Thursday, 21 June 2012

சொர்க்கமும் நரகமும்

மலையாளத்தில் – மாலி

தமிழில் – உதயசங்கர்

 

என் வீட்டில் ஒரு தென்னைமரம் காய்த்தது.ஆனால் தேங்காய்குலைக்குப் பதிலாக மாங்காய்க்கொத்து காய்த்திருந்தது. மாங்காய்க்கொத்தில்

பதினோரு மாங்காய்கள்.ஆந்தைகள் மாங்காய்களைத் தின்று விட்டன. மாங்காய் கொட்டைகளை குளத்தில் நட்டு வைத்தேன்.

பதினோரு மாங்காய் கொட்டைகளும் சேர்ந்து ஒன்றாகி ஒரு பலாக் கொட்டையாகி விட்டன. பலாக் கொட்டையிலிருந்து ஒரு பாக்குமரம்

முளைத்தது. ஒரே நாளில் பாக்குமரம் பெரிதாக வளர்ந்தது.மரத்தின் உச்சியே கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வளவு உயரம்! மரத்தில் ஒரு

வாசகம் எழுதப் பட்டிருந்தது. ’என் மீது ஏறி சொர்க்கம் போகலாம்’

 

நான் மரத்தின் மீது ஏறினேன்.வேகமாக மேலே ஏறி விட்டேன்.அப்போது பாக்குமரத்தின் உச்சி தெரிந்தது. கீழே பார்த்தேன். பூமி தெரியவில்லை.

மேலே பார்த்தால் பாக்குமரத்தில் நெல்லிக்காய்கள். ஒவ்வொரு நெல்லிக்காயும் ஒரு ரத்தினம். வலது பக்கத்தில் ஒரு இடம் தெரிந்தது.அங்கே

போவதற்கு பாக்குமரத்தின் உச்சியில் ஒரு பாலம் இருந்தது. நான் பாலம் கடந்து அந்த இடத்தை அடைந்தேன். மிகவும் அகலமான ஒரு நதி

அங்கே ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதியில் ஒரு வண்டி இருந்தது. அந்த வண்டியில் நான்கு தேனீக்களைப் பூட்டியிருந்தார்கள்.வண்டிக்காரன்

ஒரு பெருச்சாளி. நான் வண்டியில் ஏறி அமர்ந்தேன். பெருச்சாளி சாட்டையால் தேனீக்களை அடித்தது. தேனீக்கள் வண்டியை இழுத்துக் கொண்டு

நதியைக் கடந்தது. நான் அக்கரையில் இறங்கினேன்.அங்கே சிவப்பு நிறமான ஒரு வயல். அதில் பச்சைநிறமுள்ள மிளகு நிறைந்து

இருக்கிறது.ஒவ்வொரு பச்சைமிளகின் நீளமும் ஒரு அடி நீளம்.பச்சைமிளகினை அன்னப்பறவைகள் கொத்தித் தின்கின்றன.”பரவாயில்லையே!

காரத்தை இஷ்டப் பட்டு திங்கிற அன்னங்கள்” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒரு அன்னப்பறவை ஒரு மிளகைக் கொத்தி

எடுத்து என்னிடம் நீட்டியது.பிறகு,” கொஞ்சம் சாப்பிட்டுப் பாரேன்” என்று சொன்னது. மரியாதைக்காக நான் அந்த மிளகினை வாங்கினேன்.

சந்தேகத்தோடு ஒரு நுனியில் லேசாகக் கடித்தேன். சர்க்கரையைப் போல என்ன ஒரு இனிப்பு! நான் நான்கு மிளகுகள் தின்று தீர்த்தேன்.

 

பின்னர் வயலைத் தாண்டி கடைவீதிக்கு வந்தேன்.இதற்கிடையில் தாகம் அதிகமாகிவிட்டது. நிறைய இனிப்பு சாப்பிட்டாச்சில்லியா? கடைவீதியில்

ஒரு கடையைப் பார்தேன். ‘இங்கே குடிப்பதற்கு காற்று விற்கப்படும்’ என்று எழுதி வைக்கப் பட்டிருந்தது. நான் அந்த கடைக்குள் சென்றேன்.

கடைக்காரன் ஒரு ஓணான்.பல வண்ணமுள்ள பலூன்கள் அங்கே தொங்கிக் கொண்டிருந்தன.ஓணான் ஒரு பச்சைப் பலூனை அவிழ்த்துக்

கொடுத்தது.நான் பலூன் காற்றைக் குடித்தேன். காற்று தொண்டையின் வழியாக வயிற்றில் இறங்கியது.இளநீரின் குளிர்மையும் இனிப்பும்

அதற்கு இருந்தது. பின்பு ஆரஞ்சு காற்றைக் குடித்தேன். கடைசியில் எலுமிச்சைக் காற்றையும் குடித்தேன்.இரண்டு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

ஓணான்,” காற்று குடிக்கிறவர்கள் பணம் கொடுக்கவேண்டியதில்லை. பணம் வாங்கிக் கொள்ளவேண்டும். அதுதான் இங்கே வழக்கம். “ என்று

சொல்லி ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தது.

