அக்கரையும் இக்கரையும்
ஜப்பானிய நாடோடிக்கதை
மலையாளத்தில்- பெரம்பரா
தமிழில் - உதயசங்கர்
முன்பு ஒரு காலத்தில் ஜப்பான்
நாட்டில் ஒசாகா நகரத்தில் ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது. இன்னொரு நகரமான
டோக்கியோவில் மற்றொரு தவளை கடலுக்கு அருகில் உள்ள ஒரு அருவியில் வாழ்ந்து வந்தது. இரண்டு
தவளைகளும் வெளி உலகம் தெரியாமல் தங்கள் இடத்திலேயே வாழ்ந்து வந்தனர்.
கொஞ்சநாள் கழிந்தபிறகு ஒசாகா நகரத்துத்
தவளைக்கு டோக்கியா நகரத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதே போல டோக்கியா
நகரத்துத்தவளைக்கு ஒசாகாவைப்பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. இந்த ஆவல் இரண்டு தவளைகளிடமும்
பெரிதாக வளர்ந்தது. ஒரு பனிக்காலத்தில் இரண்டு பேரும் தங்களுடைய இருப்பிடங்களை விட்டு
வெளியே கிளம்பினர்.
பயணத்தில் நிறைய துன்பங்கள் வந்தன.
முதலில் அவர்கள் இப்போதுதான் இவ்வளவு தூரம் வெளியே பிரயாணம் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல.
வழியைப் பற்றியும் சரியாகத் தெரியவில்லை. இடையில் ஒரு பெரிய மலையில் ஏறி இறங்க வேண்டி
வந்தது. அந்த மலை ஒசாகாவுக்கும் டோக்கியாவுக்கும் நடுவில் இருந்தது. அவர்கள் மலையின்
உச்சிக்கு ஏறி விட்டனர். அப்போது தான் இரண்டு தவளைகளும் ஒருவருக்கொருவர் பார்க்கின்றனர்.
உடனே இருவரும் பேசிக்கொண்டனர். ஏன் தாங்கள் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்தோம் என்று
இரண்டு பேரும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். பின்பு இரண்டுபேரும் நல்ல நண்பர்களாகி
விட்டனர்.
நண்பர்களாக ஆனதும் மலையின் உச்சியில்
ஒரு இடத்தில் ஓய்வு எடுத்தனர். அவ்வளவு தூரம் கடந்து வந்ததினால் சோர்வு இருக்கும் அல்லவா?
“ கடவுள் நம்மை இவ்வளவு சின்னதாய்
படைத்திருக்கக்கூடாது.. எவ்வளவு கஷ்டம்? அப்படி இல்லைன்னா.. இந்தக்குன்றின் மேல் நின்று
நாம் இரண்டு நகரங்களையும் நன்றாக பார்க்கலாம்.. அப்ப இனிமே மீதி தூரம் பிரயாணம் பண்ணாமல்
இருக்கலாம்..”
என்று ஒசாகா தவளை கூறியது. அதற்கு
டோக்கியோ தவளை,
“ அதுக்கு ஏன் துக்கப்படணும்..
நான் என் பின்னங்கால்களில் உயரமாய் நிற்கிறேன்.. நீ என்னுடைய தோளில் ஏறி நின்றால் போதும்..பிறகு
நான் உன்னுடைய தோளில் ஏறி நிற்கிறேன்.. அப்படி நாம் இரண்டு நகரங்களையும் பார்த்து விடலாம்..”
என்று சொன்னது. அந்த யோசனை ஒசாகா
தவளைக்கு மிகவும் பிடித்தது. உடனே அது டோக்கியோ தவளையின் தோளில் ஏறி நின்றது. முடிந்தவரை
கால்களை உயர்த்தி நின்றது. விழாமல் இருப்பதற்காக ஒசாகா தவளை டோக்கியோ தவளையின் தலையை
இறுக்கிப்பிடித்தது. அப்போது ஒசாகா தவளையின் மூக்கு ஒசாகாவைப் பார்த்து திரும்பிவிட்டது.
டோக்கியோ தவளையின் மூக்கு டோக்கியோவைப்பார்த்து திரும்பி விட்டது. இரண்டு தவளைகளின்
கண்கள் தலையின் பின்னால் இரண்டு பக்கமும் இருந்ததால் அவர்கள் பார்க்க வேண்டிய நகரம்
மாறிவிட்டது.
“ பாரு டோக்கியோ நகரம் அப்படியே
ஒசாகா மாதிரியே இருக்கு.. அதனால் இனிமேல் பிரயாணம் போகவேண்டிய அவசியம் இல்லை. நாம்
திரும்பிப்போகலாம்..”
ஒசாகா தவளை சொன்னதைக்கேட்டு, டோக்கியோ
தவளையும் பார்த்தது.
“ சரிதானே! ஒசாகா நகரம் அச்சு
அசல் டோக்கியோ மாதிரியே இருக்கு.”
அப்படி இரண்டு பேரும் ஆசைப்பட்ட
நகரங்களைப் பார்த்த திருப்தியுடன் அவரவர் இடங்களை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தனர்.
நன்றி - மாயாபஜார் தமிழ் இந்து
No comments:
Post a Comment