Friday, 3 January 2025

கொசுவுக்கும் மூட்டைப்பூச்சிக்கும் ஏன் முதுகெலும்பு இல்லை?

 

கொசுவுக்கும் மூட்டைப்பூச்சிக்கும் ஏன் முதுகெலும்பு இல்லை?

உதயசங்கர்



மத்தியான நேரம். வெயில் சுள்ளென்று அடித்தது. வீட்டுக்கு வெளியே சாக்கடை நீர் ஓடாமல் கெட்டிக் கிடந்தது. அதில் அப்போது தான் முட்டையிலிருந்து பொரித்த கொசுக்குஞ்சு தன் சிறகுகளை விரித்துப் பறக்கத் தயாரானது. தலையை அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்தது. தன்னுடைய  ஊசியான வாயை முன் கால்களால் துடைத்தது. பிறகு ஜெட் மாதிரி அங்ஙொய்ங்… அங்ஙொய்ங்… என்று சிறகுகளை அடித்துக் கொண்டு வீட்டுக்குள் பறந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும் அதன் மூக்கு மனிதவாடையை முகர்ந்து விட்டது. உடனே அந்த இடத்தை நோக்கிப் பறந்தது. ஒரு மனித உருவம் இந்த  வெயிலிலும் போர்வையால் மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தது. எங்காவது இடம் கிடைக்குமா என்றுச் சுற்றிச் சுற்றி வந்தது. காலுக்கு அருகில் இத்தினியூண்டு இடம் கிடைத்தது. உடனே அந்தச் சந்து வழியே போய் கணுக்காலில் உட்கார்ந்தது. வாயில் எச்சிலைச் சுரந்தது. ஊசியை இறக்கியதும் வலி தெரியாமல் இருக்க வேண்டும் அல்லவா. ஊசி வாயினால் குத்துவதற்குத் தலையைக் குனிந்தது கொசுக்குஞ்சு.

அப்போது,

“ இது என் ஏரியா.. நீ எப்படி உள்ளே வந்தே? என்று ஒரு குரல் கேட்டது. யார்ரா அது? என்று திரும்பிப் பார்த்தது. அங்கே கணுக்கால் தோலில் ஒட்டிக் கொண்டு ஒரு சிறிய மூட்டைப் பூச்சி கண்களை உருட்டிக் கொண்டு நின்றது. நல்ல சிவப்பு அரக்கு நிறத்தில் மொத்தையாக இருந்தது அந்த மூட்டைப் பூச்சி.

“ ஏய் என்ன அதட்டுறே.. இடமா இல்லை.. நீஒரு பக்கமாச் சாப்பிடு.. நான் ஒரு பக்கமாக் குடிக்கிறேன்..

நாங்க பத்துக்கோடி வருசத்துக்கு முன்னாடியே பூமிக்கு வந்துட்டோம் தெரியுமா? “

என்று தலையைத் தூக்கிக் கொண்டு பேசியது மூட்டைப் பூச்சி.

“ ஹலோ.. நாங்களும் சும்மாயில்ல.. பனிரெண்டு கோடி வருசத்துக்கு முன்னாடியே வந்துட்டோம்.. “

என்று ஒரு காலைத்தூக்கி எச்சரித்தபடியே சொன்னது கொசுக்குஞ்சு.

“ அதுவும் அப்படியா.. நான் வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சா.. ஒரு வாரத்துக்குச் சாப்பிடாம இருப்பேன் தெரியுமா? “

“ நானும் தான் ஊசியை நுழைத்து ரத்தத்தை உறிஞ்சினால் பல நாள் எனக்குச் சாப்பாடு வேண்டாம்..

நான் பொந்து பொடவுக்குள்ள ஒளிஞ்சிக்குவேன்..

நானும் மூலை முடுக்கு சாக்கடை, ஓடாத தண்ணீர் எங்கே இருந்தாலும் அங்கே போயிருவேன்..

உனக்கு இறக்கை இருக்குன்னு பறக்கறியா.. நான் தோல்ல அலர்ஜி, அரிப்பு, சில நேரம் தடிப்பு, காய்ச்சல் எல்லாத்தையும் உண்டுபண்ணிருவேன்..

அடப்போடா சின்னப்பயலே என்னால நூற்றுக்கணக்கான நோய்களை உருவாக்கமுடியும்.. அத்தனை வைரஸ்களை என் எச்சிலில் சுமந்து கொண்டு ஒவ்வொருத்தருக்கும் பரப்பி விடுவேன்..

அடப்பாவி.. நீ தான் டெங்கு, சிக்கன் குனியா, நிபா, இப்படி வைரஸுகளைப் பரப்பி விடுதியா? “

அதைப் பாராட்டு என்று நினைத்துக் கொண்டே,

“ ஆமா நம்மை இயற்கை ஏன் படைக்கணும் இப்படி இரத்தக்காட்டேரியாக அலைய விடணும்..

என்று கேட்டது.

“ போடா முட்டாள்.. செடி கொடி தாவரங்கள், மிருகங்கள், இவற்றில் தான் நாம் வாழ்ந்து வந்தோம்.. ஆனால் மனிதன் தான் நமக்கு வசதியாக இருந்தான்.. நாம் இங்கே தங்கிட்டோம்..என்று அறிவாளி போல பேசியது மூட்டைப்பூச்சி.

“ நமக்கு மட்டும் மனிதனை மாதிரி முதுகெலும்பு இருந்தா எப்படியிருக்கும்.. கம்பீரமா அலையலாம்ல..

என்று சொல்லி முடிக்கும் முன்னால் ஓங்கி ஒரு அடி கொசுவின் மீதும் மூட்டைப் பூச்சி மீதும் விழுந்தது. உடனே அதுவரை குடித்திருந்த ரத்தம் சிதறியது.

சாகும்போதும் மூட்டைப்பூச்சி கேலி செய்தது,

“ போடா முட்டாளே எலும்பு இருந்தா ரொம்ப வலிக்கும்.. இப்படிப் பொசுக்குன்னு சாக முடியாது..

கொசுக்குஞ்சுக்கு அது கேட்டதா என்று தெரியவில்லை.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

Thursday, 2 January 2025

தங்கக்குயில்

 

தங்கக்குயில்

உதயசங்கர்



தினமும் காலையில் அந்தப் பாட்டு தான் சிங்கத்தை எழுப்பி விடும். இனிமையான பாட்டு. அப்படியே காற்றையே இசையாக மீட்டியது போன்ற குரல். காதுகளுக்குள் தேன் மாதிரி பாய்ந்து செல்லும் குரல். அந்தக் குரலைக் கேட்டுத் தான் அந்தக் தங்கக்காடே விழித்துக் கொள்ளும். எல்லா மிருகங்களும் பறவைகளும் அந்தக் குரலுக்காகக் காத்திருந்ததைப் போல அதைக் கேட்டபிறகு அவர்கள் குரல் கொடுப்பார்கள். ஆனால் யார் அந்தப் பாட்டைப் பாடுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதுவரை யாரும் பார்த்ததில்லை. குரலைக் கேட்பதோடு சரி.

சிங்கம் தன்னுடைய நண்பர்களிடம்,

“ யார் இவ்வளவு அழகாகப் பாடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவேண்டும்.. யாராவது சீக்கிரம் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்..என்று கேட்டுக் கொண்டது. உடனே காட்டில் எட்டு திசைகளிலும் செய்தி அறிவிக்கப்பட்டது.

இரண்டு நாட்களாயிற்று. மூன்று நாட்களாயிற்று. எந்தத் தகவலும் வரவில்லை. நான்காவது நாள் ஒரு காட்டு அணில் செய்தி கொண்டு வந்தது.

