Sunday, 9 March 2025

விலக்குதல் தீட்டு, தீண்டாமை, …… வீட்டிலும் நாட்டிலும்

 

விலக்குதல் தீட்டு, தீண்டாமை, …… வீட்டிலும் நாட்டிலும்

உதயசங்கர்



    உங்களுக்குத் தெரியுமா? தீண்டாமை ஒரு கொடிய பாவச்செயல் என்று சிறுவயதில் பள்ளிக்கூடப் பாடப்புத்தகம் தொடங்கி அனைத்து அரசியல்வாதிகளும் பேசுகிறார்கள். அதை எல்லாம் அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் கேட்கிறார்கள். வாசிக்கிறார்கள். ஆனாலும் தீண்டாமைக்கு அடிப்படையாக இருக்கும் சாதிப்பிரிவினையை ஒழிக்க முடியவில்லை. என்ன வாசித்தாலும் பேசினாலும் அன்றாட வாழ்க்கையில் நாம் தீண்டாமையை வீட்டில், வெளியில், ஏன் நமது உடலில் கூடக் கடைப்பிடிக்கிறோம்.

 எப்படி தெரியுமா?

       விலக்குதல் அல்லது தீண்டாமை என்பது நாம் தொடக்கூடாது அல்லது. நம்மைத் தொடக்கூடாது. அதாவது விலக்கி வைத்தல், அல்லது தூரமாக வைத்தல் என்று அர்த்தத்தில் தான் நடைமுறையில் இருக்கிறது. கொரோனா காலத்தில் நாம் யாரும் யாரையும் தொடாமலும் தூரமாகவும் இருந்தோம். அப்போது அது தீண்டாமை என்றோ விலக்கி வைத்து விட்டார்கள் என்றோ யாரும் சொல்லவில்லை இல்லையா? ஏனெனில் கொரோனா சமூகத்தில் ஏழை, பணக்காரன், விவசாயி, தொழிலாளி, நல்லவன், கெட்டவன், ஆண், பெண், குழந்தை, எந்த வேறுபாடும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவிய தொற்றுநோய். அந்த நோயைப் பொறுத்தவரை அப்படி தொடாமலும் தூரமாகவும் இருந்தால் மட்டும் தான் நாம் உயிரோடு இருக்கமுடியும் என்பதை சமூகம் உணர்ந்து கொண்டது. அந்த அறிவியல் உண்மையைக் கடைப்பிடித்தது.

அதே போல விலக்குதலை மிகச் சாதாரணமாக,  எனக்குக் கத்தரிக்காய் பிடிக்காது, எனக்கு முட்டை பிடிக்காது, கோழிக்கறி பிடிக்காது, சாப்பிட்டால் ஒவ்வாமை வந்து விடும். உடல் நலம் கெட்டுவிடும். அவரைப் பிடிக்காது, இவரைப்பிடிக்காது. பச்சை நிறம் பிடிக்காது. என்று பொதுவாக விலக்கி வைக்கிறோம். சில சமயங்களில் இது தற்காலிகமான நடைமுறையாகவும் இருக்கிறது. அதாவது நோய்க்கு வைத்தியம் பார்க்கும்போது உணவுப்பத்தியம் இருக்கச் சொல்வார்கள் மருத்துவர்கள். நோய் குணமாகும்வரை இதை இதைச் சாப்பிடாதீர்கள். இதை இதைச் சாப்பிடுங்கள் என்று. அது அவசியமானதாக இருக்கும். இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இத்தகைய விலக்குதல் சமூகத்தில் வரும்போது, ஊர் விலக்கம், சாதி விலக்கம், வீட்டு விலக்கம் என்று மாறுகிறது... அதே போல சாதி விலக்கம், ஊர் விலக்கம், வீட்டு விலக்கம் இவை எல்லாம் ஒரு ஊர் அல்லது சாதி அல்லது மதத்தின் எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்றாததற்கான தண்டனையாக அந்த ஊர் அல்லது சாதி அல்லது மதத்தின் அதிகாரச் சமூகம் எடுக்கிற முடிவுப்படி ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அந்த ஊர் அல்லது சாதி அல்லது மதத்திலிருந்து விலக்கப்படும். ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் விலக்கப்பட்ட அந்தத் தனிநபர் அல்லது குடும்பம் மீண்டும் அந்த ஊர் அல்லது சாதி அல்லது மதத்தில் மீண்டும் சேருவதற்குப் பரிகாரம் உண்டு.

அந்த ஊர் அல்லது சாதி அல்லது மதத்தின் அதிகாரச்சமூகமே பரிகாரத்தைச் சொல்லிவிடும். பரிகாரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதே மாதிரி தான் ஊர் விலக்கமும், வீட்டு விலக்கமும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் விலக்குதலுக்கு பரிகாரம் இருக்கிறது என்பதும் அதைச் செய்தால் மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான். விலக்குதல். விலக்கம் என்பது சேர்த்தலையும் இணைத்தபடியே தான் வருகிறது.

இதையும் தீண்டாமை என்று சொல்லலாம். ஆனால் அது தற்காலிகமானது என்பது மட்டுமல்ல அதில் தீண்டுதலுக்கான நடைமுறையும் இருக்கிறது. இத்தகைய நடைமுறைகள் நம்முடைய சட்டங்களின் படியோ, நீதிமன்ற தீர்ப்புகள் வழியாகவோ நடப்பதில்லை. கட்டப்பஞ்சாயத்து என்ற நடைமுறையின் வழியாக நடக்கின்றன. இதை  மக்களும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதனால் தான் சாதாரண மக்களே,

“ அதுக்காக நம்ம பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சம்பிரதாயத்தை விட்டுர முடியுமா?”

என்று சொல்வதைப் பார்க்க முடிகிறது. இதற்குள் ஒளிந்திருக்கும் தீண்டாமையின் தற்காலிக வடிவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விலக்குதல், தீட்டு, தீண்டாமை, என்ற வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்க ஒரே அர்த்தமுள்ளவை போலத் தோன்றினாலும் அடிப்படையில் ஆழமான வேறுபாடுகளைக் கொண்டவை. பெரும்பாலும் தங்களுடைய தொடர்பெல்லைக்கு வெளியே நிறுத்துதல் என்ற அளவில் இந்த மூன்று செயல்களும் ஒரே மாதிரியான அர்த்தம் தருவதாகக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்வாதாரமான உடல், உணவு, உடை, உறைவிடம், தான். ஆனால் விலக்குதலும், தீட்டும், தற்காலிகமானவை. நடைமுறையில் எல்லோர் வாழ்விலும் இந்தத் தீட்டும், விலக்குதலும், அவர்களுடைய வாழ்வனுபங்களூடாக நடக்கின்றன. தலித்துகள் உட்பட எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.

அடுத்ததாக தீட்டு என்ற சொல்லப்படுகிற நடைமுறை.

“ தீட்டுக் கழியாம எங்கேயும் போகக் கூடாது..”

“ அதைத் தொடாதே.. தீட்டாயிரும்..”

என்று சொல்வதை எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது.

மனிதனின் பிறப்பு, இறப்பு, பூப்படைதல், பெண்களின் மாதவிடாய் நாட்கள், போன்றவற்றை தீட்டாக கற்பித்து வந்திருக்கிறார்கள்.

குழந்தை பிறந்த வீடென்றால் பதினாறு நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் வீட்டோடு சேர்க்க ‘ வீடு சேர்த்தல் ‘ என்ற சடங்கை நிகழ்த்துகிறார்கள். அன்றிலிருந்து வீட்டுக்குள் தாயும் குழந்தையும் சேர்க்கப்பட்டு அன்றாட நடைமுறை வாழ்வில் இணைகிறார்கள். அவர்கள் இப்போது வெளியே வரலாம். எல்லோருடனும் கலந்து பழகலாம். அது வரை அவர்கள் தீட்டானவர்கள். தீண்டத்தகாதவர்கள். ஆக பிள்ளை பிறந்தவீட்டுத் தீட்டு ஒரு சடங்கின் ( பரிகாரம் ) மூலம் கழிக்கப்படுகிறது.

பெண் பூப்படைதலும் தீட்டு. அவளைத் தனியே வீட்டு முற்றத்திலோ, தனிக்குடிலிலோ, வெளியுலகிலிருந்து விலக்கி வைப்பது நடக்கிறது. தலைக்குத் தண்ணீர் ஊற்றினாலும், புண்ணியார்த்தனம் என்ற சடங்கை ( பரிகாரம் ) ஒரு பிராமணர் வந்து செய்த பிறகே அந்தத் தீட்டு கழிகிறது. தீட்டுக் கழிந்த பின்னே அந்தப்பெண் வெளியுலகோடு கலந்து பழகலாம். அது வரை இருந்த தற்காலிகத் தீண்டாமை மாறி தீண்டுதலுக்கான நடைமுறை வந்து விடுகிறது. அதன் பிறகும் பெண்களைப் பொறுத்தவரை அந்தத் தற்காலிகத்தீண்டாமை ஒவ்வொரு மாதமும் தொடர்கிறது என்பது பெரிய கொடுமை.. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் பெண் தனிமைப்படுத்தப் படுவதும், மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ கழிந்து அவள் குளித்தபிறகு தான் வீட்டுக்குள் மற்ற பொருட்களைத் தீண்ட அநுமதிக்கப்படுவாள். அது வரை அவளுக்குத் தனித் தட்டு, தம்ளர், படுக்கை, உடை, உறைவிடம். வயதாகி மாதவிடாய் நிற்கும்வரை அந்தப் பெண் இந்தத் தற்காலிகத் தீண்டாமையிலிருந்து தப்பமுடியாது. ( இப்போது நகரங்களில் நவீன வாழ்வின் பல காரணங்களால் இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது ) இங்கேயும் தீண்டாமை தற்காலிகமானது. தீண்டப்படுவதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது.

இறப்பு வீட்டிலும் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை அந்த வீடும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களும் தீட்டாகவேக் கருதப்படுகிறார்கள். கருமாதி விஷேசம் ( பரிகாரம்) முடிந்ததும் அந்த வீடும், வீட்டிலுள்ளவர்களும் தீட்டுக் கழிந்தவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மற்றவர்களைத் தீண்டுவதோ மற்றவர்கள் அவர்களைத் தீண்டுவதோ தீட்டாகாது. இதுவும் தற்காலிகமான தீண்டாமை தான்.

மேலே குறிப்பிட்ட தீட்டு குறித்த நிகழ்வுகளில் பொருட்களை, தீட்டு கழியுமுன்பே தீண்டிவிட்டால் தீண்டியவர் தன்னுடைய உடலைக் கழுவிச்( குளித்து) சுத்தம் செய்வதன் மூலம் உடனே அந்தத் தீட்டைக் கழித்து விடலாம். தீட்டினால் விலக்கப்பட்டவர்கள் தான் தீட்டு கழிவதற்காகக் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சடங்கு நடத்திய பிறகு குளித்து மற்றவர்களைத் தீண்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு சடங்கு தேவையில்லை. தீட்டுக்காரரைத் தொட்டவர் குளித்தால் தீட்டு கழிந்து விடும்.

. தீட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வீட்டுக்காரர்கள் சில நாட்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் சிறிது நேரத்துக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்து உடனே குளித்து தன் தீண்டாமையைப் போக்கிக் கொள்ளலாம்.

இப்படிச் சில நாட்கள், சிறிது நேரம் தீண்டத் தகாதவர்களாக, மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டவர்கள், , சில வைதீகச் சடங்குகளைச் செய்வதன் மூலம் மீண்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுகிறார்கள். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பிறப்பு, சாவு, பூப்படைதல், மாதவிடாய் காலம், என்று மாறி மாறி தற்காலிகமாகத் தீண்டத்தகாதவர்களாகவும், பரிகாரங்களுக்குப்பின் தீண்டத்தக்கவர்களாகவும் நிலை மாறிக் கொண்டேயிருக்க வைப்பதன் மூலம் பார்ப்பனியம் தீண்டாமை என்ற வருணாசிரம தர்மத்தின் இழிவான நடைமுறையை எல்லோரையும் பின்பற்ற வைத்துள்ளது.  அதாவது தீட்டு நிகழ்வு நடந்த வீடும் மனிதர்களும் அசுத்தமானவர்கள். எனவே அவர்களைத் தொடக்கூடாது. தொட்டால் சுத்தப்படுத்திக் கொள்ள குளிக்க வேண்டும். சுத்தம் அசுத்தம் என்ற அடிப்படையிலேயே தீட்டு பார்க்கப்படுகிறது.

நிரந்தரமாக அசுத்தமான வேலைகளைப் பார்க்கும் மனிதர்களை நிரந்தரமாகத் தீட்டானவர்கள். எனவே அவர்களைத் தீண்டுதல் பாவம் என்று பார்ப்பனியம் மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறது. அதை சடங்குகள் மூலம் நம்மையே செய்ய வைக்கிறது. சரி தான் என்று ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது

அனைத்து உடல் உழைப்புகளையும் அசுத்தமான வேலைகளாக, தீட்டாக, தீண்டத்தகாததாக மனுதர்மத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

இது தான் தீண்டாமையின் உளவியல் என்று சொல்லலாம்.

ஒரே நேரத்தில் வர்க்கமுரண்பாடும், தீண்டாமையும் சாதியப்படிநிலையின் தத்துவார்த்தமாக செயல் படுகிறது. ஆனால் வர்க்க முரண்பாடு அதன் உடலாக இருக்கிறதென்றால் தீண்டாமை அதன் உயிராக இருக்கிறது.  அதனால் தான் சமூகத்தின் படிநிலையில் ஒவ்வொரு சாதியும் வர்ணமும் மற்ற சாதிகளைத் தீண்டத் தகாதவர்களாகவே கருதுகிறார்கள்.

. தன்னை சமூகத்தில் உயர்ந்தவராகக் காண்பித்துக் கொள்ள, மற்றவர்களுக்கும் தனக்கும் இடைவெளியை ஏற்படுத்த பார்ப்பனியம் தீண்டாமை என்ற தத்துவத்தை உருவாக்கியது. அதை தீட்டு, சடங்குகளின் மூலம் நடைமுறைப்படுத்தியது. அதற்காகவே மனுதர்மம் எழுதப்பட்டது. அதில் சாதியப்படி நிலைகளையும், தீண்டாமையையும் உறுதிப்படுத்தியது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடும்  சட்டவிதிகளும் தண்டனை முறைகளும் எழுதப்பட்டன. அவற்றை அரசு அதிகாரத்தின் வழியாகவும், புராண இதிகாச, புனைகதைகள் வழியாகவும் மக்கள் மனதில் நிலைநிறுத்தியது..

அது மட்டுமல்ல தங்களுக்கு மேல் எத்தனை பேர் இருந்தாலும் கவலையில்லை. ஆனால் தங்களுக்குக் கீழ் ஒருவராவது இருக்கவேண்டுமென்கிற ஆதிக்கமனநிலையையும் மக்களிடம் பரப்பியது.  இதன் விளைவு சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம், என்ற பார்ப்பனியத் தந்திரங்களை பண்பாடு என்று புரிந்து கொண்டு பண்பாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில் மீண்டும் பார்ப்பனியத்தை அரியணையில் ஏற்றுகிற, தீண்டாமையைக் காப்பாற்றுகிற காரியத்தை உழைப்பாளி மக்களும் சேர்ந்து செய்கிற அவலம் கண்கூடாகத் தெரிகிறது.

நடைமுறையில் எல்லாசாதியினரும் தங்கள் வாழ்நாளில் சில காலம் தீட்டினால் தீண்டத் தகாதவர்களாக இருப்பதனால் தீண்டாமை என்ற கருத்தியலை இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கு இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம், தீட்டு எல்லாம் பயன்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களுக்கு எதிராக சமரசமில்லாத யுத்தம் தொடுக்க வேண்டிய கடமை எல்லாருக்கும் இருக்கிறது.

அறிவியல் பூர்வமான சனநாயக, பண்பாட்டு நடைமுறைகளை உருவாக்கவும் அதை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லவும் வேண்டும். 

நன்றி - அணையாவெண்மணி காலாண்டிதழ்  

 

மனிதனின் இயல்பு

 

மனிதனின் இயல்பு

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்

சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியின் கிராமத்தில் ஆல்பெர்ட் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். ஆல்பெர்ட்டுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். ஞாயிறு தோறும் குடும்பத்தோடு சர்ச்சுக்கு போகும்போது நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சர்ச்சின் முற்றம் வரை போகும்.

ஒரு நாள் ஆல்பெர்ட் ஓடி வந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு மலைப்பாம்பும் விரட்டிக் கொண்டு வந்தது. மலைப்பாம்பைப் பார்த்தவுடன் சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் பாய்ந்து கதைப்பாட்டியின் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்கள். நய்க்குட்டியின் வாலில் தொங்கியபடி பூனைக்குட்டியும் ஓடியது.

நாய்க்குட்டி,

“ க்க்க்க்ர்ர்ர்ர் “ என்று உறுமியது. கதைப்பாட்டிக்குப் பயந்து பெரிய சண்டை எதுவும் வரவில்லை. ஆல்பெர்ட் சொன்னான்,

“ கிராமத்து மக்கள் தீ வைத்துக் கொளுத்திய போது, பாம்பைக் காப்பாற்றியது நான் தான் கதைப்பாட்டி.. இப்போது இது என்னையே விழுங்க வருகிறது... இது சரிதானா? சொல்லுங்கள்..”

மலைப்பாம்பு சொன்னது,

“ பசித்ததனால் தான் கதைப்பாட்டி.. வயதான காலத்தில் கவலைப்பட வேண்டாம்.. இந்த ஆலமரத்திடமும், அந்த ஆற்றிடமும், கல்யாணிப்பசுவிடமும் கேட்டால் போதும்.. மனிதர்கள் மனிதர்களுக்குச் சாதகமாகவே சொல்வார்கள்.. அதனால் கதைப்பாட்டி நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம்..”

ஆல்பெர்ட் ஆலமரத்திடம் கேட்டான். கம்பீரமான காற்றின் சத்தத்தில் ஆலமரம் தீர்ப்பு சொன்னது,

“ மனிதன் தானே. அப்படித்தான் செய்வான்.. மனிதனை விழுங்கினால் போதாது.. கடித்து சவைத்து சாப்பிட வேண்டும்.. சோர்வைப் போக்கும் நிழல் தரும் மரத்தையே வெட்டி எறிகிற கெட்டவன்..”

 கல்யாணிப்பசு மேய்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்தபடி தலையைக்கூட உயர்த்திப் பார்க்காமல் சொன்னது,

“ பாலையெல்லாம் ஒட்டக்கறந்து அதில் தண்ணீர் கலந்து விற்கிறவர்கள் மனிதர்கள்.. விழுங்கிவிடு.. மனித வர்க்கத்தை அப்படியே விழுங்கணும்.. தெரிஞ்சுதா? “

ஆற்றிடம் கேட்டபோது, ஆறு மகிழ்ச்சியுடன் கடகடவெனச் சிரித்து,

“ தாகத்துக்குக் குடிக்கும் தண்ணீரில் அத்தனை குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி மோசமாக்குவது மனிதர்கள் தான்.. நன்றியில்லாதவர்கள்.. விழுங்கிவிடு.. பாம்பே..”

என்று சொன்னது.

அப்போதுஆல்பெர்ட்டின் மனைவி கதறி அழுது கொண்டே ஓடி வந்தார். அவர் பாம்பிடம்,

“ கணவரில்லாமல் நான் எப்படி வாழமுடியும்? என்னை முதலில் விழுங்கி விடு..”

என்று சொன்னார்.

பாம்புக்குப் பரிதாபம் தோன்றியது. என்ன ஆனாலும் பெண்ணல்லவா? பாவம். பாம்பு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தது. அதைச் சொல்லி ஒரு துளி மண்ணை வாரிப்போட்டால் யாராக இருந்தாலும் இறந்து விடுவார்கள். இரண்டாவது மந்திரத்தைச் சொல்லி மண்ணைப் போட்டால் அவர்கள் உயிர் பெற்று விடுவார்கள்.

ஆல்பெர்ட்டின் மனைவி மந்திரம் சொல்லி மண்ணையள்ளி பாம்பின் மீது போட்டார்.

 பாம்பு செத்துப் போய் விட்டது.

கதைப்பாட்டி இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் மூக்கில் விரலை வைத்தபடி அப்படியே இருந்தார்.

 நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

 

Saturday, 8 March 2025

கசுமலா காக்காவின் கவலை


கசுமலா காக்காவின் கவலை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



    ஒரு நாள் உச்சிவேளையில் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் மண்ணைக் குழைத்து அப்பம் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கசுமலா காக்கா ஆலமரத்தின் கிளையில் வந்து உட்கார்ந்து,

“ கா கா கா கா கா கா..” என்று கரைந்தது..

      கதைப்பாட்டி காக்கா கவலையோடு கரைவதைக் கவனித்தார். கதைப்பாட்டி எழுந்து எழுந்து சென்று,

“ என்ன கசுமலா.. உனக்கு என்ன கவலை? “ என்று கேட்டார். காக்காவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைப் பார்த்த நாய்க்குட்டியும், சின்னுவும், பூனைக்குட்டியும் விளையாட்டை நிறுத்திவிட்டு கதைப்பாட்டியின் அருகில் சென்றார்கள்.

கசுமலா காக்கா தாழப்பறந்தபடியே,

“ கா கா கா கா கா “ என்று கூப்பாடு போட்டபடி கதைப்பாட்டியைச் சுற்றிச் சுற்றி சிறகுகளடித்து பறந்தது.

கதைப்பாட்டிக்கு பறவைகள் விலங்குகள் பேசுகிற மொழி தெரியும். நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் சின்னுவும் ஒரே குரலில்,

“ ஏன் காக்கா இப்படி கரையுது கதைப்பாட்டி..” என்று கேட்டார்கள்.

“ கசுமலா காக்காவின் முட்டைகளை ஒரு நல்லபாம்பு முட்டைகளைத் தின்று விட்டுப் போய் விட்டதாம்..”

“ அட..பாவமே! “ என்று சின்னு சொன்னாள்.

“ ஐய்யய்யோ..” என்று நாய்க்குட்டியும் சொன்னது.

அப்போது கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம் சொன்னார்,

“ நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன்.. அமைதியாக இரு..” என்று சொல்லி விட்டு சின்னுவின் கழுத்திலிருந்து தங்கச்சங்கிலியைக் கழற்றி பாம்பின் புற்றில் போடுமாறு கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம் சொன்னாள்.

கசுமலா காக்கா அதைச் செய்தது. சின்னுவிடம் வீட்டுக்கு ஓடிப்போய் விவரம் சொல்லச் சொன்னார் கதைப்பாட்டி. தங்கச்சங்கிலியைக் கழற்றி விளையாடும்போது காக்கா கொத்திக் கொண்டு போய் விட்டது என்று சின்னுவும் வீட்டில் சொன்னாள்.

தங்கச்சங்கிலியைத் தேடி வந்த சின்னுவின் வீட்டுக்காரர்கள் அந்த நல்லபாம்பை அடித்துக் கொன்று விட்டார்கள்.

கசுமலா காக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பறந்து வந்து கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.

இப்போதும் கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு கரும்புள்ளி இருக்கிறது... பாருங்கள்!

நன்றி - புக் டே 



 


Friday, 7 March 2025

புதிய வானம்! புதிய பறவைகள்!

 

புதிய வானம்! புதிய பறவைகள்!

உதயசங்கர்



நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் ஒரு புதிய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் நுழைந்திருக்கிறது. சிறார் இலக்கியத்தின் வகைமைகளான பெரியவர்கள் சிறார்களுக்காக எழுதுகிற இலக்கியம், சிறார்களே சிறார்களுக்காக எழுதுகிற இலக்கியம், சிறார்களை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதுகிற இலக்கியம் என்று பொதுவாகப் பிரிக்கலாம். அதில் குழந்தைகளே குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியிருக்கும் மிகச் சிறப்பான காலமிது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. குழந்தைகள் ஒரு புதிய வானத்தை வரைந்து புதிய சிறகுகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சமூகம் உச்சி முகர்ந்து நம்முடைய குழந்தைகளைப் பாராட்ட வேண்டும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை குழந்தைகளுக்கென்று முகிழ் என்ற அமைப்பை உருவாக்கி அதில் தொடர்ந்து பல வருடங்களாக குழந்தைகளே பங்கு பெறும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குழந்தைகள் இப்போது ஜில் ஜங் ஜக் என்ற கதைத்தொகுப்புடன் தங்கள் சிறகுகளை விரித்திருக்கிறார்கள்.

குழந்தைகளின் கற்பனைக்கு நம்முடைய நடைமுறை வாழ்வின் தர்க்கம் கிடையாது. கவித்துவத்தர்க்கம் மட்டுமே உண்டு. கவித்துவத் தர்க்கமென்றால் மண்ணும் மரமும் டி வி. யும் பிரிட்ஜும் நாயும் நரியும் குருவியும் கோழியும் பேசும். பாடும். ஆடும். ஓடும். காரணகாரியம் கிடையாது. கதை எப்போது தொடங்கி எப்போது முடியுமென்று யாருக்கும் தெரியாது. எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். எங்கு வேண்டுமானாலும் முடியலாம்.

 சுயமான கருத்துகளோ சிந்தனைகளோ உருவாகாத குழந்தைப்பருவத்தில் அவர்கள் எப்படி கதை எழுதுவார்கள்? பெரியவர்கள் எழுதுவதைப் போல ஒரு கருத்தை வலியுறுத்தியா? அறநெறியைச் சொல்லியா? நீதி நன்னெறிக்கதைகளையா? அவர்கள் வாசித்ததை, கண்டதை, கேட்டதை, கற்பனையை, அந்தக் கணநேரத்தில் தோன்றுவதைக் கதையாக்குகிறார்கள். கதை என்று கூட அவர்களுக்குத் தெரியாது. உண்மையில் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அப்படி வெளிப்படுத்தும் போது மகிழ்ச்சியடைகிறார்கள். அந்த மகிழ்ச்சி தான் அவர்களுடைய கலையின் சாராம்சம். அதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் கதைகளுக்குள் கருத்தைத் திணிக்கவோ தேடவோ கூடாது. ஆனால் நுட்பமாக வாசிப்பவர்களுக்கு குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் யதார்த்த உலகத்தைத் தங்கள் கதைகளில் பிரதிபலிப்பதைக் கண்டுணர முடியும்.

அப்படித்தான் ” ஜில் ஜங் ஜக் “ தொகுப்பிலுள்ள 22 கதைகளிலும் குழந்தைகலின் தங்களுடைய படைப்பூக்கத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு கதையும் சுதந்திரமான அவர்களுடைய புனைவுத்திறனின் தெறிப்புகளாக மின்னுகின்றன.

இளநிலாவின் மரப்பாச்சி கதையில் பகையை மன்னிக்கச் சொல்லும் மரப்பாச்சிப்பொம்மை வருகிறது. பட்டாசு வெடிக்காத தீபாவளியைக் கொண்டாடச் சொல்கிறார் தன்னுடைய கதையான ராமு கொண்டாடிய தீபாவளி கதையில் தீரன். ஜடை பறக்குமா? பறக்குமென்கிறார் சுபவர்ஷனி. அதே போல சிவப்புக்கரடி பொம்மை பேசும்போது என்ன நடக்கிறதென்றும் சொல்கிறார் சுபவர்ஷனி.

குட்டைநிலா, பந்தாடு, பந்தாடு. சமையலறையில் மாயப்பெட்டி, தொட்டால் சிவக்கும் என்று நான்கு கதைகளையும் நான்குவிதமாக எழுதிப்பார்த்திருக்கிறார் பிரணவ். நிவேதிதாவின் நண்பர்களான சிட்டுக்குருவியும் எழிலும் கதை நட்பைச் சொல்கிறது. அபியும் புலியும் கதையில் அபி புலியிடமிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்றும் ஒரு மரம் ஒரு நபர் கதையில் மரத்தின் முக்கியத்துவதை எளிய நிகழ்வின் வழியே சொல்கிறார் அக்‌ஷலீணா.

பூங்காவில் நிலா என்றவுடன் நாம் நினைப்பதற்கு மாறாக யார் அந்த நிலா என்று சொல்கிறார் ரித்விக். அத்துடன் உண்டிகோல் சிறுவன் கதையில் எல்லாவற்றையும் பகிர்ந்து சாப்பிட வேண்டுமென்றும் சொல்கிறார் ரித்விக். விங்குகளைக் காப்பாற்றும் சகோதரர்களைப் பற்றி குணதீப் எழுதுகிறார். ஜில் ஜங் ஜக் கதையில் மூன்று நண்பர்களைப்பற்றியும் எதையும் செய்யாமல் சாப்பிடுவதற்கு ஆசைப்படும் நண்பனைப் பற்றியும் சொல்கிறார் கீர்த்தனா. வானவில்லின் கதையில் எப்படி வானவில்லுக்கு இத்தனை நிறங்கள் ஒன்றாய் சேர்ந்தன என்று சொல்லும் கீர்த்தனா. டியானும் கியானும் கதையில் அவர்களுடைய நண்பனான பூபாவின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடினார்கள் என்றும் எழுதியிருக்கிறார். யானைக்குச் சர்ப்ரைஸ் பார்ட்டி கதையில் நண்பர்கள் சேர்ந்து எப்படி யானைக்குச் சர்ப்ரைஸ் கொடுத்தார்களென்றும் உருளைக்கிழங்கும் முருங்கைக்காயும் கதையில் காய்கறிகள் மட்டுமே வாழும் உலகத்தைப் பற்ரியும் எழுதியிருக்கிறார் கீர்த்தனா. சாய் பாக்கியவாவின் சிறு காட்டு நண்பர்கள் கதையில், யானையின் அட்டகாசத்தை சிறுவிலங்குகள் எப்படி அடக்குகின்றன என்று எழுதியிருக்கிறார். ரோஸ் டீ கதையில் அனு எப்படி ரோஸ் டீ போட்டாள் என்றும் டீக்கடையே வைத்து நடத்துமளவுக்கு எப்படி மாற்றம் நிகழ்ந்ததென்றும் சொல்கிறார்.

எல்லாக்கதைகளிலும் உள்ள மிக முக்கியமான அம்சமாகக் கருதுவது, குழந்தைமையின் கற்பனை சிறகுகள் விரித்து ஒரு புதிய இதுவரை யாரும் யோசித்திராத ஒரு உலகத்தை நமக்குக் காட்டுகின்றன. அந்த உலகத்தைக் கண்டு களிப்பதும் முக்கியம். அதை விட முக்கியம் குழந்தைகளின் படைப்பூக்கத்தின் உயிர்த்துடிப்புகளை உணர்வது என்று நினைக்கிறேன். இந்தக் கதைகள் குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் நம்முடைய அறிவை இன்னும் விரிவடையச் செய்து மேலும் உயர்வாக்கும் என்று நம்புகிறேன்.

. கதைகளை எழுதியுள்ள அத்தனை குழந்தைகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

கதைகளுக்கு மிகச்சிறப்பாகப் படங்களை வரைந்திருக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்!

புதிய வானத்தில் புதிய பறவைகளின் பயணம் தொடங்கிவிட்டது. இன்னும் இன்னும் உயரத்திற்குச் செல்லட்டும்.!

( ஜில் ஜங் ஜக் நூலுக்கு எழுதிய முன்னுரை )


 

நீலகண்டன் நரியும் கல்யாணிப்பசுவும்

 

நீலகண்டன் நரியும் கல்யாணிப்பசுவும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில்- உதயசங்கர்



    சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி விளையாடும் இடத்திற்கு வந்து சும்மா விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது நீலகண்டன் நரிக்கு வழக்கமாகி விட்டது.. மெஹெர்பா கோழி பற்றிய எண்ணம் எப்போதும் மனதில் உண்டு. அவளைக் கொன்று சாப்பிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்? அதுதான் கவலை.

 அப்படியே கல்யாணிப்பசு அசைபோட்டுக் கொண்டு படுத்திருந்த இடத்திற்கு வந்து சென்று கல்யாணியுடன் நட்பாகி விட்டது..  எல்லா பழைய கதைகளையும் சொல்லும்.. கல்யாணிப்பசு புல் சாப்பிட எங்கு சென்றாலும், அது நரியைத் தன் முதுகில் சுமந்து செல்லும்.

அதைப் பார்த்த கதைப்பாட்டி சொன்னாள்:

 " கல்யாணி வேண்டாம்.. அது ஒரு குள்ளநரி, அது ஏமாற்றிவிடும்..."

 கல்யாணப் பசுவின் காதில் குள்ளநரி சொன்னது.

 " கதைப்பாட்டிக்கு வயதாகி விட்டதல்லவா.. அதனால் அதையும் இதையும் சொல்லும்..”

 கல்யாணிப்பசுவும் அப்படி நினைத்தாள், ஒருவேளை நீலகண்டன் நரி சொல்வது சரியாக இருக்கலாம். குள்ளநரி ஒரு சாது என்று நினைத்தாள்.

 அப்படி ஒரு நாள் அவர்கள் இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். கல்யாணிப்பசு புல்லைச் சாப்பிட ஆரம்பித்தது. குள்ளநரி ஒரு காட்டுக் கோழியைக் கொன்று சாப்பிட்டது. நரிக்கு வயிறு நிரம்பி விட்டது.. உடனே குள்ளநரி திரும்பிப் போகலாம் என்று ரகளை செய்தது.. புல் சாப்பிட்டுக் கொண்டிருந்த் கல்யாணிக்கு பாதி வயிறு கூட நிரம்பவில்லை.. நரிக்கு கோபம் வந்தது.

 இந்தப் பசுவின் அகங்காரத்தை இன்றுடன் முடிவுக்குக் செய்ய வேண்டும்..

     குள்ளநரி சொன்னது.

 " எனக்கு சாப்பிட்ட பிறகு ஊளையிடணும்..."

     கல்யாணிப்பசு பயந்து விட்டது.-

     "ஐயோ, வேண்டாம், குள்ளநரி,"

     கல்யாணிப்பசு பணிவுடன் கெஞ்சினாள் –

     " ஊளையிட்டால், சிங்கம் வரும், இல்லையா? ஒரே அடியில் என்னைக் கொன்று உடனே சாப்பிட்டு விடுமே?"

     குள்ளநரி, அதைக் கேட்காதது போல நடித்தது. பிறகு பெரும் ஊளையிட்டது.. உடனே, காடதிர சிங்கத்தின் கர்ஜனை கேட்டது., நரியைத் தூக்கிக்கொண்டு பசு, ஆற்றில் நீந்தத் தொடங்கியது. இருப்பினும், நரி செய்த சதியை நினைத்து கல்யாணிப்பசுவுக்குக் கோபம் வந்தது.

    ஆற்றின் முக்கால்வாசி தூரம் நீந்திச் சென்றதும், பசு,

  "எனக்குக் குளிக்க வேண்டும் போலிருக்கிறது, உன் உடல் முழுவதும் காட்டுக் கோழியின் நாற்றம் வீசுகிறது"   என்றது.

 நரி பயத்தில் கத்தியது.

  " ஐயோ, பசுத்தாயே, நான் மூழ்கிச் செத்துப் போய் விடுவேனே..”

     கல்யாணிப்பசு அதைக் கேட்காதது போல, வசதியாக ஆற்றில் முங்கி எழுந்தது. நரி ஆற்றில் விழுந்து நிறைய தண்ணீரைக் குடித்தது. கடைசியில், கதைப்பாட்டி  சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சேர்ந்து வீசிய கயிற்றைக் கடித்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தது.

     கரைக்கு ஏறிய நரிக்கு கதைப்பாட்டி கம்பினால் ஒரு அடி கொடுத்தார்.  பூனைக்குட்டி அதன் வாலைக் கடித்தது. நரி காட்டுக்குள் ஒரே ஓட்டம் ஓடியது. அதைப் பார்த்து, மெஹெர்பா கோழி

     " கொக்கொ கொக்கொ கொக்கொ” என்று பாடி ஆடியது.

நன்றி - புக் டே

 

 

Wednesday, 5 March 2025

ஒரு நாள்

 

ஒரு நாள்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



     ஒரு நாள், சின்னு ஒரு அழகான, வண்ணமயமான சட்டையில் ஓடி வந்தாள். விளையாடத் தயாராக இருந்த நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் பார்த்து சின்னு,

 "அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு மண்ணில் விளையாடக் கூடாதுன்னு சொன்னாங்க"

என்றாள். நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் அதிர்ச்சியடைந்தன. இருவரும் ஒரே குரலில்

 " ஏன் அப்படி?" என்று கேட்டனர்.

 "நான் கல்யாணவீட்டுக்குப் போகணும். அதுதான் நல்ல உடை உடுத்திட்டு வந்தேன்"

என்றாள் சின்னு.

     நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சின்னுவைச் சுற்றி நடந்து அவளுடைய ஆடைகளைப் பரிசோதித்தன. அது சரி தான். சிவப்பு பூக்கள் கொண்ட வெள்ளை உடை. அழகான உடை.. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

     நாய்க்குட்டிக்கும் பூனைக்குட்டிக்கும் உடைகள் இல்லை. அப்போது மெஹெர்பா  கோழி வந்து சொன்னது.

"வீட்டுக்குப் போ, சின்னு. நீ இவர்களோட விளையாடுனா அழுக்காகிடுவ."

     சின்னு சோகமாக அங்கேயே நின்றாள். கதைப்பாட்டியும் சொன்னார்.

 "அம்முக்குட்டி, கல்யாணம் முடிஞ்சு வா, அப்புறம் விளையாடலாம்."

     நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் இரண்டு கால்களில் எழுந்து நின்று,

 " நாங்களும் கல்யாணத்துக்கு வருவோம் " என்றன..

     "ஐயோடா!" என்று கசுமலா காக்கா ஏளனம் செய்தது..

     புல்லைத் தின்றுகொண்டிருந்த கல்யாணிப்பசு கூட அதைக் கேட்டுச் சிரித்தது. நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சோகமாக இருந்தன.

  "சின்னு திருமணத்திற்கு எங்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை, கதைப்பாட்டி?"

 என்று அவை கேட்டன.

     "நம் அனைவருக்கும் இருப்பதற்கும் வாழ்வதற்கும் ஒவ்வொரு இடங்கள் உள்ளன அங்கேயே இருப்பது நல்லது." என்று கதைப்பாட்டி சொன்னார். அதைக் கேட்ட, நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் அப்படியே நின்று விட்டன.

 " விலங்குகளுக்குக் காடும், மனிதர்களுக்கு, நாடும் இருக்கின்றன " என்றார் கதைப்பாட்டி.

     "நான் கல்யாணத்துக்குப் போகணும்"

     என்று நாய்க்குட்டி பிடிவாதம் பிடித்தது.  அப்போது, பிரகாசமான வெயிலில், மழை பெய்யத் தொடங்கியது. கதைப்பாட்டி அதை நாய்க்குட்டிக்குக் காட்டி,

 "பார், இது நரிக்குக் கலியாணம் நடக்குது.. அது தான், மழையும் வெயிலும் சேர்ந்து வருது நீங்க எல்லாரும், நீலகண்டன் நரியோட கல்யாணத்துக்குப் போங்க." 

என்று கதைப்பாட்டி சமாதானப்படுத்தினார்

     "ஐயோ, நான் மாட்டேன்!" என்று கூறிவிட்டு மெஹெர்பா ஓரே ஓட்டம்........!


நன்றி - புக் டே

 

 

 

குழந்தைமையின் அற்புதத் தரிசனங்கள்

 

குழந்தைமையின் அற்புதத் தரிசனங்கள்

உதயசங்கர்




குழந்தைமை என்பதே மனிதனோ விலங்குகளோ பறவைகளோ மூளையின் செயல்பாடுகளான அறிவும் மனமும் உருப்பெரும்போது நிகழும் அற்புதங்கள். அனுபவங்களின் வழியே கிடைக்கும் உணர்வுகள் திரண்டு அறிவாக மாறுகிறது. ஆனால் உணர்வுகளின் வெளிப்பாடென்பது வெகுளித்தனமாகவும், கவித்துவமாகவும் அபத்தமாகவும் அர்த்தமில்லாததாகவும் தர்க்கமில்லாதாதாகவும் முக்கியத்துவமில்லாததாகவும் இருக்கும் நிலையையே நாம் குழந்தைமை என்கிறோம். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடும் தீவிர ஒருமை நிலையில் தான் குழந்தைமை தன்னை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிலையில் குழந்தைகளின் சொல்லும் நடவடிக்கைகளும் கணநேரத்தரிசனங்களைத் தரும். அவற்றைப் பார்ப்பதற்கோ உணர்வதற்கோ அறிவதற்கோ நேரமில்லாத பெரியவர்கள் அலட்சியப்படுத்திக் கடந்து போய்விடுவார்கள். கவிஞர்களும், எழுத்தாளர்களுமே அந்தக் கணநேரத்தரிசனங்களைக் கவிதைகளாக, கதைகளாக மாற்றுகிறார்கள். அப்படி கணநேரத்தரிசனங்களின் தொகுப்பு தான் கவிஞர். சலோனியா லியோ கமலத்தின் கவிதைகள்.

பொதுவாக சிறார் இலக்கியத்தை மூன்று வகைமைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளே எழுதுகிற குழந்தைப்படைப்புகள், குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுகிற படைப்புகள், குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு எழுதுகிற படைப்புகள் என்று சொல்லலாம். இதில் மூன்றாவது வகையான குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு எழுதுகிற இலக்கியப்படைப்புகளை கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, என்று தொடங்கி தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் வரை நீளும். இதில் குழந்தைகளை மையப்படுத்தி நவீன கவிதைகளை எழுதுபவர்களாக, பழ.புகழேந்தி, முகுந்த்நாகராஜன், அ.வெண்ணிலா, ந.பெரியசாமி, ஆகியோரை முக்கியமானவர்களாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில் இந்தச் சிறப்பான கவிதைத்தொகுப்பின் மூலமாக சலோனியா லியோ கமலமும் இணைகிறார்.

குழந்தைகள் எதையும் திட்டமிடுவதில்லை. ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதில்லை. பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. இருப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இருப்பதில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். அதில் சமாதானமடைகிறார்கள். வெற்றிடங்களை வேறொன்றால் நிரப்புகிறார்கள். அந்தக் குழந்தையின் மனதை கவிஞர் துல்லியமாக வரைகிறார்.

கங்காரு படம் வரைந்த

அனாதைக் குழந்தை ஒன்று

கங்காருவின் பையில்

தனது உருவத்தை வரைந்து

மகிழ்கிறது.

தாய்மைக்கான ஏக்கத்தை குழந்தையின் வரைதலின் மூலம் நிரப்பிக்கொள்கிறது. பெரியவர்கள் எதையும் பயன் நோக்கில் தான் அணுகுகிறார்கள். ஆனால் குழந்தைகள் வெகுளியாய் எல்லாவற்றின் மீதும் அன்பாய் இருக்கிறார்கள்.

‘ ச்சீ போ ‘ என நான் துரத்திவிடும்

காக்கையிடம்

காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா எனச்

சொல்லி அனுப்புகிறது குழந்தை.

அனைத்தையும் அழகாகப்பார்க்கும் குழந்தைகளிடம் பெரியவர்கள் தானே பேதங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.

குழந்தைகளின் விரல்களால்

வரையப்படும்போது

பூக்கூடையும் மீன்கூடையும்

ஒரே மணத்தைப் பெற்று விடுகிறது.

 

குழந்தைகளின் விளையாட்டில் பொம்மைகளும் ஒன்று தான் சோப்பும் ஒன்று தான். பொம்மைகளைக் குளிப்பாட்டுவதைப் போலச் சோப்பையும் குளிப்பாட்டுகிறார்கள். சோப்பு கரையக் கரைய அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே இத்தகைய அவதானிப்புகளைக் கண்டடைய முடியும்.

குளியல் சோப்புகளைக்

குளிப்பாட்டி

குளிப்பாட்டி

மகிழ்ச்சியில்

கரைந்து போகின்றன

குழந்தைகள்.

 

எப்போதுமே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இல்லாமையை அவர்கள் வார்த்தைகளால், செயல்களால், பாவனைகளால் மாற்றி இருப்பதாக நினைக்கிறார்கள். தன்னிடம் இல்லையென்றாலும் மற்றவர்களிடம் இருப்பதை நினைத்து திருப்தியடைகிறார்கள்.

குருவிக்கூட்டை

குருவி வீடு என்றும்

எலிப்பொந்தை

எலி வீடு என்றும்

சிங்கக்குகையை

சிங்கவீடு என்றும்

எறும்புப்புற்றை

எறும்பு வீடு என்றும்

சொல்லி மகிழ்கின்றன

தெருவோரம் படுத்துறங்கும்

திக்கற்ற குழந்தைகள்.

 

இந்த உலகினைப் படைக்கும் வல்லமை மிக்கதாய் கடவுளைக் கற்பனை செய்த மனிதன் இத்தனை கடவுள்களையும் மதங்களையும் படைத்திருக்கிறான். ஆனால் குழந்தை என்ன நினைக்கிறது தெரியுமா?

அம்மாவின் இடுப்பில்

இருக்கும் குழந்தை

பல்லக்கில் வலம் வரும்

தெய்வங்களைப்

பெரிது படுத்துவதே

இல்லை.

 

உண்மையான தெய்வம் அருகில் இருக்கும்போது எதற்காக பொம்மைகளை வணங்க வேண்டும்?

வெறுப்பு, பகை, விரோதம், குரோதம், மனமாச்சரியங்களைப் போற்றிப்பாதுகாப்பது பெரியவர்கள் மட்டுமே. குழந்தைகள் ஒரே கணத்தில் வெறுப்பின் இடத்தில் அன்பை கொண்டு வந்து வைப்பார்கள். பகையை நேசமாக மாற்றி விடுவார்கள். காய் விடும்போதே பழத்துக்கான விரல்களையும் சேர்த்தே வைத்திருப்பார்கள்.

பேய்களின் கொம்புகளை

எரேசர் கொண்டு

அழித்து விட்டு

பென்சில்களால்

இறக்கைகள் வரைந்து

பேய்களை

தேவதைகளாக்கி விடுகின்றன

குழந்தைகள்

மிகச்சுலபமாக.

 

என்று எழுதும் கவிஞரின் மனது குழந்தையின் மனது தானே. அதனால் இத்தனை அழகாகக் கவிதைகளை எழுத முடிகிறது.

குழந்தையைத் தூங்க வைத்து விட்டு

எப்போதும்போல்

விழித்திருக்கிரது நிலவு

இயற்கையும் கூட தாய்மையின் குணங்களைக் கொண்டிருப்பதாக அதுவும் குழந்தைகளின் பார்வையில் சொல்லும் போது கூடுதல் அழகு பெறுகிறது.

இப்படி அனிச்சம் தொகுப்பு முழுவதும் புதிய தரிசனங்கள், கண்டடைதல்கள் உணர்வுகள், காட்சிகள், படிமங்கள் நிறைந்திருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளைப் போல சின்னஞ்சிறு கவிதைகள் குழந்தைகளைப் பற்றிய நம்முடைய புரிதல்களை மேன்மையுறச் செய்கின்றன.

இன்னும் நிறைய எழுதுங்கள். 

குழந்தைகளின் மெசையாவாக இந்த உலகத்துக்கு நிறையச் சொல்லுங்கள்


( அனிச்சம்பூ நூலுக்கு எழுதிய முன்னுரை )


 

 

Tuesday, 4 March 2025

காக்காவும் கொக்கும்

 

காக்காவும் கொக்கும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடும்போது கசுமலா காக்காவும் வந்தது. தன்னையும் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டது. கல்யாணிப்பசு சொன்னது,

“ உனக்கு வெட்கமாக இல்லையா கசுமலா.. இந்தச் சின்னப்பிள்ளைகளோடு விளையாட ஆசைப்படுகிறாய்..”

கசுமலாவுக்கு அது பிடிக்கவில்லை. கோபம் கொண்ட கசுமலா பூனைக்குட்டியின் தலையில் ஒரு கொத்து கொத்தியது. பூனைக்குட்டி ‘ மியாவ் ‘ என்று அழுது கொண்டே நாய்க்குட்டியின் அருகில் சென்றது. நாய்க்குட்டி, ‘ பௌ ‘ என்று சின்னுவை அழைத்தது. சின்னு காக்கா மீது கோபப்பட்டாள். கசுமலா சிணுங்கிக் கொண்டே ஆற்றங்கரைக்குப் போய் விட்டது. ஆற்றில் ஆழமில்லாத பகுதிகளில் நிறைய வாத்துகள் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தன. நல்ல வெள்ளை நிறம். ஒரு அழுக்கு கூட இல்லை. தன்னுடைய நிறமோ? கருப்பு. யாருக்கும் கருப்பு நிறம் பிடிக்கவில்லை. அதனால் தான் நிறையப் பேருக்கு வாத்துகளை மிகவும் பிடித்திருக்கிறது.

காக்காவும் ஆற்றில் முங்கிக் குளித்தது. பல நாட்களாக ஆலமரத்தடிக்குப் போகவில்லை. நிறைய நாட்களுக்குப் பிறகும் கருப்பு நிறம் மாறவேயில்லை. அதை நினைத்துக் கவலைப்பட்டது கசுமலா காக்கா. நண்பர்களைத் தேடி திரும்பிச் சென்றது. பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் காக்காவின் குளியலைக் கேட்டு கை தட்டிச் சிரித்தார்கள். காக்கா கவலையுடன் கதைப்பாட்டியிடம் கேட்டது,

“ கதைப்பாட்டி ஏன் நான் வெள்ளையாகவில்லை? “

“ காக்கா குளிச்சால் கொக்காக மாறாது கசுமலா.. எல்லோருக்கும் இயற்கை கொடுத்த சில அடிப்படையான விசயங்களை மாற்ற முடியாது...கருப்பு நிறத்தை விட வெள்ளை நிறம் உயர்வு என்று நினைப்பதினால் தான் பிரச்னை.. கருப்பு நிறத்துக்கு ஏழு நிறங்களும் அழகு கசுமலா காக்கா.. நமக்கு இயற்கை எதைக் கொடுத்திருக்கிறதோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளணும்.. “ என்று கதைப்ப்பாட்டி சொன்னார்.

அதைக் கேட்ட காக்காவின் கண்கள் கலங்கின. அதைப்பார்த்த சின்னு ஓடிப்போய் கசுமலா காக்காவைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாள்.

 நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்