Sunday, 23 August 2026

தீபாவளிக்கடவுள்

 

சதுரங்கவாழ்க்கை 9

தீபாவளிக்கடவுள்

உதயசங்கர்



கதிர் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். காம்பவுண்டுக்குள் வாசலுக்கு நேர் எதிரில் இருந்த மாமரத்தின் கீழ் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். முன்பு பார்த்ததற்கு முகத்தில் சிறிது வெளிச்சம் அலை பாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. அடர்த்தியான மாமரம் அவனுக்குப் பின்னால் கரும்பூதம் போல நின்று கொண்டிருந்தது. அன்று காற்றேயில்லை. ஆனால் புழுக்கமாகவுமில்லை. லேசான குளிர்மையின் இதம் சூழ்நிலையை மனதுக்கு உகந்ததாக மாற்றியிருந்தது. நான் எப்போதும் இல்லாமல் கதிரின் கைகளைப் பிடித்துக் குலுக்கினேன். அவனுக்குக் கூச்சமாக இருந்திருக்கவேண்டும். அவன் வெட்கத்துடன் சிரித்தான். நண்பர்களிடம் பார்மாலிட்டிக்காகக் கைகுலுக்கும் பழக்கமில்லை. அந்தச் சிரிப்பைப் பார்த்த அவனுடைய மனைவி செண்பாவுக்கு கண்ணீர் துளிர்த்திருக்கவேண்டும். அவள் யாருக்கும் தெரியாமல் குறிப்பாக கதிர் அறியாமல் கைகளால் கண்களைத் தேய்த்துக் கொண்டாள். உடனே வீட்டுக்குள்ளே திரும்பியும் சென்றாள். சன்னல் வழியே அவனுடைய அப்பா பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை நான் உணர்ந்தேன்.

கதிரின் அப்பாவுக்கு மூன்று குழந்தைகள்.ஆனால் கதிரைப் போல மற்ற குழந்தைகளைக் கவனித்திருப்பாரா என்பது சந்தேகம். கதிர் கேட்டதெல்லாம் கிடைத்தது. நாங்கள் கால்நடையாய் நடக்கும்போது கதிர் சைக்கிளில் போனான். அதுவும் ராலே சைக்கிள் தான் வேண்டுமென்று அடம் பிடித்து வாங்கினான். புதிய ராலே சைக்கிளில் அவன் பள்ளிக்கு வந்த நாளில் எல்லாரும் அவன் சைக்கிளைச் சுற்றிச் சுற்றி வந்த தைப் பார்த்த கதிரின் முகத்திலிருந்த பெருமித உணர்வு இப்போதும் கண்களில் தெரிகிறது. ஒரு வாரத்துக்குள் அந்தப் பவுசு போய்விட்டது. புதிதாய் வாட்டர்பாட்டில் வாங்கி பள்ளிக்கு வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தான். நாங்கள் பள்ளியில் எவர்சில்வர் டிரம்மிலிருக்கும் தண்ணீரைச் சங்கிலி போட்டுக் கட்டி வைத்திருக்கும் டம்ளரில் குடித்துக் கொண்டிருக்கும்போது அவன் வகுப்பில் காலுக்கடியில் வைத்திருந்த வாட்டர்பாட்டிலை எடுத்து அவ்வப்போது ஒரு மடக்குக் குடிப்பான். சில சமயம் குடிக்க வேண்டுமென்பதற்காகவே குடிப்பான். அவனுடைய பெஞ்சில் இருந்தவர்கள் அவனை ஏக்கத்துடன் பார்ப்பார்கள். இரண்டு மூன்று நாட்களில் அந்தப் புதுமை பழசாகி விட்டதற்கு இன்னும் பல மாணவர்கள் வாட்டர்பாட்டில்களுடன் வந்ததும் ஒரு காரணம்.

பிறகு அவன் தான் முதன்முதலில் பென்சில் சீவும் கட்டர் கொண்டு வந்தான். முழுப்பென்சிலும் அழிரப்பரும் கொண்டு வந்தான். அந்த அழிரப்பரைக் கையில் எடுத்தாலே மணந்தது. என் வீட்டில் முழுப்பென்சில் வாங்கி அதை இரண்டாக வெட்டி தான் கொடுப்பார் அம்மா. அதைச் சீவுவதற்கு அப்பா ஷேவிங் செய்து மொட்டை மழுங்கையான ஒரு அரைப்பிளேடு. கொடுத்தனுப்புவார். இரண்டே நாட்களில் பென்சில் புழுக்கையாகி விடும். விரலில் பிடிக்க முடிந்தவரை அதை வைத்துத் தான் எழுத வேண்டும். ஆனால் கதிர் எப்போதும் புதிய நீண்ட பென்சில்களாக க் கொண்டுவருவான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிறத்தில் பென்சில். அப்சரா என்று சொல்லுவான். நடராஜ் என்று சொன்னான். எனக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். அவன் கட்டருக்குள் பென்சிலைச் செருகிச் சுருள் சுருளாக பென்சிலின் மாம்பழத்தோலை நைசாக உரிப்பதைப் போல உரித்தான்.

பூ மாதிரி சுருண்ட அந்தப் பென்சில் சீவல்களை பையன்கள் போட்டி போட்டுக் கொண்டு பொறுக்கினார்கள். பென்சிலின் நிறமும் மரத்தின் நிறமும் கலந்து ஒரு வித விதமான பூக்களின் இதழ்களைப் போல அழகாக இருந்தன. கருப்பசாமி அந்தச் சுருள்களை எடுத்து பூ மாதிரியே அடுக்கிக் காட்டினான். அப்படியே ரோஜாப் பூ மாதிரியே இருந்தது. கதிர் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறான். அவன் யாரிடமிருந்து கற்றுக் கொள்வானோ தெரியாது. ஆனால் திடீரென்று அவனுடைய உடை, மாறும். அப்போது பள்ளிச்சீருடை என்று எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதைப் பற்றி மாணவர்களோ, பள்ளியோ கவலைப்படாத காலம். அதனால் பெரும்பாலும் என்னுடைய வீடு மாதிரி பொருளாதாரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் வீடுகளில் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ, சித்திரைத் தீர்த்தத்துக்கோ, ரோட்டோரம் போட்டிருக்கும் ரெடிமேட் கடைகளில் காடியான ஊதா நிறத்தில் டிராயரும், வெள்ளைக்கலர் சட்டையும் வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கே முதல்நாள் இரவு வரை போராட வேண்டும்.

தீபாவளி, பொங்கல், என்றால் மட்டும் தான் புதுச்சட்டை, டவுசர், பெரும்பாலும் அந்தப்புதுச்சட்டையும், டவுசரும், பள்ளிக்கூட சீருடையாகவே தான் வீட்டில் எடுப்பார்கள். ஏற்கனவே இருக்கிற சீருடை கந்தலாகி தன் உயிரை விடுகிறாப்பில் இருக்கிற போது தான் அடுத்த புதுத்துணி கிடைக்கும். அதுவரை இரண்டு பக்கமும் குண்டியில் கிழிந்த பித்தான் இல்லாத சாயம்போன அரணாக்கயித்தில் தொங்கிக்கொண்டு மானத்தைக் காப்பாத்திக் கொண்டிருக்கிற டவுசரும், சட்டைப்பை கிழிந்து, வெள்ளைநிறம் தன் குணத்தை மாற்றி அழுக்கு நிறத்தில் ஜொலிக்க பித்தான்கள் இல்லாமல் சட்டையில் ஏதோ ஒரு இடத்தில் குத்தியிருந்த ஊக்கு உடம்பையே கண்காட்சியாகக் காட்டும் சட்டையும் தான். பத்து நாளுக்கு ஒருமுறை காதியில் வாங்கிய மஞ்சள்நிற பார்சோப்பினால் சட்டைக்கும் டவுசருக்கும் ஸ்னானம் நடக்கும். வேறுவழி கிடையாது. அவ்வளவு தண்ணீர் கஷ்டம். எட்டாவது வகுப்பு தாண்டுகிறவரை நாங்கள் யாரும் சட்டை, டவுசரைப்பத்தி கவலைப்படுவதில்லை.