“ தலைவரே! அந்தப் பாடலை ஒரு அழகான பறவை பாடுகிறது.. அதைக் குயில் என்று சொல்கிறார்கள்.. “

உடனே சிங்கம்,

“ தங்க நிறத்தில் தானே இருக்கும் இப்படியான குரல் அப்படிப்பட்ட பறவைகளுக்குத் தான் இருக்கும்..என்று சொல்லி முடித்தது. அணிலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வெறுமனே தலையாட்டியது.

“ உடனே அந்தத் தங்கக்குயிலை இங்கே வரச்சொல்.. இங்கே தினமும் என் குகையில் இருந்து பாடட்டும்..

என்று முழங்கியது. காட்டு அணில்,

“ அப்படியே தலைவரே..என்று சொல்லி விட்டு ஓடி விட்டது. அதன் பிறகு அந்தப் பாடல் கேட்கவில்லை. சிங்கத்துக்குப் பாடலைக் கேட்காமல் உடல்நிலை சரியில்லை. காட்டில் எதுவுமே சரியாக நடக்கவில்லை.

ஒரு   வாரமாயிற்று. பத்து நாட்களானது. தங்கக்குயில் வரவில்லை. உடனே சிங்கம்,

“ காட்டில் உள்ள பறவைகள் எல்லாம் என் முன்னால் பாட வேண்டும்.. அந்தத் தங்கக்குயிலை நான் கண்டுபிடிக்க வேண்டும்.. “ என்று கர்ச்சனை செய்தது. உடனே எல்லாப்பறவைகளுக்கும் செய்தி போய் விட்டது.

மறுநாள் காலை எல்லாப்பறவைகளும் கூடின. ஆனால் முதலில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம், சாம்பல், ஆரஞ்சு, பிங்க், அரக்கு, என்று பளிச்சென்ற நிறமுடைய பறவைகளை மட்டும் வரிசையாக அனுப்பியது நரி.

குயிலைக் கடைசியாக நிற்க வைத்திருந்த்து நரி. பறவைகள் ஒவ்வொன்றாய் குகைக்குள்ளே போனது. போன பறவைகள் எல்லாம் தலையைக் குனிந்தபடியே வெளியே வந்தன. நரி,

“ எல்லாரும் போங்க..தலைவர் ரொம்ப டயர்டாயிட்டார்.. “ என்று விரட்டி விட்டது. குயிலும் திரும்பிப் பறப்பதற்குத் தயாரானது. அப்போது குகை வாசலுக்கு வந்த சிங்கம்,

“ ஏய் நில்லு.. “ என்று அழைத்தது. குயில் பயத்துடன் நின்றது. நரி குயிலின் கருப்பு நிறத்தைப் பார்த்து, தலைவரோ தங்கக்குயிலைத் தேடுகிறார்.. இதுவோ கன்னங்கரேரென்று இருக்கிறது என்று ஏளனமாகப் பார்த்தது.

“ எங்கே நீ பாடு..என்று சிங்கம் சொன்னது. குயில் தயங்கியது. பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நீண்ட குரலெடுத்தது.

அவ்வளவு தான்.

சிங்கம் வாய் பிளந்தவாறு நின்று விட்டது. நரி வாலை ஆட்டக்கூட மறந்து விட்டது. பறந்து போய்க் கொண்டிருந்த பறவைகள் அப்படியே வானில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன.

. சிங்கம் கேட்டதற்காகப் பாடவில்லை

குயில் பாடியது. அதே குரல். மனதை மயக்கும் இனிய குரல். தன்னுடைய கருப்பு நிறத்தை உருக்கிப் பாடியது. தனக்காகப் பாடியது. தன்னுடைய இணைக்காகப் பாடியது. தன்னை ஒதுக்கிய நரிக்காகப் பாடியது. தன்னுடைய சகோதரப்பறவைகளுக்காகப் பாடியது. இயற்கைக்காகப் பாடியது. எல்லாருக்காகவும் பாடியது. வாழ்வதற்குக் கிடைத்த வாய்ப்புக்காகப் பாடியது.

சிங்கத்துக்கு இப்போது எல்லாம் புரிந்தது.


நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

Wednesday, 1 January 2025

என் திறமை என் அழகு

 என் திறமை என் அழகு

உதயசங்கர்



அது பெரிய பெரிய மரங்கள் அடர்ந்திருக்கும் பறவைகளின் காடு. அங்கே எல்லாவிதமான பறவைகளும் இருந்தன. என்னென்ன பறவைகள் இருந்தன தெரியுமா?

காகம், குயில், மயில், மைனா, சிட்டுக்குருவி, பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தையல் சிட்டு, தவிட்டுக்குருவி, கானாங்கோழி, கின்னிக்கோழி, வான் கோழி, நாரை, பனங்காடை, காடை, கௌதாரி, மரங்கொத்தி, கொக்கு, நீர்க்கோழி, பருந்து, கழுகு, வல்லூறு, கருங்குருவி, ஆக்காட்டிக்குருவி, காட்டுப்புறா, மணிப்புறா, மரகதப்புறா,… இப்படி நிறையப் பறவைகள் அங்கே வசித்தன.

காலையிலும் மாலையிலும் ஒரே சத்தமாக இருக்கும். காலையில் இரை தேடிப் புறப்படும்போது ஒன்றுக்கொன்று பேசிக் கொள்ளும்.

ஏய்.. அருவிப்பக்கம் போகாதே.. அங்கே மனிதர்கள் நடமாட்டம் இருக்கு..

சொல்றதக் கேளு கண்ணு.. காட்டைத் தாண்டிப் போகதடா..

சூரியன் உதிக்கும் திசைப்பக்கம் போ.. நிறைய உணவு கிடைக்கும்

தெற்கே ஒரு நரி செத்துக்கிடக்கு.. போவோம் வாங்க சுத்தப்படுத்துவோம்..

கூட்டை விட்டு கீழே இறங்கக்கூடாது.. பாம்பு பிடிச்சிட்டுப் போயிரும்..

இன்னும் உனக்கு இறக்கை பெரிசாகட்டும்.. அதுக்குப் பிறகு கூட்டிட்டுப் போறேன்..

அந்தப் பெரிய மருதமரத்துக்கு உடம்பு சரியில்லையாம்.. என்ன மறுபடியும் அதோட தோல்ல பூச்சிகள் பெருகியிருக்கும்.. நீ போய் பார்த்து சுத்தப்படுத்திரு..

இப்படி பலவிதமான உரையாடல்கள் நடக்கும். அதே போல மாலையில் எல்லாரும் பல திசைகளிலிருந்தும் கூட்டுக்கும் கிளைகளுக்கும் வருவார்கள். அப்போதும் மற்ற காடுகளில் நடந்ததையும், ஊர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நடப்பதையும் பேசிக் கொள்வார்கள். புதிதாகப் பறக்கத் தொடங்கிய குஞ்சுகளுக்குப் பாடம் நடத்துவார்கள். அவர்களுடைய மொழியைச் சொல்லிக் கொடுப்பார்கள்.

இப்படி அந்தக் காடே கோலாகலமாக, கொண்டாட்டமாக இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை அவர்கள் ஆண்டுவிழா நடத்துவார்கள். அப்போது பறக்கும் போட்டி, ஓடும் போட்டி, தாவும் போட்டி, ஆடும் போட்டி, தின்னும் போட்டி, சுத்தம் செய்யும் போட்டி, பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, உதவும் போட்டி, அழகுப்போட்டி என்று நடத்துவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறுவார்கள்.

காகம் எல்லாப்போட்டிகளிலும் கலந்து கொள்ளும். ஆனால் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாது. ஆனாலும் விடாமல் முயற்சி செய்யும். மற்ற பறவைகள் எல்லாம் காகத்தை இளக்காரமாகப் பார்க்கும். கேலி செய்யும்.

அந்த ஆண்டு வேறு ஒரு காட்டிலிருந்து அன்றில் பறவையை நடுவராக அழைத்திருந்தார்கள். அன்றில் காகத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தது. சோர்ந்து போய் தாழ்வு மனப்பான்மையுடன் காகம் ஓரமாய் ஒதுங்கி நின்றது. வெற்றி பெற்ற பறவைகள் எல்லாம் ஆரவாரமாய் கூச்சல் போட்டன. ஒவ்வொரு பறவை வெற்றிக்கூச்சல் போடும் போதும் தலையைத் தூக்கிப் பார்க்கும் காகம். பின் மீண்டும் தலையைக் குனிந்து கொள்ளும்.

எல்லாப்போட்டிகளும் முடிந்தன. அப்போது அன்றில் கூவியது,

“ இதுவரை நடந்த போட்டிகள் சாதாரணமானவை.. இப்போது உங்களுக்கு ஒரு புதிய போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறேன்.. யார் அறிவாளி என்ற போட்டி தான். நீங்கள் என்ன தான் ஆடினாலும் பாடினாலும் ஓடினாலும் புத்திசாலியாக இல்லையென்றால் எந்த உபயோகமுமில்லை.. எனவே அறிவாளிப்போட்டியில் வெற்றி பெற்றவர் தான் இந்த ஆண்டு சேம்பியன்.. “

பறவைகள் முணுமுணுத்தன. ஆனாலும் ஏற்றுக் கொண்டன.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பறவையிடமும் ஒரு பழம் கொடுக்கப்பட்டது. பறவைகள் அந்தப் பழத்தை ஒளித்து வைக்க வேண்டும். பிறகு நாளை அந்தப் பழத்தை ஒளித்து வைத்த இடத்திலிருந்து எடுத்து வரவேண்டும். யார் முதலில் எடுத்து வருகிறார்களோ அவர்களே சேம்பியன்.

என்று முரசறைந்து சொல்லச்சொன்னது அன்றில். மறுநாள் எல்லாருக்கும் ஒரு அத்திப்பழம் கொடுக்கப்பட்டது. எல்லாரும் அத்திப்பழத்தை வாயில் கௌவிக்கொண்டு பறந்து சென்றன.

ஆனால் ஒரு பறவையாலும் ஒளித்து வைக்க முடியவில்லை. இல்லை தெரியவில்லை. அங்கங்கே போட்டு விட்டுப் போய் விட்டன. மறுநாள் பறவைகள் எல்லாம் தேடிப் பார்த்தன. ஒருவருக்கும் ஞாபகம் இல்லை. ஒவ்வொரு இடமாகத் தேடின. ம்ஹூம்..

மாலைவரை தேடிப்பார்த்து விட்டு போட்டி நடுவரிடம் சொல்வதற்காகத் திரும்பிச் சென்றன. அங்கே பார்த்தால் ஆச்சரியம். யாரை தாழ்வாக நினைத்தார்களோ அந்தக் காகம் தன் வாயில் அத்திப்பழத்துடன் நின்றது.

அப்போது அன்றில் சொன்னது.

“ பறவைகளே யாரையும் தாழ்வாகவோ, குறைவாகவோ நினைக்கக்கூடாது….எல்லாரிடமும் ஒரு திறமை இருக்கும். காகம் நம் அனைவரைக் காட்டிலும் அறிவாளி. அதனால் தான் காகத்தைப் பற்றி ஏராளமான கதைகளை மனிதர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்…இந்த ஆண்டு சேம்பியன் காகம் தான் என்று நான் அறிவிக்கிறேன்…”

எல்லாப்பறவைகளும், “ சேம்பியன் காகம் வாழ்க! “ என்று பறவைக்காடே அதிரும்படி கத்தின.

அந்தச் சத்தம் இங்கே வரை கேட்டதென்றால் பாருங்களேன்

நன்றி - மந்திரத்தொப்பி
வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்