செய்ய முயற்சித்தார். எப்படியாவது மறுபடியும் காந்திமதி கிளப்புக்கடையைத் தொடங்கிவிடவேண்டும். அது அவருடைய அம்மாவின் பெயரில் தொடங்கப்பட்ட கடை. அதிலிருந்து தான் மற்ற கடைகளை ஆரம்பித்தார். அதனால் மீண்டும் எழுந்து பழைய மாதிரி ஆகி விடலாம் என்று அவர் படுக்கையில் விழும்வரை நினைத்துக்கொண்டிருந்தார். வெளியே சைனீஸ், தந்தூரி, அயிட்டங்கள் எல்லாம் நவநாகரீகப்பெயர்களில் வந்ததை அவர் அறியவில்லை. எல்லாம் போனாலும் அவருடைய கைத்தடி மட்டும் அவரைவிட்டுப் போகவில்லை. அது அவருடைய இன்னொரு கண்ணாக, கையாக, காலாக, இருந்தது.
படுக்கையில் விழுந்தபிறகு ஈசுவரியக்காவைப் பற்றியும், ரேவதியைப் பற்றியும் கவலைப்பட்டார். அவருடைய தங்கை ஒருத்தி திருப்பூரில் இருக்கிறாள். அவளுக்குக் கடிதம் போட்டு வரச்சொன்னாள். ஒண்ணுவிட்ட, இரண்டுவிட்ட என்று தெரிந்த எல்லோருக்கும் கடிதம் போட்டார். ஆனால் யாரும் வரவில்லை. இரவு முழுவதும் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிய அசைய முடியாமல் கிடந்தார். அவருடைய கைத்தடியில் கண்ணீரின் தடங்கள் விருவோடிக்கிடந்தன. அசையாமல் படுத்துக்கிடந்ததால் படுக்கைப்புண் வந்து விட்டது. ஈசுவரியும் ரேவதியும் அப்பாவைப் பராமரிக்க வம்பாடு பட்டார்கள். ரேவதியின் தீப்பெட்டிக்கம்பெனித்தோழி கூட,
“ பேசாம எண்ணெய் தேய்ச்சுக்குளிப்பாட்டி கோழிக்குழம்பும் வைச்சுக்குடுடி… நிம்மதியா பெருசு போய்ச்சேந்துரும்.. இருந்துகிட்டு சீம்பாடுபடுதாருல்ல.. எங்க ஆச்சியை நாங்க அப்படித்தான் வழியனுப்பி வைச்சோம்..”
என்று சொன்னாள். ஆனால் ரேவதிக்கு அப்படிச் சிறுசலனம் கூட ஏற்படவில்லை. அப்பா அசையாமல் கிடக்கும்போது அவரையே பார்த்துக்கொண்டிருப்பாள். அப்பா நீங்கள் வாழ்க்கையில் தோற்றுவிட்டீர்கள். இந்த இருட்குகையில் எங்களையும் சிறைவைத்து தோல்வியை எங்கள் மீதும் திணிக்கப்பார்க்கிறீர்கள். இல்லை அப்பா. நான் தோற்க மாட்டேன். ஒருநாள் ஒரு பொழுது இந்தக்குகையிலிருந்து நான் தப்பித்து விடுவேன். அப்போதும் எப்போதும் உங்களையே நினைத்துக்கொண்டிருப்பேன். தோற்றவர்கள் மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கிறார்கள். எப்படித் தோற்றார்கள் என்று அவர்கள் அவர்களுடைய வாழ்வின் மூலம் விளக்குகிறார்கள். எப்படித் தோற்றுவிடக்கூடாதென்று எச்சரிக்கிறார்கள். அந்தவகையில் நான் எந்தநிலைமையிலும் உங்களை மறக்க மாட்டேன். ரேவதியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைப்பார்த்துக் கொண்டே வந்த ஈசுவரியக்கா அவளுடைய தலையைக் கோதி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அவள் எல்லாவற்றுக்கும் தயாராகிவிட்டாள். எல்லாப்பழிபாவங்களுக்கும் மனதைத் தேற்றிக் கொண்டாள். பக்கத்தில் படுத்திருந்த