Thursday, 4 September 2025

பூமியின் விருந்தினர்கள்

    பூமியின் விருந்தினர்கள்

உதயசங்கர்


 பிரபுவுக்குப் புரியவில்லை. பள்ளியில் தமிழாசிரியர்,

யாரையும் வெறுக்காதீர்கள், யாரையும் நிராகரிக்காதீர்கள், யாரையும் அவமதிக்காதீர்கள், எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள். அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள். நாம் வாழும் இந்த பூமியை நேசியுங்கள்..

என்று சொன்னதைக் கேட்டு பிரபுவுக்குப் புரியவில்லை. அவன் எல்லாரிடமும் நட்பாகத்தான் பழகுகிறான். இயன்ற உதவிகள் செய்வான். அவனுக்கு அன்பின் சுவை தெரியும். திகட்டாத இனிப்புச் சுவை. ஒவ்வொரு உதவியும் ஒவ்வொரு சுவை. பேக்கரிகளில் ஒவ்வொரு விதமான கேக்குகள் இருக்கிறதல்லவா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாக இருக்கிறது. அதே மாதிரி. பிரபுவுக்கு கேக் என்றால் உயிர். எத்தனை கேக் கொடுத்தாலும் சாப்பிடுவான். அப்படித்தான் உதவி செய்வதிலும் சரி. என்ன உதவி வேண்டுமானாலும் செய்வான்.

நேற்று மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டியைத் தூக்கி அதன் கூட்டில் விட்டான். தாய் அணில் அவனுக்கு கீச் கீச் கீச் கீச் என்று நன்றி சொன்னது. எல்லாரும் பாராட்டினார்கள். அன்பின் சுவை ஸ்பாஞ்ச் கேக்கைப் போல கரைந்து உருகி உடலில் சேர்ந்தது.

போனவாரம் பிரபு பள்ளிக்கூடம் விட்டு போய்க்கொண்டிருந்தான். ஒரு தள்ளுவண்டியில் பெரிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு வயதான தாத்தா இழுக்கமுடியாமல் இழுத்துக் கொண்டு போனார். அவன் அந்த தாத்தாவிடம்,

தாத்தா நான் கொஞ்சம் தள்ளிவிடுகிறேன்.. “ என்று சொல்லிவிட்டு பின்னால் போய் வண்டியைத் தள்ளிவிட்டான். மேடு தாண்டியதும் தாத்தா,

போதும் பேராண்டி.. நல்லாப்படிஎன்று வாழ்த்திவிட்டுச் சென்றார். அன்று முழுவதும் ரோல் கேக் மாதிரி அப்படி இனித்தது.

ஆனால் வெறுப்பின் சுவை எப்படி இருக்கும்? அவனுக்குத் தெரியாது. அவனுடைய நண்பன் அகமதிடம் கேட்டான்,

வெறுப்பின் சுவை எப்படி இருக்கும்? “

எனக்கும் தெரியாது.. ஆனால் அது நன்றாக இருக்காது என்று மட்டும் தெரியும்..என்று சொன்னான்.

எனக்கு வெறுப்பின் சுவையை ருசிக்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது..

என்றான் பிரபு.

இதை அங்கேயிருந்த ஒரு புளியமரத்தடியில் நின்று கொண்டிருந்த வெறுப்பு கேட்டது. உடனே அது பிரபுவைப் பின் தொடர்ந்து அவனுடைய வீட்டுக்குப் போனது. பிரபு உறங்கும்போது அவனைப் பிடித்துக் கொண்டது.

காலையில் எழுந்திரிக்கும் போதே பிரபுவின் முகம் சரியில்லை. காரணமில்லாமல் கோபம் வந்தது. வாலாட்டிக் கொண்டே ஓடி வந்த பப்பியை

ச்சீ ப்போ..என்று விரட்டினான். வீட்டின் பின்புறம் எப்போதும் குயிலின் பாட்டை அவன் ரசித்துக் கேட்பான். இன்று அவனுக்கு அது பிடிக்கவில்லை. ஏன் இந்தக் குயில் இப்படிக் கத்துது? அங்கெ வந்த அப்பாவிடம்,

அப்பா இந்த வேப்பமரத்தை வெட்டி விட வேண்டும்.. இந்தப் பறவைங்க கத்தறதைச் சகிக்க முடியவில்லை..

என்றான் பிரபு. அப்பா பிரபுவுக்கு என்னாச்சு? என்று ஆச்சரியமாகப் பார்த்தார். அவன் சொன்னதைக் கேட்ட குயில் அங்கிருந்து பறந்து போய் விட்டது. .

அம்மாவுக்கு அன்று உடம்பு முடியவில்லை. அதனால் அப்பாதான் உப்புமா கிண்டியிருந்தார். பிரபுவுக்கு உப்புமா எப்போதும் பிடிக்கும். அதுவும் அப்பா கிண்டினால் மிகவும் பிடிக்கும். ஆனால் அன்று உப்புமாவை வெறுப்புடன் பார்த்தான். 

எப்ப பாரு உப்புமா தானா? தின்னு தின்னு போரடிக்குது..என்று கத்தினான்.

அவன் முகம் சிவந்திருந்தது. புருவங்கள் நெறிந்தன. வாய் கோணியிருந்தது. சரியாகச் சாப்பிடாமல் எழுந்து பள்ளிக்கூடம் போனான்.

போகும்போது சாக்கடையில் இரை தேடிக்கொண்டிருந்த பன்றியைப் பார்த்தான். அருவெறுப்பாய் இருந்தது. பன்றிகளே இருக்கக்கூடாது என்று நினைத்தான். தெருநாய் ஒன்று குரைத்தது. தெருநாய்களே இருக்கக்கூடாது என்று நினைத்தான்.

திடீரென அவன் மீது ஒரு சைக்கிள் வந்து மோதியது. கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். அவனை விடச் சின்னப்பையன் முக்காபெடல் போட்டுக் கொண்டு வந்தவன் நிலை தடுமாறிவிட்டான். அவனை ஓங்கி ஒரு அறையலாமா என்று யோசித்தான். அவன் யோசித்தவுடன் அவனறியாமல் கை ஓங்கி ஒரு அறை கொடுத்து விட்டது. அந்தச் சின்னப்பையன் அழுது கொண்டே போனான்.

யாரும் வருவதற்கு முன்னால் ஓடி விட வேண்டும் என்று வேகமாக ஓடினான். அவனுக்குப் புரியவில்லை. என்னாச்சு? காலையில் இருந்து எல்லாமே தப்பு தப்பாய் நடக்குது என்று தோன்றியது.

பள்ளிக்குள் நுழைந்ததும் அவனைப் பார்த்த பிரகாஷ் ,

டேய் நம்ம பசங்க எல்லாம் காவிக்கயிறு கட்டிக்கிடணும்.. பச்சைக்கயிறு கட்டின பசங்க நமக்கு எதிரிஎன்றான். அத்துடன் பையிலிருந்து ஒரு காவிக்கயிறை எடுத்து பிரபுவின் கையில் கட்டி விட்டான். அதுநாள் வரை அவன் எந்தக் கயிறையும் கட்டியதில்லை. எல்லாரிடமும் நன்றாகத்தான் பழகுவான். காவிக் கயிற்றைக் கட்டியதிலிருந்து எதிரே வரும் ஒவ்வொரு பையனின் கையையும் பார்த்துக் கொண்டே வந்தான்.

நீலம், சிவப்பு, கருப்பு, என்று எந்தக் கயிறைப்பார்த்தாலும் அவனுடைய மனதில் பகை உணர்வு தோன்றியது.

ஆளப்பாரு..என்று வாய்விட்டுத் திட்டினான்.

வகுப்பில் அவனுக்கு அருகில் அகமது உட்கார்வான். இன்று அகமதைப் பார்த்ததும் இவன் வேறு ஆள் என்று நினைத்தான். அதுநாள்வரை தோன்றாத புதிய எண்ணம் தோன்றியது. வித்தியாசமாய் பார்த்தான். அகமதிடம் இருந்து கொஞ்சம் விலகி உட்கார்ந்தான். அகமது எப்போதும் போல பிரபுவின் தோளில் கையை போட்ட போது தட்டி விட்டான்.

அகமதுவுக்குப் புரியவில்லை.

அன்று தமிழாசிரியர்,

குழந்தைகளே! வெறுப்பு ஒரு கொடிய மிருகம்.. அது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும்.. எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருக்கும்.. வெறுப்பு எப்படி உருவாகிறது தெரியுமா? நமக்கு ஒன்று பிடிக்காமல் போகும்போது வெறுப்பு நம் மனதில் மெல்லத் தன் வாலை நீட்டி நுழையப் பார்க்கிறது. அப்போதே நம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா? “

என்று நிறுத்தினார். உடனே எல்லாரும்,

என்ன ஆகும் ஐயா? “

என்று சேர்ந்து கேட்டார்கள்.

வெறுப்பு கூடவே கோபத்தை அழைத்து வரும். கோபத்தின் உடன்பிறப்பான வன்முறையை அழைத்து வரும். வன்முறை அடுத்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும்.. பல நேரங்களில் நம்மையும் துன்புறுத்தி விடும்.. உங்களுக்கு ஹிட்லரைத் தெரியுமா? “

என்று கேட்டுவிட்டு மாணவர்களை ஒரு முறை சுற்றிப் பார்த்தார்.

வெறுப்பின் மொத்த உருவம் ஹிட்லர் தான். இரண்டாம் உலக யுத்தத்தை நடத்தி கோடிக்கணக்கான மனிதர்களைக் கொன்றவன்.. அவனுடைய சொந்த நாட்டிலேயே ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றவன்.. ஏன் அவன் அப்படி நடந்து கொண்டான் தெரியுமா? “

என்று கேட்டார் தமிழாசிரியர். வகுப்பு அமைதியாக இருந்தது.

வெறுப்பு தான் காரணம் அவன் யூத இனமக்களை வெறுத்தான். அவனிடம் இருந்த வெறுப்பின் விதைகளை மற்றவர்களின் மனதிலும் விதைத்தான். அதனால் இருபது லட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்றான்.. கொடூரமாகக் கொன்றான்.. கூட்டம் கூட்டமாக விஷவாயுவைச்ச் செலுத்திக் கொன்றான்.. உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்றான்.. மூச்சுத்திணற வைத்துக் கொன்றான்.. உடலின் ரத்தம் முழுவதையும் உறிஞ்சிக் கொன்றான்.. துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.. “

என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். மாணவர்களின் முகத்தில் சோகம் ததும்பியது. ஒரு பையன் கண்ணைக் கசக்கினான். சில மாணவர்களுக்கு உடம்பு நடுங்கியது. அடுத்து ஆசிரியர் என்ன சொல்லப்போகிறாரோ என்று காத்திருந்தனர் மாணவர்கள்.

தமிழாசிரியர் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதைப் போல சில நிமிடம் அமைதியாக இருந்தார். அவருடைய முகத்திலும் சோகம். கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

நண்பர்களே! வெறுப்பு நம்முடைய பகுத்தறிவை, அன்பை, நேசத்தை அழித்து விடும். அன்பில்லாத உலகத்தில் எந்த உயிரும் வாழ முடியாது.. , எறும்பு முதல் மனிதர்கள் எல்லாரும் தனித்துவமான உயிர்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை, ஒவ்வொரு விதமான நம்பிக்கை.. நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும்.. நாம் அனைவருமே இந்த பூமியின் விருந்தினர்கள் தான்.. நமக்குள் அன்பிருந்தால் மட்டுமே நாம் அமைதியாக வாழமுடியும்..

வெறுப்பின் துப்பாக்கிக்குண்டுகள் தான் நம்முடைய மகாத்மாவைக் கொன்றது.. எல்லாரும் ஒற்றுமையாக வாழுங்கள். அனபைக் கொடுத்து அனபைப் பெறுங்கள் என்றார் காந்தி. ஹிட்லரைப் போலவே சகமனிதர்களின் மீது வெறுப்பை வளர்ப்பவர்கள் தான் காந்தியின் அன்பைப் பொறுக்கமுடியாமல் கொன்றார்கள். “

பிரபு, அகமது, பிரகாஷ், மணிகண்டன், சந்தோஷ், டேவிட். எல்லோர் மனதிலும் காந்தியின் படுகொலை காட்சிகள் ஞாபகத்து வந்தன. அதையும் தமிழாசிரியர் சொல்லியிருந்தார். அன்று பல மாணவர்கள் காந்தித்தாத்தாவுக்காகக் கண்ணீர் சிந்தினார்கள். இன்றும் எல்லாருடைய மனதிலும் ஒரு பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

வகுப்பு முடிந்து விட்டது. தமிழாசிரியர் முத்தாய்ப்பாக ஏதாவது சொல்லுவார் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாகப் போய் விட்டார்.

மாணவர்கள் அமைதியாக இருந்தார்கள். எல்லார் மனதிலும் ஏதோ நெகிழ்ச்சியான உணர்வு. பிரபுவின் மனதில் புகுந்திருந்த வெறுப்பு காந்தித்தாத்தாவைப் பற்றிப் பேசத் தொடங்கியதுமே சன்னல் வழியே குதித்து ஓடிப் போய் விட்டது.

பிரபு இப்போது அவனை அறியாமலேயே அகமதின் அருகில் நெருங்கியிருந்தான். பள்ளி முடியும் போது அந்த வகுப்பில் கையில் கயிறு கட்டியிருந்த பல மாணவர்கள் கயிறை அறுத்து எறிந்தார்கள். கயிறை அறுத்ததுமே ஒரு விடுதலை உணர்வு வந்தது.

தமிழாசிரியர் அந்தக் காட்சியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே சென்றார். பிரபு அகமதின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு சென்றான். அவர்களுடன் பிரகாஷும் சேர்ந்து கொண்டான்.

அவர்கள் அனைவரின் மனதிலும் அன்பின் இனிப்புச்சுவை நிறைந்திருந்தது.

நன்றி - தடாரி இணைய இதழ்

 

 

No comments:

Post a Comment