உதயசங்கர்
கலை தன்னைத் தேர்ந்து கொண்டவர்களை சூதின் புதிர்வழிகளுக்குள் சிக்க வைக்கிறது. விந்தையான வாழ்வின் கணந்தோறும் கலைஞன் தன்னை இழந்து கொண்டேயிருக்கிறான். ரத்தப்பலி கேட்கும் இந்த வாதனையை மிகுந்த மகிழ்ச்சியோடே ஏற்றுக் கொள்கிற கலைஞனுக்கு தன் கலையைத் தவிர மற்ற எல்லாமே இரண்டாம பட்சம் தான். தன்னுடைய உன்னதமான வாழ்வுக்காக அல்ல மானுடத்தின் உன்னதவாழ்வுக்காகவே கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் போராடுகிறான். இந்தப் போராட்டத்தில் பட்டினி கிடக்க நேர்ந்தாலும் கஞ்சனின் கைப்பணம் போலத் திரும்பத் திரும்பத் தன் கலையை உச்சிமுகர்ந்து நெஞ்சோடணைத்துக் கொள்கிறான். ஆனால் வாழ்க்கை சவால் விட்டுக் கொண்டே செல்கிறது. கைக்கும் வாய்க்குமான போராட்டத்தில் தன் கலையின் அத்துகளைக் கரையான்கள் அரித்து விடாமல் பாதுகாத்து வருவதே மிகப் பெரிய சாதனை.
கடந்த இருபது வருடங்களாகத் தான் எழுதிய கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் மு.அப்பணசாமி எண்பதுகளில் கோவில்பட்டியிலிருந்து வேர் விட்டுக் கிளம்பிய இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். சுதந்திரப் பத்திரிகையாளராக, வாய்மொழி வரலாற்று ஆசிரியராக, நாடக ஆசிரியராக, எல்லோராலும் அறியப் பட்டவர். ஆறாம்திணை என்ற முதல் இணைய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவருடைய பேனா தொலைந்து போனது என்ற சிறுகதைத் தொகுப்பில் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளினூடாக ஆழ்ந்த அர்த்தத்தைத் தேடிப் பயணப்படுகிற கதைகளாகக் கோர்க்கப் பட்டிருக்கின்றன.
சலிப்பூட்டும் அன்றாட வாழ்வின் கசங்கல்களின் இருளில் கலைஞனே தன் கலை மொழியின் மூலம் புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறான். பெரும்பாலான கதைகளில் பெண் என்ற படிமம் தன் பன்முகதரிசனத்தைக் காட்டுகிறவளாக உருவாகியிருக்கிறாள்.வாழ்வின் கொடூரங்களுக்குத் தன்னைப் பலி கொடுத்தவளாக வருகிறாள். “ தாயீயாக” அழிந்தபோதில் அக்காவாகக் ”கிணற்றில்” அம்மாவாகப் “ பஞ்சினிருளில் “ கண்ணம்மாவாக ”விரல்களின் ஸ்ருதியில் “ என்று அழுத்தமான சித்திரங்களாக மனதில் பதிகிற பெண்கள் நம்மைக் கலங்க வைக்கின்றனர். அதே போல விட்டேத்தியான, வன்முறை நிறைந்த ஏலாத அப்பாக்களும் வருகிறார்கள். தொகுப்பில் விரவிக் கிடக்கிற கதைகளின் வழியே அம்மா அப்பாவின் ஆகிருதிகள் வளர்ந்து வருவதை உணர முடிகிறது.
எல்லா எழுத்தாளர்களுக்குமே பழைய நினைவுகளைப் போற்றுதல் என்பது ஒரு இயல்பான குணாதிசயம். அப்பணசாமியும் பேனா தொலைந்து போனது, அனாந்தரம், நான் ஊருக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறேன் அங்கு யாரும் இல்லை. போன்ற கதைகளின் வழியே தன் பால்ய கால வாழ்க்கையை, எழுதிப் பார்க்கிறார். மனித மன விகாரங்களைச் சொல்லும் கதைகளாக, இது கதையல்ல், அகம் பிரம்மாச்மி, பாஷாணகிரந்தம், போன்றவை திகழ்கின்றன.
தமிழில் மிகவும் அருகிப்போன உருவகக்கதையை நரிக்குரல் சிம்மம் வழியே எழுதியிருக்கிறார் அப்பணசாமி. வேலையின்மையின் வெம்மையை, வீட்டின் நெருக்குதல்களை, புளிச்சக்கைகளுக்கு நடுவே வெண் தாள் சுவடிகள் கதைகளிலும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக புளிச்சக்கைகளின் நடுவே என்ற கதையின் வெறுமை நம்மை மூச்சடைக்க வைக்கிறது.
முதலில் இருக்கக்கூடிய மூன்று கதைகளும் மிகச் சமீபத்தில் எழுதப்பட்ட கதைகள் என்பது மொழி நடையிலும் உத்தியிலும் வெளிப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளின் மொழி அபூர்வமான கவித்துவமும் நுட்பமும் கூடிய மொழியாக அமைந்துள்ளது.
‘ ஆட்டு மந்தை போல் கடல் காற்று உடலை உராய்ந்து உராய்ந்து நீவி விட்டது’
-அனாந்தரம்
‘ குட்டியான செட்டைகள் கொண்ட குருவியின் மனம் அலையும் தூரத்துக்கும், நீண்ட செட்டைகள் கொண்ட கிறீச்சிட்டான் பறவையின் மனம் அலையும் தூரத்துக்கும் தன் மனதைப் படர விட்டு, சுண்டி இழுத்தாள்’.- தாயீ
’ தனது ஆழம் காணமுடியாது வறண்டு கிடந்த மனதைப் போல கானல் சுரந்து புதைந்த பள்ளம் போல வெட்ட வெளியில் ஒரு கிணறு’- கிணறு
‘ கான்கிரீட் கண்கள் நிறைந்த கபாலங்களாகக் கட்டிடங்கள் ‘- முரண் சிதைவு
நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடி ஊசலாடி அவநம்பிக்கையின் இருள் பள்ளத்திலேயே விழுகிறவர்களாக அப்பணசாமியின் கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். இன்றைய வாழ்வின் நெருக்கடியும், அவலமும், அது தானே. ஒவ்வொரு கதையிலும் மொழிநடை, உத்தி, பாணி, என்று வெவ்வேறு விதமாக பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார் அப்பணசாமி. இருளின் விதவிதமான வர்ணஜாலங்களைப் பிரதிபலிக்கிற தனித்துவமான கதைகளை எழுதியுள்ளார். வளமான தமிழ்ச் சிறுகதை உலகிற்கு பேனா தொலைந்து போனது மூலம் தன் அழுத்தமான வரவைப் பதிவு செய்திருக்கிறார்.
காலத்தின் நீள்பரப்பில், வாழ்க்கைப்போராட்டத்தில் கசப்பை விழுங்கி, விழுங்கி, கைத்துப் போன மன உலகில் தன்னை அவநம்பிக்கைவாதியென்று பிரகடனப்படுத்த வேண்டிய அளவுக்கு கொண்டு தள்ளியிருக்கிற சமூகச் சூழலில் அப்பணசாமி என்ற கலைஞன் தன் கலையின் மூலம் தன்னை நிருபித்துக் கொண்டிருக்கிறார். அதற்குப் பெரும் சாட்சியாக பேனா தொலைந்து போனது என்ற இந்தத் தொகுப்பு விளங்குகிறது. அப்பணசாமியின் கைப்பான புன்னைகையின் மீது கலை தன் ஒளியை வீசுகிறதே…….
பேனா தொலைந்து போனது
அப்பணசாமி
விலை – 60/
வெளியீடு – பாரதி புத்தகாலயம்
சென்னை -600018
நன்றி- புத்தகம் பேசுது.
நல்லொதொரு அறிமுகம்!
ReplyDeleteநன்றி.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.