கிழட்டு ஆடு
மலையாளத்தில்- மாதவிக்குட்டி
தமிழில்- உதயசங்கர்
அவளுடைய நாற்பத்தி மூன்றாவது வயதில்
மூத்த மகன் வேடிக்கையாக, “ அம்மா.. உங்களைப்பாத்தா.. ஒரு கிழட்டு ஆட்டைப்பாக்கிற மாதிரியே
இருக்குதும்மா..” என்று சொன்னான். அவளும் அவனுடைய சிரிப்பில் சேர்ந்து கொண்டாள். ஆனால்
அன்று அவர்கள் எல்லோரும் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, அவள் கண்ணாடியை எடுத்து கவலையோடு
தன்னுடைய முகத்தைப் பரிசோதித்தாள். தன்னுடைய ஒட்டிய கன்னங்களில் மறுபடியும் சதை வைக்க
ஏதாவது வழியிருந்தால் தன்னுடைய வாழ்க்கையும் அதோடு சேர்ந்து புஷ்டியாகும் என்று அவளுக்குத்
தோன்றியது. இளமையும் அழகும் இருந்த காலத்தில் அவள் தரையில் பாய் விரித்துப் படுத்துறங்கியது
கிடையாது. ஆனால் ஒவ்வொன்றையும் நினைத்துக் கண்ணாடியைப்பார்த்துக்கொண்டே இருப்பதற்கு
அவளுக்கு மனசு வரவில்லை. அடுப்பில் பால் பொங்கத்தொடங்கிவிட்டது.
காலை முதல் நடுநிசி வரை ஓய்வில்லாமல்
வேலைசெய்து அவள் குடும்பத்தை வளர்த்து வந்தாள். மெலிந்து வெளுத்துப்போய் அங்கேயிங்கே
ஒடிந்து போனமாதிரியிருந்தது அவளது தேகம். ஆனால் அவள் ஒருதடவை கூட தளர்ந்து படுக்கையில்
விழவோ, ஆவலாதிகள் சொன்னதோ கிடையாது. அதனால் அவள் தண்ணீர் நிறைந்த குடங்களைத் தூக்கிக்கொண்டு
குளியலறைக்கு நடந்தலையும்போது அவளுடைய கணவனோ, வளர்ந்த பெரிய மகன்களோ, உதவி செய்ய முனைந்ததில்லை.
அவள் படிப்பும் நாகரீகமும் இல்லாதவள். வீட்டைப்பெருக்கித் துடைத்துச் சுத்தப்படுத்தவும்,
சமையல் செய்யவும், துணிமணிகளைத்துவைத்து இஸ்திரி போட்டு வைக்கவுமான அவளது திறமையைப்
பற்றி அவர்கள் எப்போதாவது இடையிடையில் புகழ்ந்து பேசுவார்கள். அந்தப்பாராட்டைக் கேட்கும்போதெல்லாம்
தன்னுடைய தேய்ந்த பற்களைக்காட்டி அவள் புன்சிரிப்பைத் தூவுவாள். ஒருதடவை அவளுடைய இளையமகன்
ஸ்கூலிலிருந்து வரும்போது அவளுக்காக ஒரு நெல்லிக்காயைக் கொண்டு வந்தான். அன்று அடுக்களை
இருட்டில் நின்று ஆனந்தக்கண்ணீர் சொரிந்தாள். நாளாவட்டத்தில் அவனுடைய பார்வையிலும்
அவள் ஒரு பிசாகி விட்டாள். ஸ்கூலில் நடக்கிற டிராமா பார்ப்பதற்கு அவளும் வருவதாகச்
சொன்னபோது,
“ அம்மா நீ வரவேண்டாம்.. எனக்கு
அவமானமாக இருக்கும்…”
என்று அவன் சொன்னான். அதற்கு அவள்,
“ ஏன் அப்படிச்சொல்றே..நான் பட்டுச்சேலை
கட்டிட்டு வரேன்.. என்னோட கல்யாணச்சேலை..”
என்று சொன்னான். அதற்கு அவன்,
“ இல்லை.. வேண்டாம்..”
என்று சொல்லிவிட்டான். மெலிந்த
கால்கள் இரண்டு அறைகளுக்குள்ளே அந்தச் சிறிய வீட்டில் ஓய்வில்லாமல் நடந்து கொண்டேயிருந்தன.
முடிவில் அந்த இயந்திரத்துக்கும் கேடு வந்தது. அவளுக்குக் காய்ச்சலில் ஆரம்பித்து வயிற்றில்
வலியும் துவங்கியது. இஞ்சிச்சாறும், மிளகுரசமும், அவளுக்கு உதவவில்லை. பத்தாவது நாள்
டாக்டரிடம் காண்பித்தபோது, அவர்
“ இவங்களை உடனே ஆஸ்பத்திரிக்குக்கொண்டு
போகணும்… இது சீரியஸான மஞ்சள்காமாலை கேஸ்..”
என்று சொன்னார். பாடப்புத்தகங்களூக்கு
நடுவில் உட்கார்ந்திருந்த மகன்கள் அதைக்கேட்டதும் நடுங்கினார்கள். ஒரு பணியாளர் அவளை
சக்கரக்கட்டிலில் படுக்கவைத்து தள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரி அறைக்குள் நுழைந்தபோது கண்களைத்திறந்த
அவள்,
“ அய்யோ பருப்பு கருகிப்போச்சு..”
என்று சொன்னாள். அவளுடைய கணவரின்
கண்கள் நனைந்தன.
No comments:
Post a Comment