Tuesday, 24 December 2024

ஓடினான் ஓடினான்

 

ஓடினான் ஓடினான்

உதயசங்கர்



காட்டூர் நாட்டு ராஜா மாளிகை ராஜா. அவனுடைய உண்மையான பெயர் எல்லாருக்கும் மறந்து விட்டது. ஏன் அவனுக்கே மறந்து விட்டது. அவன் நாடு முழுவதும் மாளிகைகளாகக் கட்டினான்.

எப்படி?

.  பளிங்கு மாளிகை, செங்கல் மாளிகை, கருங்கல் மாளிகை, தேக்கு மாளிகை, தேவதாரு மாளிகை, மூங்கில் மாளிகை, கோபுர மாளிகை, பூமிக்கடியில் ரகசிய மாளிகை, என்று அத்தனை மாளிகைகளைக் கட்டினான். இந்த மாளிகைகளைக் கட்டுவதற்காக மக்களிடம் வரிவசூல் செய்தான். விவசாயிகளிடம் தானியங்களைப் பிடுங்கினான்.

“ மாளிகைகள் நம் நாட்டின் பெருமை நாம் நம்முடைய பெருமையைக் காப்பாற்ற வேண்டாமா..”

என்று முழங்கினான். இத்தனை மாளிகைகள் கட்டி என்ன செய்யப் போகிறான் என்று தானே நினைக்கிறீர்கள்.

 அதிகாலையில் ஒரு மாளிகை,  

காலையில் ஒரு மாளிகை,

முன்மதியத்தில் ஒரு மாளிகை,

மதியத்தில் ஒரு மாளிகை,

பின்மதியத்தில் ஒரு மாளிகை,

முன் மாலையில் ஒரு மாளிகை,

மாலையில் ஒரு மாளிகை,

அந்தியில் ஒரு மாளிகை,

முன்னிரவில் ஒரு மாளிகை,

பின்னிரவில் ஒரு மாளிகை,

நள்ளிரவில் ஒரு மாளிகை

என்று ஒவ்வொரு மாளிகையாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஆனாலும் ஆசை தீரவில்லை. உலகத்திலேயே இதுவரை யாரும் கட்டாத மாதிரி எல்லாரும் அதிசயிக்கிற மாதிரி ஒரு பிரம்மாண்டமான மாளிகையைக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டான். தாஜ்மகாலைவிட பிரம்மாண்டமாக, ஈபிள் டவரை விட உயரமாக, உலகத்தின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் தெரிகிற மாதிரி இருக்க வேண்டும்.

அவன் மந்திரிகள், பிரபுக்கள், அதிகாரிகள், கட்டிடக்கலை வல்லுனர்கள், எல்லாரையும் கூட்டி ஆலோசனை நடத்தினான்.

காட்டூர் அடர்ந்த காடுகளும் மலைகளும் நிறைந்த நாடு. அங்கே வருடத்துக்கு  ஆறுமாதம் மழை பெய்யும். ஆறுமாதம் வெயிலடிக்கும். மிதவெப்பமண்டலக் காடாக இருந்தது. அதனால் உலகின் அத்தனை பகுதிகளிலும் இருக்கும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், மீன்கள், எல்லாம் அந்தக் காட்டில் இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களும் அங்கே வாழ்ந்து வந்தனர். காட்டூர் நாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து அறிவியலாளர்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து போனார்கள். இயற்கையின் அற்புதங்களைப் பற்றி ஆய்வுகள் நடத்தினார்கள். புத்தகங்கள் எழுதினார்கள்.

அந்தக் காட்டில் தங்கச்சுரங்கம், வைரச்சுரங்கம் கிரனைட் மலைகள் இருப்பதாகக் கதைகள் உலவின. அதனால் அந்தக் காட்டை அழித்து விட்டால் அதையெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று மாளிகை ராஜாவும் மந்திரிகளும் திட்டமிட்டனர். அந்தக் காட்டை அழித்து புதிய மாளிகை கட்டுவதற்காக மறுபடியும் மக்களிடம் வரி வசூல் செய்தான் மாளிகை ராஜா.

