Sunday, 2 March 2025

தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு புதுவரவு

 

தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு புதுவரவு

உதயசங்கர்



 

 கடந்த பத்து ஆண்டுகளாக நவீன தமிழ்ச் சிறார் இலக்கியம் நீண்ட வறட்சிக்கு பின் புது மழை பெய்து பெருகிவரும் காட்டாற்று வெள்ளத்தைப் போல பெருகி ஓடிக் கொண்டிருக்கின்றது.

 நவீன தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் அறிவியல் கதைகள், புனைகதைகள், அதீதப் புனைகதைகள், வரலாற்றுக்கதைகள், சமூகப் பிரச்னை சார்ந்த கதைகள், கல்விக்கதைகள், என்று புதிய புதிய வகைமைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன

ஏராளமான குழந்தைகள் கதைகளை எழுதி நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில பல விமரிசனங்கள் இருந்தாலும் சரியான திசையிலேயே சிறார் இலக்கியம் சென்று கொண்டிருக்கிறது

சிறார் இலக்கியத்தில் யதார்த்தக்கதைகள் பொதுவாகக் குறைவு. மற்ற புனைகதை, அதீதப்புனைகதை, இவற்றை ஒப்பீடு செய்தால் இதை அவதானிக்கலாம். அதிலும் யதார்த்தக்கதைகளில் பகுத்தறிவு , அறிவியல், நகைச்சுவை, சாதிப்பிரச்னைகள் சார்ந்த கருப்பொருட்களை இயல்பாகக் கையாண்ட கதைகள் மிகவும் குறைவு என்று சொல்லலாம்.

இருவாச்சி சாமி என்ற இந்த நூல் அந்த வகைமையில் மிகச்சிறந்த நூலாக வெளிவந்திருக்கிறது

பூங்கொடி பாலமுருகன் சிறந்த கதைசொல்லியாகவும், பதின்பருவக்குழந்தைகளின் உளவியல் பிரச்னைகளை ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதுபவராகவும், நூல் விமர்சகராகவும் ஏற்கனவே அறியப்பட்டவர். அவருடைய முதல் சிறார் சிறுகதை நூலான இருவாச்சி சாமியில் உள்ள கதைகள் குழந்தைகளுக்கு எதைச் சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்? எதற்காகச் சொல்ல வேண்டும் என்ற தெளிவுடன் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். ஒன்பது கதைகளிலும் இயல்பான எளிய மொழிநடை, குழந்தைகளின் மனதை அறிந்து கொண்டு அவர்களுடைய மனநிலையிலிருந்து எழுதப்பட்டுள்ள கதைகளென்பது சிறப்பு. நேரடியான கதை சொல்லல், இயல்பான மொழிநடை, மிக முக்கியமான கருப்பொருட்களென்று தனித்துவத்துடன் கதைகளிருக்கின்றன.

நீயும் நானும் ஒன்று தான், அவனுக்குப் படிப்பு தான் எல்லாம், யார் பெரியவங்க இந்த மூன்று கதைகளிலும் இப்போதும் நிலவும் சாதி ஏற்றதாழ்வுகளைப் பேணும் பெரியவர்களையும் அதை மிக இயல்பாக, யதார்த்தமாகக் கையாளும் குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் கதைகள். எந்தப் பிரச்சாரமோ, முழக்கமோ, அறிவுரையோ இல்லாமல் சொல்ல முடியுமென்பதற்கு இந்தக் கதைகள் முன்னுதாரணம். அதே போல இருவாச்சி சாமி கதையும் மிக எளிய இனிய தந்திரத்தின் மூலம் தங்கள் பிரச்னையை எப்படிக் கையாள்கிறார்கள் என்று சொல்லும் கதை. கதையை வாசித்து முடியும்போது அட என்று சொல்லவைக்கிறது. அத்துடன் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டவும் தோன்றுகிறது.

சிறந்த நகைச்சுவைக் கதையாக மின் தடையைச் சொல்லலாம். கதை முடியும்போது குபீரென்று சிரிப்பது உறுதி. ஒரு பள்ளிக்கூடம் எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சொல்கிற இன்னொரு வீடு உண்மையில் பள்ளிப்பருவ நாட்களை நினைவுபடுத்துகிறது.

இயற்கையின் மீது, விலங்குகளின் மீது, சக மனிதர்களின் மீதான அன்பு, தயை, கருணை, நட்பு, கேள்வி கேட்கும் பகுத்தறிவு என்று எல்லாக்குணாதிசயங்களும் இருக்கின்றன. அந்தக் குணங்களை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இந்தக் கதைகள். சிறார் இலக்கியத்தில் மிகச்சிறந்த படைப்புகளைத் தரப்போகும் படைப்பாளியாக இந்தத் தொகுப்பின் மூலம் நம்பிக்கையளிக்கிறார் பூங்கொடி பாலமுருகன்.

தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்குப் புதுவரவு

நல்வரவு பூங்கொடி பாலமுருகன்

இன்னும் இன்னும் எழுதுங்கள்

வாழ்த்துகள்!

 

 ( இருவாச்சி சாமி நூலுக்கு எழுதிய முன்னுரை )

Saturday, 1 March 2025

நம் காலத்தின் கதைகள்.

 



நம் காலத்தின் கதைகள்.

உதயசங்கர்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறார் இலக்கியம் தன்னுடைய சிறகுகளை விரித்து இதுவரை பறந்திராத பிரதேசங்களில் பறக்கத் தொடங்கி விட்டது. யாரும் சொல்லாத கதைகளை, யாரும் சொல்லாதவிதத்தில் குழந்தைகளிடம் சொல்லத் தொடங்கி விட்டது. வெறுமனே விலங்குகள் பறவைகள் பழங்கால நீதிநெறி, நன்னெறி என்ற சுமைகளை மெல்லக் கீழே இறக்கி வைத்து விட்டு, நம் காலத்தின் கதைகளைக் குழந்தைகளிடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறதென்பதைப் பறைசாற்றும் விதமாகவே நாடறிந்த எழுத்தாளர். இரா.நாறும்பூநாதனின் பிரேமாவின் புத்தகங்கள் என்ற சிறார் சிறுகதை நூல் வெளியாகிறது. குழந்தைகளிடம் அறிவுரை சொல்லும் தொனியிலோ, நிர்ப்பந்தப்படுத்தும் விதத்திலோ, பயமுறுத்தும் விதத்திலோ, ( இதை, இப்படிச் செய்யாததினால் இப்படி ஆகிவிட்டது. எனவே எச்சரிக்கை! ) இல்லாமல் குழந்தைகளின் உயரத்துக்குக் குனிந்து அவரகளுடன் சேர்ந்து தோளில் கை போட்டு இனிமையான வார்த்தைகளில் பேசுகிற கதைகளை எழுதியிருக்கிறார் நாறும்பூநாதன்.

சமகாலப்பிரனைகளை குழந்தைகளுக்கு ஏற்ற எளிமையான மொழிநடையில், கலைஅமைதி குறையாமல், ஆர்வமூட்டும் கதைப்பின்னலுடன் எழுதியிருக்கிறார். எல்லாக்கதைகளும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற நேரடியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரியவர்களுக்கே அவை எந்தெந்த சம்பவங்களென்று தெரியும். குழந்தைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இதுவரை வாசித்திராத கதைகள். அப்படியொரு மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார் நாறும்பூநாதன்.

யதார்த்த வாழ்வில் நாம் நம் காலத்தின் கொடூரமான பிரச்னையான சாதிப்பிரிவினை பற்றி மூன்று கதைகள் இருக்கின்றன. மூன்றுமே குழந்தைகளிடம் இந்தப் பிரச்னையைக் குறித்து எப்படிச் சொல்ல வேண்டும்? என்பதற்கு முன்னுதாரணமான கதைகள். ஆறறிவு கதையில் டிட்டு என்ற குட்டிப்பறவையே கேள்விகளைக் கேட்கிறது. அந்தக் கதையின் முடிவு கவித்துவமானது. அதே போல பாரவதி அத்தையின் சமையல் கதையில் குழந்தையின் மனது எப்படிப்பட்டதென்பதை கதை முடியும் போது உணரமுடிகிறது. அந்தக் கடைசி பத்தியிலுள்ள வரிகளை வாசிக்கும்போது ,

 “ மனுசங்க.. கடைசி வரைக்கும் குழந்தைகளாவே இருந்துட்டா எவ்வளவு நல்லாருக்கும்..”

கண்ணில் நீர் துளிர்க்காமல் போகாது. உண்மையான சம்பவத்தை எப்படிக் கலையாக மாற்றுவது என்பதற்கு நல்ல முன்னுதாரணமான கதை. மனிதருள் வேறுபாடு உண்டோ? என்ற கதையிலும் மனமாற்றத்தை அழகாகச் சொல்கிற கதையாக விரிந்திருக்கிறது.

குழந்தைகளின் உலகை நாம் நம்முடைய அளவுகோல்களால் அளக்கிறோம். அந்த அளவுகோல்களின் போதாமையை உணர்த்தி, என்ன செய்ய வேண்டுமென்பதையும் சொல்கிற கதைகளாக ‘ மாடசாமி உண்மையில் மக்கு தானா? ’என்ற கதையும், ’ கணக்கு எனக்குப் பிடிக்கும் ’என்ற கதையும் அழகாக அமைந்திருக்கின்றன.

நாற்பத்தியைந்து வருடங்களாக, சிறுகதை எழுத்தாளராகவும், பண்பாட்டு ஆய்வாளராகவும், சிறந்த பேச்சாளராகவும், சிறந்த அமைப்பாளராகவும் திகழும் நாறும்பூநாதனின் கலையனுபவமும், அனுபவமுதிர்ச்சியும், சிறார் இலக்கியத்துக்குள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களனைவருமே குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள். ஏனெனில் அது அத்தனை சவாலான காரியம். அதே நேரம் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன், அவசியம் செய்ய வேண்டிய சமூகப்பங்களிப்பு என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதோ நாறும்பூநாதனும் அந்த வரிசையில் இணைகிறார். அதற்கு பிரேமாவின் புத்தகங்கள் கதைத்தொகுப்பு முன்னறிவிப்பாகவும் முத்திரைப்பதிக்கும் தொகுப்பாகவும் வெளிவருகிறதென்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறிவிக்கிறேன்.

இன்னும் யாரும் செல்லாத திசைகளில் உன் சிறகுகள் விரியட்டும் நாறும்பூ என் அன்புத்தோழனே!

( பிரேமாவின் புத்தகங்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை )