Tuesday, 12 June 2012

சிராஜ்

சதத் ஹசன் மண்ட்டோ

தமிழில்- உதயசங்கர்Manto-02 

நாக்பரா போலிஸ்நிலையத்தையும் அதற்கு அடுத்து இருந்த ஈரானியன் தேநீர்க்கடையையும் பார்த்த மாதிரி அந்த சிறிய பூங்கா இருந்தது. தோண்டூவை அங்கே எப்போதும் பார்க்கலாம். விளக்குக் கம்பத்தில் சாய்ந்தபடி வாடிக்கையாளருக்காகக் காத்துக் கொண்டிருப்பான்.

யாருக்கும் அவனுடைய உண்மையான பெயர் தெரியாது. ஆனால் எல்லோரும் அவனை தோண்டூ- தேடுபவன், கண்டுபிடிப்பவன், என்ற அர்த்தத்தில்- அது அவனுக்கு பொருத்தமாகவும் இருந்தது. ஏனென்றால் அவனுடைய தொழிலே எல்லாவகையான, எல்லா விதமான, பெண்களையும் வாடிக்கையாளர்களுக்காக தேடுகிற, கண்டுபிடிக்கிற, வாங்குகிற மாமாத் தொழில்தான்.

கடந்த பத்து வருடங்களாக அவன் இந்தத் தொழிலில் இருந்து வருகிறான். இந்தக் காலகட்டத்தில் அவன் கைகள் வழியாக நூற்றுக்கணக்கான பெண்கள் – எல்லா மதத்தைச் சேர்ந்தவர்கள், இனத்தைச் சேர்ந்தவர்கள், எல்லாவிதக் குணாதிசயங்களைக் கொண்டவர்களும்- கடந்து போயிருக்கிறார்கள்.

நாக்பரா போலிஸ் தலைமையகத்துக்கு முன்னால், ஈரானியன் தேநீர்க் கடைக்கு எதிரே இருக்கும் விளக்குக் கம்பம் எப்போதும் அவனுடைய இருப்பிடமாக இருந்து வந்தது. அந்த் விளக்குக் கம்பம் அவனுடைய வியாபார அடையாளமாகவே மாறி விட்டது. அடிக்கடி நான் அந்த வழியே போகும் போது அந்த விளக்குக் கம்பத்தைப் பார்ப்பேன். நான் உண்மையில் வெற்றிலைக் கறை படிந்த அழுக்கான உடையோடு நிற்கிற தோண்டூவைப் பார்ப்பதாகவே உணர்வேன்.

அந்த விளக்குக் கம்பம் உயரமாக இருந்தது. தோண்டூவும் உயரமாக இருந்தான். பல திசைகளிலிருந்து ஏராளமான மின்சாரக் கம்பிகள் இந்த அசிங்கமான இரும்புத்தூணின் உச்சியிலிருந்து கிளம்பி அருகிலுள்ள கட்டிடங்களுக்கும், கடைகளுக்கும், ஏன் மற்ற விளக்குக் கம்பங்களுக்கும் சென்று கொண்டிருந்தது.

தொலைபேசித்துறை ஒரு சிறிய டெர்மினலை அந்த விளக்குக் கம்பத்தில் வைத்திருந்தது. அவ்வப்பொழுது டெக்னீசியன் அதைப் பரிசோதிப்பதைப் பார்க்க முடியும். சிலநேரங்களில் தோண்டூ கூட அந்த விளக்குக் கம்பத்தோடு இணைந்த ஒரு டெர்மினல் தான். அவனுடைய வாடிக்கையாளர்களின் பாலியல் சமிக்ஞைகளை சரிபார்க்கிற அல்லது இணைக்கிற ஒரு தொடர்புப் பெட்டிதான் என்று எனக்குத் தோன்றும். அவனுக்கு உள்ளூர்வாசிகளை மட்டுமல்ல, நகரத்திலுள்ள பெரிய சேட்டுகளையும் கூடத் தெரியும். அவர்கள் மாலை நேரத்தில் அவர்களுடைய பாலியல் ரகசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவனிடம் வருவார்கள்.

அவனுக்கு இந்தத் தொழிலில் உள்ள பெரும்பாலான பெண்கள் எல்லோரையும் தெரியும், அவன் வாங்கித் தருகிற உடைகளையே அவர்கள் உடுத்துவதினால் அவ்னுக்கு அவர்களுடைய உடல்களைப் பற்றிய அந்தரங்க விபரங்கள் எல்லாம் தெரியும். அதோடு அவர்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும் அவன் நன்றாக அறிந்திருந்தான். எந்தப் பெண் எந்த வாடிக்கையாளரைச் சந்தோஷப் படுத்துவாள் என்றும் மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருந்தான். ஆனால் அதிலும் ஒரு விதி விலக்கு இருந்தது. அது சிராஜ். ஆனால் அவளைப் பற்றிப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

தோண்டூ அடிக்கடி என்னிடம் சொல்லுவான்.

