டி.பத்மநாபன்
எதற்காக நான் கதை எழுதுகிறேன் என்று கேட்டால் – முதலிலிருந்தே சொல்கிறேன். 1948-ல் ஸ்கூல் பைனல் கிளாசில் படிக்கும்போது முதல்க்கதை ‘ குற்றவாளி ‘ யை எழுதினேன். கண்ணூரிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த “ நவயுகம்” பத்திரிகையில் அது பிரசுரமும் ஆனது. அன்று எனக்குப் பழக்கமானவர்களில் எழுத்தாளர்கள் யாரும் கிடையாது. விதிப்படியே எல்லாம் நடக்கும் என்று நம்பிய மக்களே அதிகம் இருந்தனர். எழுத்தாளர்களின் புகைப்படங்களைக் கொடுக்கிறவர்கள் கூட யாரும் இல்லை. எந்த எதிர்வினையுமில்லை. ஏதோ ஜோடனை செய்து இதைக் கூறவில்லை. எப்போது நான் எழுதத் தொடங்கினேன் என்பதைத் தெளிவு படுத்துவதற்காகத் தான். உண்மையில் நான் திட்டமிட்டு அறிவுப்பூர்வமாக யோசித்து எழுத ஆரம்பிக்க வில்லை. எப்படியோ எழுதிக் கொண்டிருந்தேன் எழுத்தாளனாவதற்கான பூர்வஜென்ம வாசனை, யோகம், எனக்கு இருந்திருக்க வேண்டும். அப்புறம் என்னுடைய நிரந்தரமான வாசிப்பும், சமூகப்பார்வையும், இதெல்லாம் எழுத்தாளனாவதற்கு உதவியிருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். நான் எழுதத் துவங்கி ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் நான் வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கை மற்ற எழுத்தாளர்களின் வெளியீடுகளோடு ஒப்பீட்டு பார்த்தால் மிகவும் குறைவு தான். நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவன் அல்ல. பல எழுத்தாளர்கள் தாங்கள் சமூகத்திற்காக, சமூகத்தைச் சீர்படுத்துவதற்காக வேண்டியே எழுதுகிறேன் என்று சொல்வதுண்டு. நான் இதில் உடன் படவில்லை. நான் எழுதுவது எனக்காகத் தான். ஆனால் அப்போதும் சமூகத்திற்குக் கடமைப் பட்டவன் என்ற ஞானமும் எனக்கு இருக்கிறது. என்னுடைய எழுத்து சமூகத்தினை மோசமாகப் பாதித்து விடக்கூடதென்று எப்போதும் நான் பிரார்த்தனை செய்கிறேன். இது நாள் வரைக்கும் ஒரு கெட்ட கதை எழுதியதில்லை. மிகச் சுலபத்தில் அசிங்கத்தில் வழுக்கி விழும் சாத்தியமுள்ள கதைகள் உள்ளன. கடையநல்லூரில் உள்ள ஒரு பெண்ணைப் போல அப்போதெல்லாம் நான் ஜாக்கிரதையாக நடந்து கொண்டேன். என்னுடைய துரதிருஷ்டம் இது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எனக்கு யாதொரு நிந்தனையுமில்லை. எழுத்தாளன் என்ற நிலையில் என்னுடைய உலகத்தில் மனிதர்கள் மட்டுமில்லை, நாயும், பூனையும், பசுவும், காளையும், பறவைகளும், மரங்களும், பூக்களும், எல்லாம் இருக்கின்றன. நான் இவர்கள் எல்லோரையும் நேசிக்கிறேன். எனக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் உரிமையுள்ளதல்லவா இந்த உலகம்!
நன்றி- கரண்ட் புக்ஸ் புல்லட்டின் ஜூன் 2001
நல்ல பகிர்வு.
ReplyDelete