Monday, 23 December 2024

பெரிய பானை

 

பெரிய பானை

உதயசங்கர்

 ஆதனூர் நாட்டு ராஜா விசித்திரமானவர். இல்லாததைக் கேட்பார். நடக்க முடியாததை செய்யச் சொல்வார். முடியாததை முடிக்கச் சொல்வார். அவர் வாயைத் திறந்தாலே என்ன சொல்லப்போகிறாரோ என்று மந்திரிகளும் மக்களும் பயப்படுவார்கள்.

அவர் கேட்பதைச் செய்ய முடியாது என்று அவருக்குத் தெரியும். அவர்கள் செய்ய முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பார். அதில் ஒரு ஆனந்தம்.

ஒரு முறை புல் தின்னும் புலியைக் கொண்டு வரச்சொன்னார். உலகம் முழுவதும் தேடினாலும் புல் தின்னும் புலி கிடைக்கவில்லை. மந்திரிகள் காட்டில் பல புலிகளைப் பிடித்து நாட்கணக்கில் பட்டினி போட்டு புல்லை முன்னால் வைத்தனர்.

 புலிகள் புல்லைத் தொடக்கூட இல்லை. பட்டினியால் புலிகள் இறந்து விட்டன.

பயந்து பயந்து ராஜாவிடம் சொன்னபோது அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.

இன்னொரு முறை காக்காவை குயிலைப் போலப் பாட வைக்க வேண்டும் என்றார். காக்காக்களைப் பிடித்து கூண்டில் அடைத்து குயிலைப் போல கூவச் சொன்னார்கள். சில நாட்களில் அந்த நாட்டில் காக்காக்களே இல்லை. எல்லாம் வெளிநாட்டுக்குப் பறந்து போய் விட்டன.

ராஜாவிடம் சொன்னபோது உருண்டு புரண்டு சிரித்தார்.

உலகத்திலேயே மிகப்பெரிய விலங்கைக் கொண்டுவரச் சொன்னார். மந்திரிகள் யானையைக் கொண்டு வந்தனர்.

ம்ஹூம்.. இதை விடப் பெரிய விலங்கு இருக்கிறது.. நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்..என்றார். அந்த நாட்டு அறிவியலறிஞர்களிடம் கேட்டபோது அவர்கள் திமிங்கிலம் என்று சொன்னார்கள்.

அந்த நாட்டில் கடலே கிடையாது. திமிங்கிலத்தை எப்படிக் கொண்டு வர முடியும்?

பயந்து போய் ,ராஜா.. கடல் இருந்தால் தான் திமிங்கிலம் இருக்கும்.. நம்முடைய நாட்டில் கடலே இல்லையே..என்று சொன்னார்கள். அப்போதும் அரண்மனையே குலுங்கும் அளவுக்குச் சிரித்தார்.

காலையில் அரண்மனைத் தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மண்பானைகளை சுமந்து கொண்டு கலம்செய்கோ போய்க்கொண்டிருந்தார். ராஜாவுக்குத் தீடீரென்று ஒரு யோசனை வந்தது.

கலம்செய்கோவைக் கூப்பிட்டார்.

“ கலம் செய்கோவே.. உலகத்திலேயே பெரிய பானையைச் செய்து கொண்டு வந்து காட்டு.. ஒரு மாதகாலத்தில் செய்ய வேண்டும்.. அந்தப் பானை அளவுக்கு உனக்குப் பொன் தருகிறேன்.. அதன் பிறகு நான் எதுவுமே கேட்கமாட்டேன் “

“ அரசே அதற்கு நிறைய்யச் செலவாகுமே..” என்றார் கலம்செய்கோ.

” எவ்வளவு செலவானாலும் சரி.. ஆனால் செய்யவில்லை என்றால் அவ்வளவு தான்..” என்று மிரட்டினார் ராஜா.

அரண்மனையிலேயே தங்கினார் கலம்செய்கோ.