“ மாண்டோ சாகிப்.. இது அடங்காதது.. அவளை ஒரு வழிக்கும் கொண்டு வர என்னால முடியல.. அவளை மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததேயில்லை.. அவ குணம் மாறிக்கிட்டேயிருக்கு.. அவ சந்தோசமா இருக்கா.. மனசு விட்டு சிரிச்சிகிட்டிருக்கான்னு நீங்க நினைச்சிகிட்டிருக்கும் போதே திடீரென அவ அழுது குமுறுவா.. அவளால சாதாரணமா யாரோடும் ஒத்துப் போக முடியவில்லை..எல்லா பயணிகளோடயும் சண்டை.. நான் ஆயிரந்தடவை சொல்லிட்டேன்.. அவளைச் சரி பண்ணிக்கச் சொல்லி.. ஆனா அதெல்லாம் அவகிட்ட எதுவும் நடக்கமாட்டேங்கு.. பல தடவை நான் அவளை எங்கேயிருந்து வந்தாளோ அங்கேயே போகச் சொல்லிட்டேன்.. அவ முதல்ல பாம்பேயிலிருந்து வந்தா.. அப்ப பாத்துருக்கீங்களா.. உண்மையைச் சொல்லப் போனா உடுத்தறதுக்கு அவ கிட்ட நல்ல துணியோ அவ பேரில ஒரு நயாபைசாவோ கிடையாது.. அப்படியிருந்தும் அவ நான் கூட்டிட்டு வற ஆளுகளோட பந்து விளையாட மாட்டேங்கா.. என்ன பிடிவாதமான, குழப்பமான ஜென்மமோ…”

நான் சில தடவை சிராஜைப்  பார்த்திருந்தேன். அவள் ஒல்லியாகவும் அழகாகவும் இருந்தாள். அவளுடைய கண்கள் அவளுடைய நீள் வட்ட முகத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாமல் பெரிய சன்னல்களைப் போலிருந்தன.உங்களால் சாதாரணமாக அதைப் பார்க்காமல் தாண்டிப் போக முடியாது. நான் முதன் முதலில் கிளேர் சாலையில் அவளைப் பார்த்த போது நான் அவளுடைய கண்களைப் பார்த்து ,

“ தயவு செய்து கொஞ்சம் ஓரமாய் ஒரு நிமிடம் நிற்க முடியுமா? நான் இந்தப் பெண்ணை கொஞ்சம் பார்க்கட்டும்..”

என்று சொல்லவேண்டும் போல உணர்ந்தேன். அவள் மெலிந்திருந்தாள். ஆனாலும் அவளிடம் அவ்வளவு இருந்தது. கண்ணாடிக்கோப்பை நிறைய வழிந்து, நுரை பொங்கும் பலமான நீர்த்துப்போகாத மதுவைப் போல, வெளிப்படையான ஒரு அமைதியின்மையுடன் அவள் இருந்தாள். ஏனெனில் அவளுடைய ஆளுமையில் ஏதோ ஒன்று கூர்மையாகவும் கொடுக்கைப்போல கொட்டுவதாகவும் இருந்தது. ஆனாலும் இந்த குழப்பமான கலவையில் யாராவது கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அந்தத் தீயை அணைத்து விடலாம் என்று நினைத்தேன். அவளுடைய எரிச்சலூட்டும் நடத்தையை மீறி அவளுடைய பெண்மை துலங்கியது. அவளுடையத் தலைமுடி அடர்த்தியாக இருந்தது. கழுகின் மூக்கைப் போல கூர்ந்திருந்தது அவளுடைய மூக்கு. அவளுடைய விரல்கள் எனக்கு வரைபட நிபுணர்கள் பயன்படுத்தும் கூர்மையான பென்சில்களை நினைவு படுத்தின. அவள் எல்லாவற்றின் மீதும் லேசான கோபம் கொண்டவளைப் போலத் தோற்றம் தந்தாள். தோண்டூ மீது, அவன் எப்போதும் நின்று கொண்டிருக்கும் அந்த விளக்குக் கம்பத்தின் மீது, அவன் அவளுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் பரிசுப் பொருட்களின் மீது, ஏன் அவளுடைய முகத்தை விட்டு வெளியே ஓடும் அவளுடைய கண்கள் மீது கூட அவ்ள் கோபம் கொண்டவள் போலத் தோன்றினாள்.

ஆனால் இதெல்லாம் ஒரு கதைசொல்லியின் மனப்பதிவுகள். தோண்டூ அவனுக்கென்றே பிரத்யேகமான பார்வைகள் கொண்டிருந்தான். ஒரு நாள் என்னிடம் அவன்,

“ மண்டோ சாகிப் இன்னிக்கி இந்த மச்சினிச்சி சிராஜ் என்ன செய்ஞ்சா தெரியுமா? அண்ணே எனக்கு அதிர்ஷ்டம்! நாக்பரா போலிஸின் அன்பு மட்டும் இல்லைன்னா இந்நேரம் என்னய வேக வைச்சிருப்பாங்க.. அது உண்மையிலே பெரிய நாசமாப் போயிருக்கும்….”

என்று சொன்னான்.

“ என்ன நடந்தது? “

“ வழக்கம்போல தான்.. எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. மூளை குழம்பிப் போயிருக்கணும்னு நெனைக்கிறேன்.. அவ.. என்னய சிக்கல்ல மாட்டி விடறது இது முதல் தடவையில்ல.. ஆனாலும் நான் அவளை இழுத்துகிட்டே அலையிறேன்.. நான் அவளை இப்பவே கை கழுவணும்.. அவ என் தங்கச்சியும் இல்ல.. அம்மாவும் இல்ல.. நான் ஏன் கஷ்டப் பட்டு அவளைக் காப்பாத்தணும்.. சீரியஸா சொல்றேன்..மண்டோசாகிப்.. எனக்கு என்ன செய்றதுன்னே விளங்கலே..”

நாங்கள் இருவரும் ஈரானியன் தேநீர் விடுதியில் உட்கார்ந்து கொண்டு தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தோம் தோண்டூ அவனுடைய கோப்பையிலிருந்த தேநீரை சாஸரில் ஊற்றினான். அவன் எபோதும் குடிக்கிற காப்பியோடு கலந்து அந்தச் சிறப்புக் கலவையை உறிஞ்சத் தொடங்கினான்.

“ உண்மை என்னன்னா.. நான் இந்த மச்சினிச்சி சிராஜுக்காக வருத்தப்படறேன்..”

“ ஏன்?”

“ ஏன்னு கடவுளுக்குத் தான் தெரியும்.. நான் நெனக்கிறதைச் செய்றேன்..”

அவனுடைய தேநீரைக் குடித்து முடித்தான். பின்னர் சாஸரின் மேல் அந்தக் கோப்பையைக் கவிழ்த்து வைத்தான்.

“ அவ இன்னும் கன்னிதான்னு உங்களுக்குத் தெரியுமா? “

“ இல்லை.. தோண்டூ.. எனக்குத் தெரியாது…”

தோண்டூவுக்கு என் குரலில் இருந்த சந்தேகம் புரிந்து விட்டது. அது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“ நான் உங்ககிட்ட பொய் சொல்லல..மண்டோ சாகிப்.. அவ நூறு சதவீதம் கன்னிப்பெண்.. பந்தயம் கட்டறீங்களா நீங்க…”

“ எப்படி அது சாத்தியம் தோண்டூ?”

என்று நான் கேட்டேன்.

“ ஏன் முடியாது..? சிராஜ் மாதிரி ஒரு பொண்ணு.. நான் சொல்றேன்…. அவ இந்தத் தொழில்ல வாழ்க்கை பூரா இருந்தாலும் கன்னிப்பொண்ணாவே இருக்கமுடியும்.. விசயம் என்னன்னா.. அவளை ரெம்பத் தொடறதுக்கு யாரையும் அவ விடறதில்லை.. எனக்கு அவளோட கேடு கெட்ட சரித்திரமெல்லாம் தெரியும்.. அவ பஞ்சாபிலிருந்து வந்தான்னு தெரியும்.. லைமிங்டன் சாலையில் இருந்த அந்த அம்மா நடத்திகிட்டிருந்த தனி வீட்டில தான் இருந்தா.. ஆனா அங்கேயிருந்து.. வெளியேத்தப்பட்டா.. காரணம் பயணிகளோட அவ பண்ணின முடிவில்லாத சச்சரவுகள் தான்.. அவ அங்கே மூணு மாசம் இருந்ததே ஆச்சரியம் தான்..ஆனால் அந்த நேரத்தில அந்த அம்மா இருபது பொண்ணுங்களை வைச்சிருந்தாங்க.. ஆனால் மண்டோசாகிப் எவ்வளவு நாளைக்கித்தான் மனுசங்க உங்களுக்கு சாப்பாடு போடுவாங்க..? ஒரு நாள் அந்த அம்மா அவளை கட்டின துணியைத் தவிர வேற எதுவும் இல்லாம.. வெளியே விரட்டிட்டாங்க.. அதுக்கப்புறம் அவ பாராஸ் சாலையிலிருக்கிற இன்னொரு அம்மாகிட்ட போனா ஆனா அவ அவளோட குணத்தை மாத்திக்கவேயில்லை.. ஒரு நாள் அவ உண்மையில ஒரு பயணியைக் கடிச்சிட்டா..

