Wednesday, 26 September 2018

பாம்புக்குத் தடை விதித்த ராஜா


பாம்புக்குத் தடை விதித்த ராஜா
உதயசங்கர்
பறம்பூர் நாட்டு ராஜாவான பழையனுக்குப் பாம்பு என்றால் அப்படி ஒரு பயம். அதனால் அவருடைய அரண்மனையைச் சுற்றி அகழி கட்டி அதில் தண்ணீர் விட்டு பாதுகாப்பாக இருந்தார். யாராவது அவரிடம் பாம்பு என்று சொல்லி விட்டாலே போது அப்படியே பதறி துள்ளிக்குதித்து உருண்டு விடுவார். இத்தனைக்கும் பாம்பை அவர் நேரில் பார்த்ததில்லை. அதனால் முக்கிய மந்திரியோ, விவசாய மந்திரியோ, காட்டிலாகா மந்திரியோ, வீட்டு மந்திரியோ, ரோட்டு மந்திரியோ, யாரும் ராஜா பழையனிடம் பாம்பு என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் அறிவியல் மந்திரி மட்டும் சொன்னார்.
“ இயற்கையில் எல்லோரும் சமமானவர்கள். பாம்பும் பல்லியும், பூச்சியும், புழுவும் மனிதனும்… எல்லோரும் சமமானவர்கள்.. ஒருவர் பாதையில் ஒருவர் குறுக்கிடாமல் இருந்தால் போதும்.. விபத்துகள் நேராது..”
அவர் சொன்னதை யாரும் கேட்கவில்லை. அவர் அரண்மனையிலிருந்து வெளியேறி விட்டார். பறம்பூர் விவசாய நாடு. மலையடிவாரத்தில் இருந்தது. எனவே அடிக்கடி காட்டிலிருந்து யானை, மிளா, மரைமான், காட்டுப்பூனைகள், காட்டு மாடுகள், நரி, காட்டு நாய்கள், நாட்டுக்குள் வந்து விடும். மக்கள் அந்த மிருகங்களை தாரை தப்பட்டை அடித்து காட்டுக்குள் விரட்டி விடுவார்கள். ராஜாவோ, மந்திரிகளோ, எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். அவர்கள் எல்லோரும் பத்திரமாக அரண்மனைக்குள் இருப்பார்கள்.
ஒரு நாள் ராஜா தன்னுடைய மாளிகைப்பூந்தோட்டத்தில் மாலைநடை நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சரக்கொன்றை மரத்தின் கிளையில் ஒரு கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. பச்சை நிறத்தில் அழகாக இருந்தது. அவருக்கு பச்சை நிறம் ரொம்பப்பிடிக்கும். அவர் அந்தக்கயிற்றைப் பிடித்து இழுத்தார். கையில் வழு வழு என்று நெளிந்தது. அவ்வளவு தான். பாம்பு! பாம்பு! பாம்பு! என்று அலறினார். கைகளை உதறு உதறு என்று உதறிக்கொண்டிருந்தார். அப்படியே மயங்கி விழுந்து விட்டார். அவர் உதறிய உதறில் பாம்பு எங்கேயோ போய் விழுந்து விட்டது.
ராஜா பழையன் மறுநாள் மாலை தான் கண்விழித்தார். எழுந்ததும் கேட்ட முதல் கேள்வியே
பாம்பு எங்கே? என்ற கேள்விதான்.
காட்டு மந்திரி உடனே,
“ அதை அப்பவே கொன்னு புதைச்சாச்சு ராஜாவே! “
என்று சொன்னார். ராஜா உடனே ஆணையிட்டார்.
” பறம்பூர் நாட்டில் ஒரு பாம்பு கூட இருக்கக்கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்…”
அதைக்கேட்ட மந்திரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முக்கிய மந்திரி நாடு முழுவதும் பாம்புகள் ஊருக்குள் வராமலிருக்க யாகம் நடத்தச்சொன்னார். உடனே தெருவுக்குத் தெரு ஆல மரக்குச்சிகளையும், அரசமரக்குச்சிகளையும் போட்டு லிட்டர் கணக்கில் நெய்யை ஊற்றி வாயில் நுழையாத மந்திரங்களைச் சொல்லி யாகங்களை நடத்தினார்கள். புகை மூட்டத்தில் அங்கங்கே பொந்துகளிலும், பொடவுகளிலும் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து தெருக்களில் அலைய ஆரம்பித்தன. யாகம் நடத்தியவர்கள் அலறியடித்து ஓடி விட்டார்கள். அவர்கள் ஓடுவதைப் பார்த்த பறம்பூர் நாட்டு மக்கள் உருண்டு விழுந்து சிரித்தனர். இப்படி முக்கிய மந்திரி கஜானாவில் பாதியைக் காலி பண்ணினார்.
காட்டு மந்திரி பாம்பு பிடிப்பவர்களைக் கொண்டு மகுடி ஊதி பாம்புகளைப் பிடிக்கப்போகிறேன் என்று ராஜாவிடம் சொன்னார். பாம்பு பிடிப்பவர்கள் தெருக்களில் மகுடி ஊதினார்கள். அவர்களைத் தெரிந்த மாதிரி பத்து பாம்புகள் அவர்களுக்கு முன்னால் ஊர்ந்து வந்து தலையசைத்து ஆடின. பாம்பு பிடிப்பவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையில் அந்தப்பாம்புகளைப் பிடித்து அடைத்தார்கள். மறுநாளும் அவர்கள் வேறு தெருவுக்குப் போய் ஊதினார்கள். அதே பத்து பாம்புகளைப் பிடித்தார்கள். இன்னொரு தெருவுக்குப் போனார்கள். அங்கேயும் அதே பத்து பாம்புகளைப் பிடித்தார்கள். இப்படி பத்து பாம்புகளை வைத்து ஆயிரம் பாம்புகளைப் பிடித்ததாகக் கணக்குக் காட்டினார் காட்டு மந்திரி.
ரோட்டு மந்திரி சும்மாயிருப்பாரா?  ஊரில் உள்ள தெருக்களில் எல்லாம் பாம்புக்கோவில்களைக் கட்டினார். அந்தக்கோவில்களில் மூன்று வேளையும் பூஜை நடத்தச்சொன்னார். மக்கள் அனைவரும் அந்தக்கோவில்களுக்குச் சென்று வழிபடவேண்டும். பாம்புகளைப்பற்றிய கட்டுக்கதைகளைத் தொலைக்காட்சியில் மெகாசீரியல்களாக எடுத்து வெளியிடச் செய்தார். அதில் கஜானாவிலிருந்து கால்வாசியைக் காலி பண்ணினார்.
விவசாயமந்திரியும் விவசாயிகள் இனிமேல் தங்களுடைய நிலங்களில் விதைக்கக்கூடாது. எந்தப்பயிரையும் பயிர் செய்யக்கூடாது. பயிர் செய்தால் தானே தவளைகளும், எலிகளும், பூச்சிகளும், சிறுபறவைகளும் வருகின்றன. பின்னாலேயே அவற்றைப் பிடித்துத் தின்பதற்காகப் பாம்புகளும் வருகின்றன. எனவே பயிர் செய்யாமல் நிலத்தைத் தரிசாகப் போடுங்கள் என்று ஆணையிட்டார். மக்கள் மன்றாடினார்கள். விவசாயம் இல்லை என்றால் மக்களுக்கு உணவு கிடைக்காது. அவர்கள் மட்டும் இல்லை ராஜா, மந்திரிகள், மக்கள் யாருமே வாழமுடியாது. என்றார்கள்.
” உணவு தானியங்களை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம்.” என்று எகத்தாளமாகப் பதில் சொன்னார்.
பறம்பூர் நாட்டில் யாரும் விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயம் செய்தால் தண்டனை. நாட்டில் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. மக்கள் அரண்மனைக்குச் சென்று போராட்டம் செய்தனர். ராஜா பழையனுக்கு என்ன செய்ய என்று புரியவில்லை. அந்தப்போராட்டத்துக்குத்  பழைய அறிவியல் மந்திரி தலைமை தாங்கி நின்றார். வேறுவழியில்லாமல்,
“ என்ன செய்ய வேண்டும் அறிவியலாளரே! “
என்று ராஜா பழையன் கேட்டார். அறிவியல் மந்திரி உடனே,
 பாம்புகள் மிகவும் குறைவான அறிவுத்திறன் கொண்டவை ராஜா. அவைகளுக்குக் காது கேட்காது. எந்த உணவையும் மென்று தின்கிற மாதிரி அவற்றின் வாயோ, தொண்டையோ கிடையாது. உணவுக்காகவும் பாதுகாப்புக்காவும் மட்டுமே அவை கடிக்கும். ஞாபகசக்தி கிடையாது. எனவே பழிவாங்க, ஞாபகம் வைத்திருக்கத்தெரியாது. எல்லாப்பாம்புகளுக்கும் விஷம் கிடையாது. நாம் அதன் வழியில் குறுக்கிடக்கூடாது. அவைகளும் நம்வழியில் குறுக்கிடாது. இயற்கையில் யாரும் யாரைப்பார்த்தும் அச்சப்படத்தேவையில்லை…….” என்று விளக்கமாகச் சொன்னார்.
பறம்பூர் நாட்டு ராஜா பழையனுக்கு புரிந்து விட்டது. பறம்பூர் நாட்டு மக்களும் பாம்புகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நன்றி - மாயாபஜார்

No comments:

Post a Comment