மந்திரிகளுக்கு மகிழ்ச்சி. எப்படியாவது கலம்செய்கோ பெரிய பானையாகச் செய்து காட்டி விட்டால் ராஜா பேசாமல் இருந்து விடுவாரே. அவர்கள் தினமும் கலம்செய்கோவைப் போய் பார்த்தார்கள். கலம்செய்கோ எதுவும் செய்யவில்லை. நன்றாக மூன்றுவேளையும் விருந்து சாப்பிட்டுவிட்டு படுத்துறங்கினார்.

 அவர் பெரிய பானை செய்வதைப் பார்க்க வேண்டும் என்று போன மந்திரிகளுக்கு ஏமாற்றம். கலம்செய்கோ எந்தப் பானையும் செய்யவில்லை.

அவர் ஹாயாக கட்டிலில் படுத்து ஓய்வெடுத்தார்.

ஒரு மாதம் முடிந்து விட்டது. அன்று ராஜாவின் முன்னால் உலகத்திலேயே பெரிய பானையைக் கொண்டு போய் காட்ட வேண்டும். ராஜாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

வீசிய கையும் வெறும் கையுமாக கலம்செய்கோ ராஜாவின் முன்னால் போய் நின்றார்.

“ எங்கே பானை? “

“ இருக்கிறது ராஜா.. முதலில் அறிவியலறிஞர்களை வரச் சொல்லுங்கள்..

உடனே அறிவியலறிஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.

“ சரி இப்போது கொண்டு வா.. உலகத்திலேயே பெரிய பானையை..என்று சொன்னார் ராஜா.

கலம்செய் கோ நிதானமாகச் சொன்னார்,

“ அது ஏற்கனவே இங்கே இருக்கிறது ராஜா..

ராஜாவுக்கும் மந்திரிகளுக்கும் அறிவியலறிஞர்களுக்கும் புரியவில்லை. அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

“ என்ன சொல்கிறாய்? ஏமாற்ற நினைத்தால் உன் தலை தப்பாது..

என்று கோபத்துடன் கத்தினார் ராஜா. கலம்செய்கோ நிதானமாக,

“ பானைக்குள் இருந்து கொண்டே பானையைத் தேடுகிறீர்கள் அரசே..” என்றார்.

“ என்ன உளறுகிறாய்? “ என்று கோபத்துடன் கத்தினார் ராஜா.

“ இல்லை அரசே..இதோ நீங்கள், நான் மந்திரிகள், அறிவியறிஞர்கள், மக்கள், காடு, நாடு, ஊர் உலகம் எல்லாம் அந்தப் பெரிய பானைக்குள் தான் இருக்கிறோம்.. ”

ராஜா தலையைச் சொறிந்தார். மந்திரிகள் தலைகளைச் சொறிந்தனர். ஆனால் அறிவியலறிஞர்களுக்குப் புரிந்து விட்டது. ஆனால் எதுவும் சொல்லவில்லை.

” ஆமாம் ராஜா.. பூமியை விட பெரிய பானை இல்லை ராஜா. அதற்குள் தான் நாம் எல்லாரும் இருக்கிறோம்.என்றார் கலம்செய்கோ.

ராஜா அறிவியலறிஞர்களைப் பார்த்தார்.

அவர்கள், “ ஆமாம் ராஜா.. பூமி தான் பெரிய பானை..என்று சொன்னார்கள். ராஜாவால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை.

பூமி அளவுக்கு பொன் கொடுக்கத் தன்னால் முடியாதே என்று கலம்செய் கோவிடம் கெஞ்சினார் ராஜா.

அதற்கு கலம்செய்கோ,

“ எனக்கு அவ்வளவு பேராசை கிடையாது.. என் உழைப்பினால் வரும் பொருளே போதும்.. இனிமேல் பொழுதுபோக்குக்காக எல்லாரையும் துன்புறுத்தாதீர்கள் அது போதும்..

என்று சொல்லி விட்டு கம்பீரமாக நடந்து சென்றார்.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்



 

 

 

1 comment:

  1. அதி அற்புதமான கதை... ‘கலம்செய்கோ’ இன்று கற்ற புதிய சொல்... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete