Tuesday, 31 March 2026

வானில் பறப்போம் வா தோழா

 வானில் பறப்போம் வா தோழா…

அமுதன் தேவேந்திரன்



இயல் கூடுகை நிகழ்வைப் பார்த்ததிலிருந்து, குழந்தைகளுக்கான இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் முளைத்தது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக, சிறார் கதைகளின் அற்புத உலகத்தில் பயணித்து வருகிறேன்.
“குழந்தைகளுக்கான புத்தகங்களை பெரியவர்கள் வாசிக்கலாமா?” என்று யாராவது கேட்டால், என் பதில் தெளிவு முதலில் பெரியவர்களே வாசிக்க வேண்டும்.
குழந்தைகளைப் புரிந்து கொள்ள, அவர்களுடன் பழகுவது மட்டும் போதாது; அவர்களுக்காக எழுதப்பட்ட இலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கவும் வேண்டும். அப்போதுதான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளின் உலகை நோக்கி நகர ஆரம்பிப்போம்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய “விசிலடிக்கும் சைக்கிள்” கதைகளை இன்று வாசித்தேன். மொத்தம் பத்து கதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அவர் சொல்வதுபோலவே, குழந்தைகளின் மாயப்புனைவு உலகத்தை கண்முன்னே கொண்டு வரும் அற்புதக் கதைகள் இவை.
சூரியன், மேகம், ரயில், சைக்கிள், பந்து, மரம் — இவை எல்லாம் குழந்தைகளுக்காக ஒரு வேறு உலகை உருவாக்குகின்றன. அந்த உலகில் நாம் வாசிப்பவர்களாக நுழையும் போது, நம் சொந்த பால்ய நினைவுகளும் மெதுவாக உயிர் பெறுகின்றன.
இந்த பத்து கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை:
० ஒரே ஒரு கொய்யா
० நீலாக்குட்டியின் சந்தேகம்
० கரையான் படித்த புத்தகம்
० ரயில்வண்டி
“ஒரே ஒரு கொய்யா” கதையில், வைகைப் பாப்பாவுக்காக காத்திருக்கும் கொய்யா மரம்..“அவளை பார்த்தால் சொல்லுங்கள்” என்று முடிவடையும் அந்த வரிகள் மனதில் நீண்ட நேரம் தங்குகின்றன.
அந்த கொய்யா மரம் மட்டும் அல்ல,
இந்த “விசில் அடிக்கும் சைக்கிள்” கதைகள் அனைத்தும் ஏதோ ஒரு குழந்தைக்காக இந்த உலகில் காத்திருக்கின்றன போல.
“நீலாக்குட்டியின் சந்தேகம்” கதையில் காக்கா சொல்வது:
“ஐயோ ஐயோ அசடு! இது கூட தெரியாதா?
எங்க பள்ளிக்கூடம் மரத்தில்தான் நடக்கும்.
எங்களுக்கு தனியா டீச்சர் கிடையாது நாங்க எல்லாரும் டீச்சர் தான்.
எல்லாரும் பேசுவோம்… எல்லாரும் கேட்போம்…”
இந்த வரிகளை வாசிக்கும் போது, சுவர்களில்லாத பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களில்லாத வகுப்பறைகளும் இருந்தால் எவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது.
“கரையான் படித்த புத்தகம்” கதையில், ஒரு சிறு உயிர் கூட படிக்க வேண்டும், தன் வரலாற்றை அறிந்து எழுத வேண்டும் என்ற ஆசையை கொண்டிருக்கிறது. ஆனால் மனிதர்களில் எத்தனை பேருக்கு அந்த எண்ணம் இருக்கிறது? என்ற கேள்வி சிரிப்பையும் சிந்தனையையும் ஒன்றாகத் தருகிறது.
இந்த உலகிலுள்ள கரையான்களும், கரப்பான் பூச்சிகளும், விலங்குகளும் வாசிக்கத் தொடங்கினால் உலகமே எப்படி மாறும் என்று கற்பனை செய்து நான் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த புத்தகத்தின் அட்டைப்படமும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓவியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
நிச்சயமாக, இந்த புத்தகத்தை வாசிக்கும் போது உங்கள் முகத்தில் ஒரு சிறு புன்னகை மலரும். அதுவே இந்த புத்தகத்தின் மிகப் பெரிய வெற்றி.
குழந்தைகளின் மகிழ்ச்சியோடு, பெற்றோரின் மகிழ்ச்சியும் சேர்ந்திருக்க வேண்டும். வாசிப்பவர்கள் இந்த புத்தகத்தை வாசிப்பதோடு மட்டும் அல்லாமல், மற்றவர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டும் அதுவே உண்மையான வாசிப்பு மகிழ்ச்சி.

வெளியீடு: வானம் பதிப்பகம்

No comments:

Post a Comment