பேசாநாட்டில் பேசும்கிளிகள்
உதயசங்கர்
பெரியமலை நாடு திடீரென்று ஒரு
நாள் பேசாநாடாக மாறி விட்டது. ஏன் தெரியுமா? பெரியமலை நாட்டு ராஜா இடிவர்மன் ஏராளமான
வரிகளைப் போட்டு மக்களைக் கசக்கிப்பிழிந்து கொண்டிருந்தான். ஏற்கனவே சிரமத்தில் இருந்த
மக்கள் அந்த வரிகளைக் கட்ட முடியாமல் அவதிப்பட்டனர். நாட்டில் குடியிருப்பதற்கு நாட்டுவரி,
வீட்டில் குடியிருப்பதற்கு வீட்டுவரி, நிற்பதற்கு நில்வரி, உட்காருவதற்கு உட்கார்வரி,
நடப்பதற்கு நடவரி, படுத்து உறங்குவதற்கு படுவரி, உறங்கும்போது கனவு கண்டால் கனவுவரி,
குழந்தை பிறந்தால் பிறவரி, யாராவது இறந்து போனால் இறவரி, இளைஞர்களுக்கு இளமைவரி, திருமணம்
முடித்தால் திருமணவரி, குடும்பம் நடத்தினால் குடும்பவரி, நோய்வந்தால் நோய்வரி, நீண்டநாள்
உயிருடன் இருந்தால் முதுமைவரி, பள்ளிக்கூடம் போனால் பள்ளிக்கூடவரி, கல்லூரிக்குப்போனால்
கல்லூரி வரி, விளையாட்டு வரி, பொருளை விற்றால் விற்பனை வரி, பொருளை வாங்கினால் வாங்கும்
வரி, உணவு வரி, குப்பை வரி, என்று ஆயிரத்து ஒன்று வரிகளை ராஜா இடிவர்மன் போட்டிருந்தார்.அப்படி
வரி கட்டாதவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வரிகளைக்கட்ட முடியாத பெரியவர்கள், ஆண்கள்,
பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், வியாபாரிகள், எல்லோரும் தனித்தனியாக ராஜா இடிவர்மனின்
அரண்மனைக்குப் போய் முறையிட்டனர்.
வேண்டாம் ராஜா இந்த வரிகள் ராஜாவே
உயிர் போகுது எங்களுக்கு ராஜாவே
நாட்டு மக்களை நினைச்சுப்பாருங்க
ராஜாவே
நல்லது செய்ய முடிவெடுங்க ராஜாவே
ராஜா இடிவர்மனுக்குக் கோபம் வந்து
விட்டது. அவனை எதிர்த்து பிறந்த குழந்தைகள் கூட அழுது போராட்டம் செய்வதைப்பார்த்து
அடக்க முடியாத சினம் வந்து விட்டது. உடனே என்ன செய்தார் தெரியுமா? ஒரு நாள் ராத்திரி
பனிரெண்டு மணிக்கு இனிமேல் யாரும் பேசக்கூடாது என்று ராஜா இடிவர்மன் சட்டம் போட்டு
விட்டான். அந்தச் சட்டத்தை மாநகரங்களிலும், நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும்,
தெருக்களிலும், வீடுகளிலும், முரசறைந்து அறிவித்தான். துண்டறிக்கைகளாகக் கொடுத்தான்.
தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ்ஸாக அறிவிப்பு செய்தான். அந்த செய்தி என்னவென்றால்,
“ இதனால் சகலமானவர்களுக்கும் பெரிய
நாட்டு ராஜாதிராஜ ராஜகுல திலக இடிவர்மன் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால், இந்த நிமிடம்
முதல் பெரிய நாட்டு மக்கள் யாரும் யாருடனும் பேசக்கூடாது. சாப்பிடுவதற்கு மட்டும் நீங்கள்
வாய் திறக்கலாம். மற்றநேரங்களில் எல்லோருடைய வாய்களிலும் பேசாப்பூட்டு பூட்டப்படும்.
அவர்கள் பேசாமல் இருப்பதை கண்காணிப்பதற்காக ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு காவலர் இருப்பார்.
அதையும் மீறி யாராவது ஒரு வார்த்தை பேசினாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்
அல்லது நாடு கடத்தப்படுவார்கள் “
அறிவிப்பு செய்த நாளில் இருந்து
பெரியமலை நாடு பேசாநாடாக மாறிவிட்டது. ஒரே அமைதி. அமைதி. அமைதி. யாரும் யாருடனும் பேசவில்லை.
எல்லோரும் சைகையில் பேசிக்கொண்டார்கள். அதையும் மீறி ஒன்றிரண்டு பேர் சாப்பிடும்போது
குழம்பு நல்லாருக்கு என்று சொன்னதுக்கும், இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க என்று சொன்னதுக்கும்
கைது செய்யப்பட்டார்கள். அப்புறம் என்ன?
எல்லோரும் வாயில் பூட்டோடு அலைந்தார்கள்.
யாருமே யாருடனும் பேசமுடிய வில்லை. எல்லோருக்கும் பேச்சு மறந்து விட்டது. காவலர்களும்
பேச மறந்தனர். பிறந்த குழந்தைகளும் பேச்சுச்சத்தம் கேட்காமல் வளர்ந்ததால் பேசவில்லை.
எல்லோரும் கைஜாடை போட்டே பேசிக்கொண்டார்கள். பேசாநாட்டு ராஜா இடிவர்மனுக்கும் அவனது
மந்திரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவர்களை எதிர்த்து பேச யாரும் இல்லை. அவர்கள்
இன்னும் என்ன வரிகளைப் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் யாருக்கும் தெரியாமல் தினம்
இரவு இரண்டு மணிக்கு மக்கள் எல்லோரும் பேசாநாட்டின் கிழக்கு திசையிலிருந்த பெரிய மலைக்குப்
போய் வந்தார்கள். காவலர்கள் கேட்டதுக்கு
“ சும்மா ஒரு நடை “ என்று சொன்னார்கள்.
சில நாட்கள் கழித்து காவலர்களும் கூட அங்கே போய் வர ஆரம்பித்தனர். அப்படி என்ன அங்கே
நடந்தது? யாரும் யாரிடமும் சொல்லவில்லை. அவர்கள் தான் பேசக்கூடாதே.
ஒரு நாள் காலையில் ராஜா இடிவர்மன் அவனது அரண்மனைத்தோட்டத்தில்
நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு மாமரத்திலிருந்து
முட்டாள் ராஜா இடிவர்மன்
முரட்டு ராஜா இடிவர்மன்
சட்டம் போட்டான் இடிவர்மன்
சறுக்கி விழுந்தான் இடிவர்மன்
மக்களைப் பகைத்தான் இடிவர்மன்
மண்ணாய்ப்போவான் இடிவர்மன்
என்று ஒரு பாட்டு கேட்டது. ராஜா
இடிவர்மன் சுற்றிச்சுற்றிப்பார்த்தான். மாமரத்தின் உச்சிக்கிளையில் ஒரு கிளி உட்கார்ந்து
பாடிக்கொண்டிருந்தது. ராஜா இடிவர்மனுக்குக் கோபமானகோபம். அந்தக்கிளியை விரட்ட கீழே
கிடந்த கல்லை எடுத்து எறிந்தான். அவ்வளவு தான். அந்தத்தோட்டத்தில் இருந்த குயில், சிட்டுக்குருவி,
தவிட்டுக்குருவி, சாம்பல்புறா, மாடப்புறா, மணீப்புறா, செம்போத்து, காக்கா, வாத்து,
அன்னம், மைனா, மயில், தேன்சிட்டு, தூக்கணாங்குருவி, தையல்சிட்டு, கொண்டைக்குருவி, பனங்காடை,
மீன்கொத்தி, மரங்கொத்தி, என்று எல்லாப்பறவைகளும் சேர்ந்து பாட ஆரம்பித்தன. பகலில் தூங்கிக்கொண்டிருந்த
ஆந்தை கூட முழித்துப்பாடியது. பெரிய புயல் வீசியதைப்போல இருந்தது அந்தக்குரல். அதைக்கேட்டு
பயந்து போன இடிவர்மன் அரண்மனைக்குள் ஓடினான்.
அரண்மனைக்கு உள்ளேயும் அந்தப்பாட்டு
கேட்டது. அவன் உற்றுக்கேட்டான். அது மக்களின் குரல். பார்த்தால் மக்கள் அனைவரும் ஆண்கள்,
பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், காவலர்கள், நாய்கள், பூனைகள், பன்றிகள், மாடுகள்,
ஆடுகள், அணில்கள், ஓணான்கள், எறும்புகள், ஈக்கள், கொசுக்கள், என்று ஒரு பெரும்படையே
திரண்டு வந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் முன்னால் மக்கள் எல்லோருக்கும் பேச்சு
மறந்து விடாமல் இருக்கப் பெரியமலையில் பயிற்சி கொடுத்த இளங்குமரன் வந்து கொண்டிருந்தான்.
மக்கள் திரளைப் பார்த்து “ தப்பித்தோம்
பிழைத்தோம்” என்று ராஜா இடிவர்மனும் அவனது மந்திரிகளும் அரண்மனையின் பின்வாசல் வழியே
ஓடினார்கள். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேசாநாடு மறுபடியும் பெரியமலை நாடாகி விட்டது.
நன்றி - வண்ணக்கதிர்
No comments:
Post a Comment