துண்டிக்கப்படும்தலைகளும்,
ரோஜாமலர்களின்கதைகளும் –
நூல்மதிப்புரை
கமலாலயன்.
நனவுலக வாழ்க்கை நம்மை ஒவ்வொரு நாளும்
சிதைத்துக் கொண்டே இருக்கிறது.ஒரு நான்கு மணி நேரத்திற்குள், நூறு கோடி மக்களை
வீடுக ளுக்குள் முடக்கிவிட முடிகிறது.போகும் திசையறியாமல்,உணவில்லாமல், வழியிலாமல்
மக்கள் அலைமோதிக் கொண்டிருக்கையில்,ஒவ்வொரு தனி மனிதனும் தன் பொறுப்பை உணர்ந்து
நடந்து கொள்ள வேண்டும் என்ற உபதேசங்கள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் கொட்டிக்
கொண்டிருக் கின்றன.திரும்புகிற பக்கமெல்லாம் முட்டுச்சந்துகள்.எகிறிக் குதிக்க
முயலும் போது இடித்து அடக்கும் கூரைகள்.இவற்றிலிருந்து விடுபட்டு நிற்கவும்,சற்றே
இளைப்பாறவும் கெஞ்சுகிறது மனம்.வாசிக்கத் தெரிந்த மனங்கள் கதைகளில்,கவிதைகளில் தஞ்சம் புகுந்து ஆறுதலடைகின்றன.
‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;அவர்கள் ஆறுதலடைவார்கள்’ என்ற நற்செய்தி,
எப்போதாவது நிஜமாகும் என்றுதான் நம்பிக் கொண்டி ருக்கிறோம்.துன்பக்கடலைத் தாண்டும்
போது தோணியாவது கீதம் என்றும் ஒரு குரல் கேட்கிறது.அது உண்மைதான்;கீதம் இசைக்கும்
குரல் களை,அவை எழும் குரல்வளைகளை நெரித்து ஊமையாக்கும் வரை,யாரோ ஏதோவொரு
மூலையிலிருந்து பாடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்தக்
கதைகளும்,கவிதைகளும்,பாடல்களும் எல்லா நேரங்களிலும் கை கொடுத்து
விடுவதில்லை.கனவுகளின் மாய உலகம் இம்மாதிரிச் சிதைவுகளில் இருந்து தப்பிக்க
உதவுகிறது.சாதாரண மனிதர்களுக்குக் கனவுகள் தற்காலிக நிவாரணிகள்.எழுதுகிற
படைப்பாளிகளுக்கோ அவை படைப்பூக்க ஆற்றலை வாரி வாரி வழங்கும் ஊற்றுக் கண்களாகின்றன.
உதயசங்கர்,கனவுகள்
காண்பதை விரும்புகிறவர்.அவருடைய கனவு களில், அவர் ஏற்கெனவே சந்தித்த
மனிதர்களும்,இனிமேல் சந்திக்க இருப்பவர்களும்
உலவுகின்றனர்.முரண்கள்,துயரங்கள்,அழுக்குகள், அவமானங்கள்,அவலங்கள் நிரம்பிக்
கிடக்கும் இந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை உதயசங்கரின் எழுதுகோல் அழியா
ஓவியங்க ளாக்கி விடுகிறது.அவற்றில்தான் எத்தனை வண்ணங்கள்,எத்தனை வடிவங்கள்...?
.சொல்
புதிது,பொருள் புதியவையாய்,சோதி மிகுந்து ஒளிர்ந்தன.கால மாறுதல்களையும், வாழ்க்
கையின் வண்ணங்கள் வெவ்வேறாகிக் கொண்டே போவதையும் கூர்ந்து கவனித்து வந்திருக்கும்
ஒரு படைப்புக் கலைஞனின் பரிணாம வளர்ச்சிக்குச் சான்றுகளாக இப்போது
வெளியாகியிருக்கும் ‘துண்டிக் கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்’ சிறுகதை
நூல் இந்தப் பரிணாம
வளர்ச்சியின் சிகரங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது.
கதை சொல்லும் முறை,மொழி
நடை,சொல்லாடல்கள்,உணர்வு வெளிப்பாடுகள் எல்லாமே முற்றிலும்
வேறுபட்டிருக்கின்றன.இகதைகளின் மனிதர்கள் நமக்குப் பெரும்பாலும்
அறிமுகமானவர்களே.எளிய மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையே இவர் எழுதுகிறார்.அவை
அன்றாடம் நாம் நம்முடைய சொந்த வாழ்க்கை யிலோ அல்லது நமது சக மனிதர்களின்
வாழ்க்கையிலோ பார்த்திருக்கக் கூடியவைதாம்.என்ன, நாம் சாதாரணமாகப் பார்த்துக்
கொண்டே அவற் றைத் தாண்டி வந்து விடுகிறோம்;ஆனால், உதயசங்கர் நுண்ணுணர்வு மிக்க ஒரு
படைப்பாளியாகையால், அற்புதமான சொல்லோவியக் கதை களாக அவற்றை உருமாற்றித்
தந்திருக்கிறார்.
மனிதர்களின்
வேட்கைகள் இயல்பானவை.மூர்க்கமோ,மென்மையோ, எப்படியாயினும் அவையில்லாமல் மனிதர்கள்
இல்லை.அவற்றில் சில வெளிப்படையாக இருக்கின்றன.எவ்வளவுக்கு அவை வெளிப்படையான வையோ
அவ்வளவுக்கு இரகசியமானவையாகவும் இருக்கின்றன.சுப்பு லட்சுமிக்குப் பேசுவதில்
வேட்கை;தான் பேசுவதை மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டுமென்பது அவள்
விருப்பம்.கணவன்,மகன், மருமகள் –இவர்களுடன் பேச முயல்கிறாள்.அவர்கள் யாரும் காது
கொடுத்துக் கேட்கத் தவறுகிற போது,அவள் கடவுள்களுடன் பேசத் தொடங்கி
விடுகிறாள்.கல்யாணத்துக்கு முன்னால் அவள் குடியிருந்த ஒண்டுக் குடித்தன வீடுகள்
எல்லாவற்றிலும் உடன் வசிக்கும் மக்களுக்கு சினிமாப் படங்களின் கதைகளை
முழுமையாக,உணர்ச்சி பொங்கச் சொல்லுகிறவள்அவள்.சிவாஜி படங்களின் கதைகளை அவள் ஒரு
ஸீன் விடாமல் ஏற்ற இறக்கங்களுடன் சொல்லும் போது,அந்த வளவில் வாழும் மக்கள் கண்ணீர்
சிந்துவார்கள்.எம்ஜியார் படங்களின் கதைகளையோ, கேலியும் கிண்டலுமாய் விமரிசனங்களையும்
சேர்த்துச் சொல்லிச் சிரிக்க வைத்து விடுபவள் சுப்புலட்சுமி.ஆனால்,அவளுக்குக்
கல்யாணம் நடந்த பின் ஒரு கட்டத்துக்குப் பிறகு அவள் யாரோடும் பேசா மடந்தையாகி
விடுகிறாள்.ஆவலுடன் தன் செல்லப்பிராணியான கிளியிடம் பேசிக் கொஞ்சம் ஆறுதல்
அடைகிறாள்.ஆனால், கணவனுக்குக் கிளியின் கூச்சல் தொந்தரவாக இருக்கிறது;ஒரே அடியில்
அதை ஒழித்துக்கட்டி விடுகிறான். கடைசியில் கடவுளரிடம் மட்டுமே பேசியாக வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டு விடும் சுப்பு,”மத்தவங்க மாதிரி அவங்க இல்லடா...சொல்ற தக்
காது குடுத்துக் கேக்கறாங்கடா“ என்று மகனிடம் இயல்பான தொனி யில் சொல்லும்
போது,மகனோடு சேர்ந்து நாமும் அதிர்ந்துதான் போகிறோம்.
விஜயலட்சுமியிடம்ஒருதலைக்காதல்கொண்டிருந்தவன் செந்தில்வேல்.கல்லூரிக்காலத்தில்நடந்தகதைஅது.இப்போது,இவ்வளவுகாலம்கழித்துஇவன்வீட்டிற்குஎதிர்வீட்டிலேயேகுடிவருகிறாள்விஜி.
அவளுக்கோஇவன்மனதில்ஓடியிருந்தஇந்தஎண்ணமேதெரியாது. அவளைமறுபடிபார்க்கும்செந்தில்வேலின்மனதில்மறுபடிகாதல்துளிர்க்கிறது.அவளோகல்யாணம்பண்ணிமூன்றுவருடங்களுக்குப்பின்கணவன்ஆண்மையற்றவன்என்றஉண்மைதெரிந்துவிவாகரத்துவாங்கிக்கொண்டுஅண்ணன்களின்பாதுகாப்பில்வாழவந்திருப்பவள்.விஜி
இயல்பாக செந்தில் வேலின் வீட்டிற்கு வந்து போகிறாள்.கல்லூரி நாள்களில் இவன் எழுதிய
கவிதைகளைப் பற்றி தான் தோழிகளுடன் பேசிச் சிரித்த கதையை இப்போது
நினைவுகூர்கிறாள்.புத்தகம் படிக்கக் கேட்கிற அவளுக்குப் புத்தகம் தந்து
அனுப்புகிறான்.இப்போதும் அவளுக்கு செந்தில்வேலின் மன ஓட்டம்
பிடிபடுவதில்லை.அண்ணன்களோ சாதிவெறி பிடித்தவர்கள்.விஜியைப் பார்ப்ப தற்காகவே
புத்தகம் படிக்கிற சாக்கில் வாசலில் உட்கார்ந்திருக்கிற செந்திலை அண்ணன் ஒருவன்
முறைத்துப் பார்க்கிறான்.தற்செயலாக யாரையோ வெட்டிப்போட்டு விடப்போவதாக அவன்
மிரட்டியவாறே இவனை முறைக்க,அந்தக் குரலும்,குரூரமாக இருக்கும் அவனுடைய முகமும்
செந்திலின் மனப்பிறழ்வுக்கு வழி வகுத்து விடுகின்றன.அதன் பிறகு யாரைப் பார்த்தா
லும்,எங்கு போனாலும் எங்கிருந்தோ யாருடையவையோவான குரல்கள் இவன் காதுகளில் கேட்டுக்
கொண்டேயிருக்கின்றன.அவர்கள் தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்ற அச்சம் ஏற்படுத்தும்
அந்தக் குரல்கள் இவனைக் கலங்கடிக்கின்றன.அவன் ஓட,ஓட அந்தக் குரல்கள் விடாமல்
துரத்திக் கொண்டேயிருக்கின்றன...
குடிகாரர்களின் இருப்பிடம்
வீடா,பாட்டிலா?வீடு முழுக்கப் பாட்டில்,ஒரு கட்டத்தில், பாட்டிலே வீடு என்றாகி
விடுகிறது.கருணாகரனின் கதையில்,ஆரம்பத்தில் நண்பர்களுடைய வற்புறுத்தலால்
பார்ட்டிகளில் பங்கேற்று சும்மா ஜாலிக்குக் குடிக்கிறவனாகத்தான் இருக்கி
றான்.மீளமுடியாமல்,இருபத்தி நாலு மணி நேரமும் பாட்டிலினுள் குடியிருப்பவனாகவே ஆகி
விடுகிறான்.மனைவி,குழந்தை முக்கியமற்றவர்களாகத் தெரிகின்றனர்.அலுவலகத்திற்குப் போக
முடிவதில்லை.கருணாகரன் காதலித்து மணந்து கொண்ட பெண்தான் விமலா.’நாளை முதல்
குடிக்கக மாட்டேன்,சத்தியமடி தங்கம்’என்று கருணாகரன் விமலாவுக்குச் செய்து தரும்
சத்தியங்கள் காற்றில் பறந்து விடுகின்றன.விமாலாவும் அவனைத் திருத்தி விடலாமென்று
போராடிப் பார்க்கிறாள்.வலுக்கட்டாயமாகக் கருணாகரனைக் கடத்திக் கொண்டுபோய் மன நலக்
காப்பகத்தில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறாள்.மீண்டு வந்தாலும் கொஞ்ச