எங்கள் ஊரில் இரண்டு பெரிய ஸ்பின்னிங் மில்கள் இருந்தன. இரண்டிலும் குறைந்தது ஒரு ஐயாயிரம் தொழிலாளிகள் வேலை பார்த்தனர். அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டால் போதும். ஊருக்குள் மில்வேலைக்காரர்களை யார் பார்த்தாலும் என்ன தீபாவளி போனஸ் எப்போ? என்பது மட்டும் தான் கேள்வியாக இருக்கும். போதாத குறைக்கு சிவகாசிக்கு அடுத்தபடியாக தீப்பெட்டியாபீசுகளும், வேட்டாபீசுகளும் அதிகமாக இருந்த காலம். மில் போனசைத்தான் பஜாரில் இருக்கிற பெரிய கடைக்காரர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். தீப்பெட்டியாபீசு, வேட்டாபீசு போனஸையெல்லாம் நடுத்தர, பிளாட்பாரக்கடைக்காரர்களுக்கு விட்டு விடுவார்கள். கடனுக்கு வியாபாரம் செய்வது அவர்கள் தான். அதேபோல கிராமத்து ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுமுழுவதும் அவர்களுடைய குடும்பங்களில் வரும் கலியாணம், சடங்கு, காதுகுத்து, நல்லது பொல்லது, செய்முறை, சீர், செனத்தி, சடங்கு, சாங்கியம், சம்பிரதாயம், இப்படி எதற்கென்றாலும் ஜவுளிகளைக் கொடுக்கும் கடைகள் பிளாட்பாரக்கடைகள் தான். ஆற அமர கீழே விரிக்கப்பட்டிருக்கும் கயத்தாறு கோரம்பாயில் உட்கார்ந்து பாடுபழமைகளைப் பேசிக் கொண்டு, மழை, தண்ணி, வெள்ளாமை, விளைச்சல், குடும்பப் பிரச்னைகளை ஏதோ சொந்தக்கார ர்களிடம் சொல்வதைப் போலச் சொல்லி ஆத்தாமையைத் தீர்த்துக் கொண்டு, கடைக்காரரைக் குடும்ப உறுப்பினரைப் போலவே நினைத்துப் பேசுவதும், கடைக்காரும் எல்லாவற்றுக்கும் உச்சுக் கொட்டி, ஆலோசனைகள் சொல்லி, அவர் பாட்டையும் சொல்லி இலாபம் குறையாமல் பார்த்துக் கொள்வதையும் பார்ப்பதற்கு ஒரு ரசமன நாடகம் நடப்பதைப் போல இருக்கும். எப்படியோ கடைக்கார ரிடம் பேசி விலை குறைத்து வாங்கிவிட்டோமென்ற திருப்தியுடன் மக்களும், எப்படியோ இந்த ஆண்டுக்கான வரும்படியைத் தக்கவைத்துக் கொண்டோமென்ற திருப்தியுடன் கடைக்காரரும் பிரியாவிடை கொடுக்கும் காட்சியில் தமிழ்ச்சினிமா தோற்றுப்போகும்.

பெரிய ஜவுளிக்கடைகளில் இப்படிப் பேசிப்பழகி எடுக்க முடியுமா? என்னுடைய அம்மாவுக்குப் பிடித்த கடை சண்முகம் செட்டியார் மொத்த ஜவுளி வியாபாரம் என்ற போர்டுடன் பத்துக்கு நாலு நீள அகலமுள்ள பிளாட்பாரக்கடை தான். எனக்கு அப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட ஆவுடையப்பன் ஜவுளி மாளிகையில் பகலிலும் வண்ண விளக்குகள் ஜொலிக்க அத்தனை விதவிதமான வண்ண வண்ணத்துணிகளைப் பார்ப்பதே ஆனந்தமாக இருக்கும். அம்மாவிடம் எவ்வளவோ நச்சரித்தும் அவர் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்,

சண்முகம் அண்ணாச்சியிடன் பதினைஞ்சி வருசமா ஜவுளி எடுக்கோம்.. அவரு நம்ப குடும்பத்துல ஒருத்தரு.. அப்படியெல்லாம் பட்டுனு ஒறவ முறிச்சிர முடியாதுஒழுங்கா அங்க துணி எடுக்கறதுன்னா வா.. இல்ல.. துணியே கெடையாது பாத்துக்க..”

என்று சொல்லிவிட்டார்.

 வளர்ந்து கொண்டிருக்கும் சிறிய நகரமான எங்களுடைய ஊரில் பொதுவாக அமந்து அங்கொன்றும் இங்கொன்றும் ள் நடமாட்டத்துடன் வெறிச்சோடிப்போய் இருக்கும் கடைவீதி மில்லில் போனஸ் போட்டாச்சு என்ற மூன்று வார்த்தைகளில் ஏதோ மாயாஜாலம் நடந்த மாதிரி மாறிவிடும். கூட்டம்கூட்டமாக மக்கள் அலைமோதுவார்கள். சிறிசுகள், பெரிசுகள், குமருகள், அவுகளைப்பாக்கதுக்கு குமரன்கள் என்று கடைவீதி மக்கள் திரளாகிவிடும். மகிழ்ச்சி, கோபம், வசவு, வெட்கம், சிரிப்பு, அழுகை, பரிதவிப்பு, அடிபுடி, என்று மனித உணர்வுகளின் அத்தனை கலவையும் பஜாரில் கொட்டிக்கிடக்கும். ஒரு நாடகமேடையில் நடக்கும் காட்சிகளனைத்தும் அங்கே நடக்கும்.

எட்டாவது வகுப்பு தாண்டிய பிறகு தான் துணி எடுத்து தைக்கக்கொடுக்கிற வழக்கம் வந்தது. முதலில் அப்பா வழக்கமாக தன்னுடைய சட்டைகளை அவருடைய நண்பரான  கம்யூனிஸ்ட்தையல்காரரிடம் தான் கொடுப்பார். தோழர் எத்தனை மாதம் கழித்துக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். முதலில் நானும் அவரிடமே கொடுத்தேன். அவர் அளவு எல்லாம் எனக்கு எடுத்ததில்லை. சீத்தக்குஞ்சி மாதிரி இருந்த எனக்கு எதுக்கு அளவு என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அது எனக்கு கௌரவக்குறைச்சலாக இருந்தது. பின்னே புதுத்துணியை தையல்காரர் மஞ்சள்பையிலிருந்து எடுத்து அவர் வைத்திருக்கும் இஞ்ச் டேப்பினால் அளந்து நம்மை ஒரு பார்வை மேலும் கீழும் பார்த்து, டேப்பினால் சட்டைக்கும் டவுசருக்கும் அளவு எடுத்து சட்டைப்பை ஒண்ணு போதுமா? இரண்டு வேணுமா? என்று கேட்க வேண்டும். உடனே இரண்டு பை, தோள்பட்டையில் இரண்டுபக்கமும் பிளாப்புகள் சட்டை பின்னால் ரவுண்டாய் வரணும். டவுசரும் கொஞ்ச டைட்டாய் இடுப்பில் பெல்ட் லூப்புகள் வைக்க வேண்டும். இப்படி இல்லாத நொரநாட்டியம் எல்லாம் சொல்லிட்டு வந்தால் தான் திருப்தி.

அதனால் அழுது புரண்டு என்னுடைய சட்டை, டவுசரை மட்டும் கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்திலிருந்த ராஜ் டெய்லர்ஸ் கடையில் கொடுத்தேன். ஓனர் கம் டெய்லர் இளைஞர். எப்போதும் சிரித்தமுகம். என்னைச் சுத்திச் சுத்தி வந்து சட்டை, டவுசருக்கு அளவு எடுத்தார். ஒரு கொயர் நோட்டில் என்னவோ நம்பர்களை எழுதினார். பெயரைக் கேட்டு எழுதிக்கொண்டார். ரெம்பப்பெருமையாக இருந்தது. அப்புறம் போட்டாரே ஒரு குண்டை. ” தம்பி..தீவாளிக்கு முதநா ராத்திரி எட்டு மணிக்கு வந்து வாங்கிக்கோஅதுவரை இருந்த கம்பீரம் போய்விட்டது. “ அண்ணே..அண்ணே.. சீக்கிரம் கொடுங்கண்ணே.. தீபாவளிக்கு ஊருக்கு போய்ருவம்ணே..” என்று வாய்க்கு வந்ததைச் சொல்லிப்பார்த்தேன். அவர் தெளிவாய் சொல்லி விட்டார். “ துணி ஏகப்பட்டது கெடக்கு.. எப்படி முடிக்கப்போறேன்னு தெரியல.. தம்பி தெரிஞ்ச பையனா இருக்கேன்னு தான் வாங்குறேன்…” என்று பிகு பண்ணினார். என்ன செய்ய முடியும்? ஒருவேளை முடியாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டால்? “ அண்ணே தீவாளி முதநா கரெக்டா எட்டு மணிக்கு வந்திருவேன்..ரெடியா வைச்சிருங்கண்ணே..” என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். தீபாவளி வர இருந்த ஒரு வாரமும் இதே சிந்தனை தான்.

