Wednesday, 1 April 2026

எது சிறார் இலக்கியம்?

 எது சிறார் இலக்கியம்?



1. எந்தப் படைப்புகள் குழந்தைகளுக்கு கலைமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அவை சிறார் இலக்கியம். ( இது பெரியவர்கள் இலக்கியத்துக்கும் பொருந்தும் )
2. கலை மகிழ்ச்சி என்றால் கருத்துகளைச் சொல்வது கிடையாது. அது வாசிக்கும்போது குழந்தைகளிடம் ஏற்படுத்தும் உணர்வு. ஒரு புன்னகை. ஒரு சிரிப்பு. ஒரு இன்பம், சில சமயங்களில் துயரம்.
3. துயரமும் கலை இன்பம் தான். நம்முடைய மனம் துயர்மிகு தருணங்களிலிருந்தும் ஏதோ ஒரு மனநிறைவை, உள்ளார்ந்த அமைதியை, கொந்தளிக்கும் எழுச்சியை அடைகிறது.
4. சிறார்களுக்கான படைப்புகள் எந்த வயதினருக்காக இருந்தாலும் குழந்தைகளின் மொழியில் எழுத வேண்டும். அந்தப் படைப்பில் குழந்தைமையின் குதூகலம், ஆர்வம், தூண்டுதல், கேள்விகள், பதில்கள், அறிதல், புரிதல், இருக்க வேண்டும்.
5. குழந்தைமையின் வெகுளித்தனமும் யாரும் சிந்தித்திராத புதிய கோணங்களும் மிகவும் முக்கியம். வழக்க்மான சூத்திரக்கதைகளை வாசித்தாலும் குழந்தைகள் மனதில் நிலைக்காது.
6. அறிவியல் மனப்பாங்கை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் ( கவனிக்க - அறிவியல் தகவல்களை மட்டும் சொல்வதல்ல ) குழந்தைகளிடம் ஒரு கியூராசிட்டியை ஏற்படுத்தும் படைப்புகள்.
7. சமூகத்தின் பலவேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், அவர்களுடைய வாழ்வின் நம்பிக்கை, துயரம், முயற்சிகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம், மகிழ்ச்சி என்று பல பரிமாணங்களில் எழுதப்படும் படைப்புகள்.
8. சேர்ந்து வாழ்வதின் உன்னதம், அனைவரையும் இணைத்துக் கொண்டு வாழ்வதின் மகிழ்ச்சி, அனைத்துயிர்களுக்குமுள்ள முக்கியத்துவம் குறித்த படைப்புகள்.
9. வாழ்வின் அனைத்து நிலைகளையும் அதாவது அனைத்து மதங்களைச் சார்ந்த குழந்தைகளின் வாழ்க்கை, மாற்றுத்திறன்களுடன் பிறக்கும் குழந்தைகள், தீராத நோய்களுடன் வாழும் குழந்தைகள், மரணத்துடன் போராடும் குழந்தைகள், அனைத்துக் குழந்தைகளும் பங்கு பெறும் படைப்புகள்.
10. வாழ்க்கை குறித்த கேள்விகள், வாழ்வதின் நோக்கம், வாழ்வதின் பயன், இருத்தலின் மகிழ்ச்சியும் துயரமும், பகுத்தறிவின் மகத்துவம், சுயமாகச் சிந்திப்பதின் அவசியம், இவற்றைப் பற்றியெல்லாம் சிறார் மொழியில் பேசுகிற படைப்புகள் ( குட்டி இளவரசன் )
11. நன்மை தீமைக்கு இடையிலான போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது? தீமையின் பாதையிலிருந்து எப்படி விலகி நன்மையின் பாதையில் பயணிப்பது என்பதையெல்லாம் சொல்லும் படைப்புகள். ( (ஹாரிபாட்டர்)
12. மிக முக்கியமானது இதெல்லாம் கலைப்படைப்பாக உருவாக வேண்டும். வெறும் பரப்புரையாகவோ, வறண்ட கருத்துக்குவியலாகவோ இருக்கக் கூடாது.
13. எல்லாம் கலையின் மாயக்கம்பளம் மறைந்திருக்க வேண்டும். வண்ண மயமான, நுட்பமான வேலைப்பாடுகள் மிகுந்த, பார்த்தாலே பரவசமூட்டும்படியாக அந்த மாயக்கம்பளம் இருக்க வேண்டும்.
14. சிறார் படைப்புகளைப் பெரியவர்கள் வாசிக்கும்போது அவர்களுக்கும் வெளிச்சம் தருவதாக புதுமையானதாக இருக்க வேண்டுமென்பதும் மிக மிக முக்கியம்.