யாருக்குக்
காடு சொந்தம்?
உதயசங்கர்
கொம்பன்
யானைக்கு பெருமை தாங்கவில்லை. யானைகளால் தான் காடு உருவாகிறது என்று எல்லாரும் பேசினார்கள்.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் கொம்பன் யானையின் நேர்காணல். கொம்பன்
யானை கம்பீரமாக தன்னுடைய நீண்ட தந்தங்களை ஆட்டி ஆட்டி தும்பிக்கையை நீட்டி நீட்டிப்
பேசியது.
“ இலைதழை,
காய்கனி, ஆகியவற்றைச் சாப்பிட்டு நாங்கள் போடும் சாணத்தில் காட்டு மரங்களின் விதைகள்
இருக்கின்றன. அந்த விதைகள் முளைத்து புதிய மரங்கள், செடி ,கொடிகள் வளர்கின்றன..அதனால் நாங்கள் காட்டைப்
பாதுகாக்கிறோம்.. வளர்க்கிறோம்.. “ என்று தலையை உயர்த்திப் பேசியது.
அப்போது
இன்னொரு குரல், இர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று இரைந்ததை யாரும் கேட்கவில்லை.
ஆனால் பூஞ்சிட்டு பத்திரிகையின் நிருபர் பூவிழிக்கு மட்டும் கேட்டது. பத்திரிகையாளர்
சந்திப்பு முடிந்தது. எல்லாரும் போய் விட்டார்கள். கொம்பன் யானையும் பிளிறிக்கொண்டு
போய் விட்டது. பூஞ்சிட்டு அங்கேயே நின்று,
“ யாரோ
பேசினீர்களே யார் அது ? “
என்று
கேட்டது. சுற்றிச் சுற்றிப் பார்த்தது. கீழே ஏராளமான சாணி வண்டுகள் யானையின் சாணியை
உருட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வண்டும் ஒவ்வொரு திசையில் சாணியை உருட்டிக் கொண்டு
போய் மண்ணைத் தோண்டி உள்ளே பாதுகாப்பாய் வைத்து மண்ணால் மூடி வைத்தன.
பூஞ்சிட்டு
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு சாணிவண்டை வழி மறித்தது.
“ ஏன்
நீங்க சாணியை உருட்டி உருட்டிக் கொண்டு போறீங்க..”
என்று
கேட்டது. பின்னங்கால்களால் சாணி உருண்டையைப் பிடித்துக் கொண்டு நின்றது சாணி வண்டு.
“ முதலில்
எங்களுக்கும் எங்கள் குஞ்சுகளுக்கும் இதுதான் உணவு.. அடுத்தது இதிலிருக்கும் விதைகள்
வேறு வேறு இடத்தில் புதைப்பதால் இடைஞ்சல் இல்லாமல்
முளைக்கும்..” என்று சொன்னது. பூஞ்சிட்டுக்கு
முதலில் புரியவில்லை.
“ யானையின்
சாணியில் எல்லாவிதைகளும் ஆலமரம், அரசமரம், அத்திமரம், புன்னை மரம், இப்படி எல்லாமரத்தின்
விதைகளும் சேர்ந்து இருந்தால் எப்படி எல்லாம் முளைக்குமா? நாங்கள் தான் அவற்றைப் பிரித்துத்
தூராதூரத்துக்குக் கொண்டு போய் மண்ணில் புதைக்கிறோம்..”
என்று
சொல்லிவிட்டு மீண்டும் சாணியை உருட்ட ஆரம்பித்தது.
“ அட
ஆமால்ல.. காட்டை உருவாக்குவதில் உனக்கும் பங்கிருக்கு..”
என்று
ஆச்சரியத்தில் கூவியது பூஞ்சிட்டு.
“ புரிஞ்சா
சரி..”
என்று
சொல்லிவிட்டு வேகமாக மண்ணைத் தோண்டியது சாணி வண்டு. சாணி உருண்டையை உள்ளே தள்ளி மண்ணைப் போட்டு மூடியது.
நன்றி - மந்திரத்தொப்பி
வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்
No comments:
Post a Comment