Friday 17 August 2012

எழுத்துகளின் தேசம்

உதயசங்கர்Mohan Das (28)

சின்னமுத்து ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தான். மூணாங்கிளாஸ் படித்துக் கொண்டிருக்கும் போது அவனுடைய அப்பா இறந்து விட்டார். கட்டிடவேலையில் கையாளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தவறி மாடியில் இருந்து விழுந்து விட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஒரு மாதகாலம் சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் போய் விட்டது. அப்பாவைக் கவனிக்க வேண்டி அம்மாவும் வேலைக்குப் போகவில்லை. அதனால் ஏகப்பட்ட கடன். அம்மாவுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. சின்னமுத்துவின் படிப்பு நிறுத்தப் பட்டது. சின்னமுத்துவுக்கும் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க வேறு வழி தெரியல. அழுகை அழுகையாய் வந்தது. ஒரு நாள் முழுக்க அழுது கொண்டிருந்தான். அம்மா ஒரு வாக்குறுதி தந்தாள். கடன் அடைந்துவிட்டால் அவனை மறுபடியும் பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைப்பதாகச் சொல்லியிருந்தாள். பாவம் அவளும் என்ன செய்வாள்.

டீக்கடை அண்ணாச்சி ரெம்ப நல்லவர். எப்போதாவது அவன் டீக்கிளாஸைக் கழுவும் போது தவறிக் கீழே விழுந்து உடைந்து விட்டால் மட்டும் அவ்ன் பிடதியில் ஒரு அடி விழும். மற்றபடி திட்டுவதோடு சரி. சின்னமுத்து சுறுசுறுப்பான பையன். துறுதுறுவென வேலை பார்த்துக் கொண்டிருப்பான். டீக்குடித்த தம்ளர்களை உடனுக்குடன் சுத்தமாகக் கழுவி வைப்பான். காலை எட்டு மணிக்கு தெருக்களில் இருக்கிற கடைகளுக்குப் போய் அங்கே வேலை பார்ப்பவர்களிடம்,

“ அண்ணே, டீ, காப்பி, பால், பஜ்ஜி, வடை, போண்டா, வேணுமாண்ணே!”

என்று கேட்டு அலைவான். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டு கேட்டவர்களுக்கு கேட்டமாதிரிச் சரியாகக் கொண்டு போய் கொடுப்பான். ஆள்களுக்குத் தான் எத்தனை விதமான ருசி! வித் அவுட் சுகர், அரைச்சீனி, லைட், ஸ்டிராங், டபுள்ஸ்டிராங், மலாய் போட்டு,கடுங்காபி, பிளாக் டீ, என்று புதிய புதிய வார்த்தைகளைக் கற்றுக் கொண்டான். எல்லாத்தையும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்வான். அண்ணாச்சியும் அழகாக அப்படியே போட்டுக் கொடுப்பார். அதையெல்லாம் கொண்டு போய் கொடுத்து விட்டு திரும்பப் போய் தம்ளர்களையும் காசையும் வாங்கிக் கொண்டு வந்து அண்ணாச்சியிடம் கொடுப்பான். சிலபேர் அப்புறம் காசு தருகிறேன் என்பார்கள். அதை நினைவில் வைத்துக் கொள்வான். அன்று இரவுக்குள் அதை வாங்கி விடுவான். ஞாபகம் வைத்திருப்பது ஒன்றும் சின்னமுத்துவுக்கு பெரிய விசயம் இல்லை. அவன் மூணாங்கிளாஸ் படித்துக் கொண்டிருக்கும் போதே பதினாறாவது வாய்ப்பாடு வரை மனப்பாடம் செய்து தப்பில்லாமல் ஒப்பிப்பானே.

மத்தியான வேளையில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாக இருக்கும். அப்போது தான் அண்ணாச்சியும் உட்காருவார். அவனும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அன்று வந்த தினசரி நாளிதழ்களை எழுத்துக் கூட்டி வாசிப்பான். ஒவ்வொரு செய்தியையும் வாசித்து முடித்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி பொங்கும். பாதி நாளிதழ்களைத் திருப்புவதற்குள் மறுபடியும் வியாபாரம் சூடு பிடித்து விடும். அவன் ஏக்கத்துடன் நாளிதழை வைத்து விட்டு மறுபடியும் சுறுசுறுப்பாக அலைய ஆரம்பிப்பான். இரவு ஒன்பது மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டுக்கு புறப்படுவார் அண்ணாச்சி. அவனுக்கு அந்த நாளிதழ்களை வீட்டுக்குக் கொண்டு போய் படிக்கவேண்டும் என்று ஆசை ஆசையாக இருக்கும். ஒரு நாள் அண்ணாச்சி நல்லமனநிலையில் இருக்கும் போது மெதுவாகக் கேட்டான்.

“ அண்ணாச்சி..இந்தப் பேப்பரை நான் கொண்டு போகட்டா..”

“ எதுக்குலே..”

“வீட்ல.. வைச்சிப் படிக்க..”

“ இன்னம் என்னல.. படிப்பு..அதான் படிச்சி கிழிச்சிட்டீல்ல..”

என்று சொல்லி அதிர்வேட்டு போல சிரித்தார். அவன் அந்தத் தாளை எடுத்து மடித்து டவுசர் பைக்குள் வைத்துக் கொண்டான். கொஞ்ச நாளீலேயே அண்ணாச்சியின் குணாதிசயங்களைத் தெரிந்து கொண்டு விட்டான் சின்னமுத்து. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு முடித்ததும் உடம்பு அடித்துப் போட்டதைப் போல வலிக்கும். தூக்கம் கண்களைச் சுழற்றும். ஆனால் விளக்கைப் போட்டு, கொண்டு வந்த செய்தித்தாளை முழுவதும் படித்துவிட்டான். அவ்ன் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அம்மா கண்கலங்கினாள். சின்னமுத்துவுக்கு நாளிதழைப் படித்து முடித்ததும் அபூர்வமான புன்னகை பொங்கி வந்தது. அந்தச் சிரிப்புடனே தூங்கி விட்டான்.

ஒரு நாள் சின்னமுத்துவின் கனவில் வெள்ளைவெளேரென்று ஒரு ஊர் வந்தது. அங்கே எல்லாமனிதர்களும் கன்னங்கரேர் என்று கருப்பாய் இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! சின்னமுத்து அந்த ஊரின் மீது பறந்து கொண்டிருந்தான். நம்ப முடியாமல் திரும்பிப் பார்த்தால் கைகளோடு சேர்ந்து இறக்கைகள் முளைத்திருந்தன. அதை விட ஆச்சரியம் அருகில் நெருங்க நெருங்க அங்கே இருந்த மரங்கள், செடிகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள், எல்லாமே ஏதோ ஒரு எழுத்து வடிவில் இருந்தனர். குளத்தில் தண்ணீர் இல்லை. அதற்குப் பதில் குளம் முழுவதும் எழுத்துகள் நிரம்பியிருந்தன. அதில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகளும் எழுத்துக்களாகவே இருந்தன. எழுத்து மரத்தில் எழுத்துப்பூக்கள் பூத்திருந்தன. எழுத்துக் காய்களும் எழுத்துப்பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

சின்னமுத்து அங்கே உள்ள ஒரு எழுத்துத் தோட்டத்தில் இறங்கினான். எழுத்துப் பட்டாம்பூச்சிகள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து பாட்டுப் பாடின. அவனைப் பார்க்க ஊரிலிருந்த எல்லோரும் வந்தனர். முன்பே அவனைத் தெரிந்தவர்கள் போல அவனிடம் கைகுலுக்கிப் பேசினார்கள். எல்லோரும் அவர்களைத் தாங்களாகவே அறிமுகம் செய்து கொண்டனர். ஒருவர் அவனிடம் கைகுலுக்கியபடியே,

“ என் பெயர் ‘க’ ” என்றார். இன்னொருவர் முதுகை வளைத்தபடி வந்தார்.

“ என் பெயர் “ஏ’ “ என்று சொன்னார். சின்னமுத்துவுக்கு அவர்கள் எல்லோரும் நன்றாகத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். சிலர் கை குலுக்கும்போதே அவர்கள் உருவத்தைப் பார்த்து அவர்களுடைய பெயரைச் சொல்ல ஆரம்பித்து விட்டான். அவ்னுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது ஒரு சுழற்காற்று வீச ஆரம்பித்தது. எல்லா எழுத்துகளும் பறக்க ஆரம்பித்தன. “சின்னமுத்து” என்று அந்தக் காற்று அலறியது. அந்தச் சத்தத்தில் அவன் முழித்து விட்டான். அவனுடைய அம்மா அவ்ன் தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டே அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

“ கண்ணு.. மணி ஆயிருச்சிடா.. எந்திரிச்சி பல் தேய்ச்சி குளிடா”

என்று அன்போடு சொன்னாள். அவன் எழுந்து வேலைக்குக் கிளம்பினான்.

அன்றிலிருந்து எங்கே எந்தத் துண்டு பேப்பர் கிடைத்தாலும்கூட சின்னமுத்து படித்துக் கொண்டே திரிந்தான். ரோட்டில் போகும்போது கூட படித்துக் கொண்டே போனான். ஒரு முறை டீயைக் கொட்டி விட்டான். ஒரு முறை சைக்கிளில் மோதி விட்டான். நல்லவேளை ஒருமுறை மோட்டார்சைக்கிள்காரன் பிரேக் போட்டு நிறுத்தினான். யார் என்ன திட்டினாலும் சிரித்தான். அண்ணாச்சியும் சத்தம் போட்டுப் பார்த்தார். ஆனால் அவன் வாசிப்பதை நிறுத்தவே இல்லை.

ஒரு நாள் டீக்கடை அண்ணாச்சி அவனிடம்,

“ பள்ளிக்கூடம் போறியாடா?”

என்று கேட்டார். பள்ளிக்கூடம் என்ற வார்த்தையைக் கேட்டதும் சின்னமுத்துவின் முகம் மலர்ந்தது. அவன் வேகமாகத் தலையாட்டினான். அண்ணாச்சி அவனைப் பார்த்து,

“ ஆனா கலையிலியும் சாயந்திரமும் வேலைக்கு வந்துரணும்..சரியா..”

என்று சொன்னார். சின்னமுத்து உற்சாகமாய்

“ சரி அண்ணாச்சி..” என்று கத்தினான். அவர் சிரித்துக் கொண்டே,

” நாளைக்கி உங்கம்மாவை வரச்சொல்லு..” என்று சொல்ல சின்னமுத்து உடனே,

” ரெம்ப நன்றி அண்ணாச்சி “ என்று சொன்னான். அதைக் கேட்ட அண்ணாச்சிக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவர் அதிர் வேட்டுப் போல சிரித்துக் கொண்டே,

“ அடச்சீ.. படுக்காளிப் பயலே ..” என்று சொல்லி சின்னமுத்துவின் கன்னத்தில் தட்டினார். சின்னமுத்துவைச் சுற்றி எழுத்துகள் பறந்து கொண்டிருந்தன. சின்னமுத்துவும் அந்த எழுத்துக்களோடு காடு, மலை, நாடு நகரங்களின் மீது பறந்து கொண்டிருந்தான்.

புகைப்படம்-மோகன்தாஸ் வடகரா

2 comments:

  1. Kalviye kan kanda theivam. Nanraka eluthiyulleeekal

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete