Tuesday, 13 May 2025

தங்க மூக்கு

 

தங்க மூக்கு



ஒரு அடர்ந்த காட்டில் அபூர்வமான தங்கமூக்குப் பறவை ஒன்று இருந்தது. பகலில் சாதாரணமாக எல்லாப்பறவைகளைப் போல இருக்கும். இரவானதும் அதன் மூக்கு தங்கமூக்காகி விடும். பகலில் காட்டை விட்டு வெளியில் வராது.

காட்டின் நடுவில் உள்ள உயரமான பெரிய மரத்தின் பொந்தில் வீடு கட்டி வாழ்ந்தது. அந்த வீட்டுச் சன்னலில் இருந்து பார்த்தால் அந்தக் காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும். இரவானதும் பறந்து அருகிலுள்ள கிராமத்துக்குச் செல்லும். அங்கே யார் வீட்டில் விளக்கு எரிகிறதோ அந்த வீட்டு முற்றத்தில் இறங்கும். தன்னுடைய தலையை ஒரு உலுப்பு உலுப்பும். உடனே தங்க மூக்கிலிருந்து தங்கத்துகள்கள் உதிரும். பிறகு அங்கிருந்து பறந்து விடும்.

மறுநாள் குடிசையில் இருப்பவருக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் தங்கத்துகள்களை விற்று வீட்டுக்கு உணவுப்பொருள்களை வாங்கிக் கொள்வார். இப்படி ஏழைகளுக்கு உதவி செய்து வந்தது தங்கமூக்குப் பறவை. இதுவரை யாரும் அதைப் பார்த்தது இல்லை. எப்படி தங்கத்துகள் வந்தது என்று யாருக்கும் தெரியாது.

ஒருநாள் குருசாமி என்பவரது குடிசை வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தது தங்கமூக்குப் பறவை. அவர் வீட்டு முற்றத்தில் சென்று மூக்கை ஆட்டியது. பறந்து விட்டது.

குருசாமிக்கு ஆச்சரியம். அதை விட தங்கத்தை வாங்கிய ஊர்ப்பணக்காரரான  நல்லதம்பிக்கு ஆச்சரியம். ஊரில் இருக்கும் ஏழைகளுக்கு மட்டும் தங்கம் எப்படி கிடைக்கிறது? அவர் இந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினான். தங்கம் கிடைத்தவரகளிடம் விசாரித்தான்.

பிறகு ஒரு குடிசை வீட்டைக் கட்டினான். இரவு முழுவதும் விளக்கை எரியவிட்டான். சன்னல் வழியே வெளியே முற்றத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

தங்க மூக்குப் பறவை வந்தது. அந்த இடமே வெளிச்சமாகி விட்டது.  ஒளிவீசும் தங்கமூக்கை உலுப்பியது. தங்கத்துகள்கள் கீழே உதிர்ந்தன. பறந்து போய் விட்டது. இதைப் பார்த்த பணக்கார நல்லதம்பிக்குப் பேராசை வந்தது. அந்தப் பறவையைப் பிடித்து கூண்டில் அடைத்து விட்டால் தினம் தினம் தங்கம் கிடைக்கும். நாட்டில் பெரிய பணக்காரராகி விடலாம்.என்று நினைத்தான். அதற்கு அடுத்த நாளும் அதே போல குடிசை வீட்டில் விளக்கை எரிய விட்டான்.

ஆனால் தங்க மூக்குப்பறவை வரவில்லை. அப்போது தான் அவனுக்குப் ஒருமுறை வந்த குடிசைக்கு மறுமுறை தங்கமூக்குப் பறவை வருவதில்லை என்று புரிந்தது.. உடனே வேறு ஒரு குடிசையைக் கட்டினான். குருசாமி நல்லதம்பியிடம்,

ஐயா.. நீங்கள் நினைப்பது போல நடக்காது.. அற்புதங்களை நாம் கூண்டில் அடைக்க முடியாது.. தானாகத் தான் நடக்கும்..”

என்று எவ்வளவோ சொன்னான். ஆனால் நல்லதம்பி கேட்கவில்லை.

முற்றத்தில் கண்ணிவலை விரித்தான். அவன் நினைத்தபடியே தங்கமூக்குப் பறவை வலையில் மாட்டிக் கொண்டது. உடனே அதைப் பிடித்து ஒரு கூண்டில் அடைத்து அவனுடைய மாளிகைக்குக் கொண்டு போனான். உறங்கி எழுந்து காலையில் பார்த்தால் அந்தப் பறவையின் மூக்கு சாதாரணமாக இருந்தது. பணக்கார நல்லதம்பிக்குக் குழப்பம்.

என்ன ஆச்சு? என்று யோசித்தான். கூண்டுக்குள் அந்தப் பறவை வெளியில் வரப் போராடியது. கூண்டின் கம்பிகளில் முட்டி மோதியது. அந்தப் பறவையின் மூக்கு உடைந்தது. அது நல்லதம்பியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பிறகு இரவோ பகலோ அந்த அபூர்வப்பறவையின் மூக்கு தங்கமாக மாறவில்லை.

நல்லதம்பி,

ச்சீ ச்சீ.. இந்தப் பறவைக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பது வீண்..”

என்று நினைத்தான். பிறகு நல்லதம்பி அந்தப் பறவையை கூண்டிலிருந்து விடுவித்தான்.

கூண்டை விட்டு வெளியேறியதும் அபூர்வப்பறவையின் மூக்கு தங்கமாக மாறியது.

நல்லதம்பிக்கு அப்போது தான் புரிந்தது.

எங்கே சுதந்திரம் இருக்கிறதோ அங்கே தான் அற்புதங்கள் நடக்கும்..”

அதன்பிறகு அந்த அபூர்வத் தங்கமூக்குப்பறவை கிராமத்துப்பக்கம் திரும்பியே பார்க்கவில்லை.

நன்றி - பொம்மி