Sunday 6 September 2015

பின்பும் பெய்தது மழை

revolution 3

 

உதயசங்கர்

அவளுடைய ஊரைப்போலில்லை. இங்கே அடிக்கடி மழை பெய்கிறது. அதுவும் அரமில்லாமல் சன்னல் வழியே வரும் பூனையைப் போல. நல்ல வெளிச்சமாக இருக்கிற மாதிரி தெரியும். அப்படியே லேசான நிழலைப் போல மேகங்கள் கூடும். அப்படியே பூவாளியிலிருந்து நீர் சொரிவதைப் போல மழை பொழியும். ஜெயாவுக்கு மழை பிடிக்காது. எரிச்சலாக இருந்தது. எப்போதும் நச நச என்று ஈரம். வீட்டில் எங்கு தொட்டாலும் குளிர் உடலை நடுக்கியது. எப்போதும் சூடாக ஏதாவது குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மழையின் ஒரு துளி பட்டால் போதும் ஜெயாவுக்கு காய்ச்சல் வந்து விடும். எப்போதுமே காய்ச்சல் அவளைப் பாடாய்ப்படுத்திவிடும். ஒரு முறை கோடை மழையின் பத்து பதினைந்து துளிகள் அவளுடைய தலையில் விழுந்து விட்டது. டைபாய்டு காய்ச்சல் வந்து அந்த ஆண்டு முழுப்பரிட்சை எழுத முடிய வில்லை. அப்புறம் டாக்டர் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்து பாசானாள்.

அம்மா இடிமின்னலோடு மழை பெய்யும் போதெல்லாம்

“ இப்படித்தாண்டி ஆசுபத்திரில உன்ன பெத்து வீட்டுக்குத் தூக்கிட்டு வரும் போது பிடிச்சது பாரு ஒரு மழை..பேய் மழை.. எதிரே என்ன இருக்குன்னே தெரியலன்னா பாத்துக்கோயேன்.. ஆட்டோக்காரன் எப்படியோ சமாளிச்சு வண்டியை ஒட்டி வீட்டுக்கு வந்துட்டான். முன் வாசலிலிருந்து வீட்டுக்குள்ள போணூமே…. பச்சைக்குழந்த மழையில நனைஞ்சிரக்கூடாதேன்னு வாசல்யே ஆட்டோவுக்குள் அரை மணி நேரம் காத்திருந்தேன்.. கையில குடை இருந்தும் பிரயோசனமில்லை…. விரிக்க முடியாது.. ஆட்டோக்காரன் புண்ணியவாளன்.. பொறுமையா இருந்தான்.. கொஞ்சம் மழை குறைஞ்சதும் துணியால உன்ன நல்லா சுத்திக்கிட்டு வாசல்ருந்து உள்ள ஓடுறா எங்கம்மா.. அப்ப இடிச்சது பாரு ஒரு இடி.. நான் ஆட்டோவுக்குள்ளேயே வீல்னு கத்திட்டேன்… எப்படி துணியால சுத்தியிருந்தாலும் உன்னோட தலையில் அஞ்சாறு சொட்டு மழை நனைச்சிட்டு… வீட்டுக்குள்ள நுழைஞ்சதிலிருந்து அழுத பாரு ஒரு அழுகை..உங்க வீட்டு அழுகை..எங்க வீட்டு அழுகை..இல்லம்மா…காய்ச்சல் வந்து வந்த கையோடு மறுபடியும் ஆசுபத்திக்கு ஓடி யப்பப்பா.. நினைச்சாலே அழுகை அழுகையா வருது… இதில எம்மாமியார் பண்ணுன அழிம்பு.. அவளை அப்படிக் கவனிக்கல.. இப்படிக் கவனிக்கலன்னு…..போதும்டா சாமி நான் பொண்ணாப்பொறந்து புண்ணா போனதுன்னு.. அவ்வளவு வெப்புராளம்….எனக்கு ”

இந்தக் கதையை ஆயிரம் தடவையாவது சொல்லியிருப்பாள் அம்மா. அதனால் அந்த சம்பவமும் வந்த காய்ச்சலும் ஒரு திரைப்படம் போல ஜெயாவின் மனசில் நினைத்தவுடன் ஓட ஆரம்பித்து விடும். அம்மா அவளை மழையில் நனையவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

“ மழையில நனையாதே உனக்குப் பிடிக்காது..காய்ச்சல் வந்துரும்… “ என்ற வார்த்தைகளை மந்திரம் போலச்சொல்லி சொல்லி அது ஜெயாவின் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அம்மா சொன்னதினாலோ என்னவோ. அவள் எப்போது மழையில் நனைந்தாலும் காய்ச்சல் வந்து விடும். அதனால் மழையை வெறுத்தாள். மழைக்காலத்தில் எங்காவது வெளியில் போனால் மழை வந்துருமோ மழை வந்துருமோ என்று பயந்தாள். ஆனால் அவளுடைய தங்கை சியாமளா மழையில் குதியாட்டம் போடுவாள். அம்மா என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள். அப்பா அவளை உற்சாகப்படுத்துவார். நல்ல மனநிலையில் இருந்தால் அவரும் கூட மழையில் குளிப்பார். ஜெயாவுக்கு அதைப்பார்க்கப் பார்க்க வெறுப்பாக இருக்கும்.

கௌதம் அலுவலகம் விட்டு வரும் நேரம் ஆகிவிட்டது. அவன் வந்ததும் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு பஜ்ஜி போட வேண்டும் என்று நினைத்திருந்தாள். கௌதமுக்கு உருளைக்கிழங்கில் என்ன பண்டம் செய்தாலும் பிடித்திருந்தது. அதனால் எப்போதும் வீட்டில் உருளைக்கிழங்கு இருந்து கொண்டேயிருக்கும். ஜெயாவுக்கு உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வுத் தொந்திரவு வந்து விடும். வயிறு ஏத்தமாதிரி ஊதிக் கொள்ளும். வீட்டில் மாதம் ஒரு தடவையோ இரண்டு தடவையோ அம்மா செய்கிறபோது தொட்டும் தொடாமல் சாப்பிடுவாள். இப்போதும் அப்படித்தான். கௌதமுக்கு நிறைய வைப்பாள். அவள் கொஞ்சமாய் எடுத்துக்கொள்வாள். கௌதம் அவள் மீது அன்பாக இருந்தான் என்று சொல்வது சம்பிரதாயமான வார்த்தை தான். எல்லா ஆண்களும் திருமணமான புதிதில் மனைவி மீது பிரியமாகத்தான் இருப்பார்கள். போகப்போகத்தானே தெரியும். மழையின் தாளம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்தது. அவள் அடுப்படிக்குள் போய் உருளைக்கிழங்கை எடுத்து கழுவி தொலி உரிப்பானால் உருளைக்கிழங்கின் தோலை உரிக்க ஆரம்பித்தாள்.

ஜெயாவுக்கு திருமணம் ஆகி இந்த ஊருக்குத் தனிக்குடித்தனம் வந்தபோது ஊரிலுள்ள எல்லோரும் எப்போதும் ஒரு குடையுடனே திரிவதைப் பார்த்தாள். ஆச்சரியமாக இருந்தது. அவளுடைய ஊரில் வெயில் எப்போதும் நூறு டிகிரிக்கு மேல் இருக்கும். ஆனால் குடைகளைப் பார்ப்பது அபூர்வம். அதே போல மழைக்காலத்தில் மட்டுமே மழை பொழியும் வறண்ட ஊர். மழைக்காலத்தில் எப்போதும் இடி மின்னல் என்று மேளதாளங்கள் மட்டுமே ஒரு அரை மணி நேரத்துக்கு கேட்கும். திருமண வீடுகளில் கலியாணத்துக்கு கொட்டுகிற நாதசுர மேளத்தைப் போல. இதோ வந்து விடுவேன் இதோ வந்து விடுவேன் என்கிற மாதிரி மழை மிரட்டிக் கொண்டிருக்கும். சில வேளை அந்த மிரட்டலோடு மழை போய் விடும். சில வேளை மழை கொடூரமான புயலைப் போல அடித்து விளாசும். வெளியில் யாரும் நடமாடக்கூட முடியாது. அந்த அளவுக்கு இடி, மின்னல், மழை, ஊரையே நாசமாக்கி விடும். இடிக்கு ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு பேர் இறந்து போவதும் உண்டு. நிறைய வீடுகளில் தொலைக்காட்சி, மிக்சி, ரேடியோவில் மின்னல் பாய்ந்து வீணாகி விடும். அதனால் லேசாய் இடி இடிக்கும்போதே ஜெயாவின் அம்மா “ டிவியை ஆஃப் பண்ணுங்க.. எல்லா பிளக்கையும் கழட்டிப் போடுங்க.. “ என்று கத்த ஆரம்பித்து விடுவாள். அதற்குக் காரணமும் இருந்தது. ஒருமுறை அயத்து மறந்து மழையின் போது டிவியின் பிளக் இணைப்பில் மாட்டியிருந்தது. அன்று இறங்கிய மின்னல் அவளுடைய வீட்டிற்குள் ஒரு ஒளிப்பந்தைப் போல ஒவ்வொரு மின்சார இணைப்புகளிலும், மின்சார சாதனங்களிலும் மாறி மாறி பறந்தலைந்து ஒரு பெரிய சத்தத்துடன் தொலைக்காட்சிப்பெட்டியில் அடங்கியது. அன்று அவளுடைய வீடு இருந்த ஏரியா முழுவதும் தொலைக்காட்சிப்பெட்டிகள் பழுதாகி விட்டன. அப்போது அம்மா மட்டும் வீட்டிலிருந்திருக்கிறாள். பயந்து அலறி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டாள். அந்த சம்பவத்தைச் சொல்லும்போதெல்லாம் அவளுடைய கண்களில் மரணபயம் தெரியும். அதைக் கற்பனை செய்யும் போதே ஜெயாவுக்கு உடல் நடுங்கும்.

திரைப்படங்களில் மழைப்பாட்டு வந்தாலே ஜெயாவின் உடல் நனைய ஆரம்பித்து விடும். எப்படித்தான் இப்படி நனையுறாங்களோ என்று கவலைப்படுவாள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் தலைக்கு குளிப்பாள். ஆனால் இங்கே பெண்கள் தினசரி தலைக்குக் குளித்து ஈரத்தலையோடு நீர் சொட்டச் சொட்ட அலைந்து திரிவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஜெயாவுக்கு அடுத்தடுத்து தலைக்குக் குளித்தாலே சளிப்பிடித்து காய்ச்சல் வந்து விடும். கௌதமுக்கு இதெல்லாம் தெரியாது. கலியாணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது. அவளுக்கு கௌதமின் மீது எந்தப் புகாரும் இல்லை. சில வருத்தங்கள் இருந்தன. திருமணப்பேச்சு துவங்கும்போது பெண் வேலைக்குப் போக வேண்டாம் என்றான். ஜெயாவின் அப்பா எப்படி சம்மதித்தார் என்று தெரியவில்லை. அப்பாவுக்கு பெண்கள் சுயமாக வேலை செய்து சொந்தக்காலில் நிற்க வேண்டும். அப்போது தான் பொருளாதார ரீதியாக ஒருத்தரையே சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று அடிக்கடி ஜெயாவிடமும் சியாமளாவிடமும் சொல்லுவார்.

அவள் பி.இ. முடித்த கையோடு கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி சென்னையில் உள்ள ஒரு எம்.என்.சி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். சென்னை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பெசண்ட் நகரிலிருந்த ஒர்க்கிங் வுமன் ஹாஸ்டலில் தங்கியிருந்து ஓ.எம்.ஆர். ரோட்டில் இருந்த அவளுடைய அலுவலகத்துக்குப் போய் வந்தாள். அங்கே இருக்கும்போது வீட்டிற்குத் தேவையான சாமான்கள் வாங்குவதைப் பற்றி, சியாமளாவுக்கு படிப்புச்செலவுக்கு பணம் சேர்ப்பது, அவள் சம்பாத்தியத்தில் ஒரு கார் வாங்க வேண்டும் ஒரு நல்ல மூணு பெட்ரூம் கொண்ட வீடு வாங்க வேண்டும். அப்பா ரிட்டையரான பிறகு தன்னுடன் குடும்பத்தை வைத்துக் கொள்ள வேண்டும். திருமணத்தைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டியதில்லை. கொஞ்ச நாள் தள்ளிப் போடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் எல்லாம் திடீரென கலைந்து குழம்பி விட்டது. மூன்று மாதம் வேலை பார்த்திருப்பாள் அவ்வளவு தான். திடீரென அப்பா ஊருக்கு வரச்சொன்னார். திருமணப்பேச்சுக்கு முதலில் ஜெயா சம்மதிக்கவில்லை. அதிலும் வேலைக்குப் போகக்கூடாது என்ற கண்டிஷனுக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். அப்பா ஒன்றும் சொல்ல வில்லை. “ ஒன் இஷ்டம்டா..” என்று மட்டும் சொன்னார். ஆனால் அம்மா விடவில்லை. அப்படி இப்படிப் பேசி மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக இளக வைத்து விட்டாள். அதோடு மாப்பிள்ளை வீட்டில் ஒரு வருடத்துக்கு அப்புறம் வேலைக்கு வேணும்னா போகட்டும் என்று சொன்னதாக அம்மா சொன்னாள். அது பொய்யோ உண்மையோ.. திருமணத்துக்குப் பிறகு கௌதமிடம் கேட்ட போது “ இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல.. பாப்போம்.. “ என்று பட்டும்படாமலும் சொன்னான்.

