சின்னஞ்சிறு பிராயத்திலிருந்து எனக்கு பிரமிப்பூட்டும் ஒரு ஆளுமையாக என் மாமா சக்தி பயில்வான் இருந்தார். விடியற்காலையிலேயே தோளில் சிவப்புத்துண்டு, கையில் சங்கிலியில் பிணைக்கப்பட்ட ஒரு நாயுடன் எங்கள் தெருவிலிருந்து அவருடைய உடற்பயிற்சிக் கழகத்துக்குக் கிளம்பி விடுவார். கட்டுமஸ்தான தசைகள் திரண்டு முறுக்கேறிய கட்டுகுட்டான தேகம். காலையில் எழுந்தவுடன் அம்மாவுக்கு வரும் தலைவலிக்கு முத்தையாபிள்ளை காபி கிளப்பின் காப்பியே மருந்தாக இருந்தது. எழுப்பிவிட்டு காப்பி வாங்கி வரச் சொல்லி அனுப்புகிற அம்மாவை தூக்கம் முறிந்த சடைவில் மனதுக்குள் வைது கொண்டே போகிற போதோ, காப்பி வாங்கிக் கொண்டு வருகிற போதோ மாமா சக்தி பயில்வானை எதிர்கொள்ள நேரிடும். என்னுடைய கூச்சமான சிரிப்பைப் பார்த்து அவரும் சிரித்துக் கொண்டே,
“ கம்பு விளையாட வர்றீயால..”
என்று கேட்டு கொண்டே போவார். நான் கொஞ்சம் பெரிய பையனான பிறகு என் மாமாவைப் போல உடற்பயிற்சி செய்து அனைத்து வீர விளையாட்டுகளையும் தற்காப்புக் கலைகளையும் கற்று பெரிய சாகசக்காரனாக ஆக வேண்டும் என்று மனதில் வரித்துக் கொண்டேன். சக்தி மாமாவுக்கு எல்லா விளையாட்டுகளும் தெரியும். சக்தி மாமாவும், என்னுடைய அப்பாவும் பள்ளிப்பருவ நண்பர்கள். இரண்டு பேருமே மூன்றாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. இரண்டு பேருமே ஒரே தெருவில் குடியிருந்தார்கள். என்னுடைய அப்பா மில் வேலையில் சேர்ந்தார். சக்தி மாமா தையல்காரரானார். என்னுடைய அப்பா சாந்த சுபாவி. சக்தி மாமா அதிர்வேட்டு. அவர் இருக்கும் இடம் ஓங்கி ஒலிக்கும் அவருடைய குரலால் அதிர்ந்து கொண்டேயிருக்கும். தெருப் பிரச்னை, ஊர்ப்பிரச்னை, என்று எல்லாப்பிரச்னைகளைப் பற்றியும் விலாவாரியாக அவருக்கு தெரிந்த நியாயங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார். அடிக்கடி இதைத் தான் காரல் மார்க்சும் லெனினும் அப்பவே சொன்னாங்க. முதலாளித்துவம் அழிந்து புரட்சி நடக்கிற வரை இப்படித்தான் உலகம் தலைகீழாகத் தான் இருக்கும், என்று சொல்லிக்கொள்வார். அவரும் என்னுடைய அப்பாவும் பேசிக்கொள்ளும் போது இப்படிச் சொல்வது சரியாக இருக்காது. சக்திமாமா பேசுவார். என்னுடைய அப்பா கேட்டுக் கொண்டிருப்பார். அவ்வப்போது மாமா ஏதாவது நகைச்சுவையாக ஏதாவது சொல்லி விட்டால் சத்தமில்லாமல் குனிந்து சிரித்துக் கொண்டே,
“ போடா கோட்டிக்காரப்பயலே..”
