Saturday 2 June 2012

விளையாட்டின் உளவியல்

 

உதயசங்கர்

 

“ஓடி விளையாடு பாப்பா - நீpictures2

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா”

மகாகவி பாரதியின் ஒவ்வொரு வரியிலும் ஓராயிரம் அர்த்தங்கள் துடிப்பது தெரிகிறது. ஓராயிரம் கட்டுரைகளில் விரித்து விரித்து சொல்வதை ஓரிரு வரிகளில் செறிவுடன் சொல்கிறவன் கவிஞன். அதிலும் பாரதி மகாகவி. அவன் கவிதைச் சொற்கள் ஒவ்வொன்றிலும் சமூக உணர்வு பொங்கித் திளைக்கும். எத்தனைமுறை படித்தாலும் அத்தனை ஆழம் இழுத்துச் செல்லும் மகாகவியின் கவிதைகள். மேலே கண்ட பாடலில் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஓடியாடி விளையாடுவது எத்தனை முக்கியம் என்பதை இரண்டாவது வரியில் ஓய்ந்து, சோம்பேறியாக இருக்கக்கூடாது என்று சொன்ன பாரதி அடுத்த வரியில் கூடி விளையாடச் சொல்கிறானே அதோடு யாரையும் நிந்திக்காமலிருக்கவும் கேட்கிறான். ஏன் கூடி விளையாட வேண்டும்?

இன்று பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களின் கட்டுப்பாடுகளினால் வீட்டைவிட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே தனிமையில் தனக்குத் தானே பேசிக்கொண்டு தனக்குத் தானே விளையாடிக் கொண்டு பத்திரமாய் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பதைத் தவிர வேறு எந்த சமூகச் செயல்பாடுகளுமின்றி தனிமை, வீட்டில் பெரியவர்களின் கட்டுப்பாடுகளினால் தனிமை. இப்படி உள்ளும் புறமும் தனிமையில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

விலங்குகள், பறவைகள், பூச்சிகள் முதல் மானுட சமூகம் வரை கூடி வாழ்தல் என்பது இயற்கையின் உள்ளுணர்வினால் விளைந்த செயல்பாடு. அது தங்களை இந்த பூமியில் வாழத்தகுதியானவர்களாக்குகிற இயற்கை வாழ்முறை. கூடி வாழ்தலில் தான் ஒரு சமூகம் உயிர்த்திருக்கிறது. கூடி வாழ்வதற்கான கூட்டுச் செயல்பாட்டுக்கான சில அடிப்படை உளவியல் இயல்புகளை எல்லா உயிரினங்களுமே இயல்பாகக் கொண்டிருந்தாலும் மானுட இனம் அதை மிகச் சிறப்பாகவே தன் பகுத்தறிவின் துணைகொண்டு தன் சமூகத்துக்குப் பயிற்றுவிக்கிறது. அது மனதுக்கும், உடலுக்கும் உரமூட்டுவதாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக சமூகத்தின் அங்கத்தினரான ஒவ்வொருவரையும் பண்படுத்துகிறது. அதற்கு குழந்தைப்பருவத்திலேயே சமூகம் கண்ட வழிமுறை தான் விளையாட்டு கூடி விளையாடும் விளையாட்டுகளில் குழந்தையின் மனம் களிப்புறுகிறது. எந்த கட்டுப்பாடுமின்றி தன்னைத் தானாகவே உணர்ந்து, தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, மொத்தத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படும் செயல்களில் விளையாட்டுக்கு முக்கியப்பங்கு உண்டு.

அதுமட்டுமல்ல. புறஉலகின் எல்லா நெருக்கடிகளிலிருந்தும், பெற்றோர்ககளின், ஆசிரியர்களின், வீட்டுப்பாடச்சுமையின் மதிப்பெண் பூதங்களிலிருந்து விடுபட்டு தங்களுடைய இயல்பான படைப்பூக்க உணர்வை மீட்டெடுக்கவே குழந்தைகள் விளையாடுவதற்கு பேராவல் கொள்கின்றனர். படைப்பூக்க உணர்வை மீண்டும் மீண்டும் உருவாக்குவதின் மூலம் கிடைக்கும் பரவசத்தை அனுபவிக்கத் துடிக்கின்றனர். இதோடு சமூகத்தில் அவர்கள் இயைந்து வாழ விளையாட்டு அவர்களை பண்படுத்துகிறது. தன் வயதொத்த குழந்தைகளோடு கூடி விளையாடும்போது கூட்டுச்செயல்பாடுக்கான விவேகமும், கூட்டுணர்வும் ஏற்படுகிறது. கூடிச்சேர்ந்து செய்வதில் ஒரு தார்மீக நெருக்கமும், அழகியலும் தோன்றுகிறது. அதோடு கூட்டுச்செயல்பாட்டிலேயே தனித்துவம் காணும் தனிப்பாணியும் உருவாகிறது.