அங்கே போவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையென்றாலும் சும்மா கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்தின் வழியாகப்போவேன். ராஜ் டெய்லர்ஸில் வேலை ரெம்பப்பிசியாக நடந்து கொண்டிருக்கும். அந்தக்கடை ஓனர் என்னைப்பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவருடைய வேலையிலேயே கவனமாக இருப்பார். அப்படியே ஏகதேசமாக என்னைப் பார்த்தாலும் எப்போதும் சிரித்த முகமென்பதால் என்னைப் பார்த்துத் தான் சிரித்தாரென்று நினைத்துக் கொண்டேன்.  அப்பாடா ஞாபகம் வந்துரும். இப்படியே தீபாவளியும் நெருங்கிவிட்டது. தீபாவளிக்கு முதல்நாள் மதியத்துக்கு மேல் ஊருக்கே ஒரு பரபரப்பு வந்து விட்டது. மக்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியின் ஒளி பாய்ந்திருக்கும்.

ஆனால் எனக்கு நாம் எடுத்துக் கொடுத்த துணி எப்படி சட்டையாக, டவுசராக மாறுது? அப்படி மாறிய துணியின் கௌரவமே உயர்ந்து விடுமே. தையல் தொழில் எப்பேர்ப்பட்ட கலை! எனக்கு என்னுடைய துணிகளின் உருமாற்றத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஏழு,ஏழரைக்கெல்லாம் கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்துக்கு அருகில் போய்விட்டேன். கோவிலுக்கு முன்னால் தெருவிளக்கு வெளிச்சத்தில் பம்பரக்குத்து விளையாடிக் கொண்டிருந்த பையன்களை வேடிக்கை பார்த்தேன். பின்னர் நானாக காலத்தைக் கணித்து கடைக்கு முன்னால் போய் நின்றேன். பார்த்தால் என்னை மாதிரி ஒரு பத்துப்பேர் கடையை அடைச்ச மாதிரி அங்கே நின்று கொண்டிருந்தார்கள். தையல் மெஷின்களின் சத்தம் வேகமாகக் கேட்டது. நான் முண்டி முன்னால் போய் டெய்லர் கண்ணில் படுகிற மாதிரி நின்றேன். ஆளாளுக்கு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் தையல் மிஷினில் வேலை செய்து கொண்டே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டைம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அப்போதே நம்பிக்கை குறைந்து விட்டது. என்றாலும் முற்றிலும் போய்விடவில்லை. எப்படியும் நமக்கு தைச்சி வச்சிருப்பார், நாம தான் ஒரு வாரத்துக்கு முன்னால் கொடுத்திருக்கிறோமே என்ற என் எண்ணத்தை நசுக்கிக் கொண்டு ஒரு குரல் கேட்டது.

பதினைஞ்சி நாளைக்கு முன்னால கொடுத்தது அப்பவே முடியாதுன்னு சொல்லியிருந்தா வேற டெய்லரைப்பாத்திருப்பம்ல. “

அவ்வளவு தான் எனக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது. நான் அழுகிற குரலில்,

 அண்ணே என்னோட துணி தைச்சாச்சா? “ என்று கேட்டேன்.

அவர்என்ன துணி? “ என்றார்.

சுமதி என் சுந்தரி ஆரஞ்சு கலர் கட்டம்போட்ட சட்டை, ஊதாக்கலர் டவுசர்,..” என்று அவசர அவசரமாகச் சொன்னேன்.

அவர் காஜா போட்டுக்கொண்டிருந்த பையனிடம்,

 டேய் தம்பி சொல்ற துணியைப் பார்ரா..” என்று சொன்னார். சில நிமிடங்களில் அப்படியே அலுங்காம குலுங்காம என் துணியைத் தூக்கிக்கிட்டு வந்து எங்கிட்டே காண்பித்துஇதாஎன்றான்.

நான் தலையாட்டினேன். எனக்கு அழுகை வரத்தொடங்கியது.

எப்பண்ணே கிடைக்கும் ? “ என்று கேட்டேன்.

அப்போது அவர் எனக்கு கடவுளாகத்தெரிந்தார். அவருடைய ஒரு வார்த்தையில் தான் என்னுடைய எதிர்காலம் இருக்கப்போவதைப்போல அவர் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இறுக்கமான முகத்திலிருந்த வாயைத் திறந்து,

காலையில் ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கோ

என்று சொன்னார். நான் எதுவும் பேசாமல் அழுகையை அடக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் சொன்னேன். அவ்வளவு தான் என்னுடைய என்னை வசவுக்காடு உரித்து விட்டார்கள். அத்துடன் அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு ராஜ் டெய்லர்ஸ் கடைக்குப் போய் அந்த டெய்லருக்கு வசவுன்னா வசவு அந்த வசவு. அப்போதெல்லாம் எங்கள் நகரம் தண்ணீர்ப்பஞ்சத்துக்குப் பெயர்போன நகரம். தண்ணீருக்கான சண்டையில் பெண்களிடன் ஒரு புதிய மொழி தோன்றியிருந்தது. அந்த மொழியில் ஒரு வாக்கியத்தைக் கூட ஆண்கள் கேட்க முடியாது. அதனால் அம்மா தொடங்கியது தான், டெய்லர் அண்ணன் பயந்து விட்டார்.