மக்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். மாளிகை ராஜா கேடகவில்லை. காட்டூரிலுள்ள ஊர்க்காகத்திடம் மக்கள் செய்தியைச் சொன்னார்கள். ஊர்க்காகம் மற்ற காகங்களிடம் சொன்னது. உடனே காட்டுக்குள் இந்தச் செய்தியை காகங்கள் போய் எல்லா உயிரினங்களிடமும் சொல்லின.

காட்டை அழிக்க பெரிய பெரிய புல்டோசர்கள், ராட்சச மரம் அறுக்கும் இயந்திரங்கள், மலைகளை உடைக்கும் டைனமைட்டுகள் எல்லாம் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. காட்டூர் நாட்டு ராணுவமும், போலீசும் குவிந்தனர். மாளிகை ராஜாவே அங்கு கூடாரம் அமைத்து காட்டை அழிப்பதை மேற்பார்வை பார்க்க வந்தான்.

மறுநாள் காடழிப்பு தொடங்கப் போகிறது. விடிந்தது. வழக்கமாக விலங்குகள், பறவைகள், சத்தம் கேட்கும் காடு இப்போது அமைதியாக இருந்தது. மாளிகை ராஜாவுக்கும் மந்திரிகளுக்கும் புரியவில்லை. ராணுவ வீரர்களுக்கும் போலீசுக்கும் புரியவில்லை.

ஏன் இப்படி அமைதியாக இருக்கிறது?

” ம்ம்ம் “ என்ன எல்லாரும் வேலையைத் தொடங்குங்கள்” என்று மாளிகை ராஜா ஆணையிட்டான்.

புல்டோசர் ஓடத் தொடங்கியது. முதல் மரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் அறுக்கத் தொடங்கியது.

அப்போது புயலைப் போல ஒரு சத்தம் கேட்டது. காட்டிலுள்ள மிருகங்கள், பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் முழக்கமிட்ட மாதிரி காதைச் செவிடாக்கும் சத்தம் கேட்டது.

எல்லாரும் என்ன சத்தம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே காட்டுக்குள்ளிருந்து லட்சக்கணக்கான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பாம்புகள், படை படையாக வந்தன.

” காட்டை அழிக்காதே காட்டை அழிக்காதே”

என்ற முழக்கம் காடு முழுவதும் எதிரொலித்தது.

அங்கேயிருந்த மரம் வெட்ட வந்தவர்கள், இயந்திரங்களை ஓட்டுபவர்கள், ராணுவ் வீரர்கள், போலீஸ்காரர்கள் எல்லாரும் அய்யோ அம்மா என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

அப்போது தான் தூங்கி எழுந்து கூடாரத்திலிருந்து வெளியே வந்தான் மாளிகை ராஜா. கூடாரத்தை அப்படியே முட்டித்தூக்கின விலங்குகள். விலங்குகளைப் பார்த்ததும்,

“ ஆ.. ஐயோ.. என்னை விட்டிருங்க.. இனி காட்டுப்பக்கம் வரமாட்டேன்.. “ என்று அலறினான். ஆனால் விலங்குகள் அவனை விரட்டின. அவன் ஓடினான். ஓடினான். ஓடிக் கொண்டேயிருந்தான்.

நேரே அரபிக்கடலில் போய் விழுந்தான். இப்போதும் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறான் மாளிகை ராஜா..

மந்திரிகளோ கேட்கவே வேண்டாம். இதோ இன்னும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். உங்க ஊர்ப்பக்கம் வந்தார்களா என்று பாருங்கள்.

இப்போது காட்டூர் நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாளிகை ராஜா கட்டிய மாளிகைகளையெல்லாம் பள்ளிக்கூடங்களாகவும் கல்லூரிகளாகவும் மாற்றி அமைத்தனர்.

காட்டு விலங்குகளும் நிம்மதியாக இருந்தன.

நன்றி - அதிசயத்திலும் அதிசயம்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

1 comment:

  1. இப்படி ஒரு நாள் வாராதா என்று ஏங்காதோர் எங்கு இல்லை... வந்தால் அந்நாள் முதல் எந்நாளும் நன்னாளே...

    ReplyDelete