அங்கேயும் ஒரு ரெண்டு மாசத்துக்கு மேல நீடிக்கல… அவகிட்ட என்ன பிரச்னைன்னு எனக்குத் தெரியல.. அவ அப்படியே கொதிச்சிப் போயிருக்கா.. யாராலயும் அதை அமத்த முடியல.. பாரஸ் சாலையிலிருந்து கேட்வாரியிலிருந்த ஒரு ஓட்டலுக்குப் போய்ச் சேர்ந்தாள்..அங்கேயும் அவளோட வழக்கமான பிரச்னை தான்.. ஒரு நாள் அந்த மானேஜர் அவளை நடையைக் கட்டச் சொல்லி விட்டான். நான் என்ன சொல்றது..மண்டோ சாகிப்.. இந்த மச்சினிக்கு.. எதிலயும் ஆர்வமில்லையே.. துணிமணி..சாப்பாடு.. நகை.. நீங்க எத வேணா சொல்லுங்க.. ..பேன் அவ துணிமணிகள்ல ஊர்ந்தலைகிற வரைக்கும்.. மாசக்கணக்கா குளிக்க மாட்டா..யாராவது.. கஞ்சா கொடுத்த அவ சந்தோசமா இரண்டு இழுப்பு.. இழுப்பா.. சில நேரங்களில் அவ ஹோட்டலுக்கு வெளிய நின்னு இசையைக் கேட்டுக்கிட்டிருப்பதை..நான் பார்த்திருக்கேன்..”

“ ஏன் அவள நீ திருப்பி அனுப்பல.. நான் என்ன சொல்றேன்னா .. அவளுக்கு இந்தத் தொழில்ல ஆர்வமில்லன்னு… வெளிப்படையா தெரியுது.. அவளோட டிக்கெட்டுக்கு நான் காசு… தர்றேன்…”

என்று நான் யோசனை சொன்னேன். தோண்டூ அதை விரும்பவில்லை.

“ மண்டோ சாகிப் மச்சினிச்சிக்கி டிக்கெட் காசு ஒரு பெரிய விஷயமில்லை.. நான் கொடுக்கமாட்டேனா.. என்னய கொல்லாதீங்க…”

“ அப்புறம் ஏன் அவள நீ திருப்பி அனுப்பல..”

அவன் காது மடிப்பிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். ஆழமாக இழுத்து புகையை அவனுடைய மூக்கு வழியாக வெளியே விட்டுக் கொண்டே,

“ அவ போறதை நான் விரும்பல…”

“ நீ அவளைக் காதலிக்கிறியா..? “ என்று நான் கேட்டேன்.

அவன் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டு,

“ என்ன பேசறீங்க.. மண்டோ சாகிப்..குரான் மேல சத்தியமாச் சொல்றேன்.. அப்படி ஒரு இழிவான எண்ணம் எப்போதும் என் தலையில ஏறாது.. அது சும்மா…சும்மா… எனக்கு அவளைக் கொஞ்சம் பிடிச்சிருக்கு…அவ்வளவு தான்..”

“ ஏன்? “

“ ஏன்னா அவ மத்த எல்லோரையும் மாதிரி..பணத்திலேயே குறியா இல்ல.. இது தான் பெரிய வித்தியாசம்… நான் அவளுக்காக ஒரு பேரம் பேசினா.. அவ ரெம்ப விருப்பத்தோட.. போவா.. நான் அவள பயணியோட ஒரு டாக்சியில ஏத்தி அனுப்பிருவேன்… மண்டோ சாகிப் பயணிகள் அவங்களோட பொழுதைக் கழிக்க வர்றாங்க.. அவங்க பணமும் செலவழிக்கிறாங்க.. அவங்களுக்கு என்ன கிடைக்குதுன்னு பாக்க விரும்புறாங்க.. அதை அவங்களோட கைகளால உணரவிரும்புறாங்க.. அங்கே தான் பிரச்னையே ஆரம்பிக்குது….அவ யாரையும் தொடக்கூட விடறதில்ல.. உடனே.. அவங்கள அடிக்க ஆரம்பிச்சுடறா… அந்த ஆள் கொஞ்சம் கனவானா இருந்தா அமைதியா பின் வாங்கிப் போயிருவான்.. வேற மாதிரின்னா அவ்வளவு தான்..நரகமாயிரும்.. நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்து மண்டியிட்டு தொழ வேண்டியதிருக்கும்….குரான் மேல சத்தியமா…சொல்றேன்.. நான் ஏன் இதைச் செய்யணும்.. எல்லாம் சிராஜுக்காகத் தான்.. மண்டோ சாகிப் உங்க தலைல.. அடிச்சிச் சத்தியம் பண்றேன்.. இந்த மச்சினிச்சியால என்னோட தொழில் பாதியா கொறைஞ்சிருச்சி.. “

ஒருநாள் நான் தோண்டூவின் நற்சேவையில்லாமலே சிராஜைப் பார்க்க முடிவு செய்தேன். அவள் பம்பாயிலுள்ள சேரிகளிலேயே மிகவும் அசுத்தமான ஒரு சேரியில் இருந்தாள். தெருக்களில் குவிந்துள்ள குப்பை குவியலுக்குள் நடக்கவே முடியவில்லை. நகரநிர்வாகம் ஏழைகளுக்காக நிறைய தகரக் கொட்டகைகளைக் கட்டியிருந்தது. அதில் ஒன்றில் தான் அவள் இருந்தாள்.

அவளுடைய வீட்டுக்கதவுக்கு வெளியே ஒரு வெள்ளாடு கட்டப்பட்டிருந்தது. நான் நெருங்கியபோது அது கத்தியது. ஒரு வயதான பெண் அவளுடைய கம்பில் சாய்ந்து நொண்டியபடியே வெளியே வந்தாள். நான் அங்கேயிருந்து போக யத்தனித்த போது கதவுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த முரடான கந்தல் துணியிலிருந்த ஒரு ஓட்டை வழியே – அது தான் திரைச்சீலையாகப் பயன்பட்டது- செவ்வக முகத்திலிருந்த பெரிய கண்களை நான் பார்த்தேன்.

அவள் என்னைத் தெரிந்து கொண்டாள். அவள் ஏதோ செய்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் உடனே அவள் வெளியே வந்தாள்.

“ இங்கே என்ன செய்றீங்க..”LADY

என்று அவள் கேட்டாள்.

“ நான் உன்னைப் பாக்கிறதுக்குத் தான் வந்தேன்..”

” உள்ளே வாங்க..”

“ இல்ல நீ எங்கூட வெளியில வரணும்னு விரும்புறேன்..”

அப்போது அந்த வயதான பெண்,

“ அதுக்கு பத்துரூபா வேணும்.. வச்சிருக்கியா..”

என்று கேட்டாள். நான் என்னுடைய மணிபர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

“ வா”

என்று நான் சிராஜிடம் சொன்னேன். அவள் சன்னல் போல இருந்த அவளுடைய கண்களால் என்னைப் பார்த்தாள். மீண்டும் ஒரு முறை எனக்குத் தோன்றியது. அவள் அழகி. ஆனால் உள்சுருங்கி உறைந்த மாதிரி பதப் படுத்தப்பட்ட,ஆனால் சரியாக பாதுகாக்கப்பட்ட ராணி.

நான் அவளை ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போனேன். அவள் அங்கே எனக்கு முன்னால் அவ்வளவாகச் சுத்தமில்லாத உடைகளில் உட்கார்ந்திருந்தாள். வெளி உலகத்தைக் கண்களால் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவை மிகப் பெரியவை. அவளுடைய முழு அழகுமே அதற்கு அடுத்த பட்சம் தான்.

நான் சிராஜுக்கு நாற்பது ரூபாய் கொடுத்தேன். அவள் அமைதியாக இருந்தாள். அவளுக்கு அருகில் நெருங்குவதற்கு நான் வேகமாக ஏதாவது குடிக்க வேண்டும். நான்கு லார்ஜ் விஸ்கியைக் குடித்தபிறகு நான் பயணிகள் செய்வதைப்போல என்னுடைய கரங்களை அவள் மீது போட்டேன். ஆனால் அவள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பிறகு நான் ஏதோ ஆபாசமாகச் செய்தேன். கண்டிப்பாக அவள் துப்பாக்கி மருந்து பீப்பாயைப் போல வெடிப்பாள் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியப்படும் படியாக அவள் எந்த எதிர்வினையையும் காட்டவில்லை. அவளுடைய பெரிய கண்களால் சும்மா என்னைப் பார்த்தாள். பின்பு,

“ எனக்கு கஞ்சா வேணும்…” என்று சொன்னாள். நான்,

“ கொஞ்சம் குடியேன்..” என்று யோசனை சொன்னேன்.

“ இல்லை.. எனக்கு கஞ்சா தான் வேணும்..” என்றாள் அவள்.

நான் அதற்காக ஒரு ஆளை அனுப்பினேன். அது எளிதாகக் கிடைக்கும். அநுபவம் வாய்ந்த கஞ்சா புகைஞர்களைப் போல அவள் அதை இழுக்க ஆரம்பித்தாள். அவளுடைய கண்கள் ஆக்கிரமிக்கும் அதன் இருப்பை எப்படியோ இழந்தது. அவளுடைய முகம் சூறையாடப்பட்ட ஒரு நகரத்தைப் போல இருந்தது. ஒவ்வொரு சுருக்கமும், ஒவ்வொரு பகுதியுமழிவைக் காட்டியது. ஆனால் இந்த அழிவு தான் என்ன? அவள் முழுமையடைவதற்கு முன்பே சூறையாடப் பட்டுவிட்டாளா? அஸ்திவாரம் எழும்புவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே அவளுடைய உலகம் அழிக்கப் பட்டுவிட்டதா?

அவள் கன்னிப்பெண்ணா இல்லையா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் அவளிடம் பேச விரும்பினேன். ஆனால் அவளுக்கு அதில் ஆர்வமில்லை. அவள் என்னோடு சண்டை போட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவள் அலட்சியமாக இருந்தாள். கடைசியில் நான் அவளை வீட்டில் விட்டு விட்டேன்.

தோண்டூவுக்கு என்னுடைய ரகசிய நடவடிக்கை தெரியவந்தபோது அவன் அதிருப்தி அடைந்தான். ஒரு நண்பனாகவும், தொழில் நடத்துபவனாகவும், அவனுடைய உணர்வுகள் காயப்பட்டு விட்டன. விளக்கம் சொல்வதற்கு ஒருவாய்ப்பைக் கூட அவன் எனக்குத் தெரியவில்லை. அவன் சொன்னதெல்லாம்,

“ மண்டோ சாகிப் ….உங்க கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கல…”

அவ்வளவுதான். பிறகு அவன் நடந்து போய் விட்டான்.

மறுநாள் நான் அவனைப் பார்க்கவில்லை. அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று நான் நினைத்தேன். ஆனால் அவன் அதற்கடுத்த நாளும் கூட வரவில்லை. ஒரு வாரம் கழிந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது என்னுடைய வேலைகாரணமாக தோண்டூவின் தலைமையகத்தைத் தாண்டிச் செல்வது வழக்கம். நான் அந்த விளக்குக் கம்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்வேன்.

ஒரு நாள் நான் சிராஜைப் பார்ப்பதற்குக் கூடப் போனேன். ஆனால் அங்கே என்னை வரவேற்பதற்கு அந்த வயதான கிழவி மட்டுமே இருந்தாள். நான் அவளிடம் சிராஜைப் பற்றிக் கேட்டபோது, அவள் இது போன்ற மாமிகளின் ஆயிரமாண்டு காலப் புன்னகையைச் சிந்தினாள். பிறகு,

“ அது போய் விட்டது.. ஆனா நான் வேறொண்ணை உனக்குத் தாரேன். “

என்று சொன்னாள். அவள் எங்கே என்பது தான் கேள்வி. தோண்டூவுடன் ஓடிப்போய் விட்டாளா? ஆனால் அது நடக்கவே முடியாது. அவர்கள் காதலிக்கவில்லை. அதோடு தோண்டூ அந்த மாதிரியான ஆளும் இல்லை. அவன் அன்பு செலுத்துகிற மனைவியும் குழந்தைகளும் அவனுக்கு இருந்தார்கள். ஆனால் இரண்டு பேரும் எங்கே போய் மறைந்தார்கள் என்பது தான் கேள்வி.

ஒருவேளை தோண்டூ கடைசியில் அவளை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கு முடிவு செய்திருக்காலாமோ, என்று நான் யோசித்தேன். அவன் அதைப் பற்றிய யோசனையுடன் எப்போதும் இருந்தான். ஒரு மாதம் கழிந்தது.

ஒரு நாள் மாலையில் நான் அந்த ஈரானியன் தேநீர் விடுதியைக் கடந்து செல்லும் போது விளக்குக் கம்பத்தில் சாய்ந்து கொண்டிருந்த தோண்டூவைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.

நாங்கள் தேநீர் விடுதிக்குள் சென்றோம். அவனிடம் நான் எதுவும் கேட்கவில்லை. அவனுக்குக் காப்பி கலந்த ஸ்பெஷல் தேநீரும், எனக்கு சாதரணத் தேநீரும் கொண்டு வரச் சொன்னான். அவனுடைய நாற்காலியில் திரும்பி உட்கார்ந்தான். அதைப் பார்க்கும் போது ஏதோ அவன் ஒரு நாடகத் தனமான உரையாடலை நடத்தப் போகிற மாதிரி இருந்தது. ஆனால் அவன் சொன்னதெல்லாம்,

“ எல்லாம் எப்படி இருக்கு..மண்டோ சாகிப்..”

அவ்வளவு தான்.

“ ஏதோ வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு தோண்டூ…”

என்று நான் பதில் சொன்னேன்.

“ நீங்க சொல்றது சரிதான்.. வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு.. இது விசித்திரமான உலகம் இல்லையா..! “

என்று சொல்லிப் புன்னகைத்தான்.

“ நீ அதை மறுபடியும் சொல்லலாம்…”

என்று நான் சொன்னேன். நாங்கள் தேநீரைக் குடித்துக் கொண்டிருந்தோம். தோண்டூ தன்னுடைய கலவையை சாஸரில் ஊற்றி ஒரு மிடறு குடித்து விட்டு,

“மண்டோ சாகிப் அவள் எல்லாக் கதையையும் சொல்லிவிட்டாள்.. என்னுடைய நண்பருக்கு அதாவது நீங்க ஒரு பைத்தியம்னு…..அவள் சொன்னாள்.”

“ ஏன்? “ என்று கேட்டுச் சிரித்தேன்.

“ அவள் சொன்னாள்.. நீங்க அவளை ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போயி நிறையப் பணம் கொடுத்தீங்களாம்.. நீங்க செய்வீங்கன்னு அவ நெனச்சாளாம்.. ஆனா நீங்க செய்யல…”

“ அது தான் அதுக்கு வழி..தோண்டூ..”

என்று நான் சொன்னேன். அவன் சிரித்தான்.

“ எனக்குத் தெரியும்.. அன்னிக்கு ஏதாவது கோபப் பட்டிருந்தா மன்னிச்சிருங்க.. எப்படியோ இப்ப எல்லா வேலையும் முடிஞ்சிருச்சு…”

“ என்ன வேலை?”

“ வேறென்ன…சிராஜோட வேலை தான்..”

“ என்ன நடந்தது..தோண்டூ….?”

“ நீங்க அவள வெளியில கூட்டிட்டுப் போன நாள உங்களுக்கு ஞாபகமிருக்கா.. அப்புறம் அவ நேரா என்கிட்ட வந்தா.. அவகிட்ட நாப்பது ரூபாய் இருப்பதாகவும் நான் அவளை லாகூருக்குக் கூட்டிட்டுப் போகணும்னு சொன்னா.. நான் அவகிட்ட மச்சினி எந்தப் பிசாசு உம்மேல இறங்கிருக்குன்னு கேட்டேன்.. அதுக்கு அவ சொன்னா.. வா..தோண்டூ.. எனக்காக கூட்டிட்டுப் போ… மண்டோ சாகிப்.. உங்களுக்குத் தெரியுமா? நான் அவகிட்ட இல்லன்னு மறுத்துச் சொன்னதேஇல்லை.. நான் அவள விரும்புறேன்.. அதனால நான் சரி.. அதத் தான் நீ விரும்புறேன்னா போவோம்னு சொன்னேன்…

நாங்க ரயில் டிக்கெட்டுகளை வாங்கினோம்… பின்பு லாகூர் போய்ச்சேர்ந்தோம்.. நாங்க எந்த ஓட்டலில் தங்க வேண்டும் என்று கூட அவளுக்குத் தெரிந்திருந்தது…

அடுத்த நாள் அவ என்கிட்ட தோண்டூ எனக்கு ஒரு பர்தா வாங்கிட்டு வா..என்றாள். நான் வெளியே போய் அவளுக்கு ஒரு பர்தா வாங்கிட்டு வந்தேன்…அதன் பிறகு நாங்க சுத்த ஆரம்பிச்சோம்.. அவ காலையில புறப்பட்டு குதிரைவண்டியில் என்னோட தொணையோட லாகூரின் தெருக்களில் முழுநாளையும் செலவழிச்சா.. அவ எதைத் தேடறான்னு என்கிட்ட சொல்லவும் இல்ல…

நான் எனக்குள்ளே சொல்லிகிட்டேன்.. தோண்டூ நீ என்ன வாழைப்பழமாகி விட்டாயா?.. ஏன் நீ பம்பாயிலிருந்து இந்தப் பைத்தியக்காரப்பொண்ணோட வந்தே…?

பிறகு மண்டோ சாகிப்.! ஒரு நாள் அவ குதிரைவண்டி தெருவின் நடுவே போய்க்கிட்டிருக்கும்போது நிறுத்தச் சொன்னா… நீ அந்த ஆளப் பாத்தியா.. அவனை என்கிட்ட கூட்டிட்டு வரமுடியுமா? இப்போ நான் ஹோட்டலுக்குப் போறேன்….

நான் குழம்பிவிட்டேன்.. ஆனா குதிரைவண்டியை விட்டு கீழே இறங்கி அவ காண்பிச்ச அந்த மனிசன் பின்னாலேயே போனேன்.. நல்லவேளை.. கடவுள் புண்ணியம்..என்னால மனுசங்களைச் சரியாக் கணிக்க முடியுது.. நான் அவங்கிட்ட பேச ஆரம்பிச்சேன்.. ரெம்ப நேரம் ஆகல.. அவனும் பொழுதை நல்லவிதமா கழிக்க தயாரா இருக்கான்னு கண்டு பிடிச்சிட்டேன்..

நான் அவங்கிட்ட ரெம்ப ஸ்பெஷலான சரக்கை நான் பம்பாயிலிருந்து கொண்டு வந்திருக்கேன்.. உடனே அவன கூட்டிட்டுப் போகச் சொன்னான்.. ஆனா நான் சொன்னேன்.. அவ்வளவு வேகம் வேண்டாம் நண்பா.. முதல்ல உன் ரூபாய் நோட்டு நிறத்தை எனக்குக் காட்டு.. அவன் ஒரு கனத்த கத்தை நோட்டுகளை என் முகத்தில் வீசினான்.. எனக்கு என்ன புரியலன்னா ஏன் இவ்வளவு பெரிய லாகூரில் சிராஜ் இவனைத் தேர்ந்தெடுத்தா…எப்படியோ நான் எனக்குள் சொல்லிகிட்டேன்.. தோண்டூ எல்லாம் நல்லபடியாப் போய்க்கிட்டிருக்கு.. நாங்க ஓட்டலுக்குப் போறதுக்கு ஒரு குதிரைவண்டி அமத்தினோம்..

நான் உள்ளே போனேன்.. சிராஜிடம் அந்த மனுசன் வெளியே காத்திருக்கான்னு..சொன்னேன்..அவ கூட்டிட்டு வா..ஆனா நீ வெளியே போகாதேன்னு சொன்னா நான் அவன உள்ள கூட்டிட்டு வந்தேன்.. அவன் அவளப் பார்த்ததும்..வெளியே ஓட முயற்சி பண்ணினான்.. ஆனா சிராஜ் அவனை இறுக்கிப் பிடிச்சிகிட்டா…”

“ அவ அவன இறுக்கிப் பிடிச்சிக்கிட்டாளா..” என்று நான் இடைமறித்தேன்.

“ ஆமா சாகிப்.. சிராஜ் அந்த மச்சானை இறுக்கிப்பிடிச்சிகிட்டு அவங்கிட்ட நீ எங்கே போறே.. ஏன் என்ன வீட்ட விட்டு ஓடிவரச் சொன்னே.. நான் உன்னக் காதலிச்சேன்னு உனக்குத் தெரியும்..ஞாபகமிருக்கா நீயும் என்ன காதலிக்கிறதா சொன்னே.. ஆனா நான் என் வீட்ட , என் அப்பா அம்மாவை, என்னோட சகோதரர்கள என்னோட சகோதரிகள, விட்டுட்டு அம்ரித்சரிலிருந்து லாகூருக்கு உன்கூட ஓடி வந்தேன்.. இதே ஓட்டல்ல தான் தங்கியிருந்தோம்.. அன்னிக்கு ராத்திரியே என்னய விட்டுட்டு நீ ஓடிப் போயிட்டே.. அதுவும் நான் தூங்கிக்கிட்டிருக்கும்போது.. ஏன் என்னய கூட்டிட்டு வந்தே.. ஏன் என்னய வீட்ட விட்டு ஓடி வரச் சொன்னே… உனக்குத் தெரியும் நான் எல்லாத்துக்கும் தயாராத் தான் இருந்தேன்.. நீ என்ன ஏமாத்திட்டே ஆனா நான் திரும்பி வந்து உன்ன கண்டுபிடிச்சிட்டேன்.. நான் இன்னமும் உன்ன காதலிக்கிறேன்.. எதுவும் மாறல எங்கிட்ட…

மண்டோ சாகிப்! அவ அவனச் சுற்றிக் கைகளப் போட்டா.. அந்த மச்சான் அழ ஆரம்பிச்சிட்டான்.. அவகிட்ட அவன மன்னிக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேயிருந்தான்.. அவன் அவளுக்குத் துரோகம் செய்ஞ்சிட்டதா சொல்லிகிட்டேயிருந்தான்.. அவன் குளுந்து போய் நடுங்கிக்கிட்டிருந்தான்.. இனிம அவள விட்டுட்டுப் போகவே மாட்டேன்னு சொல்லிகிட்டிருந்தான்.. அவன் திரும்பத் திரும்ப அதையே சொல்லிகிட்டிருந்தான்… அவன் என்ன கழிசடையைப் பேசிக்கிட்டிருந்தான்னு அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம்..

பிறகு சிராஜ் என்ன வெளியே போகச் சொன்னா.. நான் வெளியே இருந்த வெறும் கட்டில்ல படுத்துகிட்டேன்.. ஏதோ ஒரு நேரத்தில உறங்கியும் போனேன்.. அவ என்ன எழுப்பறப்போ பொழுது விடிஞ்சிருச்சி… தோண்டூ…நாம.. போவோம்..”

என்று சொன்னாள் சிராஜ். நான்,

“ எங்கே? “ என்று கேட்டேன்.

” நாம பம்பாய்க்குத் திரும்பிருவோம்..”

“ எங்கே அந்த மச்சான்…?” என்று நான் கேட்டேன்.

“ அவன் தூங்கிக்கிட்டிருக்கான்.. நான் அவனோட முகத்தை என்னோட பர்தாவால மூடிட்டேன்…”

என்று அவள் பதில் சொன்னாள்.

தோண்டூ இன்னொரு கோப்பை காப்பி கலந்த தேநீருக்குச் சொன்னான். நான் நிமிர்ந்து பார்த்த போது சிராஜ் ஹோட்டலுக்குள் நுழைவது தெரிந்தது. அவளுடைய நீள் வட்ட முகம் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளுடைய பெரிய இரண்டு கண்களும் தாழ்ந்து இறங்கி விட்ட ரயில்வே சிக்னல்களைப் போல இருந்தன.

No comments:

Post a Comment