ஈசுவரியக்காவிடமிருந்து மெல்லிய குறட்டைச்சத்தம் வந்தது. ரேவதி மெல்ல எழுந்தாள். அவளுடைய அசைவைப் பார்த்ததும் அப்பாவின் கைத்தடி உஷாரானது. அவள் அங்கணக்குழியில் மூத்திரம் பெய்து தண்ணீர் ஊற்றினாள். இருளோடு இருளாக சில நிமிடங்கள் நின்றாள். வெளியில் அமைதி. சுவர்க்கோழியின் கீச் கீச் கீச் என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் இல்லை. தூரத்தில் இரண்டுபேர் பேசிக்கொண்டு போனார்கள். காற்றின் ஊதல் குளிர்ந்து வீட்டு ஓட்டைகளின் வழியே உள்ளே வந்தது. கட்டையன் வருவானா? அவன் எப்படிப்பட்டவன்? எதுவும் தெரியாது. இத்தனைக்கும் அவன் அவளைக் கூப்பிடவில்லை. அவள் தான் அவனைக் கூப்பிட்டாள். வேறு ஊரில் போய் கலியாணம் செய்து கொள்ளலாம் என்றாள். அவன் தயக்கத்துடன் தான் சம்மதித்தான். தோற்றுப்போன ஊரில் இருக்கமுடியாது. தோல்வியின் ஞாபகங்கள் கொலைவாளினை விடக் கொடியது. ரணமாய் அறுக்கும். அவள் ஒரு புதிய ஊரில் புதிய வீட்டில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு இந்த வாழ்க்கையைத் திகட்டத்திகட்ட வாழவேண்டும். கட்டையன் என்றில்லை. யாருடன் வேண்டுமானாலும் அவள் வாழ்வதற்குத் தயாராக இருந்தாள். வாழ வேண்டும். இதுவரை வாழாத வாழ்க்கையை வாழவேண்டும். மீளமுடியாத புதைசேற்றில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதை விட வரப்போவது என்னவென்று தெரியாத ஒரு நாளை எதிர்கொள்ளலாம் என்று நினைத்தாள். அப்பாவின் தோல்வியை அவள் சுமக்க விரும்பவில்லை. ஏன் சுமக்க வேண்டும்? அப்பாவே அந்தச் சுமையிலிருந்து எங்களை விடுவித்திருக்கவேண்டும். பாவம் அப்பா. அவருடைய கைத்தடியின் சமிக்ஞைகளை மீற முடியாதவர். இற்றுப்போயிருந்தாலும் அந்தக் கைத்தடி இல்லாமல் வாழமுடியாதவர்.
இன்னும் மூன்று மணிச்சங்கு ஊதவில்லை. அவள் இருளில் படுக்கையில் உட்கார்ந்தாள். ஓட்டைகளின் வழியே மங்கலாகத் தெரிந்த வெளிச்சப்புள்ளிகளை எண்ணத்தொடங்கினாள். இருபதுக்கும்மேல் எண்ணிக்கை குழம்பியது. கண்களை மூடி மூடி விழித்தாள். உறங்கிவிடக்கூடாது. அப்போது தான் அவள் வாழ்வின் விடியலே போல மில்லிருந்து சங்கு ஊதத்தொடங்கியது. சங்கொலி முடியும்வரை காத்திருந்தாள். ரேவதி ஆணியில் தொங்கிய பிக்‌ஷாப்பர் பையை எடுத்தாள். மெல்ல வாசல் பக்கம் நகரும்போது அப்பாவின் கைத்தடி தவறுதலாகத் தொட்டு விட்டாள். உடனே அது கீழே அவளுடைய கால்களுக்குக் குறுக்கே விழுந்தது. அவள் பொறுமையாக அந்தக்கைத்தடியைக் கையில் எடுத்துக் கொண்டு வாசலைத் தாண்டினாள்.
போகிறவழியில் சாக்கடை இல்லாமலா போகும்?

நன்றி - செம்மலர்


2 comments:

  1. உதயசங்கர் எழுதிய ' அப்பாவின் கைத்தடி' சிறுகதையில் இரண்டு விசயங்களை குறிப்பிட வேண்டும்.பெண்களின் உணர்வுகளை குறிப்பாக பாலியல் தொடர்பானவற்றை ஆண்கள் எழுதுவது குறைவு.மேலும் எவ்வளவு தூரம் அவை யதார்ததமாக இருக்கும் என்ற கேள்வியும் எழும்.இரண்டாவது இடதுசாரி சார்புள்ள எழுத்தாளர்கள் உளவியல் ரீதியான கதைகளை எவ்வளவு எழுதுகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.இந்த இரண்டு விசயங்களையும் இந்தக் கதை மய்யப்படுத்துகிறது.

    ரேவதியின் தாயார் இறந்துவிடுகிறார்.தந்தை ஓட்டல் தொழிலில் நிறைய சம்பாதித்தவர்.நவீன உணவு விடுதிகள் வந்தபின் தொழில் படுத்துவிட்டது.கடன் வாங்கியும் சமாளிக்க முடியவில்லை.நல்ல வீட்டை விற்று ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில் வசிக்க வேண்டி வருகிறது.அவள் தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கிறாள்..அவளுடைய அக்கா. எலும்பும் தோலுமாய் மெலிந்தவள். மில் ஒன்றில் வேலை செய்கிறாள் அவளுடைய தோற்றத்தினால் அவளை பெண்ணென்று பார்க்காமல் மில்லில் ஆண்கள் அவளை வைத்துக்கொண்டே பச்சை பச்சையாக பேசுகிறார்கள்.

    இந்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு அவளுக்கு பிடித்த ஒருவனுடன் ரேவதி நள்ளிரவில் ஓடிப்போக முயற்சிக்கையில் அப்பாவின் கைத்தடி தட்டி கீழே விழுந்து மாட்டிக்கொள்கிறாள்.அப்பா நைய்யப் புடைத்துவிடுகிறார்..மீண்டும் ஒருமுறை வேறு ஒருவனுடன் ஓடிப்போக திட்டமிட்டு வெளியேறும்போது கைத்தடியையும் எடுத்துக்கொண்டு போகிறாள்.
    போகிறவழியில் சாக்கடை இல்லாமலா போகும்? என்று கதை முடிகிறது.


    மில்லில் ஆண்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதைக் கேட்க விரும்பும் ஈசுவரியின் உணர்வுகளை உதயசங்கர் இவ்வாறு வர்ணிக்கிறார்.

    ‘காதில் விழும் அந்த ஒன்றிரண்டு வார்த்தைகளே அவளுடைய அடிவயிற்றில் ஒரு இளக்கத்தை ஏற்படுத்தும். அவளுக்கு அந்தக்கணத்தில் ஏற்படும் கிறக்கத்துக்காக அவள் ஏங்க ஆரம்பித்தாள். அந்தக் கதைகளைக் கேட்பதற்காக ஆண்கள் வேலை பார்க்கும் இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தாள்.’

    அதேபோல் ரேவதியின் உணர்வுகள் வெளிப்ப்படும்விதம்

    ‘அவள் ஒரு புதிய ஊரில் புதிய வீட்டில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு இந்த வாழ்க்கையைத் திகட்டத்திகட்ட வாழவேண்டும். கட்டையன் என்றில்லை. யாருடன் வேண்டுமானாலும் அவள் வாழ்வதற்குத் தயாராக இருந்தாள். வாழ வேண்டும். இதுவரை வாழாத வாழ்க்கையை வாழவேண்டும். மீளமுடியாத புதைசேற்றில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதை விட வரப்போவது என்னவென்று தெரியாத ஒரு நாளை எதிர்கொள்ளலாம் என்று நினைத்தாள்.’

    இப்படி உள்ளுணர்வுகளை எழுதுவதற்கு நிறைய தைரியம் வேண்டும் என்று தோன்றுகிறது.

    கைத்தடி என்பதையும் ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார்.அது குறித்து

    ‘பாவம் அப்பா. அவருடைய கைத்தடியின் சமிக்ஞைகளை மீற முடியாதவர். இற்றுப்போயிருந்தாலும் அந்தக் கைத்தடி இல்லாமல் வாழமுடியாதவர்.’

    ஆனால் எல்லோருக்கும் எதோ ஒரு கைத்தடி தேவைப்படத்தான் செய்கிறது.அது இற்றுப்போகாததாக இருக்க வேண்டும்.அவ்வளவுதான்

    ReplyDelete