என்று சக்திமாமாவை செல்லமாக வைவார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு பெரிய பயில்வானை என் அப்பா ரெம்ப சாதாரணமாக வாடா போடா என்று பெசுகிறாரே என்று வியந்து போவேன். என்னுடைய அப்பாவை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கும். அப்போது என் அப்பாவின் மீது பிரியம் பொங்கி வழியும். பள்ளிக்கூடத்தில் யாரிடமாவது அடி வாங்கும்போது நான்,
“ இரில.. நான் எங்க சக்திமாமாட்ட சொல்லி ஒன்னய அடிக்கச் சொல்றேன்…”
என்று வீரம் பேசுவேன். பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் நாங்கள், சின்னப்பாண்டியுடன் சேர்ந்து ஓந்தான் அடிக்கப் போகும் போது அங்கே ஓடைக்கு ஓரமாக பி. சீனிவாசகராவ் உடற்பயிற்சிக்கழகம் என்ற பெயர்ப்பலகையுடன் சுற்றிலும் ஓலை வேய்ந்த, செம்மண் கொட்டிக்கிடக்கும் சிறிய மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு பக்கம் சிலம்பு விளையாட்டு, மணல் குவித்திருந்த இடத்தில் மல்யுத்தம், பார் விளையாட்டு, கர்லாக் கட்டை சுழற்றுதல், பளு தூக்குதல், என்று எப்போதும் விளையாட்டு மாணவர்களின் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். ஒன்றாகவிருந்த தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்டமக்களின் தன்னிகரில்லா தலைவராக விளங்கியவர் பி.சீனிவாசகராவ். சாணிப்பால், சவுக்கடி, வல்லாங்கு, பண்ணை முதலாளிகளால் நரகத்தை அநுபவித்துக் கொண்டிருந்த அந்த மக்களிடம் அடித்தால் திருப்பி அடி என்று முதல் முதலாகச் சொன்னவர். அந்த மக்களின் தீரத்தால் அங்கே செங்கொடி இயக்கம் வேரூன்றியது. அந்தத் தலைவரின் பெயரில் வைத்திருந்த உடற்பயிற்சி கழகத்தில் சக்திமாமா சொல்லிக் கொடுத்த முதல் பாடமே அநியாயத்தை, அநீதியை தோழர் பி.சீனிவாசகராவ் வழியில் எதிர்த்து நில் என்பது தான்.
கோவில்பட்டியில் எப்போதுமே மே தினம் கொண்டாட்டமாக இருக்கும். மே தினத்தன்று தொழிலாளர்களின் பேரணி பிரம்மாண்டமாக நடக்கும். அதன் முன்னால் எப்போதும் எங்கள் சக்தி மாமாவின் உடற்பயிற்சிக் கழகத்தின் தோழர்கள் வீர விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு வர நாங்கள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே கூட நடப்போம். சிலம்பு, சுருள்வாள், புலி வேஷம், மான் கொம்புச் சண்டை, தீப்பந்தம் சுழற்றுதல், ஜிம்னாஸ்டிக்ஸ், என்று விதவிதமான விளையாட்டுகளோடு ஊர்வலத்தின் முன்னே சக்தி மாமா ஊர்வலத்தை நடத்திக் கொண்டு போவார். அப்போது அவர் வேறு ஒரு ஆளாகத் தெரிவார். அவரிமிருந்த உற்சாகம், அர்ப்பணிப்பு, உழைப்பு, தீவிரம், எல்லாம் ஒன்று சேர்ந்து ஜொலிக்கும். எனக்கு இப்போது தோன்றுகிறது, அவரைப் போன்ற ஆளுமைகளின் ஈர்ப்பு தான் எங்களையெல்லாம் இடதுசாரி அரசியல், தத்துவத்தை நோக்கி இழுத்திருக்கலாம் என்று.
1974 ஆம் ஆண்டு மிகப்பெரிய அரிசித்தட்டுப்பாடு தமிழகத்தில் வந்தது. ரேஷன் கடை அரிசியைக் கடத்திப் பதுக்கினார்கள். வெளிச்சந்தையிலும் அரிசி கிடைக்கவில்லை. அப்போது ஒரு அரிசி மில்லில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை தோழர்.சி.ராமசுப்பு, தோழர். சக்தி, தலைமையில் மக்கள் கைப்பற்றினார்கள். அதை மக்களிடம் அவரவர் ரேஷன் கார்டு அளவுக்கேற்ப அங்கேயே வினியோகம் செய்தனர். அத்தகைய தீரர் சக்தி மாமா. எமர்ஜென்சி என்ற கொடுங்கனவுக் காலத்தில் அவரும் தோழர்.சி.