 

நான் கடையிலிருந்து இறங்கி நடந்தேன். ஒரு திருப்பத்தை அடைந்தேன்.’நரகத்திற்குப் போகும் வழி’ என்று எழுதி வைக்கப் பட்டிருந்தது. நான்

அந்த வழியில் நடந்து போனேன். அங்கே ஒரு ராட்சசன் நின்று கொண்டிருந்தான்.ராட்சசன் என்னை உயரே தூக்கினான்.குகை மாதிரி இருந்த

வாயைத் திறந்தான்.என்னை வாயில் போட்டு வாயை மூடினான். என்னைச் சுற்றிலும் ஒரே இருட்டு. நான் தட்டுத் தடுமாறி முன்னால்

போனேன். தூரத்தில் ஒரு வெளிச்சம்.நான் அதைப் பார்த்துக் கொண்டே போனேன்.வெளிச்சம் பெரியதாகிக் கொண்டே வந்தது.அது

ராட்சசனுடைய காது. நான் அந்தக் காது வழியே தோளில் இறங்கினேன். கையில் தொங்கி கீழே நிலத்தில் குதித்தேன். அங்கே எட்டடி நீளத்திற்கு

ஒரு புழு கிடந்தது.”நான் உனக்கு நரகத்தை காண்பிக்கிறேன்” என்று புழு சொன்னது.பிறகு என்னை மேலே ஏற்றிக் கொண்டு பறந்து சென்றது.

ஒரு நெருப்புக்கோட்டைக்குக் கொண்டு சென்றது.

 

புழு நெருப்புக்கோட்டையினைத் தாண்டிச் சென்றது.அங்கே ஒரு பெரிய மைதானம். மைதானத்தில் கார்மேகங்கள் ஓடி விளையாடிக்

கொண்டிருந்தன. கார்மேகங்களின் பின்னால் கழுகுகள் ஓடின. கழுகுகள் பாட்டுகள் பாடின. புழுவும் நானும் பாட்டைக் கேட்டோம். முன்னால்

குனிந்து நான் புழுவிடம்,”நரகத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?”என்று கேட்டேன்.

 

புழு அதற்கு,” ரொம்பத் தூரமில்லை..கொஞ்சதூரம் தான்..” என்று சொன்னது. திடீரென எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. நான்,”புழுவே!

நரகம் பார்ப்பதற்கு இன்னொரு தடவை வாரேன்..இப்போ வீட்டுக்குப் போகணும்” என்று சொன்னேன். அதற்குப்புழு,”அதுக்கு ஒரு வழி செய்ரேன்..”

என்றது.

 

பின்பு ஒரு குழலை எடுத்து ஊதியது. உடனே ஒரு தவளை வந்தது. வரும்போது ஒரு பீரங்கியையும் உருட்டிக் கொண்டு வந்தது. தவளை

என்னிடம்,” பீரங்கிக்குள்ளே ஏறு!” என்று சொன்னது. நான் உள்ளே ஏறினேன். பயங்கரமான ஒரு சத்தம்! நான் பீரங்கியின் வாயிலிருந்து பாய்ந்து

காற்றில் பறந்தேன். எரிநட்சத்திரக் கல்லைப் போல வேகமாகப் பறந்தேன்.ஒரு மணிநேரம் கழித்து நிலத்தில் இறங்கினேன்.பார்த்தால் எங்கள்

வீட்டு முற்றம்! வானில் ஒரு வானவில்லைப் பார்த்தேன். வானவில்லில் ஒரு வாசகம் தெரிந்தது.’சொர்க்கமும் நரகமும் பூமியில் தான்

 images (1) இருக்கிறது.’

4 comments:

  1. அருமையான ஒரு ஃபாண்டஸி படைப்பு. இனிக்கும் மிளகு, குடிக்கும் காற்று ம்ம்ம்ம்ம்..... நல்ல கற்பனை.

    ReplyDelete
  2. அழகான கற்பனையும்..வாசிக்க வாசிக்க இனிமையாகவும் இருந்தது. ஒவ்வொரு சம்பவமுமே விசித்திரமானதாகவும்...இப்படியிருக்கிற உலகம் எப்படியிருக்கும் என்கிற கற்கனைகளை கிளறிவிட்டதாகவும் இருந்தது. எளிமையான நடை. பாராட்டுக்கள். முன்னெப்போதும் படிக்கக் கிடைக்காத வித்தியாசமான கதை.

    ReplyDelete
  3. ஒரு வித்தியாசமான பதிவு. படித்துப் பாருங்கள்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு உதயசங்கர்.

    ReplyDelete
  4. குழ்ந்தைகளுக்கு அருமையான் கதை

    ReplyDelete