Friday 13 March 2015

ஆவிகளும் கடவுளும்

 

உதயசங்கர்

ghost-2

இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம், பூமி, மற்றும் கோள்களின் உள்ளடக்கம், அதன் இயக்கங்கள் குறித்தெல்லாம் நமது அறிவியலறிஞர்கள் தங்களது கண்டுபிடிப்புகளின் மூலம் மனித குலத்துக்குப் பெருமை சேர்க்கிறார்கள். ஆனாலும் இன்னமும் மனிதர்கள் சொர்க்க, நரகங்கள், மேலோகம், பூலோகம், முப்பத்தி முக்கோடி தேவர்கள், படைப்புக்கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன், பாவபுண்ணியம், எமதர்மன், எண்ணெய்க்கொப்பரை, சாட்டையடி, என்று கசாப்புக்கடை மாதிரி மனிதர்களை வதைக்கும் வதைக்கூடமாக நரகமும், ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நடனங்களை ரசித்துக்கொண்டே சொர்க்கத்தில் தேவர்களோடு தேவர்களாக இருந்து சோமபானத்தையும் சுராபானத்தையும் குடித்துக் கொண்டே பொழுது போக்கும் இடமாக சொர்க்கமும் இருப்பதாக, இவர்களே இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருப்பதாக இந்துக்களும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி,யின் பெயராலே மனிதப்பிறவியே பாவப்பிறவியென்றும், கடவுளின் சொல் கேளாத ஏவாளின் மோகத்தினால் சாத்தானின் கனி தின்று பாவஜென்மம் எடுத்திருப்பதாகவும், வாழ்நாள் முழுவதும் வருந்தி, துதித்து, பாவமன்னிப்பு கோரினால் மட்டுமே மேலோகம் செல்லும்போது அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு மோட்ச உலகத்துக்குள் போவதற்கான நுழைவுச்சீட்டு கிடைக்குமெனவும், உருவற்ற இறைவனின் ( பரிசுத்தஆவி ) இறைத்தூதர்களின் நெறிப்படியே வாழ்க்கையும் தொழுகையும் நடத்த வேண்டும். இல்லையெனில் மேலே போகும்போது கொடிய தண்டனைகளைப் பெற வேண்டியதிருக்கும். ஒருபுறம் இப்படி எல்லா நிறுவனவயமாக்கப்பட்ட மதங்களும், மனிதகுலத்தைப் பயமுறுத்தியே தங்களுடைய மதங்களை நிலை நிறுத்துகின்றன.

இன்னொரு புறத்தில் நிறுவனமயமாக்கப்படாத இளகிய சடங்கியல்முறைகள் கொண்ட நாட்டார் தெய்வங்களும் தங்களுடைய மக்களைத் தண்டிக்கவும், மன்னிக்கவும், அந்தத் தெய்வங்களின் மக்களும் அந்தத் தெய்வங்களைத் தண்டிக்கவும், மன்னிக்கவும் உரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எங்கே போனாலும் ஒரு பிடி மண்ணில் கூடவே அலைந்து திரிகிற எளிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தத் தெய்வங்களுக்கும் பிறப்பும் இறப்பும் உண்டு. இவர்களை நீண்ட நாள் கவனிக்கவில்லையென்றால் காணாமலும் போய்விடுவார்கள். இவர்கள் யாரும் மேலோகம், பாவம், புண்ணியம் என்று சொல்லி தங்களுடைய மக்களைப் பயமுறுத்துவதில்லை. அன்றாட வாழ்க்கையை அடியொற்றியே இவர்கள் வழிபடப்படுகிறார்கள். சரி. நிறுவனமயமோ, நிறுவனமயமில்லையோ இந்தக் கடவுளர்கள் / தெய்வங்கள் எப்படித்தோன்றினார்கள்?

முதன் முதலாக கைகளைப் பயன்படுத்தத் தொடங்கி குரங்கிலிருந்து மனிதனாக மாறிய ஆதிமனிதர்கள் மந்தைகளாகத் தான் வாழ்ந்தார்கள். அவர்கள் தங்களுடைய வேட்டை உழைப்புக்கருவிகளாகக் கைகளை மட்டுமே பயன்படுத்தினார்கள். பின்னர் இனக்குழுவாக மாறினர். தொடர்ந்த உழைப்பினால் ஏற்பட்ட படைப்பூக்கத்தினால், கல், கம்பு, போன்ற வேட்டைக் கருவிகளைப் பயன்படுத்தினர். குடியிருப்புகளை ஏற்படுத்தினர். ஆடைகள் நெய்யவும், கால்நடைகள் வளர்க்கவும், படகுகளில் சென்று மீன் பிடிக்கவும் தொடங்கினர். ஆதியில் கிடைத்த வெறும்கைகளின் சக்தியை விட அதிகமான பலனை இந்த முன்னேற்றங்களின் மூலம் பெற்றனர். ஆனால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இடி, மின்னல், மழை, புயல், நெருப்பு,நில அதிர்வு, பூகம்பம், போன்ற இயற்கை சக்திகளினால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டு பயந்தனர். அவற்றைப் புரிந்துகொள்ளவோ, அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவோ, அவர்களுக்குத் தெரியவில்லை.