ராமசுப்புவும் ஓராண்டுக்கு மேல் சிறையிலும் இருந்தார்கள். அதே போல இன்னொரு சம்பவம், 1979 ஆம் ஆண்டு ஜனதா ஆட்சிக் காலம். இந்திராகாந்தி அம்மையாரைக் கைது செய்தது மத்திய அரசு. அதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஊர் முழுவதும் கடையடைக்கச் சொல்லி ஊர்வலமாகச் சென்றனர். கோவில்பட்டி மெயின்ரோட்டில் ஜோதிபாசு சலூன் தோழர்களின் முக்கியமான சந்திப்பு மையம். அதற்கருகில் தோழர். மாரியப்பபிள்ளையின் இரவு உணவு விடுதி. முதல் முறையாக கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் போது தோழர். மாரியப்பபிள்ளையிடம் கடையடைக்கச் சொல்லி எச்சரித்து விட்டு போனார்கள். மீண்டும் திரும்பி அவர்கள் ஒரு நூறுபேர் இருக்கும் வந்தபோது தோழர். மாரியப்பபிள்ளையின் கடையில் தோழர்.சி.ராமசுப்புவும், தோழர்.சக்தியும் இருந்தார்கள். கும்பல் கடையை அடைக்கச் சொல்ல இவர்கள் அந்தக் கும்பலின் கையிலிருந்த கட்டை, கற்கள், ஆகியவற்றைக் கண்டும் அஞ்சாமல் கடையை அடைக்கமுடியாதென்று மறுத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கடையின் மேல் ஒரு கல் வந்து விழுந்தது. அவ்வளவு தான். தோழர்.சக்தி தன் இடுப்பில் கட்டியிருந்த சுருள் வாளை எடுத்துச் சுழற்ற, தோழர்.சி ராமசுப்புவும் தன் பெல்ட்டினால் கும்பலை விரட்ட, தோழர். மாரியப்பபிள்ளையும் தன் பங்குக்கு அடுப்பில் இருந்த கங்குகளை எடுத்து வீச கும்பல் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் சிதறி ஓடி விட்டது. எனக்கு இந்தக் கதைகளை என் அப்பா சொல்லும்போது அப்பாவின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது. எனக்குச் சாகசக் கதைகளின் நாயகனாகவே என் மாமா தெரிந்தார்.
கல்லூரி முடிந்து நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து கதைகள் எழுதி எழுத்தாளனாக முயற்சித்துக் கொண்டிருந்த போது என் மாமா என்னிடம் மார்க்சிய அரசியல் பேசினார். நாங்கள் அப்போதே அரசு, அரசும் புரட்சியும், மார்க்சிய மெய்ஞ்ஞானம், என்று வாசிக்க ஆரம்பித்திருந்தோம். நாங்கள் குழப்பமாகப் படித்து புரிந்து கொண்டிருந்ததை அவர் எளிமையான மக்கள் மொழியில் சொல்லியதைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. நானும் ஓரிரண்டு நாட்கள் சக்தி மாமாவின் உடற்பயிற்சிக் கழகத்துக்குப் போய் சிலம்பு விளையாடப் போனேன். பார்க்கும்போது அந்த சிலாவரிசையும், அடிமுறைகளும், சுலபமாக இருந்தது. ஆனால் கையில் கம்பைப் பிடித்த பிறகு தான் தெரிந்தது. அது எப்பேர்ப்பட்ட கெஜகர்ணவேலை என்று. முதல் நாள் இரண்டு முறை கம்பைச் சுத்தும்போது என் முழங்காலில் நானே அடித்துக் கொண்டேன். சரி அதுதான் பரவாயில்லை. அடுத்தநாள் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த ரெண்டு பேரைத் தட்டி விட்டேன். பல்லைக் கடித்துக் கொண்டு வந்தவர்களைப் பார்த்த என் சாகசக்கனவு தன் வாலைச் சுருட்டிக் கொண்டது. அதன் பிறகு அங்கே வேடிக்கை பார்க்க மட்டும் தான் போயிருக்கிறேன்.
ஒரு நாள் சக்தி மாமாவின் வீட்டுக்குப் போயிருந்தபோது சுவரில் ஒரு வாள் இருந்தது. நான் மாமாவிடம்,
“ ஏது மாமா இந்த வாள்? “
என்று கேட்டேன். அதற்கு அவருடைய தாத்தாவின் அப்பா எட்டையபுரம் மகாராஜாவின் படையில் இருந்ததாகவும், தாத்தா திசைகாவல் பணியில் இருந்ததாகவும் சொன்னார். நான் ஆவலுடன் அந்த வாளைத் தொட்டுப் பார்த்தேன். அதைப் பார்த்த சக்தி மாமா அந்த வாளை சுவரில் இருந்து எடுத்து என் கையில் கொடுத்தார். அவர் ஒரு கையில் எடுத்து கொடுத்ததை நான் இரண்டு கைகளிலும் சேர்த்துப் பிடித்தும் ஒருநிமிடத்துக்கு மேல் கையில் வைத்திருக்க முடியவில்லை. அந்த வாள் என் கையில் இருந்த அந்த ஒரு நிமிடத்தில் எட்டையபுரத்து வரலாற்றின் பக்கங்கள் வம்சமணி தீபிகா என்ற நூலிலிருந்து சடசடவென புரண்டன. உடலில் வரலாற்று உணர்வு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கையில் வாளுடன் நின்று கொண்டிருந்த சக்தி மாமா ஒரு வரலாற்றுவீரனாகவே எனக்குத் தெரிந்தார்.
அது 1983-ஆம் ஆண்டாக இருக்கலாம். நானே மாமாவின் சாகசத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. மே தின ஊர்வலத்தில் சக்தி மாமாவின் வீரவிளையாட்டுகள் முன்னால் செல்ல தொழிலாளர்களின் கோஷங்கள் விண்ணைப் பிளந்து கொண்டிருந்தன.
புரட்சி ஓங்குக!
வெல்லட்டும் வெல்லட்டும் பாட்டாளி வர்க்கம் வெல்லட்டும்!
வருகுது பார்! வருகுது பார்! செம்படைப் பேரணி வருகுது பார்!
செங்கொடிகளின் பதாகைகள் காற்றில் களிப்புற்று அசைய ஊர்வலம் முன்னேறிக் கொண்டிருந்தது. நாங்கள் சாலையின் ஓரத்தில் நின்று வீரவிளையாட்டுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் திடீரென ஊர்வலத்தின் நடுவே புகுந்து வீர விளையாட்டுகளை நிறுத்தச் சொன்னார். அவர் கத்தியதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே அவர் வந்ததிலிருந்து கோவில்பட்டி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரிய தொந்திரவாகவே இருந்தார். சாலை ஒரமாக நின்று கொண்டிருக்கும் சைக்கிள்களை காலால் உதைத்துத் தள்ளுவது. ஓரமாக நின்று பேசிக் கொண்டிருப்பவர்களைக் கூப்பிட்டு மிரட்டி விரட்டுவது, யாராவது பதில் பேசினால் அடிப்பது என்று அராஜகம் செய்து கொண்டிருந்தார். அதனால் அவர் வந்து தலையிட்டதைப் பார்த்ததும் எங்களுக்குப் பதட்டம் அதிகரித்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்தோம். அப்போது சற்றும் எதிர்பாராவிதமாக அந்த இன்ஸ்பெக்டர் விளையாட்டு வீரர்களில் ஒருவர் வைத்திருந்த செங்கொடியைப் பிடுங்கிக் கீழே போட்டார். அவ்வளவு தான் சடசடவென அந்த இன்ஸ்பெக்டரைச் சுற்றி வளைத்து கம்புகள் இறங்கின. போட்ட கோஷங்களில் அவருடைய கூப்பாடு வெளியே கேட்கவில்லை. சக்தி மாமா தான் தன்னுடைய மாணவர்களைச் சத்தம் போட்டு அந்த இன்ஸ்பெக்டரைக் காப்பாற்றினார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த இன்ஸ்பெக்டருக்கு முதல் அடியைக் கொடுத்ததும் சக்தி மாமா தான்.அதை என் கண்ணால் கண்ட பிறகு சக்தி மாமாவைப் பார்க்கும்போது மிகுந்த மரியாதை தோன்றியது.
அதன் பிறகு நான் வடமாவட்டங்களில் வேலைக்குப் போய் விட்டேன். கிட்டத்தட்ட பதிநான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கோவில்பட்டி வந்தபோது ஊரின் முகமும் குணமும் வெகுவாக மாறியிருந்தது. சக்திமாமாவும் தளர்ந்திருந்தார். அவருடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் அவரைப் பாதித்திருந்தன. அது மட்டுமல்ல. கோவில்பட்டியின் சமூக அரசியல் செயல்பாட்டுக் களத்தில் அவர் செய்த சாகசங்களும், அவருடைய பங்களிப்புகளும் நவீன அரசியலைத் தன்னுடைய சுயமுன்னேற்றத்துக்காக மட்டும் பயன்படுத்துகிற. புதிய, படித்த, மத்தியதரவர்க்கத்தினர் அரசியலுக்கு வந்த பிறகு புரியவில்லை. அவர் முரட்டுத் தனமானவராகத் தெரிந்தார். அவருடைய பேச்சு பத்தாம்பசலித்தனமாகத் தெரிந்தது. அதன் பிறகு நான் சக்திமாமாவைப் பார்க்கும் போது பேச்சில் ஒரு விரக்தி தெரிந்தது. என்னையும் என் நண்பர்களைப் பார்க்கிறபோது ஒரு விரோதபாவம் ஒளிர்ந்தது. அது ஒரு காலத்தில் பெட்டிபூர்ஷ்வா என்று எங்களை நாங்களே கேலி செய்து சுயவிமர்சனம் செய்து கொண்டிருந்த மத்தியதர வர்க்கம் இப்போது அவரைப் போன்ற பாட்டாளிகளை சமகாலஅரசியலிலிருந்து விலக்கி வைக்கிற தந்திரத்தின் மீதான கோபமே என்று நான் உணர்ந்து கொண்டேன். இப்போது பி. சீனிவாசகராவ் உடற்பயிற்சிக் கழகம் மட்டுமே அவருடைய ஆர்வமாக இருந்தது. அதிகமான மாணவர்களும் இல்லை. ஆனாலும் காலையில் கையில் நாயுடன் அவர் போவது நிற்கவில்லை.
ஒரு நாள் காலை நான் கங்கைகொண்டான் ரயில்வே ஸ்டேசனில் பணியில் இருந்தபோது நண்பர் ரெங்கராஜ் அலைபேசியில் சொன்னார் அந்தத் தகவலை. எனக்கு ஒரு கணம் உடல் அதிர்ந்தது. பணி முடிந்து நான் சக்தி மாமாவின் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் தோழர்கள் கூட்டம். வீட்டுக்குள் நாற்காலியில் சக்தி மாமாவை உட்காரவைத்திருந்தார்கள். கழுத்தில் மாலைகளோடு, நாடிக்கட்டோடு, உட்காரவைக்கப் பட்டிருந்தார், என் சக்தி மாமா. விரிந்த மார்பும் திண் தோள்களும், திரண்டகைகளும் கொண்டிருந்த சக்தி மாமாவின் ஆகிருதி அந்த நாற்காலியில் ஒடுங்கி மெலிந்து அடையாளமே தெரியாமலிருந்தது. எனக்குப் பொங்கி வந்த அழுகையை அடக்கமுடியவில்லை. என்னுடைய சக்திமாமா இவரில்லை. இறுதி ஊர்வலத்தில் அவருடைய மாணவர்கள் சிலம்பு விளையாடி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பி.சீனிவாசகராவ் என்ற மகத்தான மக்கள் தலைவரின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட சக்தி மாமாவின் உடற்பயிற்சிக் கழகம் இப்போது தூர்ந்து போய்க் கிடக்கிறது. அந்தப் பலகையின் வண்ணம் தேய்ந்து உரிந்து தன் பழைய ஞாபகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. நான் அந்த வழியாகச் செல்லும்போது அங்கே ஒரு நிமிடம் நின்று பழைய காலத்தின் சுவடுகளைத் தேடுவேன். அதோ என் சக்தி மாமாவின் உற்சாகமான குரல் கேட்கிறது. எல்லோரையும் உற்சாகப்படுத்துகிற அந்த முரட்டுத்தனமான நாகரீகமில்லாத அந்தக் குரல்….என்னை எதுவோ செய்கிறது. சிலம்புக்கம்பின் வீச்சொலி விர்ர்ரென என் காதில் ஒலிக்கிறது. கண்கள் பொங்குகிறது. என் தோழரான என் சக்திமாமா உங்கள் தீரத்தை நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்போம். எங்கள் அன்புக்குரிய தோழரே! என் அன்புக்குரிய சக்திமாமா..உங்களை வணங்குகிறேன். கோவில்பட்டியும் வணங்குகிறது.
நன்றி-மீடியா வாய்ஸ்
மிக அருமை.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
கோவில்பட்டி தோழர் சக்தி என்று சொல்லும்போதே 'சக்தி பிறக்கும் மூச்சினில்'...அவசர நிலைமை காலத்துக்கு முந்தியும் அப்போதும் அதற்குப் பிந்தியும் அவர் பங்கேற்ற இயக்க நிகழ்வுகள் தொடர்ந்து வந்து கண்கள் பனிக்க வைக்கின்றன சென்னை நான்கு-இலக்கம் நான்கு,பிச்சுபிள்ளை தெருவில் .கோவில்பட்டி பாலச்சந்தர், சக்தி அவர்களின் சாகசங்களை சுவாரசியமாக விவரிப்பார்! சீ. எஸ் சிகரெட் ஏந்திய உதடுகளோடு, உறைந்து கேட்டுக் கொண்டிருப்பார்.இப்போது சக்தியும் இல்லை; சீ. எஸ்சும் இல்லை; பாலச்சந்தரும் இல்லை. மறந்துபோன தோழமை இயக்க வரலாற்றை உதய சங்கர் அவரது தனிப்பாணியில் பதிவிடுகிறார்.
ReplyDelete