Tuesday 5 June 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

 

எம். முகுந்தன்

தமிழில்- உதயசங்கர்mukundan

நான் ஏன் எழுதுகிறேன்? எல்லாநேரங்களிலும் எழுத்தாளர்கள் தன்னிடமே கேட்டுக் கொள்கிற ஒரு கேள்வி இது. நாற்பதாண்டுகளாக நானும் இந்தக் கேள்வியை என்னுடைய முகத்துக்கு நேரே எறிந்து விளையாடுகிறேன். பதில்கள் ஒவ்வொரு நேரமும் மாறி மாறி வருகிண்றன. கேள்வி கேட்பவர்கள் மாறியிருக்கிறார்கள். நாற்பது வருடத்துக்கு முன்புள்ள வாசகர்களல்ல இன்றுள்ளவர்கள். மாறாதிருப்பது இந்தக் கேள்வி மட்டும் தான்.

ஒரு எழுத்தாளன் என்ற நிலையில் நான் எதிர்கொள்கிற மிகப்பெரிய பிரச்னை நான் தான். பத்து முப்பது புத்தகங்கள் எழுதிய பிறகும், என்னைப்பற்றிப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னைப் பற்றியே தெரியாத நான் எப்படி சமூகத்தைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும்? இந்தக் கேள்வி என்னை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்குகிறது. கேள்விகளே இல்லாத ஒரு பூமியில் சுகமாக இருந்து கொண்டு எழுத வேண்டும் என்பது என்னுடைய இப்போதையக் கனவு. அதே நேரம் கேள்விகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ளவும் நான் ஆசைப்படவில்லை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் கனவும் யதார்த்தமும். எழுத்தாளன் அப்படிப்பட்ட ஒரு முகக்கண்ணாடி. எனக்கும் சமூகத்துக்கும் உள்ள நிரந்தரமான முரண்பாடுகள் தான் பல நேரங்களில் எழுதுவதற்கு எனக்கு உத்வேகம் அளித்திருக்கிறது. நான் கனவு. சமூகம் யதார்த்தம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்படியென்றால் நான் எழுத வேண்டியது ஏன்? என்னைப் பற்றி எழுதி என்னுடைய ரசனைகளை கனவு மயமாக்குவதற்காக வேண்டியா? இல்லையென்றால் சமூகத்தைப் பற்றி எழுதி என்னுடைய இலக்கியத்தில் கேள்விகள் எழுப்ப வேண்டியா? ஒரு வேளை இந்த இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்து ஒரே பதில் போதுமாகக்கூட இருக்கலாம். எனக்குள்ளே என்னையும் நான் வாழ்கிற சமூகத்தையும் இணைத்து எழுத வேண்டும். அப்போது கண்ணாடியின் இரண்டு பக்கங்களும் ஒன்றாகியேத் தீரும்.

இன்று சமூகத்தைப் பார்க்கும்போது யாரும் பயப்படாமலிருக்க முடியாது. நான் டெல்லியில் வசிக்கிறேன். நேற்றுத்தான் இங்கு பள்ளிக்கூடப் பரீட்சை முடிவு வெளியானது. நேற்று மார்ச் 31 சனிக்கிழமை. நண்பகல் கழிந்து மாலை ஐந்து மணியான போது இரண்டு பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. எட்டாம் கிளாசில் படிக்கிற நரேந்திரனும், ஒன்பதாம் வகுப்பில் படிக்கிற கௌசல்குமாரும். அன்று ரிசல்ட் தெரிந்து கொள்ள பள்ளிக்குப் போகும் போதே தோற்று விடுவோம் என்று நன்கு தெரிந்த நரேந்திரன் விஷம் குடித்து தன் உயிரைப் போக்கிக் கொண்டான். சனிக்கிழமை ரிசல்ட் வெளிவரப்போகிறது என்று தெரிந்த கௌசல்குமார் வெள்ளிக்கிழமை இரவே தூக்கில் தொங்கினான். இத்துடன் முடிந்து விடப்போவதில்லை. இன்னும் பரீட்சைகளின் முடிவுகள் வரவேண்டியதிருக்கிறது. இன்னமும் எத்தனை பேர் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகின்றனரோ.

இன்று ஏப்ரல் 1 ல் புதிய பொருளாதாரக் கோட்பாடுகளின் ஒரு கட்டம் முழுமையடைகிறது. பத்து இருநூறு அழகு சாதனப்பொருட்களும், சாதனங்களும் இன்றிலிருந்து தடையில்லாமல் நம்முடைய தேசத்திற்குள் இறக்குமதி ஆகும். கம்ப்யூட்டர்களும், வீடியோ கேம்ஸ்களும் மட்டுமல்ல, காய்கறிகளும் பழங்களும் பாலும், விளையாட்டுப் பொருட்களும், எல்லாம். ஆனால் விவசாயத்தைத் தவிர வேறெந்தத் தொழிலும் தெரியாத உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும், விவசாயிகள் தீராத பட்டினியில் கிடக்க நேரிடும். அவர்களில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வார்கள்?

தற்கொலை தான் நம்முடைய மிகமுக்கியமான அடிப்படைப் பிரச்னை என்று முன்பு ஆல்பர்ட் காம்யூ சொல்லியிருக்கிறார். இன்று காம்யூவும் அவருடைய இலக்கியமும் காலாவதியாகி விட்டன. ஆனால் காலாவதியாகாமல் இருப்பது தற்கொலை மட்டும் தான்.

எழுபதுகளின் துவக்கத்தில் தீவிரமான எழுத்துப் பணியில் நான் மூழ்கியிருந்தபோது மரணம் தான் எனக்கு முன்பிருந்த முக்கியமான விஷயம். இப்போது தற்கொலையும். மரணம் அடிப்படை மாற்றங்களின் சிருஷ்டி. இன்று நான் எனக்கு முன்னால் பார்க்கிற தற்கொலையோ யதார்த்தங்களின் சிருஷ்டி.

இதனைப் பற்றித் தான் நான் எழுத வேண்டும். இனி என்னுடைய எழுத்து அந்த மாதிரியாக அமையட்டும்.

நியூடெல்லி ஏப்ரல் 1 \ 2001

நன்றி- கரண்ட் புக்ஸ் புல்லட்டின் ஏப்ரல் 2001

No comments:

Post a Comment