Monday, 30 March 2026

மாயக்கண்ணாடி’

 மாயக்கண்ணாடி’ –

அதிகாரத்தின் முகத்தை காட்டும் சிறுவர் கதைகள்.

அமுதன் தேவேந்திரன்



இன்று குடிநீர் கொண்டு வர பக்கத்து கிராமத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு இரண்டு பிரபல அரசியல் தலைவர்களின் சிலைகள் தலை மட்டும் துணியால் கட்டி மூடப்பட்டிருந்தது. தேர்தல் நெருங்கிவிட்டதால், அவர்களின் முகங்கள் தெரிந்தால் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று அரசு கூட நினைத்திருக்கலாம்!
அந்த காட்சி மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, உதயசங்கர் எழுதிய ‘மாயக்கண்ணாடி’ சிறுவர் கதைகள் வாசிக்க நேர்ந்தது.
இந்த புத்தகத்தின் அட்டைப்படமே என்னை முதலில் கவர்ந்தது. இதுவரை நான் பார்த்த எந்த அட்டையிலும் இல்லாத தனித்துவம் ஒரு சிறிய கண்ணாடி. அது உண்மையிலேயே “மாயக்கண்ணாடி”தானோ என்ற கேள்வி எழுந்தது.
திரைப்படங்களில் மாயக்கண்ணாடி முன் நின்றவுடன் மனிதர்கள் மறைந்து போவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த புத்தகத்தை வாசித்த பிறகு, அந்த கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன். சில நிமிடங்களில் அது எனக்கே சில மாயங்களை காட்டத் தொடங்கியது.
இந்த மாயக்கண்ணாடிக்குள் 11 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் நம்மை ஆளும் அரசர்களின் சட்டங்களையும் உத்தரவுகளையும் நையாண்டியாக வெளிப்படுத்துகிறது. அந்த மடத்தனங்கள் நிஜ வாழ்க்கையிலும், இன்றைய அரசியல்வாதிகளிடமும் தொடர்கின்றன என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது.
ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான உணர்வை கொடுக்கிறது.
“நானும் ஒரு தனி மனிதன்” என்ற உணர்வு.
அந்த உணர்வே சவால்களை எதிர்கொள்ளும் துணிவை உருவாக்குகிறது.
‘புதிய அகராதி’, ‘காற்றில் கரைந்த பூதம்’, ‘தொலைந்து போன மழை விதைகள்’, ‘ஜங் ஃபுட் தேசம்’, ‘மறந்த சிரிப்பு’, ‘பறவைகள் பறந்து போய்விட்டன’ போன்ற கதைகள் மூலம் மனிதர்களையும் இயற்கையையும் நேசிக்க கற்றுத்தருகிறார்.
உதாரணமாக ‘ஜங் ஃபுட் தேசம்’ கதையில்,
ஐந்து பைசாவுக்கு டர்கர், பத்து பைசாவுக்கு கூட்சா, மூன்று பைசாவுக்கு குளிர்பானம் என்ற கற்பனை உலகம் மூலம் இன்றைய உணவு கலாச்சாரத்தை நகைச்சுவையாகவும் கூர்மையாகவும் சாடுகிறார்.
‘மாயக்கண்ணாடி’ கதையில், தினமும் கண்ணாடியை பார்க்கும் முன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஒரு எளிய வரியில் உடல்நலத்தின் முக்கியத்துவத்தையும் சொல்கிறார்.
இந்த கதைகள் அரசர்களை மட்டும் அல்ல ;
அதிகாரத்தின் அகந்தையையும், மக்கள் மீதான அநீதிகளையும், சோம்பேறித்தனத்தையும் நையாண்டி செய்கின்றன.
ஒரு காலத்தில் மாயக்கண்ணாடி அரசர்களிடமே இருந்தது.
இன்று அது குழந்தைகளின் கைகளில் வந்திருக்கிறது.
இந்த மாயக்கண்ணாடி ஒவ்வொரு வாசிப்பிலும்
புதிய கதவுகளைத் திறக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருப்பது நம் முகமா?
அல்லது சமூகத்தின் உண்மையான முகமா?

No comments:

Post a Comment