காத்து கருப்பு
உதயசங்கர்
ஓவியம் ஸ்ரீரசா
முருகனுக்குக் காய்ச்சல்.
ஐந்து நாட்களாக விட்டு
விட்டு வருகிறது. பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை. காலாண்டு
தேர்வு வரப்போகிறது. தலையாசிரியர்
அகமது சார் தினமும் அமராவதியிடம்
கேட்பார். அமராவதிக்கு முருகனின்
பக்கத்து வீடு.
முருகனின் சின்னூர்
கிராமத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில்
மாத்திரை வாங்கிச் சாப்பிடுகிறான். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. முருகனின் பாட்டி,
“ புள்ளை எதையாச்சும்
பார்த்துப் பயந்துருக்கும்மா.. காத்துக்கருப்பு பிடிச்சிருக்கும்…போய்
மந்திரிச்சுட்டு ..வா..”
என்று சொன்னார்.
அம்மாவும் பூசாரியிடம் போய்
மந்திரிச்சிட்டு வரத் தயாரானார். முருகன்
வாடிப் போயிருந்தான். ஐந்துநாட்களாகச் சாப்பிடாதால் மெலிந்திருந்தான். அதை
விட அவனுகுப் பள்ளிக்கூடம்
போகமுடியவில்லையே என்ற கவலை
வேறு. காலாண்டு தேர்வு
வருகிறது. அது முடிந்ததும் ஆண்டுவிழா
வேறு வருகிறது. அவன்
செஸ், கேரம், கபடி,
இந்த விளையாட்டுகளில் பெயர்
கொடுத்திருந்தான்.
எப்படியாவது இந்தக்
காய்ச்சல் குணமாக வேண்டும்
என்று நினைத்தான். அம்மா
அவனை அழைத்துக் கொண்டு
பூசாரியிடம் போனார். பூசாரி
அவனை உட்காரவைத்து கண்ணை
மூடி ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தார். வேப்பிலையினால் அவனுடைய உடம்பில்
மூன்று முறை தடவிக்கொடுத்தார். திருநீற்றைக்
கையில் எடுத்து அதைக்
கொண்டும் உடம்பின் மீது
தடவிக்கொடுத்தார். பிறகு அவனுடைய
நெற்றியில் திருநீறைப் பூசினார். வாயைத் திறக்கச்சொல்லி கொஞ்சம் திருநீறை போட்டார்.
பக்கத்தில் இருந்த பித்தலைச்
செம்பிலிருந்து சிறிது தண்ணீரை
அவனுடைய வாயில் ஊற்றினார்.
“ எல்லாம் சரியாயிரும்… ராத்திரி கம்மாக்கரைப் பக்கம்
போகக்கூடாது.. ஏதோ காத்துக்கருப்போட வேலை
மாதிரி தான் தெரியுது..”
என்று அம்மாவிடம்
சொன்னார். அம்மா சேலை முந்தானையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
அவனுக்குப் பின்னாலும் இரண்டு
பெரியவர்கள் மந்திரிப்பதற்காக நின்று
கொண்டிருந்தார்கள்.
முருகனுக்கு மிகவும்
சோர்வாக இருந்தது. வீட்டுக்குள்
நுழைந்த போது வாசலில் அவனுடைய
பள்ளித்தலைமையாசிரியர் அகமது சார்
நின்று கொண்டிருந்தார். அவரைப்
பார்த்ததும் முருகன் முகத்தில்
உற்சாகம்.
“ வணக்கம் சார்,
“
என்றான். அவனுடைய
அம்மாவும் “ வாங்க சார். உட்காருங்க.” என்று
சொல்லிவிட்டு ஓடிப்போய் பிளாஸ்டிக்
சேரை எடுத்துக் கொண்டு
வந்தாள். முருகன் வாசல்
திண்ணையில் உட்கார்ந்தான்.
அகமது சார்
கேட்பதற்கு முன்னாலேயே,
“ ஐஞ்சு நாளைக்கு
முன்னால ராத்திரி பயங்களோட
சேர்ந்து கம்மாய்க்கு வெளிக்கிருக்கப்போயிருக்கான்.. மறுநாள் காலையிலிருந்து காய்ச்சல்யா.. விட்டு
விட்டு வருது.. அதான்..
ஏதாவது காத்துக்கருப்பு அடிச்சிருக்குமோன்னு போய் மந்திரிச்சிட்டு வாரோம்..”
என்றார். முருகனுக்கு
அம்மா வெளிக்கிருக்கப்போனான் என்று
சொன்னதைக் கேட்டு முகம்
சுளித்தான். இதை எல்லாம் சொல்லணுமா?
அகமது சார்
சிரித்துக் கொண்டார். பிறகு
கேட்டார்.
“ சரிம்மா.. இங்கே
வேற யாருக்காச்சும் காய்ச்சல்
இருக்கா? “
“ ஆமாங்கய்யா.. எங்கவூட்டுக்காரருக்கு காய்ச்சல் வந்துச்சு..
ஆனால் மூணு நாளையில சரியாயிருச்சு..”
அதைக் கேட்டதும்
அகமது சார் தலையாட்டிக் கொண்டார்.
“ அதான் முருகனுக்குக்
காய்ச்சல் வந்துருக்கு.. போனவாரம் மழை
பேய்ஞ்சதில்லையா? மழை பேஞ்சதும்
புதிய பாக்டீரியாக்களும் வைரஸ்களும்
உருவாகிக் காற்றில் பரவும்..
ஊருக்குள் நிறையப்பேருக்கு வைரஸ்
காய்ச்சல் வந்துருக்கு.. மற்றபடி
காத்துக்கருப்பு அப்படின்னு எதுவுமில்லை..”
என்று
முருகனைப் பார்த்துச் சொன்னார்.
அம்மாவுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத
மாதிரியும் இருந்தது. ஆனால்
முருகனுக்குப் புரிந்து விட்டது.
அகமது சார்
வாங்கிக் கொண்டு வந்திருந்த
பழங்களைக் கொடுத்தார்.
“ சரி முருகா..
சீக்கிரம் குணமாயிரும்.. காலாண்டுக்கு
முன்னாடியே பள்ளிக்கூடத்துக்கு வந்துரு..
போயிட்டு வரேம்மா..”
என்று சொல்லிவிட்டு
போய் விட்டார். வீட்டுக்குள்ளேயிருந்து பாட்டி சொன்னார்.
“ அப்ப காத்து
பாக்டீரியா.. கருப்பு வைரசுவா..
இதென்னடா கூத்தாருக்கு..”
என்று சொல்லிச்
சிரித்தார். முருகனும் சிரித்தான்..
நன்றி - வண்ணக்கதிர்
No comments:
Post a Comment