Tuesday, 31 December 2024

மும்பாவின் தாகம்

 

மும்பாவின் தாகம்

உதயசங்கர்



கோடைகாலம் வந்து விட்டால் அந்தியூர் காட்டில் தண்ணீர் இருக்காது. விலங்குகள் எல்லாம் தண்ணீருக்காக வெகு தூரம் அலைய வேண்டும். உணவில்லாமல் கூட சில நாள் தாக்குப்பிடிக்கலாம். தண்ணீர் இல்லாமல் எப்படி இருக்க முடியும். அப்படி மும்பா காட்டுப்பன்றி தண்ணீர் தேடி அலைந்தது.

காட்டின் நடுவில் ஒரு பெரிய மைதானத்தில் ஒரு குட்டையில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அந்தக் குட்டையில் இருக்கும் திசையைப் பார்த்து நடந்தது.

நடந்தது.

நடந்தது.

நடந்து கொண்டேயிருந்தது.

மும்பா காட்டுப்பன்றிக்கு பலகீனமாக இருந்தது. நடக்கமுடியவில்லை. தூரத்தில் புலியின் உறுமல் கேட்டது. அது பசி உறுமல். புலிக்குப் பசி தாங்க முடியாத போது இப்படித்தான், க்வாவ்.. க்வாவ் என்று கத்தும். மும்பாவுக்குப் பயம். அங்கே ஒளிந்து கொள்ள புதர்ச்செடிகளும் இல்லை. வெட்டவெளி. கோடைகாலம் ஆனதால் செடிகள் எல்லாம் காய்ந்து விட்டன. இனி மழை பெய்தால் தான் புதிய இலைதழைகளைப் பார்க்க முடியும்.

இப்போது மும்பா எச்சரிக்கையாக காதுகளை விடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு நடந்தது.

இதோ அந்த மைதானம் தெரிகிறது. ஒரு வளைவில் திரும்பியதும் அந்த மைதானம் முழுவதும தெரிந்தது. அதன் நடுவில் இருந்த ஒரு பள்ளத்தில் கொஞ்சூண்டு தண்ணீர் இருந்தது. சாதாரணமான காலத்தில் அந்த மைதானம் முழுவதும் நிறைந்து தளும்பிக் கொண்டிருக்கும்.

திடீரென்று திடுக்கிட்டு நின்று விட்டது மும்பா. பார்த்தால் அந்தப் பள்ளத்தைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருந்தது.

புலி, யானை, புள்ளிமான், கடம்பை மான், மும்பாவின் பெரியப்பா ஜிம்பா, குள்ளநரி, சிறுத்தை, முள்ளம்பன்றி, முயல், காட்டு மாடு, காகம், மரகதப்புறா, மைனா, காட்டுக்கோழி, மயில், சிட்டுக்குருவி, பருந்து, வல்லயம், என்று எல்லாரும் நீர் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அருகில் போகும்போது தான் தெரிந்தது. ஒரு சத்தமில்லை. புலிக்குப் பக்கத்தில் புள்ளிமான் நீரரருந்திக் கொண்டிருந்தது. குள்ளநரிக்கு அருகில் முயல் இருந்தது. மும்பாவுக்கு அருகில் போகலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் இருந்தது.

ஆனால் தண்ணீரைப் பார்த்ததும் தாகம் அதைப் பள்ளத்தை நோக்கி கூட்டிக் கொண்டு போனது. எங்கும் இடமில்லை. சுற்றிச் சுற்றி வந்தது. புலிக்கு அருகில் மட்டும் கொஞ்சம் இடம் இருந்தது. மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து புலிக்கு அருகில் சென்றது. புலி ஓரக்கண்ணால் மும்பாவைப் பார்த்தது. ஆனால் பேசாமல் தண்ணீர் குடித்தது. புலி பார்த்ததை மும்பாவும் கவனித்தது. உடல் நடுங்கியது. இப்படியே திரும்பிவிடலாமா? தண்ணீரை விட உயிர் முக்கியம் இல்லையா? என்று யோசித்தது.

அப்போது புலி தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு அமைதியாக,

“ வா நண்பா.. தண்ணீரைக் குடி.. பசி வரும் போது மட்டும் தான் நீ என் உணவு.. பசி இல்லை என்றால் நீயும் நானும் இந்தக் காட்டின் மக்கள், இயற்கையின் மக்கள் “ என்றது.

அதைக் கேட்ட மும்பா கடைவாயின் இரண்டு பக்கமும் நீண்ட கோரைப் பற்களைக் காட்டிச் சிரித்தபடி தண்ணீரில் வாயை வைத்து உறிஞ்சியது.

“ பார்த்து நண்பா..! உன் பல் என் முகத்தில் இடிக்கிறது.. என் பல் விழுந்து விடும்.. ஹ்ஹ்ஹா ஹ்ஹாஹா..

என்று புலி சிரித்தது. மும்பாவும் தண்ணீரைக் குடித்தபடியே சிரித்தது. புர்ர்ரென தண்ணீர் நாலுபக்கமும் தெறித்தது.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்


Monday, 30 December 2024

குண்டான் தவளையும் சுண்டான் எலியும்

 

குண்டான் தவளையும் சுண்டான் எலியும்

உதயசங்கர்



ஒரு குளக்கரையில் சுண்டான் எலியும் குண்டான் தவளையும் நண்பர்களாக இருந்தனர். பகலில் சுண்டான் எலி தன்னுடைய வளைக்குள் தூங்கும். குண்டான் தவளை குளத்தின் ஆழத்தில் மூழ்கி பாசிகளைச் சாப்பிடும். , சிறு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடும்.

 இரவானதும்    சுண்டான் எலி வளையிலிருந்து வெளியில் வந்து அருகிலிருக்கும் வயலின் கதிர்களை பற்களால் வெட்டும். அதை வளைக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

நள்ளிரவுக்குப் பிறகு இரண்டு பேரும் ஓய்வாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருந்த புளிய மரத்தில் ஒரு ஆந்தை உட்கார்ந்திருக்கும்.. எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும்.

அன்று இரண்டும் உட்கார்ந்து குசுகுசுன்னு ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மழைத்தூறல் விழுந்தது. உடனே சுண்டான் எலி,

“ என்னடா திடீரென்று மழை பெய்யுது..என்று சொன்னது. 

உடனே குண்டான் தவளை “ நான் சத்தம் கொடுக்காமல் மழை வரக்கூடாதே.. எப்படி வந்தது..கொர்ர் கொர்ர் கொர்ர்ர் என்று கத்தியது. அது கத்தியதைக் கேட்ட மற்ற தவளைகளும் கொர் கொர் கொர் கொர் என்று கத்தின.

சுண்டான் எலி சிரித்தது.

“ இயற்கையை நீ எப்படி கட்டுப்படுத்தமுடியும்?.. மழைக்காலத்தில் குளம் குட்டை கிணறு ஆகியவற்றில் நீர் நிரம்பும்.. அது தான் உங்கள் இனம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலம் என்று உனக்குத் தெரியும்.. அப்போது ஆணும் பெண்ணும் மாறி மாறிக் கூப்பிடுவீர்கள்.. மற்றபடி நீ கத்தினால் மழை வரவேண்டும் என்பது கொஞ்சம் ஓவர்..

என்றது சுண்டான் எலி. அதைக் கேட்ட குண்டான் தவளைக்குக் கோபம் வந்தது. சுண்டான் எலி மீது பாய்ந்தது. சுண்டான் எலியோ வளைக்குள் ஓடப் பாய்ந்தது. அப்போது விர்ரென்று பறந்து வந்த புளிய மரத்து ஆந்தை இரண்டு கால்களால் இரண்டு பேரையும் தூக்கிக் கொண்டு பறந்தது.

அப்போதும் குண்டான் தவளை சுண்டான் எலியைப் பார்த்து,

“ பாரு நான் உன்னை என்ன பண்றேன்னு..என்று கத்தியது. 

சுண்டான் எலியும், “ போடா உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது..வெவ்வே வெவ்வே..என்று வக்கணை காட்டியது.

ஆந்தை பசியுடன் காத்திருக்கும் தன் குஞ்சுகளை நினைத்து வேகமாகப் பறந்தது.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

Sunday, 29 December 2024

சூரியனை அழைத்த சேவல்

 

சூரியனை அழைத்த சேவல்

உதயசங்கர்



மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு காட்டுச்சேவல் கூவியது. கொக்கரக்கோ.. கொக்கரக்கோ..விடிஞ்சிருச்சி.. சீக்கிரம் வா..க்க்க்கௌ..

அந்தக் குரலைக் கேட்டதும் தூங்கிக் கொண்டிருந்த சூரியன் எழுந்து வெளியில் வந்தான். காட்டில் வெளிச்சம் வந்தது. காட்டில் எல்லாப்பறவைகளும், விலங்குகளும் சோம்பலை முறித்துவிட்டு எழுந்தனர். காடு கோலாகலமாக மாறியது.

காட்டுச்சேவலுக்குப் பெருமை. அப்போது அதற்குப் பின்னால் வந்த காட்டுப்பூனையைக் கவனிக்கவில்லை. லபக் கென்று காட்டுப்பூனை சேவலை வாயில் கௌவிக் கொண்டு ஓடியது. ஒரு புதருக்கடியில் சேவலைப் போட்டு அதன் கழுத்தைக் கடிக்கப் போனது.

சேவலுக்கு உயிரே போய் விட்டது. ஆனாலும் அது கலங்காமல்,

“ பூனையாரே.. யாரைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் தெரியுமா? நான் காலையில் கூவாவிட்டால் சூரியன் அவனுடைய வீட்டிலிருந்து வெளியில் வரமாட்டான்.. “

என்று சொன்னது.

“ என்ன கதை விடறியா? சேவலே.. மியாவ்வ்வ் “ என்று கட்டைக்குரலில் கத்தியது காட்டுப்பூனை.

“ சரி பார்க்கலாம்.. நாளைக் காலையில் நான் கூவாமல் உன் வீட்டிலேயே இருக்கிறேன்.. சூரியன் வந்து விட்டால் நீ என்னை நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிடு.. நான் கூவிய பிறகு தான் சூரியன் வந்தால் என்னை விட்டு விட வேண்டும்..

என்று தைரியமாகச் சொன்னது சேவல். காட்டுப்பூனைக்குக் குழப்பமாகி விட்டது. சூரியன் வராவிட்டால் உலகமே இருண்டு போகுமே. உண்மையாக இருக்குமோ!

“ சரி நீ சொன்னதைப் போல நாளை காலையில் சூரியன் வருகிறானா இல்லையா என்று பார்க்கலாம்..

என்று சொல்லி விட்டு அங்கேயே சேவலைக் கட்டிப் போட்டது காட்டுப்பூனை.

இரவு முடியப் போகிறது. காட்டுச்சேவல் வானத்தைப் பார்த்தது. இருண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டேயிருந்தது. சூரியன் வரவில்லை. எங்கும் இருட்டாகவே இருந்தது.

சேவல் ஒரு கண்ணை பூனை மீதும் ஒரு கண்ணை வானத்தின் மீதும் வைத்திருந்தது. எதுவும் பேசவில்லை. கம்மென்று அமைதியாக இருந்தது. பூனையாருக்குப் பயம் வந்துவிட்டது. புதருக்கு வெளியில் போய் பார்க்கும். உள்ளே வந்து காட்டுச்சேவலைப் பார்க்கும்.

சூரியனைக் காணவில்லை. கருகரு என்று மேகங்கள் சூழ்ந்திருந்தன. அது மழைக்காலம். லேசாய் மேகங்கள் கலைய ஆரம்பித்தன. உடனே சேவல் இப்போது கொக்கரித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தது. 

அதற்குள் காட்டுப்பூனை தயக்கத்துடன்,

“ சேவலே.. சூரியனைக் காணவில்லையே நீ வேணா கூவிப்பாரேன்.. வருதான்னு பார்க்கலாம்..என்று சொன்னது.

அதைக் கேட்ட சேவல்

“ முதலில் கட்டை அவிழ்த்துவிடு.. “ என்று அதிகாரமாய் கத்தியது. காட்டுப்பூனை சேவலின் கட்டை அவிழ்த்து விட்டதும், சேவல் வெளியே வந்து நான்கு திசைகளிலும் பார்த்தது. பிறகு,

“ கொக்கரக்கோ.. கொக்கரக்கோ.. விடிஞ்சிருச்சி.. சீக்கிரம் வா.. க்க்கௌ..

என்று கூவியது. என்ன ஆச்சரியம்! சில நிமிடங்களில் இருண்டிருந்த வானத்தில் வெளிச்சம் தெரிந்தது. சூரியன் அவனுடைய வீட்டிலிருந்து வெளியில் வந்தான்.

“ ஏன் இன்னிக்கு இவ்வளவு தாமதமாக எழுப்பினாய் சேவலே? “ என்று சூரியன் கேட்பதாகச் சேவல் சொன்னது. பிறகு கொண்டையைச் சிலுப்பிய காட்டுச்சேவல் பூனையைப் பார்த்தது.

பூனை வாலைக் காலுக்கிடையில் செருகிய படி தலை குனிந்து நின்றது.

சேவல் கம்பீரமாக மீண்டும் கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று கூவிக் கொண்டே நடந்தது.

கூடவே சூரியனும் நடந்தது.


நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

Saturday, 28 December 2024

யாருக்குக் காடு சொந்தம்?

 

 யாருக்குக் காடு சொந்தம்?

உதயசங்கர்



கொம்பன் யானைக்கு பெருமை தாங்கவில்லை. யானைகளால் தான் காடு உருவாகிறது என்று எல்லாரும் பேசினார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் கொம்பன் யானையின் நேர்காணல். கொம்பன் யானை கம்பீரமாக தன்னுடைய நீண்ட தந்தங்களை ஆட்டி ஆட்டி தும்பிக்கையை நீட்டி நீட்டிப் பேசியது.

“ இலைதழை, காய்கனி, ஆகியவற்றைச் சாப்பிட்டு நாங்கள் போடும் சாணத்தில் காட்டு மரங்களின் விதைகள் இருக்கின்றன. அந்த விதைகள் முளைத்து புதிய மரங்கள், செடி   ,கொடிகள் வளர்கின்றன..அதனால் நாங்கள் காட்டைப் பாதுகாக்கிறோம்.. வளர்க்கிறோம்.. “ என்று தலையை உயர்த்திப் பேசியது.

அப்போது இன்னொரு குரல், இர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று இரைந்ததை யாரும் கேட்கவில்லை. ஆனால் பூஞ்சிட்டு பத்திரிகையின் நிருபர் பூவிழிக்கு மட்டும் கேட்டது. பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தது. எல்லாரும் போய் விட்டார்கள். கொம்பன் யானையும் பிளிறிக்கொண்டு போய் விட்டது. பூஞ்சிட்டு அங்கேயே நின்று,

“ யாரோ பேசினீர்களே யார் அது ? “

என்று கேட்டது. சுற்றிச் சுற்றிப் பார்த்தது. கீழே ஏராளமான சாணி வண்டுகள் யானையின் சாணியை உருட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வண்டும் ஒவ்வொரு திசையில் சாணியை உருட்டிக் கொண்டு போய் மண்ணைத் தோண்டி உள்ளே பாதுகாப்பாய் வைத்து மண்ணால் மூடி வைத்தன.

பூஞ்சிட்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு சாணிவண்டை வழி மறித்தது.

“ ஏன் நீங்க சாணியை உருட்டி உருட்டிக் கொண்டு போறீங்க..

என்று கேட்டது. பின்னங்கால்களால் சாணி உருண்டையைப் பிடித்துக் கொண்டு நின்றது சாணி வண்டு.

“ முதலில் எங்களுக்கும் எங்கள் குஞ்சுகளுக்கும் இதுதான் உணவு.. அடுத்தது இதிலிருக்கும் விதைகள் வேறு வேறு இடத்தில் புதைப்பதால்  இடைஞ்சல் இல்லாமல் முளைக்கும்..என்று சொன்னது. பூஞ்சிட்டுக்கு முதலில் புரியவில்லை.

“ யானையின் சாணியில் எல்லாவிதைகளும் ஆலமரம், அரசமரம், அத்திமரம், புன்னை மரம், இப்படி எல்லாமரத்தின் விதைகளும் சேர்ந்து இருந்தால் எப்படி எல்லாம் முளைக்குமா? நாங்கள் தான் அவற்றைப் பிரித்துத் தூராதூரத்துக்குக் கொண்டு போய் மண்ணில் புதைக்கிறோம்..

என்று சொல்லிவிட்டு மீண்டும் சாணியை உருட்ட ஆரம்பித்தது.

“ அட ஆமால்ல.. காட்டை உருவாக்குவதில் உனக்கும் பங்கிருக்கு..

என்று ஆச்சரியத்தில் கூவியது பூஞ்சிட்டு.

“ புரிஞ்சா சரி..

என்று சொல்லிவிட்டு வேகமாக மண்ணைத் தோண்டியது சாணி வண்டு. சாணி உருண்டையை உள்ளே தள்ளி மண்ணைப் போட்டு மூடியது.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்




 

Friday, 27 December 2024

உணவைத்தேடி

 

உணவைத்தேடி

உதயசங்கர்



ஒரு வீட்டில் குட்டி ஈ யும் குட்டி எறும்பும் சந்தித்துக் கொண்டன. குட்டி ஈ கேட்டது,

“ ஏய்! எங்கே போறே? எப்ப பார்த்தாலும் வேக வேகமாக அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்து கொண்டே இருக்கிறாய்? “

“ உணவு தேடுகிறேன் குட்டி ஈயே! இதோ மழைக்காலம் வரப்போகிறது.. இப்போதே உணவைச் சேகரித்து வைக்க வேண்டும். அப்போது தான் எங்கள் குடியிருப்பில் உணவுப் பற்றாக்குறை வராது..  நீ என்ன பண்றே?

என்று குட்டி எறும்பு சொன்னது.

“ எனக்கு அந்தக் கவலையில்லைப்பா.. நான் சாக்கடையிலும் இருப்பேன்.. சாப்பாட்டிலும் இருப்பேன்..

என்று சொன்னது குட்டி ஈ. உண்மையில் அப்போது குட்டி ஈ தரையில் கிடந்த அழுக்கான துணியின் மீது உட்கர்ந்து தன் கால்களால் முகத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது.

“ அது எப்படி? உனக்கு வீடு கிடையாதா?என்றது குட்டி எறும்பு.

“ வீடா? “ என்று குட்டி ஈ யோசித்தது. பிறகு,

“.. எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்வேன்.. எங்கு வேண்டுமானாலும் முட்டை போடுவேன்.. காட்டின் தூய்மைப் பணியாளர்களாக இருந்த எங்களை மனிதர்கள் தான் ஊருக்கு அழைத்து வந்தார்கள்..என்று சொல்லிக் கொண்டே பறந்தது.

“ எங்கே போயிட்டே? “ என்று கேட்டது எறும்பு. தலையை நிமிர்த்தி உயரே பார்த்தது. கழுத்து வலித்தது. அதற்குள் திரும்பி வந்த குட்டி ஈ யின் வாயில் ஏதோ ஒரு உணவின் சிறு துகள் இருந்தது. அதைத் தன் முன்னங்கால்களால் பிடித்துக் கொண்டு சாப்பிட்டது.

“ அட! பரவாயில்லையே.. பறந்து பறந்து நீ உணவு தேடி விடுகிறாய்.. நாங்கள் நாள் முழுவதும் அலைந்து திரிந்தால் தான் உணவு கிடைக்கும்..என்று குட்டி எறும்பு சொல்லிக் கொண்டிருக்கும்போதே குட்டி எறும்பின் உணர்கொம்புகளுக்கு ஏதோ ஒரு சிக்னல் கிடைத்தது. 

“ இரு இரு.. ஏதோ ஒரு இனிப்பு வாசனை வருகிறது..என்று வேக வேகமாக அந்த வாசனை வந்த திசையில் சற்று தூரம் சென்றது. பிறகு அப்படியே நின்று திரும்பியது.

இப்போது குட்டி ஈயைக் காணவில்லை. வீட்டின் பின்வசலில் இருந்த வாய்க்காலின் ஓரம் உட்கார்ந்து அங்கே கிடந்த உணவுத்துகளைத் தின்றுகொண்டிருந்தது குட்டி ஈ.

“ மனிதர்கள் தங்களுடைய வீட்டை, தெருவை, சுற்றுப்புறத்தை, ஊரை, நாட்டை அசுத்தமாக வைத்திருக்கும் வரை எங்களுக்குக் கவலையில்லப்பா..என்று கத்தியது குட்டி ஈ.

நீ சொல்வதும் சரிதான்..என்று சொல்லிக் கொண்டே உணவைத் தேடி தன்னுடைய நீண்ட பயணத்தைத் தொடர்ந்தது குட்டி எறும்பு.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

3.

Thursday, 26 December 2024

எல்லோரும் தேவை

 

எல்லோரும் தேவை

உதயசங்கர்




ஒரு தோட்டத்தில் குளவியும் தேனீயும் நண்பர்களாக இருந்தன. தேனீ பூக்களில் தேனை உறிஞ்சும். குளவி செடிகளில் புழுக்களைச் சாப்பிடும். தேனீயின் கூடு அழகான கட்டிடம் மாதிரி இருந்தது. குளவியின் கூடு மண்ணைக் குழைத்து பூசிய பொந்து மாதிரி இருந்தது. குளவி கேட்டது,

“ உனக்கும் கொடுக்கு இருக்கிறது. எனக்கும் கொடுக்கு இருக்கிறது. நீயும் கொட்டுகிறாய் நானும் கொட்டுகிறேன்.. ஆனால் உன்னை மனிதர்கள் விரும்புகிறார்கள்.. என்னை வெறுக்கிறார்கள் ஏன் நண்பா? “

“ என் கூட்டில் மனிதர்கள் விரும்பும் தேன் இருப்பதால் நான் கொட்டினாலும் அவர்கள் வெறுப்பதில்லை.என்று தேனீ சிறகுகளை விர்ர்ரென்று அடித்துக் கொண்டே சொன்னது.

சரிதான்.. என்னால் தேனை உருவாக்க முடியாது..என்று வருத்தத்துடன் சொன்னது குளவி.

 பூக்களின் மகரந்தசேர்க்கைக்கும் உதவுகிறேன்.. நான் இல்லையென்றால் இந்த உலகம் சீக்கிரமாக அழிந்து விடும் என்று மனிதர்களுக்குத் தெரியும்

என்று காற்றில் வட்டமாக நடனமாடிக் கொண்டே சிரித்தது தேனீ. குளவிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. யோசித்துக் கொண்டே ஒரு செடியில் போய் அமர்ந்தது. அதன் கண்களில் பூவைத் தின்று கொண்டிருந்த ஒரு குட்டிப்புழு தெரிந்தது. நேரே அதை நோக்கிப் பாய்ந்தது.

அப்போது குளவி சொன்னது,

“ நான் இல்லையென்றாலும் உலகம் அழிந்து விடும்.. தெரியுமா? “

இப்போது தெனீக்குப் புரியவில்லை.

“ என்ன சொல்கிறாய்? “

“ ஆமாம் நண்பா.. நான் இல்லை என்றால் புழுக்களின் எண்ணிக்கை பெருகி செடிகளை, பூக்களை அழித்து விடும்.. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நாங்கள் உதவுகிறோம்.. தெரிந்ததா?

என்று குளவி சொன்னதைக் கேட்டது தேனீ. தன்னுடைய கர்வத்தை நினைத்து வெட்கப்பட்டது. உடனே குளவியிடம்,

“ மன்னித்துக் கொள் நண்பா! நான் கொஞ்சம் கர்வமாகப் பேசி விட்டேன்.. ஆமாம்.. நீயும் இந்த உலகமும் இயற்கையும் அழிந்து விடாமல் பாதுகாப்பதற்கு உதவுகிறாய்.. என்று பணிவுடன் கூறியது.

“ இயற்கையில் யாரும் தேவையில்லாதவர்கள் கிடையாது.. எல்லாருக்கும் வேலை இருக்கிறது.. வா.. நண்பா.. நீ அந்தப் பூவில் இருக்கும் தேனைக் குடி.. நான் புழுக்களைத் தேடுகிறேன்.. என்ன சரிதானே..

என்றது குளவி.

“ ஆகா.. அப்படியே நண்பா.. என்று சொல்லியபடி தேனீயும் குளவியும் விர்ர்ர்ர்ர்ர்ரென்று பறந்தன.

 நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

Wednesday, 25 December 2024

. மாயாஜாலக்காரனின் மாயம்

 

1.   மாயாஜாலக்காரனின் மாயம்

    உதயசங்கர்




ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்த கதை.

கெர்மானி என்ற நாட்டின் அரசன் தேவன். அவன் மக்களைக் கொடுமைப்படுத்திய அரசன். எந்த அரசன் தான் கொடுமைப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? ஆமாம். அதுவும் சரிதான். அரசர்கள் மக்களிடம் அதிக வரிகளை வாங்கியும், மற்ற நாடுகளுடன் போரிட்டார்கள். அந்த நாட்டு செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள். அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தினார்கள். அப்படித்தான் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள். பெரிய பெரிய அரண்மனைகளையும், கோவில்களையும் கட்டினார்கள்.

அப்படி வந்த அரசர்களில் தேவனைக் கண்டு அவனுடைய நாட்டு மக்களே அஞ்சினார்கள். ஆனால் அவன் அரசனானது பெரிய வேடிக்கை. வேடிக்கை மட்டுமல்ல சிந்திக்க வேண்டிய சம்பவம். தேவன் தெருவில் மாயாஜாலவித்தை காட்டிக் கொண்டிருந்தான்.

அதுதான் மேஜிக்.

வெறும் பையிலிருந்து பொரிகடலை எடுப்பான். எந்தப் பொருளும் இல்லாமல் நெருப்பை உண்டுபண்ணுவான். காற்றிலிருந்து எலுமிச்சம்பழம் வரவழைப்பான். சிறிய பிள்ளையார் சிலையைக் கொண்டு வருவான்.

இப்படி ஊர் ஊராக வித்தை காட்டி மக்களிடம் பிச்சை எடுப்பான். கிடைப்பதைக் கொண்டு வாழ்ந்து வந்தான். அப்போது அவனைப் பார்த்த ஒரு பணக்காரப்பிரபுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவர் அவனை அழைத்து,

“ தம்பி நீ ஏன் ஊரு ஊராகப் போய் பிச்சை எடுக்கிறே.. நான் சொல்கிற யோசனையைக் கேட்டால் நீ இருக்கும் இடத்துக்கே வந்து உனக்கு பணத்தை அள்ளியள்ளி கொடுப்பார்கள்.. “

என்று சொன்னான்.

“ சொல்லுங்கள் ஐயா.. அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஊர் ஊராகப்போய் அலுத்து விட்டது.. இப்போது எல்லாம் மக்கள் அவ்வளவாக பிச்சை போடுவதில்லை.. ம்ம்ம் அவர்களிடம் பணம் இருந்தால் தானே..

என்றான் மாயாஜாலக்காரன் தேவன். பணக்காரன் ஒரு சிறிய கோவிலையும் ஒரு பெரிய மண்டபத்தையும் கட்டினான். சிறிய கோவிலில் ஸ்ரீஅண்டசராசர சாமி என்று பாதையில் கிடந்த ஒரு சிறிய பாறைக்கல்லை வைத்தான்.

அருகில் உள்ள மண்டபத்தில் மாயாஜாலக்காரன் தேவனுக்கு பெரிய சிம்மாசனம். ஆடைகள் அலங்காரங்கள், நகைகள், பணியாட்கள், என்று சகல வசதிகளையும் மாயாஜாலக்காரனுக்குச் செய்து கொடுத்தான் அந்தப் பணக்காரன்.

பணக்காரன் போட்ட ஒரே நிபந்தனை. தினமும் வருகிற வருமானத்தில் பாதியை அவனுக்குக் கொடுத்து விட வேண்டும். மாயாஜாலக்காரனுக்கு மகிழ்ச்சி.

பெரிய பெரிய விளம்பரப்பதாகைகளை ஊரெங்கும் வைத்தான். தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தான். பத்திரிகைகளுக்குப் பணம் கொடுத்து செய்திகளை வரவழைத்தான்.

“ அதிசயச்சாமியார்… இமயமலையிலிருந்து நேரே இறங்கிவந்து அருள் பாலிக்கிறார்.. நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும்.. இமயமலையின் பனிச்சாமியை காற்றிலே வரவழைத்துக் கொடுப்பார்.. வாருங்கள்! வாருங்கள்! முந்துபவர்களுக்கே அதிர்ஷ்டம் காத்திருக்கிறது..

இப்படி விதம் விதமான விளம்பரங்கள்.

அவ்வளவு தான். கூட்டம் அலைமோதியது. எல்லாரும் முண்டியடித்து இமயமலைச்சாமியாரைப் பார்க்கத் துடித்தார்கள். யாரைப் பார்க்க? நம்முடைய தெருவித்தைக்காரனானா மாயாஜாலக்காரனைப் பார்க்க…

அவன் காற்றிலே பனிச்சாமியை எடுத்தான். எலுமிச்சம்பழம் எடுத்தான். ஆப்பிள பழம் எடுத்தான். லட்டு எடுத்தான். சில நேரம் மோதிரம் எடுத்தான். சங்கிலி எடுத்தான். மக்கள் மயங்கினார்கள். அவன் கேட்ட பணத்தைக் கொடுத்தார்கள்.

செல்வம் குவிந்தது. பணக்காரன் இன்னும் பெரிய பணக்காரனானான்.  மாயாஜாலக்காரனான தேவனுக்குத் திடீரென விபரீதமான யோசனை வந்தது.

நாம் உழைத்து இவனுக்கு ஏன் பாதியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். உடனே அவன் காற்றில் வரவழைத்த லட்டில் விஷம் கலந்து கொடுத்து அவனைக் கொன்று விட்டான்.

ஊர் மக்கள் நாட்டு மக்கள் அவனை மகான் என்று நம்பி போற்றினார்கள். அவன் அரசனாக வந்தால் நாடு வளமாகும் என்று நினைத்தார்கள்.

அடுத்த தேர்தலில் மாயாஜாலக்காரன் தேவனையே அரசனாக்கி விட்டார்கள். அரசனான பிறகு மாயாஜாலக்காரன் கொடியவனானான். அவனை எதிர்த்து யாரும் எதுவும் கேள்வி கேட்கமுடியாது. அப்படி கேட்டால் அவர்களைக் காணாமல் செய்து விடுவான்.

“ கடவுளைப் போன்றவன் நான்.. ஏன் நானே கடவுள்.. என்னைக் கேள்வி கேட்கலாமா? அதுதான் அவனை நரகத்தில் தள்ளிவிட்டேன்... போன பிறவியில் நான் செய்த புண்ணியம் தான் இப்போது     அரசனாக இருக்கிறேன்.. போன பிறவியில் நீங்கள் செய்த பாவம் தான் நீங்கள் அடிமைகளாக இருக்கிறீர்கள்… கேள்வி கேட்காமல் நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் உங்களுக்குச் சொர்க்கம்  கிடைக்கும்.

என்று உரத்த குரலில் முழங்கினான்.

 மக்கள் பயந்து சரி சரி என்று தலையாட்டினார்கள். கை தட்டினார்கள். அவன் காட்டும் சிறு சிறு மாயாஜாலங்களைப் பார்த்து அவனை வழிபட்டார்கள்.

மாயாஜாலக்காரனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. மக்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.

எல்லாரும் அவனைக் கண்டு பயந்தார்கள் என்று சொல்லி விடமுடியாது. அந்த நாட்டில் சங்கர் என்ற பார்வை மாற்றுத்திறனாளிச் சிறுவன் இருந்தான்.   எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேட்கக் கூடிய சிறுவன். அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்.

அவன் இந்த மாயாஜாலக்கார அரசனின் மேஜிக் வேலைகளைப் பற்றி மக்களிடம் பேசினான்.

அவர்களில் சிலர் துணிந்து மாயாஜாலக்காரனை எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள். அவன் அவர்களைச் சிறையில் அடைத்தான். கடுமையான தண்டனைகள் கொடுத்தான். திடீரென ஒரு நாள் நாடு முழுவதும் ஒரு விளம்பரம் வெளியானது.

“ உலகத்திலேயே மிகப்பெரிய மாயாஜால நிகழ்ச்சி நடக்கப்போகிறது.. அனைவரும் வருக! அனுமதி இலவசம்! “

விளம்பரத்தைப் பார்த்த அரசனுக்குப் பயம் வந்தது. தன்னை விட பெரிய மாயாஜாலக்காரனாக இருந்தால் மக்கள் அவனை அரசனாக்கி விடுவார்கள் என்று நினைத்தான். அவன் பதில் விளம்பரம் செய்தான்,

“ என்னுடன் போட்டியிடத் தயாரா? “ என்று கேட்டான்.

அடுத்த விளம்பரம் வந்தது,

“ தயார்..

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் பெரிய மைதானத்தில் இரண்டு பெரிய மேடைகள் இருந்தன. ஒன்றில் மாயாஜாலக்கார அரசனும் இன்னொன்றில் பார்வை மாற்றுத்திறனாளி சங்கரும் நின்றார்கள்.

வழக்கம் போல மயாஜாலக்கார அரசன் மோதிரம், பனிச்சாமி, சங்கிலி, எலுமிச்சம்பழம் எடுத்தான்..

சங்கரும் அதையெல்லாம் எடுத்துக் காட்டினான்.

எப்படி என்று யோசிக்கிறீர்களா? ஒன்றும் பெரிய ரகசியமில்லை. முழுக்கைச்சட்டை போட்டு கக்கத்தில் ஒரு பையைக் கட்டி அதில் வரிசையாக கொண்டு வர வேண்டிய பொருளைப் போட்டு கையைக் குலுக்கி குலுக்கி அதை உள்ளங்கைக்குக் கொண்டு வரவேண்டும். அவ்வளவுதான். தொடர்ந்த பயிற்சியில் எளிதாகக் கைவரும். அறிவியல் இயக்கத்தில் இதைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

மாயாஜால அரசனின் வித்தைகள் தீர்ந்துவிட்டன. அப்போது சங்கர் ஒரு விசிலடித்தான். அந்த விசில் சத்தம் கேட்டதும் எங்கிருந்தோ ஒரு பெரிய புறா பறந்து வந்தது. வண்ண வண்ண நிறங்களில் ஒளிவீசும் சிறகுகளுடன் வந்தது. அந்த மைதானத்தையே மூடுமளவுக்கு மிகப்பெரிய தன் சிறகுகளுடன் பறந்தது. மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்கள்.

“ ஆகா இது தான் மாயாஜாலம்! அற்புத மாயாஜாலம்..!என்று கத்தினார்கள். சிலர்,

“ இனி நீ தான் எங்கள் அரசன் என்று சொன்னார்கள்.

அதைக் கேட்ட சங்கர் சொன்னான்,

“ மாயாஜாலம், மந்திரம் என்று எதுவும் கிடையாது.. தந்திரம் மட்டுமே உண்டு.. இந்த உலகத்தில் இல்லாத பொருளை உங்களால் கொண்டு வரமுடியாது.. எல்லாமே அறிவியல் தான்.. எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேளுங்கள்.. மூடநம்பிக்கைகளை விட்டொழியுங்கள். உங்களுக்காக யார் பாடுபடுகிறார்களே அவர்களை அரசனாகத் தேர்ந்தெடுங்கள்.

என்றான். அதைக் கேட்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது ஒரு விசில் சத்தம் கேட்டது.

லேசர் கதிர் வீச்சின் மூலம் உருவான அந்தப் புறா காற்றில் மறைந்து விட்டது.

அந்த மாயாஜாலக்கார அரசனும் மறைந்து போனான். 

மக்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை அரசனாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

 

Tuesday, 24 December 2024

ஓடினான் ஓடினான்

 

ஓடினான் ஓடினான்

உதயசங்கர்



காட்டூர் நாட்டு ராஜா மாளிகை ராஜா. அவனுடைய உண்மையான பெயர் எல்லாருக்கும் மறந்து விட்டது. ஏன் அவனுக்கே மறந்து விட்டது. அவன் நாடு முழுவதும் மாளிகைகளாகக் கட்டினான்.

எப்படி?

.  பளிங்கு மாளிகை, செங்கல் மாளிகை, கருங்கல் மாளிகை, தேக்கு மாளிகை, தேவதாரு மாளிகை, மூங்கில் மாளிகை, கோபுர மாளிகை, பூமிக்கடியில் ரகசிய மாளிகை, என்று அத்தனை மாளிகைகளைக் கட்டினான். இந்த மாளிகைகளைக் கட்டுவதற்காக மக்களிடம் வரிவசூல் செய்தான். விவசாயிகளிடம் தானியங்களைப் பிடுங்கினான்.

“ மாளிகைகள் நம் நாட்டின் பெருமை நாம் நம்முடைய பெருமையைக் காப்பாற்ற வேண்டாமா..”

என்று முழங்கினான். இத்தனை மாளிகைகள் கட்டி என்ன செய்யப் போகிறான் என்று தானே நினைக்கிறீர்கள்.

 அதிகாலையில் ஒரு மாளிகை,  

காலையில் ஒரு மாளிகை,

முன்மதியத்தில் ஒரு மாளிகை,

மதியத்தில் ஒரு மாளிகை,

பின்மதியத்தில் ஒரு மாளிகை,

முன் மாலையில் ஒரு மாளிகை,

மாலையில் ஒரு மாளிகை,

அந்தியில் ஒரு மாளிகை,

முன்னிரவில் ஒரு மாளிகை,

பின்னிரவில் ஒரு மாளிகை,

நள்ளிரவில் ஒரு மாளிகை

என்று ஒவ்வொரு மாளிகையாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஆனாலும் ஆசை தீரவில்லை. உலகத்திலேயே இதுவரை யாரும் கட்டாத மாதிரி எல்லாரும் அதிசயிக்கிற மாதிரி ஒரு பிரம்மாண்டமான மாளிகையைக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டான். தாஜ்மகாலைவிட பிரம்மாண்டமாக, ஈபிள் டவரை விட உயரமாக, உலகத்தின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் தெரிகிற மாதிரி இருக்க வேண்டும்.

அவன் மந்திரிகள், பிரபுக்கள், அதிகாரிகள், கட்டிடக்கலை வல்லுனர்கள், எல்லாரையும் கூட்டி ஆலோசனை நடத்தினான்.

காட்டூர் அடர்ந்த காடுகளும் மலைகளும் நிறைந்த நாடு. அங்கே வருடத்துக்கு  ஆறுமாதம் மழை பெய்யும். ஆறுமாதம் வெயிலடிக்கும். மிதவெப்பமண்டலக் காடாக இருந்தது. அதனால் உலகின் அத்தனை பகுதிகளிலும் இருக்கும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், மீன்கள், எல்லாம் அந்தக் காட்டில் இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களும் அங்கே வாழ்ந்து வந்தனர். காட்டூர் நாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து அறிவியலாளர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து போனார்கள். இயற்கையின் அற்புதங்களைப் பற்றி ஆய்வுகள் நடத்தினார்கள். புத்தகங்கள் எழுதினார்கள்.

அந்தக் காட்டில் தங்கச்சுரங்கம், வைரச்சுரங்கம் கிரனைட் மலைகள் இருப்பதாகக் கதைகள் உலவின. அதனால் அந்தக் காட்டை அழித்து விட்டால் அதையெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று மாளிகை ராஜாவும் மந்திரிகளும் திட்டமிட்டனர். அந்தக் காட்டை அழித்து புதிய மாளிகை கட்டுவதற்காக மறுபடியும் மக்களிடம் வரி வசூல் செய்தான் மாளிகை ராஜா.

மக்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். மாளிகை ராஜா கேடகவில்லை. காட்டூரிலுள்ள ஊர்க்காகத்திடம் மக்கள் செய்தியைச் சொன்னார்கள். ஊர்க்காகம் மற்ற காகங்களிடம் சொன்னது. உடனே காட்டுக்குள் இந்தச் செய்தியை காகங்கள் போய் எல்லா உயிரினங்களிடமும் சொல்லின.

காட்டை அழிக்க பெரிய பெரிய புல்டோசர்கள், ராட்சச மரம் அறுக்கும் இயந்திரங்கள், மலைகளை உடைக்கும் டைனமைட்டுகள் எல்லாம் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. காட்டூர் நாட்டு ராணுவமும், போலீசும் குவிந்தனர். மாளிகை ராஜாவே அங்கு கூடாரம் அமைத்து காட்டை அழிப்பதை மேற்பார்வை பார்க்க வந்தான்.

மறுநாள் காடழிப்பு தொடங்கப் போகிறது. விடிந்தது. வழக்கமாக விலங்குகள், பறவைகள், சத்தம் கேட்கும் காடு இப்போது அமைதியாக இருந்தது. மாளிகை ராஜாவுக்கும் மந்திரிகளுக்கும் புரியவில்லை. ராணுவ வீரர்களுக்கும் போலீசுக்கும் புரியவில்லை.

ஏன் இப்படி அமைதியாக இருக்கிறது?

” ம்ம்ம் “ என்ன எல்லாரும் வேலையைத் தொடங்குங்கள்” என்று மாளிகை ராஜா ஆணையிட்டான்.

புல்டோசர் ஓடத் தொடங்கியது. முதல் மரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் அறுக்கத் தொடங்கியது.

அப்போது புயலைப் போல ஒரு சத்தம் கேட்டது. காட்டிலுள்ள மிருகங்கள், பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் முழக்கமிட்ட மாதிரி காதைச் செவிடாக்கும் சத்தம் கேட்டது.

எல்லாரும் என்ன சத்தம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே காட்டுக்குள்ளிருந்து லட்சக்கணக்கான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பாம்புகள், படை படையாக வந்தன.

” காட்டை அழிக்காதே காட்டை அழிக்காதே”

என்ற முழக்கம் காடு முழுவதும் எதிரொலித்தது.

அங்கேயிருந்த மரம் வெட்ட வந்தவர்கள், இயந்திரங்களை ஓட்டுபவர்கள், ராணுவ் வீரர்கள், போலீஸ்காரர்கள் எல்லாரும் அய்யோ அம்மா என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

அப்போது தான் தூங்கி எழுந்து கூடாரத்திலிருந்து வெளியே வந்தான் மாளிகை ராஜா. கூடாரத்தை அப்படியே முட்டித்தூக்கின விலங்குகள். விலங்குகளைப் பார்த்ததும்,

“ ஆ.. ஐயோ.. என்னை விட்டிருங்க.. இனி காட்டுப்பக்கம் வரமாட்டேன்.. “ என்று அலறினான். ஆனால் விலங்குகள் அவனை விரட்டின. அவன் ஓடினான். ஓடினான். ஓடிக் கொண்டேயிருந்தான்.

நேரே அரபிக்கடலில் போய் விழுந்தான். இப்போதும் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறான் மாளிகை ராஜா..

மந்திரிகளோ கேட்கவே வேண்டாம். இதோ இன்னும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். உங்க ஊர்ப்பக்கம் வந்தார்களா என்று பாருங்கள்.

இப்போது காட்டூர் நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாளிகை ராஜா கட்டிய மாளிகைகளையெல்லாம் பள்ளிக்கூடங்களாகவும் கல்லூரிகளாகவும் மாற்றி அமைத்தனர்.

காட்டு விலங்குகளும் நிம்மதியாக இருந்தன.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

Monday, 23 December 2024

பெரிய பானை

 

பெரிய பானை

உதயசங்கர்

 ஆதனூர் நாட்டு ராஜா விசித்திரமானவர். இல்லாததைக் கேட்பார். நடக்க முடியாததை செய்யச் சொல்வார். முடியாததை முடிக்கச் சொல்வார். அவர் வாயைத் திறந்தாலே என்ன சொல்லப்போகிறாரோ என்று மந்திரிகளும் மக்களும் பயப்படுவார்கள்.

அவர் கேட்பதைச் செய்ய முடியாது என்று அவருக்குத் தெரியும். அவர்கள் செய்ய முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பார். அதில் ஒரு ஆனந்தம்.

ஒரு முறை புல் தின்னும் புலியைக் கொண்டு வரச்சொன்னார். உலகம் முழுவதும் தேடினாலும் புல் தின்னும் புலி கிடைக்கவில்லை. மந்திரிகள் காட்டில் பல புலிகளைப் பிடித்து நாட்கணக்கில் பட்டினி போட்டு புல்லை முன்னால் வைத்தனர்.

 புலிகள் புல்லைத் தொடக்கூட இல்லை. பட்டினியால் புலிகள் இறந்து விட்டன.

பயந்து பயந்து ராஜாவிடம் சொன்னபோது அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.

இன்னொரு முறை காக்காவை குயிலைப் போலப் பாட வைக்க வேண்டும் என்றார். காக்காக்களைப் பிடித்து கூண்டில் அடைத்து குயிலைப் போல கூவச் சொன்னார்கள். சில நாட்களில் அந்த நாட்டில் காக்காக்களே இல்லை. எல்லாம் வெளிநாட்டுக்குப் பறந்து போய் விட்டன.

ராஜாவிடம் சொன்னபோது உருண்டு புரண்டு சிரித்தார்.

உலகத்திலேயே மிகப்பெரிய விலங்கைக் கொண்டுவரச் சொன்னார். மந்திரிகள் யானையைக் கொண்டு வந்தனர்.

ம்ஹூம்.. இதை விடப் பெரிய விலங்கு இருக்கிறது.. நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்..என்றார். அந்த நாட்டு அறிவியலறிஞர்களிடம் கேட்டபோது அவர்கள் திமிங்கிலம் என்று சொன்னார்கள்.

அந்த நாட்டில் கடலே கிடையாது. திமிங்கிலத்தை எப்படிக் கொண்டு வர முடியும்?

பயந்து போய் ,ராஜா.. கடல் இருந்தால் தான் திமிங்கிலம் இருக்கும்.. நம்முடைய நாட்டில் கடலே இல்லையே..என்று சொன்னார்கள். அப்போதும் அரண்மனையே குலுங்கும் அளவுக்குச் சிரித்தார்.

காலையில் அரண்மனைத் தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மண்பானைகளை சுமந்து கொண்டு கலம்செய்கோ போய்க்கொண்டிருந்தார். ராஜாவுக்குத் தீடீரென்று ஒரு யோசனை வந்தது.

கலம்செய்கோவைக் கூப்பிட்டார்.

“ கலம் செய்கோவே.. உலகத்திலேயே பெரிய பானையைச் செய்து கொண்டு வந்து காட்டு.. ஒரு மாதகாலத்தில் செய்ய வேண்டும்.. அந்தப் பானை அளவுக்கு உனக்குப் பொன் தருகிறேன்.. அதன் பிறகு நான் எதுவுமே கேட்கமாட்டேன் “

“ அரசே அதற்கு நிறைய்யச் செலவாகுமே..” என்றார் கலம்செய்கோ.

” எவ்வளவு செலவானாலும் சரி.. ஆனால் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான்..” என்று மிரட்டினார் ராஜா.

அரண்மனையிலேயே தங்கினார் கலம்செய்கோ.

மந்திரிகளுக்கு மகிழ்ச்சி. எப்படியாவது கலம்செய்கோ பெரிய பானையாகச் செய்து காட்டி விட்டால் ராஜா பேசாமல் இருந்து விடுவாரே. அவர்கள் தினமும் கலம்செய்கோவைப் போய் பார்த்தார்கள். கலம்செய்கோ எதுவும் செய்யவில்லை. நன்றாக மூன்றுவேளையும் விருந்து சாப்பிட்டுவிட்டு படுத்துறங்கினார்.

 அவர் பெரிய பானை செய்வதைப் பார்க்க வேண்டும் என்று போன மந்திரிகளுக்கு ஏமாற்றம். கலம்செய்கோ எந்தப் பானையும் செய்யவில்லை.

அவர் ஹாயாக கட்டிலில் படுத்து ஓய்வெடுத்தார்.

ஒரு மாதம் முடிந்து விட்டது. அன்று ராஜாவின் முன்னால் உலகத்திலேயே பெரிய பானையைக் கொண்டு போய் காட்ட வேண்டும். ராஜாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

வீசிய கையும் வெறும் கையுமாக கலம்செய்கோ ராஜாவின் முன்னால் போய் நின்றார்.

“ எங்கே பானை? “

“ இருக்கிறது ராஜா.. முதலில் அறிவியலறிஞர்களை வரச் சொல்லுங்கள்..

உடனே அறிவியலறிஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.

“ சரி இப்போது கொண்டு வா.. உலகத்திலேயே பெரிய பானையை..என்று சொன்னார் ராஜா.

கலம்செய் கோ நிதானமாகச் சொன்னார்,

“ அது ஏற்கனவே இங்கே இருக்கிறது ராஜா..

ராஜாவுக்கும் மந்திரிகளுக்கும் அறிவியலறிஞர்களுக்கும் புரியவில்லை. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

“ என்ன சொல்கிறாய்? ஏமாற்ற நினைத்தால் உன் தலை தப்பாது..

என்று கோபத்துடன் கத்தினார் ராஜா. கலம்செய்கோ நிதானமாக,

“ பானைக்குள் இருந்து கொண்டே பானையைத் தேடுகிறீர்கள் அரசே..” என்றார்.

“ என்ன உளறுகிறாய்? “ என்று கோபத்துடன் கத்தினார் ராஜா.

“ இல்லை அரசே..இதோ நீங்கள், நான் மந்திரிகள், அறிவியறிஞர்கள், மக்கள், காடு, நாடு, ஊர் உலகம் எல்லாம் அந்தப் பெரிய பானைக்குள் தான் இருக்கிறோம்.. ”

ராஜா தலையைச் சொறிந்தார். மந்திரிகள் தலைகளைச் சொறிந்தனர். ஆனால் அறிவியலறிஞர்களுக்குப் புரிந்து விட்டது. ஆனால் எதுவும் சொல்லவில்லை.

” ஆமாம் ராஜா.. பூமியை விட பெரிய பானை இல்லை ராஜா. அதற்குள் தான் நாம் எல்லாரும் இருக்கிறோம்.என்றார் கலம்செய்கோ.

ராஜா அறிவியலறிஞர்களைப் பார்த்தார்.

அவர்கள், “ ஆமாம் ராஜா.. பூமி தான் பெரிய பானை..என்று சொன்னார்கள். ராஜாவால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை.

பூமி அளவுக்கு பொன் கொடுக்கத் தன்னால் முடியாதே என்று கலம்செய் கோவிடம் கெஞ்சினார் ராஜா.

அதற்கு கலம்செய்கோ,

“ எனக்கு அவ்வளவு பேராசை கிடையாது.. என் உழைப்பினால் வரும் பொருளே போதும்.. இனிமேல் பொழுதுபோக்குக்காக எல்லாரையும் துன்புறுத்தாதீர்கள் அது போதும்..

என்று சொல்லி விட்டு கம்பீரமாக நடந்து சென்றார்.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்



 

 

 

Sunday, 22 December 2024

அதிசயத்திலும் அதிசயம்

 

அதிசயத்திலும் அதிசயம்

உதயசங்கர்



ஆவூர் ராஜாவின் பெயர் செல்வராஜா. ஆனால் மக்கள் அவனுக்கு சூட்டிய பெயர் அதிசய ராஜா. ஐந்துவேளை சாப்பாடு. மூன்று நேரத்தூக்கம். நினைத்த நேரம் விளையாட்டு, நடனம், பாட்டு, என்று இருந்தான் அதிசயராஜா. எல்லாம் போரடித்து விட்டது. சரி கதை கேட்கலாம் என்று கதைசொல்லிகளை வரச்சொன்னான். தினமும் கதை கேட்டான்.

கதைசொல்லிகள் திரும்பத்திரும்ப ராமாயாணம், மகாபாரதம், பஞ்சதந்திரக்கதைகள், முல்லாக்கதைகள், பைபிள கதைகள், என்று கழுத்தறுத்தார்கள். அதுவும் போரடித்தது.

ஒருநாள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும்போது  ஆண் இருவாட்சிப்பறவை மரப்பொந்துக்குள் பெண் இருவாட்சிப்பறவையை வைத்து மண்ணைக்குழைத்து பூசிக் கொண்டிருந்தது. உணவு தருவதற்காக ஒரே ஒரு சின்னஞ்சிறு ஓட்டையை ஏற்படுத்தியிருந்தது.

“ என்ன டா இது அதிசயமா இருக்கு! “ என்று நினைத்தார் அதிசயராஜா. மறுநாள் அரசவைக் கூட்டினார்.

“ தினம் ஒரு அதிசயத்தைக் காட்ட வேண்டும் “ என்று ஆணையிட்டார். நாடு முழுவதும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. தினமும் ஒருவர் வந்தார். மந்திரிகளும் தினம் தினம் ஒரு அதிசயத்தை ராஜாவிடம் காட்டி பரிசுகளைப் பெற்றனர். அதில் பாதியை அதிசயத்தைக் காட்டியவருக்குக் கொடுத்தனர். அப்படி அதிசய ராஜாவுக்கு ஆச்சரியம் வரவில்லை என்றால் கொண்டு வந்தவருக்கு கசையடியும் கிடைத்தது.

பாம்பை விழுங்கும் தவளையைக் காட்டினர்

காக்கா கூட்டில் குயில் முட்டையிடும் தந்திரத்தைக் காட்டினார்கள்.

பூச்சிகளைச் சாப்பிடும் செடியைக் காட்டினார்கள்.

மனிதர்களைப் போல விவசாயம் செய்யும் இலைவெட்டி எறும்பைக் காட்டினார்கள்.

குஞ்சுகள் பொரிக்கும் கடல்குதிரையைக் காட்டினார்கள்.

கொஞ்சநாட்களில் அதிசய ராஜாவின் ஆச்சரியம் வற்றி விட்டது. எதைக் காட்டினாலும் அவர் ஆச்சரியப்படவில்லை. அதிசயப்படவில்லை.  அவருக்கு ஆச்சரியம் வராததினால் மக்களுக்குத் தண்டனையும் கிடைத்தது.

அநேகமாக கசையடி வாங்காத மக்களே இல்லை. மக்கள் கவலைப்பட்டனர். ராஜாவின் நோய்க்கு மருந்தில்லையா என்று எல்லாவைத்தியரிடமும் கேட்டார்கள். அல்லோபதி மருத்துவர் இல்லை என்றார். , ஹோமியோபதி மருத்துவர் இல்லை என்றார்., சித்தமருத்துவரும் இல்லை என்றார்., ஆயுர்வேதம், யுனானி என்று எல்லாவைத்தியருமே இல்லை என்றார்கள்.  

அந்த நாட்டின் எல்லையில் அறிவுக்கரசன் என்ற பையன் தன்னுடைய தாத்தாவுடன் வாழ்ந்து வந்தான். அவன் அரசரின் பைத்தியக்காரத்தனத்தைக் கேள்விப்பட்டான். மிகவும் வருத்தமாக இருந்தது. அப்போது அவனுடைய தாத்தா அவனிடம் ஒரு விஷயம் சொன்னார்.

அவன் அதிசய ராஜாவிடம் வந்து,

“ அதிசயராஜா.. நான் உங்களுக்கு இதுவரை யாரும் காட்டாத அதிசயத்தைக் காட்டுகிறேன்.. ஆனால் நீங்கள் என்னுடன் பயணம் செய்யவேண்டும்..

என்று சொன்னான்.

“ அதற்கு என்ன வருகிறேன்.. ஆனால் அதிசயத்தைக் காட்டவில்லை என்றால்..? “

“ நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்..

என்று தலைநிமிர்ந்து சொன்னான் அறிவுக்கரசன்.

அவர்கள் கப்பலில் பசிபிக் சமுத்திரத்துக்குப் போனாரகள். அங்கே இரண்டு தீவுகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன. ஒன்றின் பெயர் சமோவா. இன்னொன்று ரொங்கோ. அறிவுக்கரசன் அதிசய ராஜாவை சமோவாவுக்கு அழைத்துச் சென்றான்.

அன்று புதன்கிழமை காலை பத்துமணி. அப்படியே நடந்து அருகிலிருந்த ரொங்கோ தீவுக்குப் போனார்கள். ஐந்து நிமிடத்தில் போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

என்ன ஆச்சரியம்! அங்கே வியாழக்கிழமை காலை பத்துமணி.

அதிசய ராஜாவுக்குப் புரியவில்லை.

“ என்னடா இது அதிசயமா இருக்கு! “

 அவர் சமோவாவுக்கு ஓடினார். அங்கே புதன்கிழமை.

ரொங்கோவுக்கு ஓடி வந்தார். இங்கே வியாழக்கிழமை. அவருடைய கண்களை  அவரால் நம்பமுடியவில்லை.

அங்கிட்டு புதன்கிழமை.

இங்கிட்டு வியாழக்கிழமை..

எப்படி ஒரு நாள் காணாமல் போனது?

அவருக்குப் புரியவில்லை.

” அங்கிட்டு புதன்கிழமை, இங்கிட்டு வியாழக்கிழமை”

என்று வாய்விட்டு கத்தினார். ஆச்சரியத்தில் திறந்த வாய் திறந்தபடியே இருந்தது.

அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கிறார் அதிசயராஜா. இன்னமும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அறிவுக்கரசன் உங்களிடம் மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்லச்சொன்னான்..

சமோவாவையும் ரொங்கோவையும் சர்வதேச தேதிக்கோடுகள் பிரிக்கின்றன. அதனால் இரண்டு தீவுகள் அருகருகே இருந்தாலும் இருபத்திநான்கு மணிநேரம் வித்தியாசம் இருக்கும்.

யாரிடமும் சொல்லி விடாதீர்கள். முக்கியமாக அதிசயராஜாவிடம் சொல்லவே சொல்லாதீர்கள்.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்