எல்லாவேலையையும் நிறுத்தி விட்டு என் துணியை எடுத்து வெட்ட ஆரம்பித்தார். அப்படியே

எக்கா நீங்க வீட்டுக்குப்போங்க..தம்பி இருக்கட்டும்..கொடுத்து விடுதேன்..”

என்று சொல்லி என்னுடைய அம்மாவை அனுப்பி வைத்தார். அதன் பிறகு இரண்டு மணிநேரம் இருந்து வாங்கிட்டு தான் வந்தேன்.. புது சட்டை டவுசரை வாங்கிட்டு வீட்டுக்கு வரும்போது அம்மா பலகாரம் சுட அடுப்பில் சட்டியைப் போட்டிருந்தாள். சும்மா சொல்லக்கூடாது. அவசர அவசரமாகத் தைத்திருந்தாலும் அம்சமாக தைத்திருந்தார் அந்த அண்ணன். அதற்குப் பிறகு கல்லூரி முடியும் வரை அவரிடம் தான் என்னுடைய துணிகளைத் தைத்தேன். என்றாலும் அந்தத் தீபாவளிக்கு நான் அடைந்த பதட்டமும் கிடைத்தபிறகு நான் அடைந்த மகிழ்ச்சியும் இன்று வரை அடைந்ததில்லை.

ஆனால் கதிர் எதிர்காலத்துக்குப் போய்விட்டான். ஆமாம். பள்ளியிலேயே ஆயத்த ஆடையை உடுத்திய முதல் மாணவன் அவன் தான். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. நம்மை நேரில் பார்க்காமலேயே எங்கோ ஒரு தையல்காரர் நமக்கான டவுசர், சட்டையைத் தைத்துத் தயாராக அனுப்பி வைப்பார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. கண்முன்னே காலம் மாறிக் கொண்டிருந்தது.  மொத்த மனிதர்களையே அளவுகளால் பிரித்து ஏற்கனவே தைக்கப்பட்ட துணிகளுக்குள் மனிதர்கள் புகுந்து கொள்கிற காலம். ஆனால் ஒவ்வொருவருடைய தனித்துவமான உடல் அளவுகளுக்கு ஏற்ப அளந்து அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலில் தைத்து கொடுக்கிற தையல் கலைஞர்களை மட்டுமல்ல..அவர்களுக்கும் சமூகத்துக்கும் இடையில் இருந்த உறவையும் கூட ஆயத்த ஆடைகள் அருகிப்போகச் செய்து விட்டன. இப்போதும் ராஜ் அண்ணன் இருக்கிறார். பழைய கிழிசல்களைத் தைத்துக் கொண்டு..பழைய துணிகளை ஆல்டர் செய்து கொண்டிருக்கிறார்.

அவர் கண்களில் பழைய கனவுகளின் சாயம் நிறமிழந்து விட்டது. அவரும் ஒரு காலத்தில் கலைஞனாக இருந்திருக்கிறார் என்ற சாயல் அவர் பழைய துணிகளிலும் செய்கிற ஜாலங்களில் தெரியும்.

காலமாற்றத்தை எங்களுக்குக் கண்முன்னே காட்டுபவனாக கதிர் இருந்தான்

( தொடரும் )

2 comments:

  1. பூ மாதிரி சுருண்டு விழுந்த பென்சில் சீவல்கள் என்ன ஒரு அழகான உவமை பள்ளிக் கால நினைவுகளை கிளறிவிட்டது சிறப்பு அய்யா

    ReplyDelete
  2. சிறப்பு தோழர்
    இப்போதெல்லாம் பிள்ளைகளிடம் பென்சில்களும், அழி ரப்பர்களும், கட்டர்களும் சர்வ சாதாரணமாக புழங்குகின்றன. ஆனால் அப்போது எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது.

    ReplyDelete