Monday 30 July 2012

சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2

சடங்குகளும் சுயபோராட்டமும்

உதயசங்கர்

emotion-chart-with-picture-reflection

சிந்தனையில், சமூகச்செயல்பாடுகளில் முற்போக்காகவும், சொந்த குடும்ப வாழ்க்கையில் பிற்போக்கான சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவுமான இரட்டைநிலை கொண்ட தோழர்களை நான் அறிவேன். இதற்கு அவர்கள் மட்டுமே குறை சொல்லிவிட முடியாது. பண்பாட்டுத் தளத்தில் நாம் புதிய செயல்பாடுகளைச் செய்யத் தவறியதே காரணம். அது மட்டுமேயல்லாமல் அரசியல் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குக் கொடுத்த அளவுக்கு சிறிதளவேனும் முக்கியத்துவம் பண்பாட்டு நடவடிக்கைகளுக்குக் கொடுக்கவில்லை என்பதும் யதார்த்தமான உண்மை. நம்முடைய படைப்பாளிகள் முற்போக்கான படைப்புகளை படைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலத்திற்கேற்ற படைப்புகளாக இருக்கின்றனவா என்று நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.முதலாளித்துவ, மதவாத, பண்பாட்டு நடவடிக்கைகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு அதிலிருந்து அதைச் செரித்துக் கொண்டு புதிய பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதங்களைத் துவக்கியிருக்கிறோமா?

இல்லையெனில் எல்லாபிற்போக்கான பண்பாட்டு நடவடிக்கைகளுடனும் சமரசம் செய்து கொண்டு ஆனால் அதே நேரம் அரசியல்ரீதியாக முற்போக்காகவும் திகழ்கிற போலிக் கம்யூனிஸ்ட்கள் பெருகி விடும் ஆபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

என் வாழ்வில் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிராக நான் நடத்திக் கொண்டிருக்கிற போராட்டம் மேடு பள்ளங்களைக் கொண்டது தான். நான் பள்ளியில் படிக்கிற காலத்திலேயே சாமி கும்பிடுவதை நிறுத்தி விட்டேன். எனக்குப் பத்தாவது வகுப்பில் தமிழாசிரியராக வந்த குருசாமி வகுப்பில் சொன்ன பகுத்தறிவுக் கருத்துகள் என்னை எதனாலோ ஈர்த்தன. வீட்டிலும் ரெம்ப பழமைவாதம் கிடையாது. ஊரோடு ஒத்துப் போவதற்காக நல்லநாள் கொண்டாடுவார்கள். மற்றபடி வீட்டிற்கு மிக அருகில் இருந்தாலும் கோவிலுக்குச் செல்லும் பழக்கமெல்லாம் வீட்டிலுள்ள யாருக்கும் கிடையாது. அதனால் பெரிய நெருக்கடி ஒன்றும் கிடையாது. அதற்கு முன்பு எட்டாம் வகுப்பு வரை மார்கழி மாதம் விடிகாலைக் குளிரில் எழுந்து குளித்து விட்டு கந்தபுராணத்தையும், விநாயகர் அகவலையும் சத்தம் போட்டு பாடிக் கொண்டே செண்பகவல்லியம்மன் கோவிலை நூற்றியெட்டு முறை சுற்றி வந்தவன் தான். ஆனால் குருசாமி வாத்தியாரின் வகுப்புகள் என்னை ஏதோ செய்தது. அது மட்டுமல்ல என்னுடைய அருமை நண்பனான நாறும்பூநாதனின் நட்பும் ஒரு காரணம். அவனுடைய அண்ணன் ஆர்.எஸ்.மணி மூலமாக அவன் நிறைய முற்போக்கான கருத்துகளைக் கற்றுக் கொண்டு எங்களிடம் வந்து கொட்டுவான். முதலில் அதை எதிர்த்துப் பேசி பின்னர் அது ஆழமாக மனசில் பதிந்து விட்டது. கல்லூரிக் காலத்தில் புத்தகவாசிப்பின் மீதான ஆர்வம் எழுத்தை நோக்கி உந்தித் தள்ள நண்பர்கள் நாங்கள் கையெழுத்துப் பத்திரிகை துவங்கி தமுஎசவில் வந்து சேர்ந்தோம். அப்போது வாசித்த நூல்கள் மதம், சாதி, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் குறித்த புரிதலைத் துவக்கி வைத்தது.

1987-ல் என் திருமணநிகழ்வினை எந்த சாஸ்திரமும் சடங்கும் இல்லாமல் நடத்த பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அது தான் முதல்முறையாக நான் சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயங்களின் வலிமையை உணர்ந்த நாட்கள். வீட்டுப் பெரியவர்களின் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியதாயிற்று. அந்த விரோதம் என்னுடைய அப்பா, அம்மா, இருவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.ஆனால் என்னுடைய பிடிவாதம், பால்வண்ணம், பாலு, தேவப்ரகாஷ், போன்ற தோழர்களின் ஒத்துழைப்பினால் சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரான என்னுடைய முதல் போர் வென்றது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தாலி எடுத்துக் கொடுக்க கைதட்டுதலோடு கலியாணம் முடிந்தது. என்ன பேசியும் தாலியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதையும் பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு என் துணைவியார் துறந்து ஒரு பதக்கச் சங்கிலியை அடையாளமாக அணிந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் தோழர்கள் திருமணம் பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இப்போது அதே தோழர்கள் அவர்கள் அவர்களுடைய திருமணத்தைத் தவிர வீட்டில் நடைபெற்ற அத்தனை விழாக்களையும் சடங்குகள் சகிதம் நடத்தியதையும் கண்டேன். இப்போது காலம் தன் சட்டையை உரித்து மீண்டும் அதே பழைய சனாதன உருவத்தோடு காட்சியளிக்கிறது.

என் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்தும் சடங்கை என்ன சொல்லியும் என்னால் தடுக்க முடியவில்லை. சலூனில் மொட்டை போடும் என் யோசனைக்கு எல்லோருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். திருமணத்துக்குப் பிறகு எல்லாமே குடும்பவிஷயமாக(?) மாறிவிடுவதால் தோழர்களும் தலையிடவில்லை. கடைசியில் சாத்தூர் இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் அந்தச் சடங்குகள் நடந்தன. நான் தோல்வியடைந்தாலும் அய்யர் இல்லாமல் நாட்டார்தெய்வக் கோவிலில் வைத்துத் தானே நடக்கிறது என்று மீசையில் ஒட்டிய மண்ணைப் பெருமையுடன்(!) துடைத்துக் கொண்டேன். என் பெண்குழந்தைகள் பருவமடைந்ததை நாங்கள் யாருக்கும் சொல்லவில்லை. எந்த விதமான சடங்கும் செய்யவல்லை. என் துணைவியாருக்கோ குழந்தைகளுக்கோ அதில் வருத்தமில்லை.ஆனால் உறவினர்கள் திட்டினார்கள். தோழர்களும், நண்பர்களும் கூட வருத்தப்பட்டார்கள். சடங்கு முக்கியம் என்றார்கள். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக் கழிக்கிற சடங்கைச் செய்த தோழர்கள் வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்று வந்தார்கள். யாரும் என் வீட்டுக்கு வரவில்லை.அப்போது என் துணைவியார் கொஞ்சம் நம்பிக்கையிழந்தார். நான் சடங்கின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன். ஆனால் நம்பிக்கையிழக்கவில்லை.

என் தந்தையார் இறந்தபோது உறவினர்கள் எல்லோரும் நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது தோழர். சக்தி கூட இருந்ததால் அதைச் சுலபமாகக் கடந்து விட்டேன்.கொள்ளிச்சட்டி தூக்கவோ, மொட்டை போடவோ வேறு எந்த சடங்கையும் செய்யவும் மறுத்து விட்டேன். எல்லோரும் என்னை வேற்றுக் கிரகமனிதனைப்போல பார்த்தார்கள். சிலர் கொள்கையெல்லாம் சரிதான் அப்பாவுக்குத் தானே செய்றீங்க என்று சொன்னார்கள். அந்த நேரம் அப்பா இறந்து போன துக்கத்தை என்னால் முழுமையாக அநுபவிக்க முடியவில்லை என்பது உண்மை தான். இந்தச் சடங்குகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற சிந்தனையே எனக்குள் ஒரு இறுக்கத்தையும், பிடிவாத உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என் தம்பிகள் இந்தச் சடங்குகளைச் செய்வதிலிருந்து தடுக்க முடியவில்லை. என்பாடே பெரும்பாடாக இருந்தது. ஏற்கனவே கோட்டிக்காரன் என்று பெயர் எடுத்திருந்ததால் என் தாயார் இறந்தபோது யாரும் என்னை வற்புறுத்தவில்லை.

சொந்த வீடு கட்டும் போதும் சரி, கட்டி முடித்த பிறகும் சரி எந்தச் சடங்கையும் செய்ய மறுத்து விட்டேன். கிரகப்பிரவேசம் என்று சொல்லப் படுகிற சடங்கையோ, கணபதி ஹோமம் என்ற பெயரில் புது வீட்டுக்குள்ளே மாட்டைக் கூட்டிக் கொண்டு போய் சுத்திக் காண்பித்து அதன் மூத்திரத்தை வீட்டுக்குள்ளே தெளித்து அதுக்கு ஒரு விஞ்ஞானவிளக்கமும் கொடுத்து செய்கிற சடங்கையோ செய்யவில்லை. கிரகப்பிரவேசம் கணபதி ஹோமம் நடத்தி விழா எடுத்த தோழர்கள் வீட்டுக்கு எல்லோரும் போனார்கள். ஆனால் நான் அழைத்தும் யாரும் என் புது வீட்டுக்கு யாரும் வரவில்லை. நாங்கள் பல நாட்கள் எங்களுடைய புது வீட்டில் தோழர்களுக்காகக் காத்திருந்தோம். பத்திரிகை அடித்து நேரில் சென்று அழைத்து ஸ்பீக்கர் செட் அலற நான் முன்பு சொன்ன சடங்குகள் செய்து சாப்பாடு போட்டால் எல்லோரும் குதூகலமாக வந்து போகிறார்கள். எந்தச் சடங்கையும் செய்யாமல் நீங்கள் சும்மா அழைத்தால் யாரும் தோழர்கள் உட்பட யாரும் வரத்தயாரில்லை. எல்லோரிடமிருந்தும் தனிமைப் பட்ட உணர்வு வந்ததென்னவோ உண்மை தான். என் துணைவியாரும் “ என்னமோ தோழர்கள் அதையெல்லாம் பாக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க..” என்று வறுத்து எடுத்து விட்டார். சடங்குகளின் வலிமையை மீண்டும் உணர்ந்தேன்.

1987-லிலேயே வீட்டில் மாட்டுக்கறி எடுத்து சமைப்பதற்குப் பழகியிருந்தோம். இப்போதும் நானே போய் மாட்டுக்கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுகிறோம். அதே போல வெள்ளைப்பன்னிக்கறியும்( கறுப்பு பன்னி மீது இன்னமும் என் வீட்டிலுள்ளவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. நானும் இந்த வரைக்கும் வந்தார்களே என்று சும்மாயிருந்து விட்டேன்.) வீட்டில் சமைத்துச் சாப்பிடுகிறோம். எனக்கு என் துணைவியாரோ,என் மூத்த மகளோ தான் முடி வெட்டி விடுகிறார்கள். எந்தக் குழப்பமும் இல்லை. உண்மையில் சாதிய நடைமுறைகளை, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை மறுத்து அதைக் கடந்து செல்லவே பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். விழுதலும் எழுதலுமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் நானறியாமல் பல சடங்கு சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களுக்குத் துணை போயிருக்கிறேன். என் தம்பிகள், தங்கைகள் விஷயத்தில் தலையிடாமல் இருந்திருக்கிறேன். நான் மட்டும் சரியாக இருந்து கொள்கிறேன் மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்ற சுயபெருமித உணர்வுதான் காரணம். இதெல்லாம் பெருமை பேசுவதற்காகவோ யாரையும் குற்றம் சொல்வதற்காகவோ இல்லை. தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து முற்போக்கான அரசியலைப் பேசி, அதற்காகப் போராடிய தோழர் இறந்த பிறகு அப்படியே அவரை அவருடைய சாதியின் கையில் சடங்குகளின் கையில், சாஸ்திரங்களின் கையில், சம்பிரதாயங்களின் கையில் ஒப்படைத்துவிட்டு வாளாவிருப்பது என்ன நியாயம்?

,விரைவில் புரட்சி நடந்து விடும் புதிய கலாச்சாரம் வர்க்கபேதமற்ற, சாதி சமயங்கள் ஒழிந்த, சாஸ்திர, சம்பிரதாயங்கள், அழிந்த ஒரு புதிய சமூகம் பிறக்கும் என்று எனக்கு நம்பிக்கையளித்த இடதுசாரிகள் இப்போது மோசமாகிக் கொண்டேயிருக்கும் சாதி மத மயமாக்கப்பட்ட சூழலில் யுத்தகளத்தில் இல்லையோ என்ற அச்சம் வருகிறது.

1990-களில் அத்வானி ” ஆட்சி அதிகாரத்தை விட குடிமைச்சமூகமே எங்களுக்கு முக்கியம்.” என்று சொன்னார். அதில் பெரிய அளவுக்கு அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றே தோன்றுகிறது. வரலாற்றறிஞர் கே.என். பணிக்கர் சொன்னதைப் போல அரசியல் ரீதியாக மதவாத சக்திகளை எதிர்கொள்கிற இடது சாரிகள் பண்பாட்டு ரீதியாக வலுவாக எதுவுமே செய்யவில்லை. இதனால் நம் கண்முன்னே குடிமைச்சமூகம் மதவாத சக்திகளிடம் போய்க் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கவோ, எதிர்கொள்ளவோ, நம்மிடம் திட்டமில்லை. சாதி மத, சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிரான எந்த முயற்சியும் இல்லை. முற்போக்கு பண்பாடு குறித்த விவாதத்தைத் துவங்கவே யில்லை. மிகுந்த உற்சாகத்துடன் என்னுடன் இணைந்து சாஸ்திர, சடங்கு, சம்பிரதாய மறுப்புகளைச் செய்து வருகிற என் துணைவியார், இப்போது சற்று சோர்ந்து போயிருக்கிறார்.

என் மூத்த மகள் சொல்கிறாள், “ நாம ஒரு சதவீதம் தானே இருக்கோம்… சுத்தி எல்லோரும் வேற மாதிரி தான இருக்காங்க ”

“ ஒரு சதவீதம் நூறு சதவீதமாகும் நாள் சீக்கிரம் வந்துரும் “ என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். ஏனென்றால் எதிர்காலச் சந்ததிகள் அவர்கள் தானே. அவர்கள் நம்பிக்கையிழக்கலாமா? ஒரு புதிய பண்பாட்டுப்போரைத் துவக்க வேண்டிய தருணம் இது. நம்முடைய முற்போக்கு பண்பாட்டு நிகழ்ச்சிநிரலை ஆரம்பிக்க வேண்டிய காலம் இது.

நன்றி - தீக்கதிர்

2 comments:

  1. அருமை நண்பரே! "நான்பாடும் பாடல்" என்று ஒரு சிறுகதைஎழுதியிருந்தேன்! முற்போக்கு எழுத்தாளனின் மனைவி விதவை மறுமணத்தை ஆதரிக்கிறாள். கனவன் மகிழ்ச்சி அடைகிறான். இரவு தூங்கும் பொது விழிப்புவர எழுகிறான்.அமைதியாகத் தூங்கும் மனைவியின் சஞ்சலமற்ற மனைவியின் முகத்தைப் பார்த்தவன் "நான் இறந்தால் இவள் மறுமனம் செய்து கொள்வாளோ "
    என்று நினைக்கிறான். .அதன் பிறகு அவன் தூக்கம் வராமல் தவிக்கிறான். " செம்மலரி" ல் வந்த இந்த கதைக்கு எதிர்ப்பு வந்தது." this is life! இந்த முரணும், தான் வாழ்க்கை! இது தான் யதார்த்தம்! போடுங்கய்யா! " என்றார் கே.எம்! எதிர்த்த முக்கியமானவர்கள் இன்றும் உள்ளனர். பி.ஆர் அவர்களின் திருமணத்திற்கு ஒன்பது ரூ தான் சிலவு. மணமக்களுக்கு இரண்டு மாலை, பெரியாருக்கு ஒருமாலை மொத்தம் ஒன்பது ரூ.நீங்களும் நானும் முதிர்ச்சி அடைய முயலுபவர்கள்! பண்பாட்டுத்தளத்தில் இன்னும்முழுமை அடைய வேண்டும் என் பது மிகச்சரியான நீலை! ஆனால் அது super structure! அடிப்படை நீங்கள்கொண்ட தத்துவம்.! தோழா என் மகள்,மகன் திருமணத்தின் போது நான் பட்ட அவதி சோல்லமுடியாது! சடங்குகள் இல்லாத உங்கள் வீட்டிற்கு நீங்கள், கலக்டராகவோ.நீதிபதியாகவோ சமூக அந்தஸ்தில்மேம்பட்டவராகவோ இருந்திருந்தால் தொழர்கள் வந்து "மொய்" எழுதியிருக்கலாம். this is the contradiction in the developement of comunist consciousness! இந்த முரணைச் சொல்லி நாம் தத்துவநிலையை கைவிட செய்வது தான் மார்க்சீய எதிர்ப்பாளர்களின் நோக்கம்! "கம்யுனிஸ்ட்கள் நல்லவர்கள்! ஆனால் அந்தக் காலம் மாதிரி இப்போ தலைவர்கள் இல்லை என்பார்கள்! " மிகவும் ஆபத்தானவர்கள் இவர்கள்! பெரியார் சொல்லுவார்." பாப்பானை நம்பலாம்!கறி திங்கர பாப்பானை நம்பவேநம்பாத "என்பார்! தோழரே! குழப்பமே வேண்டாம்! நாம் ராஜ பாட்டையில் செல்கிறோம்! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

    ReplyDelete
  2. “ நாம ஒரு சதவீதம் தானே இருக்கோம்… சுத்தி எல்லோரும் வேற மாதிரி தான இருக்காங்க
    அருமையான பதிவு. நன்றி.
    திரு காஷ்யபன் ஐயா அவர்களின் கருத்து படித்தேன். அருமை.

    ReplyDelete