கூட்டுச் செயல்பாட்டை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்பும் இயல்பாகவே தோன்றுகிறது. இந்தத் தலைமைப்பண்பின் தனித்தகுதியாக எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்கிற திறன் வளர்கிறது. பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதால், அன்பும், நட்பும் பெருகித் தழைக்கிறது. விளையாட்டுச் சண்டை என்பது விளையாட்டுச் சண்டையாகவே முடிந்து விடுகிறது. குழந்தைகளால் நீண்ட நேரத்திற்குக் கோபத்தையும், வெறுப்பையும், கசப்பையும் வளர்க்க முடியாது. சிறிது நேரத்திலேயே பழம்விட்டு சேர்ந்து கொள்வார்கள். யார் பக்கம் நியாயம் என்று தர்க்கரீதியாக யோசிக்காமல் யார் அதிகமாகப் புண்பட்டிருக்கிறார்களோ, யார் அதிகம் வருத்தமடைந்திருக்கிறார்களோ அவர்களுக்காக விட்டுக்கொடுப்பார்கள். இந்த விட்டுக்கொடுத்து இயைந்து வாழ்கிற பண்பு விளையாட்டின் மூலமே கிடைக்கிறது. இதற்கேற்ப இருவர் விளையாடும் விளையாட்டுகளிலிருந்து பத்துபேர் விளையாடும் விளையாட்டுகள் வரை அந்தந்தக் கால சீதோஷ்ண நிலைமைகளுக்கேற்பவும், அந்தந்தப் பகுதி மண், வளம், வாய்ப்புகளுக்கேற்பவும் இருந்து வந்தன. ஆனால் இப்போது அந்தப் பன்முக விளையாட்டுகளின் களத்தை கிரிக்கெட் என்ற ஒற்றை விளையாட்டு அபகரித்துக்கொண்டது. தொலைக்காட்சியின் மூலம் திணிக்கப்பட்ட அந்த விளையாட்டு நிறைய வசதிகளைக் கோருவதால் எல்லாக் குழந்தைகளாலும் அதில் பங்கேற்க முடிவதில்லை. இருந்த இடத்திலே வீட்டின் முற்றத்திலே திண்ணையிலே தெருவிலே, மைதானத்திலே, என்று வித விதமாய் விளையாடக்கூடிய வாய்ப்புகள் இந்த ஒற்றை விளையாட்டினால் அழிந்து போய்விட்டது.

கிட்டிப்புள், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி, கிளியாந்தட்டு, தாச்சி, ஓடு அடுக்குதல், எறி பந்து, கல்லாமண்ணா, பாண்டி, கள்ளன்போலீஸ், கபடி, மரம் ஏறுதல், பச்சைக் குதிரை, செதுக்குழுத்து போன்ற ஓடி ஆடும் விளையாட்டுகளும், தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், ஆடுபுலி, ஒத்தையா ரெட்டையா, போன்ற உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளுமாய் எத்தனை எத்தனை விளையாட்டுகள்! காலத்திற்கும், பருவத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ற மாதிரியான உள்விளையாட்டுகள் என்று விளையாட்டுகளை வகை வகையாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இப்போது காணவில்லை.

காலத்திற்கேற்ப புத்துருவாக்கம் செய்யலாம். ஆனால் இவை மேலே குறிப்பிடப்பட்ட விளையாட்டுகளை எதுவும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில்லை. ஆனால் பெரிய அளவில் பொருளாதார வசதி தேவைப்படாத விளையாடுபவர்களின் நோக்கத்திற்கு ஏற்றபடியெல்லாம் வளைந்து கொடுக்கக்கூடிய விளையாட்டுகள். இந்த விளையாட்டுகளை யெல்லாம் விழுங்கி ஏப்பமிட்டது கிரிக்கெட் என்ற வெளிவிளையாட்டு மட்டுமல்ல. கம்ப்யூட்டர் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் என்று சொல்லப்படுகிற உள்விளையாட்டுகளும் தான்.

மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற அந்த வீடியோ கேம்ஸிலும், கம்யூட்டர் கேம்ஸிலும் உள்ள பிரத்யேகமான தன்மை குழந்தை தன்னைப்போன்ற இன்னொரு குழந்தையோடு விளையாடுவதைத் தடுக்கிறது. அது பிரதிமையோடு விளையாடத் தூண்டுகிறது. அந்தக் காட்சிப் பிரதிமைகள் எப்படி இருக்கின்றன? கார்ரேஸ், வேட்டையாடுதல், பைக் ஓட்டுதல் போன்ற குழந்தையின் வயதுக்கும், மனநிலைக்கும், யதார்த்தத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லாத விளையாட்டுகளே குழந்தைகளுக்கு கிடைக்கின்றன. வேறு வழியின்றி பெரியவர்களின் அடக்குமுறைக்கும் அதட்டலுக்கும் அஞ்சி குழந்தைகள் விளையாடுகின்றனர். அதில் எந்தக் கூட்டுச் செயல்பாடும் இல்லை. விட்டுக்கொடுத்தல் இல்லை. தலைமைப்பண்பு தேவையில்லை. அன்போ, நட்போ, பாசமோ, தேவையில்லை. அதிலே ஒரே குறிதான். வெற்றிபெறவேண்டும் நிறைய்ய பாயிண்டுகள் எடுக்கவேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். தனிமையில் விளையாடும் இந்த விளையாட்டு குழந்தையிடம் பிடிவாதத்தை வளர்க்கிறது. தான் என்கிற வெறியை கிளப்புகிறது. வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை வளர்க்கிறது.

கார் ரேஸ் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை எதிர்ப்படும் தடைகளை முறியடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறான். சாலையோரத் தடுப்பைத் தகர்க்கிறான். விளக்குக் கம்பங்களை வீழ்த்துகிறான். எந்த சிக்னலையும் மதிக்காமல் விரைகிறான். குறுக்கே எதிர்ப்படும் எவரையும் காரை ஏற்றிக் கொல்கிறான். சில நேரம் பிளாட் பாரத்தில் நடந்து போய் கொண்டிருப்பவர்கள் மீதும் காரை ஏற்றுகிறான். அது பிரதிமையே என்றபோதிலும் குழந்தையின் முகத்தில் காணும் தீவிரத்தையும், வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியையும் பார்க்கும்போது உள்ளம் பதைபதைக்கிறது. அருகில் அவனுடைய பெற்றோர்கள் உட்கார்ந்து கொண்டு அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன மாதிரியான எதிர்கால மானிட சமூகத்தை உருவாக்கப் போகிறோம் என்ற கவலை பீடிக்கிறது. மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய காலமாக நமது காலம் இருக்கிறது. குழந்தைகள் கூடி விளையாடுவதற்கான தருணங்களே இல்லாமல் ஆகிவிட்டது நம் காலம். வெறிச்சோடிக்கிடக்கின்றன தெருக்கள். குழந்தைகளின் குரலுக்காக ஏங்கித்தவிக்கின்றது நிலா. சுட்டெரிக்கும் சூரியன் கூட இனி சுடமாட்டேன் வாருங்கள் குழந்தைகளே என்கிறது. ஆனால் குழந்தைகள் வீடுகளுக்குள் எப்போதும் அலறும் முட்டாள் பெட்டிகளின் முன்னேயோ, பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களிலோ வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். சமூகத்தின் கூட்டுச்செயல்பாட்டின் ஆதாரமான, தார்மீக நெறிகளைப் பயிலாமலே ஒரு எதிர்கால சமூகம் வளர்ந்தால் என்ன ஆகும்? யோசிக்க வேண்டும்.

2 comments:

  1. நேற்று தான் என் சகா அருண்பாரதி அறிமுகபடுத்தியது..போல் இருந்தது..உங்களது தளத்தை.. நானும் ..வாசிக்க ஆரம்பித்தேன்..ஆனால் அதற்குள்ளாக..இத்தனை பதிவுகளா ?...என பிரமித்து போனேன்..ஒவ்வொன்றும்..அருமை..அதுவும் நானும் திரிந்த திரியும் வீதிகளில்..குறிப்பாக இன்றும் நாள் தவறாமல்..அமரும் காந்தி மைதானமும்..எவ்வள்வு..பிரமாண்ட படைப்பாளிகளை..பார்த்திருக்கிறது..என நினைக்கும் போது..பெருமையாக..இருக்கிறது..தோழர்.. வாழ்த்துகளுடன் மணிகண்டன்..ஹலோ பண்பலை

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி சார்.

    ReplyDelete