கிரேஸி
நான் எப்படி எழுத்தாளரானேன்? எனக்குத் தெரியவில்லை. பதினைந்து வயதுவரை பாடப்புத்தகங்களும், ஸ்கூல் லைப்ரரியிலிருந்து கிடைக்கிற சிறிய ஆங்கிலப்புத்தகங்களும் தவிர வாசிப்பு உலகம் எனக்கு அந்நியமாகவிருந்தது.
எனக்குக் கிடைத்த ஒரே கூட்டாளி என்னுடைய அப்பாவின் அப்பா. சாயங்கால நேரங்களில் தாத்தா பனங்கள்ளு குடித்து விட்டு ஏராளமான கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தக் கதைகளிலெல்லாம் மனிதர்கள் குறைவாகவே இருந்தனர். பிரதானபாத்திரம் குட்டிச்சாத்தான் தான். பலவிதமான பாம்புகளும், யானை, புலி, காட்டெருமைகளும், வருகிற கதையில் கொடிய காட்டினை விவரித்துச் சொல்லும்போது நான் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தக் கதைகளெல்லாம் என்னை வேறொரு உலகத்திற்கே கூட்டிக் கொண்டு போய்விட்டன.
என்னுடைய டீச்சரிடம் முட்டத்துவர்க்கியினுடைய நாவல்களின் தொகுப்பு இருந்தது. அவர் அதை வேறு யாருக்கும் கொடுக்காமல் அலமாரியில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். ‘ மயிலாடும் குன்று ’ வாங்கிக் கொண்டு வந்த அன்று மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் அம்மாயி அதைச் சத்தமாக வாசிப்பதை ஐந்து வயதுக்காரியான நான் நள்ளிரவு வரை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அப்போது தான் மிருகங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் கதைகள் இருக்கிறதென்று நான் தெரிந்து கொண்டேன். அந்தக் கதைகள் பல சமயங்களில் கண்னீரிலேயே முடிந்து போயின.
வகுப்பில் பிள்ளைகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து வார்த்தை சுலோகப்போட்டி நடத்தும்போது நான் சங்கடத்தோடு ஒளிந்து கொள்வேன். இவர்கள் எல்லாரும் எங்கிருந்து இவ்வளவு சுலோகங்களையும் மனப்பாடம் செய்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. முடிவில் இரண்டு பேர் சொல்லிக் கொடுத்து நான் ஒரு சுலோகத்தை உருவாக்கினேன். இப்படியொரு சுலோகத்தை நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை என்று பிள்ளைகள் கோபித்தனர். மலையாளவாத்தியார் அதைச் சொல்லச் சொல்லிக் கேட்டபோது அப்போதே மறந்துபோய் வியார்த்து விறுவிறுத்துப் போனேன். வாத்தியார் கேலி செய்யவும் பிள்ளைகள் கைகொட்டிச் சிரிக்கவும் செய்தனர். நான் கண்ணீரில் வழிந்தோடிப் போனேன். அப்படி வழிந்தோடி, வழிந்தோடி, ஏதேதோ பூமிகளூடே பிரயாணம் செய்தேன். யாருக்கும் தெரியாமல் ஏராளமான நாலுவரிக் கவிதைகளை துண்டுக் காகிதங்களில் எழுதி ஒளித்து வைத்திருந்தேன். அப்ப்டி எழுத்தில் வடிக்காதவற்றை மனசில் பத்திரமாக அடைத்து வைத்தேன்.
காரூரினுடைய ‘ குடை நன்னாக்கானுண்டோ ‘ என்ற கதையைப் பாடப்புத்தகத்தில் வாசித்தபோது கதையினுடைய சாத்தியங்களைக் குறித்து புரிந்தமாதிரி இருந்தது. என்னுடைய சின்னச் சின்னத் துக்கங்களை கதைகளில் சொல்லி நான் சிறிய கவிதைகளைக் காப்பாற்றினேன். ஆனால் ஒரு நாள் அந்தத் துண்டுக்காகிதங்கள் எல்லாம் சேர்ந்து அடுப்பிற்குள் ஏறி விழுந்ததை நான் பார்த்தேன். நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்குழந்தைகளுக்கு ஏற்ற வேலை இதொன்றும் இல்லையென்ற தாக்கீது தீச்சூட்டோடுப் பதிலாகக் கிடைக்கவும் செய்தது.
அறுவடை முடிந்த வயற்காட்டில் நான் ஆண்பிள்ளைகளோடு சேர்ந்து கைப்பந்து விளையாடினேன். கிட்டிப்புல் விளையாடினேன். தூண்டில் போட்டு மீன் பிடித்தேன். மழை வெள்ளத்தில் பெரிய வள்ளத்தைச் செலுத்திப் போயிருக்கிறேன். மிகவும் உயரமான மாமரத்தின் கிளைகளைப் பிடித்து மரம் ஏறியிருக்கிறேன். பெண்பிள்ளை என்பதையே மறந்து போயிருந்தேன். அதனால் தானோ பொம்பிளைதானே என்ற ஏளனமும் குற்றச்சாட்டும் பிற்காலத்தில் என்னைப் பாதிக்கவில்லை.
எதுவும் செய்யாமலிருக்கும்போது இயற்கையை உற்று நோக்கியவாறு அமர்ந்திருப்பேன். எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் என்னால் அப்படியிருக்கமுடியும். இயற்கையை நான் உயிரைப் போல நேசிக்கத் தொடங்கியது அப்படித்தான். பெண்ணும் இயற்கையும் ஒன்றுதான் என்ற ஞானம் அப்போது தான் கை வந்தது. பெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானது என்றும் புரிந்து கொள்ளமுடிந்தது.
பத்தாவது வகுப்பில் பரீட்சை முடிந்து முடிவு தெரிவதற்காகக் காத்திருக்கும் போது மார்த்தாண்டவர்மா என்ற நாவல் முழுமையும் படித்தேன். அதில் வரும் அனந்தபத்மநாபனோடு நெருங்கிப் பழகிவிட்டேன். சுபத்ரா என்ற ஆதர்ச கதாபாத்திரமாகவே மாறியும் விட்டேன். அழுது புரண்டு தான் அம்மாயியிடமிருந்து முட்டத்துவர்க்கியின் நாவல்களை வாங்கினேன். அப்படியே வாசிப்பு எனக்கு ஒரு போதை மாதிரி ஆகிவிட்டது.
கல்லூரியில் சேர்ந்தபோது லைப்ரரியிலிருந்து இஷ்டம் போல எடுத்து வாசிக்கலாம் என்றாகி விட்டது. வகுப்புகள் நடக்கிறசமயத்தில் மலையாற்றூரினுடைய, தகழியினுடைய, புத்தகங்கள் பின்பெஞ்சிலிருக்கிற எனக்குத் தோழமையாயிருந்தன. மலையாளம் பி.ஏ. வில் சேர்ந்தபோது இன்னும் சுதந்திரமானவளானேன். வாசிப்பு மட்டுமல்ல எழுதுவதும் மிகவும் மரியாதைக்குரியது என்று நினைத்தேன். பி.ஏ. மூன்றாம் வருடம் படிக்கும்போது ஜனயுகம் வாரப்பதிப்பில் என்னுடைய முதல்க்கதை பிரசுரமானது. ‘ அஸ்தமயம் “ என்ற அந்தக் கதையைக் குறித்து மலையாளநாடு பத்திரிகையில் சாகித்ய வாரபலன் பகுதியில் எம். கிருஷ்ணன்நாயர் எழுதியிருந்ததைப் படித்தபோது மிகுந்த சந்தோஷம் தோன்றியது. அந்தக் காலத்தில் கேரளகௌமுதி வாரப்பத்திரிகையில் புதிதாக எழுதத் தொடங்கியவர்களுக்கென்று ஒரு இடம் இருந்தது. நான் அதில் அவ்வப்போது தலைகாட்டினேன். அதனுடைய மேற்பார்வையாளரான ரோஸ்சந்திரன் என் கதைகளின் குற்றங்குறைகளைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். கார்டில் அவர் எனக்கு எழுதுகிற கடிதவரிகளில் அப்போது தான் பிறந்த சிசுவினுடைய நிர்வாணத்தின் பரிசுத்தம் இருக்கும்.
இது நான் கதை எழுதிய சரித்திரம். ஆனால் இந்தச் சரித்திரத்திலிருந்து நான் எப்படி எழுத்தாளரானேன் என்று கண்டு பிடிக்கமுடியாதல்லவா. ஒருவர் பாடகராவது எப்படி? ஓவியராவது எப்படி? சிற்பியாவது எப்படி? எழுத்தாளராவது எப்படி? யாரால் சரியான பதில் தரமுடியும்?
நன்றி- கரண்ட் புக்ஸ் புல்லட்டின் அக்டோபர் 2001
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.