தங்களைச் சுற்றியுள்ள மரம், செடிகொடிகள், விலங்குகள், பறவைகள், மலைகள், நதிகள், குட்டைகள், அதிலுள்ள மீன்கள், பகல், இரவு, வெளிச்சம், இருள் என்று எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவைகளின் இயக்கங்கள், தன்மைகள், தெரியவில்லை.

தாங்கள் வேட்டையாடிய விலங்குகள், தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்கள், பகலில் கண்ட, இடங்கள், நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம் இரவில் உறங்கும்போது கனவுகளில் வருவதைக் கண்டு பயந்தனர். இரவு பயங்கரமானதாக இருந்தது.

பிறப்பு, இறப்பு, உயிருள்ள உடல், இயங்கிக் கொண்டிருப்பதற்கான காரணமும் புரியவில்லை. அதே உயிருள்ள உடல் இறந்த பிறகு இயங்காமலிருப்பதன் காரணமும் புரியவில்லை. எது இயங்க வைத்தது? என்று குழம்பிப் போனார்கள்.

தூங்கும்போது இயங்கிக் கொண்டிருக்கும் உடலுக்கு என்ன ஆகிறது என்று புரியவில்லை. தூங்கி விழிக்கும்போது அதுவரை இயங்காமலிருந்த உடல் எப்படி இயங்கத் தொடங்குகிறது என்று புரியவில்லை. நோய்கள், மரணங்கள் எப்படி ஏற்படுகின்றன? ஏன் ஏற்படுகின்றன? என்று புரியவில்லை. இறந்தவர்களோ, உயிருள்ளவர்களோ கனவுகளில் எப்படித் தோன்றுகிறார்கள் என்று புரியவில்லை.

மொத்தத்தில் மனிதகுலம் பகுத்தறிவின் குழந்தைப்பருவத்தில் இருந்தது. அந்தக்குழந்தைப் பருவத்தில் பகுத்தறிவின் வளர்ச்சிக்கேற்ப மனிதகுலம் சில கற்பனையான எண்ணங்களை உருவாக்கியது. அந்தக் கற்பனையான எண்ணம் தான் இன்று வரை மனிதகுலத்தை ஆட்டிக் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதுதான் ஆவி அல்லது ஆன்மா ( soul ).

குழந்தைப்பருவத்திலிருந்த பகுத்தறிவு தன்னைச் சுற்றிலுமுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களில் ஒன்றோ பலவோ ஆவிகள் இருப்பதாக கற்பனை செய்தது. உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களில் உறைந்துள்ள ஆவியே தங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கவும் மாற்றவும் செய்கின்றன. இந்த ஆவிகள் உடலை விட்டு தனித்து இயங்கும் ஆற்றல் மிக்கவை. இந்த ஆவிகளில் நல்ல ஆவிகளும் உண்டு. கெட்ட ஆவிகளும் உண்டு. நல்ல ஆவிகள் நன்மை செய்யும். கெட்ட ஆவிகள் தீமைகள் செய்யும். என்று நினைத்தார்கள்.

அவர்களுடைய வாழ்வநுபவங்களின் வழியாக ஆவிகளின் குணங்களைக் குறித்து சில கருத்துக்களை உருவாக்கிக் கொண்டனர். இறந்த மற்றும் உயிரோடுள்ள மனிதர்கள், விலங்குகள் ஆவியை வழிபடுவதன் மூலம் நன்மையடையலாம். இயற்கையான பொருட்களில் உறைந்திருக்கும் ஆவியையும் வழிபடுவதன் மூலம் அந்தப் பொருட்கள், விலங்குகள், பறவைகள், தமக்கு நன்மை செய்யும் / அபரிமிதமான உற்பத்தியாகும் / தமக்கு அழிவை ஏற்படுத்தாது என்று நம்பினார்கள்.

இதிலிருந்தே இரண்டு விதமான வழிபாடுகள் புனித ஆவி வழிபாடு, குலக்குறி வழிபாடு. தோன்றின. புனித ஆவி வழிபாட்டில் தன் சக்திக்கு மீறிய புலனுக்கு அப்பாற்பட்ட இயற்கை சக்திகளை காற்று, நீர், தீ, விசும்பு, நிலம், போன்றவற்றை வழிபடுவதன் மூலம் இவற்றால் நன்மையடையலாம் என்று நினைத்தனர். குலக்குறி வழிபாட்டில் ஒவ்வொரு இனக்குழுவும் அவர்கள் வாழ்ந்த இடம், கிடைத்த உணவு, இயற்கைச் சூழலைப் பொறுத்து தங்களுக்கென்று ஒரு விலங்கு, செடி, கொடி, மரம், என்று தங்கள் அன்றாட வாழ்வியலோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இயற்கைப் பொருளை வழிபடுவதன் மூலம் தங்கள் அன்றாட வாழ்வின் தேவைகளை அந்த இயற்கைப்பொருட்களிலுள்ள ஆவிகள் நிறைவேற்றும் என்று நம்பினர். ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு குலக்குறி வழிபாட்டு முறையைக் கொண்டிருந்தது.

இந்த இரண்டுவிதமான வழிபாட்டு முறைகளையும் இன்றைய நிறுவனமயமாக்கப்பட்ட சமயமரபின் ஆதி விதையாக புனித வழிபாட்டையும், நிறுவனமயமாக்கப்படாத நாட்டார் சமய மரபின் ஆதி விதையாக குலக்குறி வழிபாட்டையும் சொல்லலாம்.

இந்த ஆவிகளின் நம்பிக்கையை இன்றளவும் நாம் நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கையிலும், கதைகளிலும் காணலாம். எப்படி என்று கேட்கிறீர்களா?

நம்முடைய புராண, இதிகாச, நாட்டுப்புறக்கதைகளில் ஒரு உடலிலுள்ள ஆவி கூடு விட்டு கூடு பாய்கிற கதைகளை நாம் கேட்டிருப்போம். இது புராதன மனிதகுலத்தின் நம்பிக்கையே. அப்போது மனிதர்கள் சில மந்திரப்பயிற்சிகளின் மூலம் தங்களுடைய ஆவியை உடலை விட்டு வெளியேற்றி இன்னொரு உடலுக்குள் செலுத்த முடியும் என்று ஆதியிலேயே நம்பினார்கள். அதுவே கூடு விட்டு கூடு பாய்தல் என்று சொல்லப்படுகிறது.

அதே போல ஆவி அல்லது ஆன்மாவை சொந்த உடலிலும் வெளியில் வேறு பொருளிலும் நிறுத்தி வைக்கலாம். அதாவது மந்திரவாதியினைக் கொல்ல வேண்டுமென்றால் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி இருக்கும் பெரிய ராட்சச ஆலமரத்திலுள்ள பொந்தில் உள்ள பச்சைக்கிளியின் வயிற்றிலுள்ள முட்டைக்குள் இருக்கும் அவனுடைய உயிர். அந்த முட்டையை உடைத்தால் மந்திரவாதி செத்துப்போவான். இளவரசியை மீட்டுக் கொண்டு வந்து விடலாம் என்று கதை கேட்டிருப்போம். அந்தக் கதையிலுள்ள ஆவி சொந்த உடலுக்குள்ளும் வேறு உயிரின் உடலுக்குள்ளும் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கையும் புராதன மனிதர்களின் நம்பிக்கையே.

குழந்தை கீழே விழுந்து விட்டாலோ, கதவு இடித்து விட்டாலோ, கல் தட்டி விட்டாலோ, பெரியவர்கள் குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக அந்தத் தரையையோ, கதவையோ, கல்லையோ, அடித்து “ எம்பிள்ளைய இடிக்கவா செய்ஞ்சே..” என்று சொல்வதைக் கேட்கலாம். அதே குழந்தைகள் உயிரற்ற பொருட்களை உயிருள்ள பொருளாக நினைத்து பேசுவது, கொஞ்சுவது, அடிப்பது போன்ற செயல்களும் உயிரற்ற பொருள்களிலும் ஆவி அல்லது ஆன்மா உறைந்திருக்கும் புராதன மனிதர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் செயல்களே.

இந்த ஆவிக்கோட்பாடு தான் பிற்காலத்தில் மனித உருக்கொண்டு கடவுளர்களாயினர். சமூகப்பரிணாம வளர்ச்சியில் புராதனச்சமுதாயம் அழிந்து இனக்குழு, சொத்துடமை, வர்க்கம், அரசு, தோன்றிய பிறகு இந்த கடவுளர்கள் வலிமை மிக்கவர்களானார்கள். வலிமை மிக்க கடவுளரைக் கைக்கொண்ட உயர்சாதியினர் நிறுவனமயமாக்கினர். சமூகப்படிநிலையில் கீழே இருந்த வர்க்கத்தினரின் கடவுளர்கள் நாட்டார் தெய்வங்களாயினர்.

ஆக மொத்தத்தில் கடவுள்கொள்கைக்குப் பின்னால் ஆவிகள் தான் ஒளிந்திருக்கின்றன. சமூகஅறிவியல் கண்ணோட்டம் மக்களிடம் செல்வாக்கு பெறும்போது கடவுள்கொள்கை மெல்ல மெல்ல மறையும். அதற்கான முயற்சிகள் இன்றையத் தேவை.

நன்றி-இளைஞர் முழக்கம்

No comments:

Post a Comment