அவன் கைநிறைய சம்பளம் வாங்கினான். வேலை பார்க்கும் கம்பெனியிலிருந்து கார் கொடுத்திருந்தார்கள். வீட்டில் எல்லா நவீன சாதனங்களும் இருந்தன. அவன் தினமும் அவளுக்காக சின்னச்சின்ன பரிசுப்பொருட்களை வாங்கிக் கொண்டு வருவான். பொழுது போகாத பகலில் அவள் சீரியல்களைப் பார்ப்பாள். நினைத்த நேரம் உறங்குவாள். வீட்டில் உள்ள பொருட்களை மாற்றி வைத்து அழகு பார்ப்பாள். கௌதமுக்காக ஏதாவது புது ரெசிபி செய்து வைப்பாள். இரவு வந்ததும் குளித்து விட்டு வந்து கொஞ்சநேரம் டி.வி.யில் செய்தி பார்ப்பான். எப்போதும் அவனுடைய கவச குண்டலம் மாதிரி லேப்டாப் அவனுடன் இருக்கும். லேப்டாப்பில் ஒரு கண்ணும் டி.வி.யில் ஒரு கண்ணுமாக இருப்பான். அடிக்கடி ” ஜெயா..ஐ ஆம் லக்கி யு நோ… ஐ லவ் யூ ஜெயா..” என்று சொல்வான். முதலில் அதைக் கேட்ட போது கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தது. பின்பு பழகி விட்டது. பிடித்தும் விட்டது. அப்படி அவன் சொல்லும்போது அவள் அவனைப்பார்த்துச் சிரிப்பாள்.

” ஒன்னோட சிரிப்பைப் பாக்கும்போது அப்படியே அள்ளி எடுத்து முத்தம் கொடுக்கணும் போல இருக்கு..” என்று கௌதம் சொல்வான். ஜெயாவுக்கு வெட்கமும் பெருமையுமாய் இருக்கும். அவள் சாப்பிட்ட பாத்திரங்களை ஒழித்துப் போட்டு விட்டு வரும்வரை அவன் லேப்டாப்பில் ஏதாவது பார்த்துக் கொண்டிருப்பான். ஒருநாள் தற்செயலாய் அவன் உட்கார்ந்திருந்த இடத்தைக் கடந்து போனபோது லேப்டாப்பில் ஆபாசப்படம் ஓடிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. அவள் கவனிப்பதைப் பார்த்ததும் லேப்டாப்பை மூடி விடுவான். அவள் எதுவும் கேட்டதில்லை. அவள் சந்தோஷமாக இருப்பதைப் போலத் தான் இருந்தது. இதை விட என்ன வேண்டும் என்று சமாதானப்படுத்திக் கொள்வாள். ஒரு வருடம் கழித்து வேலைக்குப் போக வேண்டும் என்ற வைராக்கியம் கூட மெல்ல தன் உறுதியைத் தளர்த்திக் கொண்டது.

தினசரி அம்மாவிடம் பேசும்போது

“ ஊரில மழை பெய்யுதாம்மா..இல்லியா..இங்கே ஒரே மழை..எப்பப்பாரு மழை தான் எரிச்சலா இருக்கு…”

என்று சொல்ல மறப்பதில்லை. மழை இன்னும் விடவில்லை. சன்னல் வழியே வெளியே மழையை வேடிக்கை பார்த்தாள். வானத்திலிருந்து நூல் நூலாக கீழே இறங்கிக் கொண்டிருந்த மழையைப் பார்க்கும்போது அப்படியே அந்த நூல்களைப் பிடித்துக் கொண்டு மேலே போய் மேகங்களை விரட்டி அவளுடைய ஊர்ப்பக்கமாகக் கொண்டு போனால் எப்படி இருக்கும்? உடனே காய்ச்சல் வந்துருமே என்று தோன்றியது. அவளுடைய குழந்தையை மழையில் நனைய விடுவாளா? அதுக்கும் காய்ச்சல் வந்தால்? சே.. என்ன யோசனை..ஒருவேளை கௌதம் மாதிரி இருக்கலாமே…ஆனால் கௌதம் மழையில் நனைவானா? அவனுக்குக் காய்ச்சல் வருமா? என்று அவள் கேட்டதில்லையே. ஒரு வேளை அவனுக்கும் மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்றால்…. அவளுடைய யோசனையின் கதவுகளை இழுத்து மூடியபடி மழையினூடாக கௌதம் காரின் ஹாரன் சத்தமும் கேட்டது. இன்று சீக்கிரமே வந்து விட்டான். அவள் வாசல் கதவைத் திறந்தாள். காரின் கதவைத் திறந்து வேகமாக சாத்திய கௌதம் உள்ளே ஓடி வந்தான். கையிலிருந்த லேப்டாப் பேக்கை ஜெயாவிடம் கொடுத்தான். திரும்ப ஓடினான் மழையின் உள்ளே மறைந்து போனான். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் கையிலிருந்த அந்த பேக்கை அப்படியே கீழே வைத்து விட்டு கண்களால் அவன் மறைந்த திசையில் துழாவினாள். மங்கலான ஒளிநிழல் போல கௌதம் மழையின் நடுவிலிருந்து அவளை நோக்கி கை ஆட்டி கூப்பிட்டான். அவள் கூர்ந்து பார்த்தாள். அவன் தொப்பலாய் நனைந்து மழையோடு மழையாக கரைந்திருந்தான். அவள் பயந்தாள். அவனுக்குக் காய்ச்சல் வந்து விடுமோ.

திடீரென மழையின் கைகள் அவளைப் பிடித்து இழுத்தன. அவள் வேண்டாமென மறுத்து தலையாட்டுவதற்குள் மழை அவள் மீது இறங்கியது. மென்மையாக ஒரு பட்டுத்துணியால் போர்த்துவதைப் போல மழை அவளைப் போர்த்தி ஆசுவாசப்படுத்தியது. அவள் உடலின் ரோமக்கால்கள் புளகாங்கிதமடைந்தன. மார்பு விம்மியது. ஒரு கதகதப்பு உடலெங்கும் பரவியது. மேலே நிமிர்ந்து பார்த்தாள். வெள்ளையாய் ஒரு ஒளிப்படலம் தெரிந்தது. வாயைத் திறந்து மழையை விழுங்கினாள். அதன் ஒவ்வொரு துளியையும் அவளுடைய உடலின் உள்ளுறுப்புகள் ருசித்தன. அந்த ருசியின் ஒளியில் காய்ச்சல் பயமோ அம்மாவின் எச்சரிக்கையோ புகையாய் மறைந்து விட்டன. அவள் முன்னால் உயிரின் துள்ளல் ஒலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியிலும் ஒரு உயிர் ஜனனம் ஆகிக் கொண்டிருந்ததை அவள் உணர்ந்தாள். அவளை தொப்பலாய் நனைத்த மழை அவள் அடைகாத்த கனவுகளுக்கும் உயிர் கொடுத்தது. அவள் மழையில் கைகளை வீசி தட்டாமாலை சுற்றி குதித்தாள். மழை அவளை வாங்கிக் கொண்டது. அவளும் மழையை வாங்கிக் கொண்டாள்.

வீட்டு வராந்தாவிலிருந்து கௌதம் கைகளை ஆட்டி ஜெயாவை அழைத்துக் கொண்டிருந்தான்.

“ போதும் உள்ளே வா ஜெயா… காய்ச்சல் வந்துரும்… “

என்று கத்திய சத்தத்துணுக்குகளை மழை விழுங்கி விட்டது. அவள் அவனை மழையின் வழியே வெறுமனே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

நன்றி செம்மலர் செப்டம்பர் 2015 

1 comment: