உதயசங்கர்
முடிவிலியாக ஓடிக் கொண்டிருக்கும் காலம் தனக்கான ஆளுமைகளை வரலாற்றின் வழி உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. காலத்தின் குரலாய் கலைஞனே இருக்கிறான். அவனே இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை ஜீவராசிகள் மீதும் பேரன்பு செலுத்துகிறவனாக இருக்கிறான். பிரதிபலன் பாராத பேராறாக ஓடுகிறான். தன்னுடைய சிறிய கைகளினால் இந்தப் பிரபஞ்சத்தையே அரவணைக்கும் பேராவல் கொள்கிறான். உயிர்களின் மீது கொண்ட தீராத காதலினால் பாடல்களைப் பாடிக் கொண்டேயிருக்கிறான். அவனுக்கு எல்லாஉயிர்களும் மகிழ்வோடு வாழவேண்டும் என்பதே லட்சியம். ஏற்றத்தாழ்வில்லாத, சமத்துவமிக்க, யாரும் யார் மீதும் ஒரு துரும்பைக் கூட போடாத, போட்டிகளற்ற, சமநிலை தவறாத, ஜாதி,மதமாச்சரியங்களற்ற, மனிதன் தான் மனிதனாக வாழ்வதில் பெருமிதம் கொள்கிற ஒரு அழகிய உலகமே அவன் கனவு. அந்த கனவு நனவாக அவன் தன் கலையின் மூலம் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறான். மனிதமன இருளை, இருட்குகையினுள் அடைந்துகிடக்கும் மனவக்கிரங்களை தன் படைப்புகளில் ஆராய்ச்சி செய்கிறான். நாமே அறியாத நம் மனதின் அத்தனை மூலைமுடுக்குகளிலும் அவன் பயணிக்கிறான். அங்கே கொட்டிக் கிடக்கும் சாக்கடையையும், சகதியையும், அள்ளியெடுத்து வெளியே எறிந்து சுத்தப்படுத்துகிறான். அங்கே கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்.
இந்த பிரபஞ்சத்தை நேசிக்கும் கலைஞன் அதற்காகத் தன்னையே விலையாகக் கொடுக்கிறான். தன் வாழ்வை அர்ப்பணம் செய்கிறான். உலகில் நிகழும் அத்தனைதுயரங்களையும் அவனே அனுபவிக்கிறான். பசியுடன் ஒருவன் இந்த உலகில் இருந்தால் அதற்காக இந்த ஜெகத்தினை அழிக்கும் கோபம் கொள்கிறான். மனித இழிவுகளுக்காக வருந்துகிறான். மனித அவலங்களுக்காக புலம்புகிறான். தன்னைப் பற்றியோ, தன் சுற்றம் பற்றியோ கவலைகொள்ளாமல் எப்போதும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றியே கவலைப்படுகிறான் கலைஞன். அரசியல்வாதிகளைப் போல அதிகாரத்துக்காக அலைவதில்லை. மக்கள்மீது போலியான அன்பைப் பொழிவதில்லை. அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு குணமும், அதிகாரத்தில் இல்லாதபோது ஒரு குணமும் கொள்வதில்லை கலைஞன். அவனுடைய அன்பின் நதி எல்லோரையும் அணைத்து ஈரமாக்குகிறது. எல்லோர் மனதிலும் ஈரத்தை ஊற்றெடுக்க வைக்கிறது. எனவே தான் காலத்தில் உருவாகிற கலைஞன் காலத்தைத் தாண்டியும் வாழ்கிறான். எப்படி வாழ்கிறான் கலைஞன்? அறம் சார்ந்த மனிதமதிப்பீடுகளைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்துவதின் மூலம், காலம் அவனை, அவனுடைய படைப்புகளைப் பொக்கிஷமாகத் தன் இதயத்தில் பாதுகாத்து வைக்கிறது.
அப்படி காலம் போற்றும் கலைஞர்களில் இந்தியத் துணைக்கண்டத்திலேயே தலைசிறந்த படைப்பாளியான சாதத் ஹசன் மண்ட்டோ மிக முக்கியமானவர். உருது இலக்கியத்தின் உன்னதமான படைப்பாளியான மண்ட்டோ தன்னை அழித்து தன் படைப்புகளை உருவாக்கியவர். 1912 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி பிறந்த அவருடைய நூற்றாண்டு இதோ துவங்கியிருக்கிறது. ஆனால் அவருடைய படைப்புகளில் அவர் எதையெல்லாம் பற்றி எழுதியிருந்தாரோ அந்தத் துயரங்கள் எல்லாம் தீர்ந்து விடவில்லை. மாறாக இன்னும் அபாயகரமாகியிருக்கிறது. மதவெறியெனும் பைத்தியக்காரநோய் விடுதலை அடையும் முன்னரே ஒன்றாகவிருந்த இந்தியாவைப் பீடித்து விட்டது. பிரித்தாளும் பிரிட்டிஷ் சூழ்ச்சியாலும், சுயநலமிக்க அரசியல் சக்திகளாலும் உரமேற்றி வளர்க்கப் பட்ட அந்த நோய் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது உச்சக்கட்டத்தில் தலைவிரித்தாடியது. சாமானியர்களைக் கபளீகரம் செய்தது. கண்ணில் பட்ட எல்லாவற்றையும் சூறையாடியது. கொள்ளையடித்தது. கொலைகளைச் செய்தது. காட்டுமிராண்டிகளை விட கொடூரமாக தன் சக மனிதர்களையே கொன்று குவித்தது. பெண்களின் உடல் மீது மதச்சின்னங்களை வரைந்து மகிழ்ந்தது. குழந்தைகளைக் காவு கொண்டது. அந்தந்த மதத்தில் இருப்பதைத் தவிர வேறெந்தப் பாவத்தையும் அறியாத சாதாரண மக்களை மதவெறிப்பைத்தியம் தன் பலிபீடத்தில் பலி கொண்டது. அப்போது எந்த தெய்வமும் வந்து யாரையும் காப்பாற்றவில்லை.
மதம் என்ற ஒரு நம்பிக்கைக்காக இத்தனை உயிர்களைப் பலி கொண்ட பிரிவினையின் துயரங்களைப் பற்றி சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகளை வாசிக்கும் ஒருவருக்கு மதத்தின் மீதான நம்பிக்கையே போய் விடும். ஆனால் மண்ட்டோவை பிரிவினை காலப் படைப்பாளியாகச் சுருக்கி விடமுடியாது. கொந்தளிக்கும் காலகட்டத்தில் கொந்தளிக்கும் மனதோடு நிலை தப்பி வாழ்ந்த ஒரு படைப்பாளி மண்ட்டோ. அவருடைய முதல் சிறுகதை ’தமாஷா’ ஜாலியன் வாலாபாக் படுகொலையை அடிப்படையாகக் கொண்டது. அதிலிருந்து துவங்கிய மண்ட்டோவின் இலக்கியப்பயணம் சிறுகதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடை, திரைக்கதை, என்று தொடர்ந்து கொண்டிருந்தது. யாராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத படைப்பாளியாக மண்ட்டோ இருந்தார் என்பதே அவர் அவருடைய மனசாட்சியின் குரலைப் பின்பற்றினார் என்பதற்கு ஆதாரம். அவருடைய சிறுகதைகளுக்காக அவர் பலமுறை நீதிமன்றத்தில் ஏறியிருக்கிறார். அவரைக் கம்யூனிஸ்ட் எழுத்தாளன் என்று அரசாங்கம் குற்றப்படுத்தியது. செத்துப்போனவர்களைப் பற்றி எழுதிச் சம்பாதிப்பவன் என்றும், ஆணவம் கொண்டவன் என்றும், பிற்போக்குவாதியென்றும், ஆபாசஎழுத்தாளன் என்றும், எல்லாவிதமாகவும் மண்ட்டோ விமரிசிக்கப்பட்டார். இந்த எல்லாவிமரிசனங்களையும் புறங்கையினால் தள்ளி விட்டு உண்மையை உரத்துச் சொன்ன கலைஞன் மண்ட்டோ.
1936 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உயிர்த் துடிப்போடு இயங்கி வந்தார் மண்ட்டோ. அதுவரை மேட்டுக்குடி மக்களின் வியர்வைப்புழுக்கத்தையே இலக்கியமாகக் கருதியிருந்த நிலையில் மண்ட்டோ அவருடைய படைப்புகளில் சாதாரண அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல்தொழிலாளிகள், என்று சாமானியர்களின் வாழ்வை, அவர்கள் படும் அவலங்களை வலுவாக வாசகமனம் அதிரும்படி சொன்னவர். சமன்குலைந்த சமூகத்தில் சமன் குலையச்செய்யும் எழுத்தே உண்மையான எழுத்து. அப்படிப்பட்ட சமன் குலையச் செய்யும் எழுத்துகளே வாசகனைத் தொந்திரவு செய்து இந்த நிலை மாற ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டுகிறது. மாண்ட்டோ தன் வாழ்நாள் முழுவதும் எல்லாஅதிகாரங்களையும் எதிர்த்தவன். நிறுவனக்களுக்கு எதிரானவன். நிறுவப்பட்ட எல்லாகருத்துகளுக்கும் எதிராகக் கலகம் செய்தவன். எப்போதும் சாதாரண அடித்தட்டுமக்களின் பக்கமே நின்று குரல் கொடுத்தவன்.
சுதந்திரப்போராட்டகாலத்தில் இந்திய சமூகத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதற்கான வரலாற்று ஆவணமே மண்ட்டோவின் படைப்புகள். சுயநல அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் பிளவுண்ட இந்து, முஸ்லீம், சமூகமக்கள் எப்படியெல்லாம் மன அலைக்களிப்புகளூக்கு ஆளானார்களோ அத்தனை அலைக்களிப்புகளுக்கும் மண்ட்டோவும் ஆளானார். அதனால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவிலிருப்பதா அல்லது பாகிஸ்தானுக்குப்போவதா என்ற மனப்போராட்டத்தில் இருந்தார். இறுதியில் பாகிஸ்தானுக்குச் சென்ற அவரை சுதந்திரபாகிஸ்தானும் அவருடைய படைப்புகளின் வெக்கை தாளமாட்டாமல் அடிக்கடி நீதிமன்ற கூண்டில் ஏற்றியது. ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை வாசிக்கும் போது மண்ட்டோ மனம் கொதித்துப் போவார். அவருடைய கொந்தளிப்பை மதுவே கொஞ்சம் சமனப்படுத்தியது. சுமார் இருநூற்றைம்பது சிறுகதைகளுக்கும் மேல் எழுதிய மண்ட்டோவின், மிகச்சிறந்த சிறுகதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகளைத் தொகுத்து மொழிபெயர்த்து அருமை நண்பர் ராமாநுஜம் தமிழில் மண்ட்டோ படைப்புகள் என்ற பெரும் நூலாகக் கொண்டு வந்திருக்கிறார். தமிழிலக்கியத்துக்கு ராமாநுஜம் பெருங்கொடை அளித்துள்ளார் என்றால் மிகையில்லை.
இதோ மண்ட்டோவின் கதைகள் என் முன்னே விரிகின்றன. மிகச்சுத்தமான வெள்ளை பருத்திப்பைஜாமாவும் குர்தாவும் அணிந்து அவருடைய வீட்டில் புத்தகங்கள் குவிந்திருக்கும் மேஜையின் அருகிலுள்ள பெரிய நாற்காலியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறார். கையில் எழுதும் அட்டையுடனும் பேனாவுடனும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயந்தவரல்ல. அவருடைய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். ’காலித்’தின் மும்தாஜ், ’அவமானத்தில்’ வரும் பாலியல்தொழிலாளி ஜமுனா, தன் மகளைத் தேடிக் கண்டடையும் ’ திற” வில் வரும் சிராஜூதின், ’சிவப்பு நிறமழைக்கோட்டணிந்த பெண் ‘ணில் வரும் ஓவியக்கலைஞர் மிஸ். எஸ், ‘மோஸலில்” வரும் மோஸல், குருமூக்சிங்கின் கடைசி விருப்பத்தில் வரும் குருமூக்சிங், எத்தனையெத்தனை கதாபாத்திரங்கள் மண்ட்டோவின் ரத்தத்திலிருந்து உருவானவை. சமூக அவலங்களைக் கண்டு அவருடைய துயரப்பெருமூச்சாய் வெளிவந்தவை. நம் மனசாட்சியை உலுக்கி நம் உறக்கம் கெடுப்பவை. எல்லாம் சரியாகவே இருக்கிறது என்ற மொண்ணைத்தனத்தின் மீது சவுக்கடி கொடுப்பவை. மண்ட்டோ கலைந்த தன் தலைமுடியைக் கோதி விடுகிறார். அருகில் உள்ள பீரோவிலிருந்து விஸ்கியை எடுத்து ஒரு மிடறு விழுங்குகிறார். மறுபடியும் யோசித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கல்லறைக்குறிப்பை எழுதவே அவர் உட்கார்ந்திருக்கிறார். எத்தனையோ முறை மருத்துவர்கள் அவருக்குத் தேதி குறித்தார்கள். ஆனால் எப்போதும் கலகம் செய்வதைப் போல மரணத்திடமும் கலகம் செய்து தப்பித்துக் கொண்டேயிருந்தார். அவருக்குத் தெரியும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ரெம்ப நாளைக்கு நீடிக்காது என்று. எவ்வளவு நாளைக்கு நீடிக்கமுடியுமோ அவ்வளவு நாளைக்குத் தள்ளிப்போடலாமே என்று முடிவு செய்திருந்தார். அவ்வப்போது அவர் இருமும்போது ரத்தமும் சேர்ந்து வருகிறது.. சாதத் ஹசன் என்ற மனிதனை, அவனுடைய சிந்தனைகளை, செயல்களை அவனுடைய குடும்பத்தார், நண்பர்கள், யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாகவே நினைத்தார்கள். ஆனால் மண்ட்டோ என்ற படைப்பாளியை, தன் ஊனை உருக்கி, உயிரைச் செலுத்தி, அவன் படைத்த மகத்தான படைப்புகளை உலகம் இன்னமும் கொண்டாடுகிறது. அது மண்ட்டோவுக்கும் தெரியும். அதனால் தான் அவன் தன்னுடைய கல்லறைக்குறிப்பை தான் இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே எழுதமுடிந்திருக்கிறது.
” இங்கே கிடக்கிறான் சாதத் ஹசன் மண்ட்டோ.. அவனுடன் சிறுகதை கலையின் அனைத்து மர்மங்களும், கலைத்திறமும் புதைக்கப்பட்டு விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன் கடவுளை விட மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளன் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான். “
கடந்த இருபதாண்டுகளில் மீண்டும் ஜாதியும் மதமும் தங்கள் பைத்தியக்காரத் தொற்றுநோயைப் பரப்பி வருகின்றன. அடையாளங்கள் மீதான மோகம் பெருகி வருகிற காலமாக இருக்கிறது நம் காலம். ஒரே சமயத்தில் உலகமயமாக்கல் எல்லாவற்றையும் சந்தைமயமாக்குவதற்காக பன்முகஅடையாளங்களை அழிக்க முயற்சிப்பதும், அதே நேரம் சனாதனம் காலாவதியாகிப் போன பழைய அடையாளங்களைப் புணருத்தாரணம் செய்யவுமான முயற்சிகள் நடக்கின்றன. இந்த நேரத்தில் மண்ட்டோ மிக முக்கியமாகத் தேவைப்படுகிறார். மனிதத்திற்கு எதிராக போர் தொடுப்பவர்களோடு போரிட மண்ட்டோவின் படைப்புகளே நமக்கு பேராயுதம். அந்த ஆயுதங்களை நாம் தரித்துக் கொள்வோம். அந்த ஆயுதங்களை நமக்குப் படைத்தளித்த மண்ட்டோவைப் போற்றுவோம். மண்ட்டோவின் நூற்றாண்டில் அவர் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்போம்.மண்ட்டோமாமா நீங்கள் உங்கள் படைப்புகளில் சிந்திய ரத்தம் வீணாகாது. வீணாகாது. வீணாகாது. எங்கள் மண்ட்டோமாமா!
நன்றி- மீடியா வாய்ஸ்
Hello Sir,
ReplyDeletePlease let me know if there are any tamil translation collection available on Mando's stories.
Trying to buy one from Chennai book fair.
Thanks
Gopi