நாள்களில் மறுபடி அதே கதை.முயற்சி எதுவும் பலன் தராத நிலையில்,குழந்தையுடன் தாய்
வீட்டுக்குப் போகிறாள்.கருணாகரனைக் கேட்கவோ,கவனிக்கவோ இப்போது ஆளில்லை.அலுவலகப்
பணத்தைக் கையாடல் செய்து,கடன் வாங்கிக் குடிக்கிறான்.வேலை பறி போகிறது.ஊரெல்லாம்
ஏச்சும் பேச்சும் அடி உதையும் கிடைக்கின்றன.ஊரின் ஒதுக்குப் புறமிருந்த
மதுக்கடைக்குப் பின்னால், ஒரு மதுபாட்டிலுக்குள் இப்போது கருணாகரன்
குடியிருக்கிறான் எனக் கதையை குடிக்கிறார் கதை சொல்லி.இந்தக் கதையை வேறு எப்படி
முடிக்கலாம் என்று வாசகர்கள் நினைக்கும் வாய்ப்புள்ள சாத்தியங்களையும் ஆலோசனையாக
முன்வைக்கிறார்.முடிந்தவர்கள் அவற்றில் எது சிறந்த முடிவு என்று சொல்லலாம்.
வாழ்ந்து கெட்ட ஒரு வசதியான அப்பாவின்
மகள்கள் இருவர்.அவர்களைக் கரையேற்ற வகையோ வழியோ இல்லாமல் படுக்கையில் கிடக்கும்
அப்பா.இளையவள் ஏற்கெனவே வீட்டை விட்டு ஓடிப்போக முயன்றபோது அப்பாவின் கைத்தடி இடறி
விட்டு விடுகிறது.மீண்டும் இரண்டாவது முறை கிளம்பிப் போகிறாள்.மூத்தவள்
தூங்குகிறவள் மாதிரி நடித்துக் கொண்டிருந்து விட்டு,தங்கை கிளம்பியதும் காலியாக
இருக்கும் அவளுடைய படுக்கையைப் பார்த்துக் கொண்டே கண்ணீரில் மூழ்குகிறாள்.அப்படியே
தூங்கிப் போகிறாள்.வாழ்க்கையில் இப்படி விடிவேயில்லாமல் கண்ணீர் வெள்ளத்தில்
மிதக்கும் பெண்களின் அவலக்கதையை அப்பாவின் கைத்தடி சலனமில்லாமல் பார்த்துக் கொண்டு
கிடக்கிறது.
பள்ளிக்கூட நாள்களில் படிப்பு வராமல் அடியும்
திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிற பாஞ்சான்,பலசரக்குக் கடையில் வேலைக்குச் சேர்ந்து
விடுகிறான்.நன்றாகப் படிக்கிற அவனுடைய நண்பன் சண்முகமோ,கல்லூரியில் பட்டம்
வாங்கியபின் இரண்டு வருடம் வரை வேலையே கிடைக்காமல் வீட்டினுள் முடங்கிக்
கிடக்கிறான்.ஆனால், படிப்பு வராத பாஞ்சானோ நடைமுறை சாமர்த்தியங்களுடன்
வாழ்க்கையில் முன்னேறி பெரிய பணக்கார னாகவும்,அரசியல் பிரமுகராகவும் ஆகி
விடுகிறான்.சண்முகம் ஒரு வழியாக அரசு ஊழியராக ஆனபின், அவனைப் பார்ப்பதற்கு
அவ்வப்போது வந்து போகிற பாஞ்சான் சக அதிகாரிகள் முன்னாலேயே சண்முகத்தைப் பற்றி
பெருமையாகச் சொல்கிறான்.”இவனும் நானும் ஒண்ணாப் படிச்சோம்.பாருங்க,இப்ப அவன் பெரிய
ஆபீசராயிட்டான்;நான்தான் படிக்காம கொள்ளாம கெடந்து அல்லாடிகிட்டிருக்கேன்”என்று
அவன் சொல்வதை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.பத்திரிகைப் பேட்டியில்
கூட,படிப்பின் பெருமையைத் தனது நண்பன் சண்முகம் நிரூபித்து விட்டதாக பாஞ்சான்
சொல்லியிருக்கிறான்.கல்வி,நூலறிவு, அறிவுத்திறன் எல்லாம் நடைமுறை வாழ்க்கையில்
வெறும் கானல் நீர்தானா என்றொரு கேள்வி எழுகிறது.
அப்பாவின் மறைவுக்குப் பின்,அம்மா,இரண்டு
தங்கைகள்,தம்பி அனைவரின் நலத்தையும் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து
குடும்பத்துக்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்து போகிறான் கிருஷ்ணன்.தங்கைகள்,தம்பி என
மூவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவுகள் அனைத்தையும் அம்மா
எடுக்கிறாள்;அவற்றை மறுபேச்சின்றி நிறைவேற்றி வைப்பவனாக மட்டுமே சண்முகம் கடைசிவரை
இருக்கிறான்.எந்த விசேஷத்திலும் அவனுக்கு ஒரு முக்கியத்துவமோ,ஓர் இடமோ,மரியாதையோ
கிடையாது.வெறும் பேச்சுக்குக் கூட இவனுடைய அபிப்பிராயத்தை யாரும் கேட்பதில்லை.அவனிடமிருந்த
ஓர் ஒளி கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டே வருகிறது.அவனுள் இருந்த கங்கு அணைந்து
கொண்டே வருகிறது.இந்த மாற்றங்கள் எவையும் அந்தக் குடும்பத்தின் கண்களில் படுவதே
இல்லை.ஒரு கட்டத்தில் கல்யாணம் என்றாலே அவனுக்குப் பேதியாகி உடல்நலம் கெட்டுப்
போகிறது.அப்போதும்கூட, கடையில் மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து விட்டு,சரியானதும்
கடைக்குப் போய்ப் பார்த்து வருமாறு சொல்கிறாள் அம்மா.ஷண்முகத்தைப் பற்றி அம்மா
என்ன நினைத்தாள் என்று யாருக்காவது தெரியுமா?
அன்னக்கொடி
பாலியல் உழைப்பாளி.வாடிக்கையாளர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு நாளில்,ஓட்டல்
ஒன்றில் ஒருவனுக்கு ஆள் தேவை என்று தகவல் கிடைத்து அங்கு போகிறாள்.அவனோ அம்மை
கண்டு எழ முடியாமல் படுக்கையில் கிடக்கின்றான். இவள் ஓர் ஆட்டோ பிடித்து அவனை
வீட்டுக்குக் கொண்டு வந்து பணிவிடை செய்கிறாள்.வேளா வேளைக்குக் கஞ்சி வைத்துக்
கொடுத்து,கனிவுடன் பராமரிக்கிறாள். அம்மை குணமானதும் மூன்று வேளை தலைக்குத்
தண்ணீர் ஊற்றி அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறாள்.அவன் இவளிடம் பேசும் அன்பு
மொழிகளும்,ஆசை வார்த்தைகளும் இவளுக்குப் பெரும் ஆறுதலையும்,நம்பிக்கையையும் அளிக்கின்றன.நாமிருவரும்
கணவன் மனைவியாக வாழ்ந்து விடலாம் என்று அவன் சொல்லுவதை நம்புகிறாள்.அன்றைய இரவு
அவர்கள் ஒன்று கூடுகின்றனர்.அன்றுதான் முதல் இரவு போல அவ்வளவு முழுமையான
ஈடுபாட்டுடன் அவனுக்கு ஒத்துழைக்கிறாள் இவள்.விடியும் வேளையில்,அவன் அங்கு
இல்லை.தலையணைக்கடியில்,இவ்வளவு நாள் இவள் ஆற்றிய ‘சேவை’க்கும்,இரவு தந்த
சுகத்திற்கும் கூலியாக நூறு ரூபாய் நோட்டு ஒன்று இருக்கிறது.மனிதன்,குறிப்பாக
ஆண்,எத்தனை பெரிய நம்பிக்கைத் துரோகியாக இருக்கிறான் என்று முகத்திலறைகிறது கதை.இதை
அன்னனக் கொடியின் கதையாக மட்டும் பார்க்க முடியவில்லை.உழைப்பாளி களிடம்,
உழைப்பையும்,உடலையும்,ஏன்,உயிரையுமே உறிஞ்சிக் கொள்ளும் இந்த உலகம் அவர்களுக்குக்
கடைசியில் கொடுப்பது இம்மாதிரித் துரோகங்களைத்தானே.
சாதி விட்டு சாதி கல்யாணம் செய்து கொள்ளும்
இளம் தம்பதிகளைப் பிரித்து விடவும், பெற்ற மகளே ஆயினும் சாதிப் பெருமையைக் கட்டிக்
காப்பாற்றவும் பெற்றோரும்,உடன் பிறந்தவர்களும் அந்தப் பெண்ணையும் காதலனையும் கொல்வது
உள்பட எந்தக் கொடுமைக்கும்
தயங்குவதில்லை.ஜெயலட்சுமியின் தலை துண்டிக்கப்பட்டு ரயில் தண்டவாளத்தில்
கிடக்கிறது.அவள் பிறந்து வளர்ந்த போது அவளால்தான் வீட்டின் ஐஸ்வர்யம் கொழிக்கிறது
என நம்பிய அப்பா அவளுக்கு என வாங்கி வந்து தலையில் சூடிய ரோஜா மலர் வாடுவ
தில்லை;மணம் வீசிக்கொண்டே இருக்கிறது.அந்த ரோஜாவின் ஒவ்வோர் இதழும் ஒவ்வோரிடத்தில்
நடந்த கதையைச் சொல்கிறது.நேசத்தின் வாசம் நிறைத்து வீசும் அந்த மலர்,ஜெயலட்சுமியின்
தலை துண்டிக்கப்பட்ட பிறகும் மணம் வீசிக் கொண்டேயிருக்கிறது...
சரக்கொன்றை இருந்த இடம் வெறுமையாகிப்
போகிறது;சித்தப்பா தனிமையில் கிடந்தது வாடுகிறார்.சிவாவின் மனம் குற்ற உணர்வில்
வேகிறது.வார்த்தைகளைக் கொட்டி விட்ட பிறகு,அதை அள்ள முடியுமா என்பது ஒருபுறம்;அப்படியே
அள்ள முடிந்தாலும் நடந்தது முடிந்து போனதுதானே?
இருபது கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில்
வரும் மனிதர்களின் மனப்பிறழ்வுகள் அச்சமூட்டுகின்றன.மனித உறவுகளின் மீது
நம்பிக்கையிழந்து விடுவோமோ என ஐயுறுமளவுக்கு அவை அவலங்களை நிறைத்துக்
கொண்டிருக்கின்றன.கருப்பையாவின் மரணத்தறுவாயில்,அவனுடைய கடந்தகாலம் கண்களில் படமாக
ஓடுகிறது.மனைவி குஞ்சம்மாள் முதலிரவின் போது தன்னை அச்சுறுத்திய கண்களை இப்போது
மீண்டும் பார்க்க முடியுமா என ஏங்குகிறாள்.ஒரு காட்டு விலங்கின் கண்களென அவை
அப்போது ஒளிர்ந்தன.மணமான புதிதில் குஞ்சம்மாளைக் கசக்கிப் பிழிந்து நாராக நைந்து
போகச் செய்த வன் கருப்பையா.இப்போது அவன் கண்களில் ஒளியில்லை.உடலில் வலுவில்லை.
அதெல்லாம் ஒரு காலம்.மனித வாழ்வின் அந்திம காலத்தில்,எத்தனையோ ஆண்டுகள் ஒன்றாக
வாழ்ந்த உயிர்களின் மனங்களில்,விசித்திர மனநிலைகள் இப்படி வடிவம் கொள்ளும் போது,
அவை விடை காண முடியாப் புதிர்களாகவே தோன்றுகின்றன.
கபில வஸ்துவின் கவுதமன்,முதல் முறையாக
அரண்மனையை விட்டு வெளியேறுகிறான். வெளியுலகில் அவன் காணும் முதல் காட்சி,மனதில்
எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது: ‘ஒரு வேளை அரசகுலத்தில் பிறக்காமல் சாதரணனாகப் பிறந்திருந்தால்
இப்படித்தான் நடந்து கொண்டிருப்போமோ?இவர்களுக்கு வாழ்க்கையின் இலக்குதான்
என்ன?மனிதன் இலக்கின்றி வாழ முடியாதா?அடிப்படையான உயிர்ப்பண்புகளை மட்டுமே கொண்டு
மனிதன் வாழ முடியாதா?வாழ்வின் இன்ப துன்பங்கள் யாவும் மனிதனின் இருப்பும் உணர்வும்
இருக்கும் வரைதானே?’-கவுதமனின் கேள்விகளுக்கு,அவனளவில் விடை கண்டு பிடிப்பதற்கு
ஒரு நீண்ட நெடிய தேடல் பயணம் தேவைப்படுகிறது.முதல் காட்சியில் மனம் விழிப்புற்றது
தொடங்கி பரி நிப்பாணம் அடையும் வரை,கவுதமன் தேடியடைந்த உண்மைகள்,மனிதருக்கு
வழிகாட்டின; ஆனாலும்,மனித மனம் இன்னமும் எதையோ வெற்றி கொள்ளத்தானே
துடிக்கிறது?வெற்றி என்ற கானலை நோக்கித்தானே எல்லாரும் வெறியுடன் ஓடிக்
கொண்டிருக்கிறார்கள்?
பூனைகளை
வெறுக்கும் அப்பாவும்,மகனும்;அதைப் பொருட்படுத்தாமல் பூனைக்கு அதிகச் செல்லம்
கொடுக்கும் அம்மா;பூனைகளைக் கொன்று விட்டு தூக்கமின்றிப் புலம்பித் திரியும்
அப்பாவின் மறைவு-மகன் தொடர்ந்து பூனைகளை விஷமென வெறுப்பது- என்ற கதை மற்றொரு மனித
விசித்திரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.
பல கதைகளில்,மனிதர் மனங்களின் அடியாழங்களில்
உறைந்து கிடக்கும் இரகசிய பாலியல் வேட்கைகளின் தீவிர வண்ணங்கள் நேர்த்தி மிக்க பின்னணித் திரைச்சீலைகளில் தீட்டிக்
காட்டப்பட்டிருக்கின்றன.வாழ்க்கையே பெரிய புனைவாக,அடர் வனமாகப் பேருருக் கொண்டு
நிற்கிறது.யதார்த்த வாழ்வின் இனிமைகளும்,கசப்புகளும்,கொடூரங்களும்,மகோன்னதங்களும்,
இயலாமைகளும்,பேராற்றல்களும் இன்னமும் புரிந்து கொள்ளப்படாமலேதான் இருக்கின்றன
என்று தோன்றுகிறது.அவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் மந்திரச் சாவிகளை ஒவ்வொரு
கதையிலும் உதயசங்கர் ஒளித்து வைத்திருக்கிறார்.யாரும் போகத் துணியாத பாதைகளில்
போய்த் தேடிப்பார்த்தால் அவை நமக்குக் கிடைக்கக்கூடும் என்றொரு நம்பிக்கை
எழுகிறது.
துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்
சிறுகதைத்தொகுப்பு
விலை – 200 ரூ
வெளியீடு – நூல்வனம்
எம்.22 ஆறாவது அவெனியூ,
அழகாபுரி நகர்,
ராமாபுரம்,
சென்னை – 89
தொடர்புக்கு - 9176549991
கமலாலயன்
ஓசூர்.
நன்றி - செம்மலர் அக்டோபர் 20
No comments:
Post a Comment