Sunday, 29 December 2024

சூரியனை அழைத்த சேவல்

 

சூரியனை அழைத்த சேவல்

உதயசங்கர்



மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு காட்டுச்சேவல் கூவியது. கொக்கரக்கோ.. கொக்கரக்கோ..விடிஞ்சிருச்சி.. சீக்கிரம் வா..க்க்க்கௌ..

அந்தக் குரலைக் கேட்டதும் தூங்கிக் கொண்டிருந்த சூரியன் எழுந்து வெளியில் வந்தான். காட்டில் வெளிச்சம் வந்தது. காட்டில் எல்லாப்பறவைகளும், விலங்குகளும் சோம்பலை முறித்துவிட்டு எழுந்தனர். காடு கோலாகலமாக மாறியது.

காட்டுச்சேவலுக்குப் பெருமை. அப்போது அதற்குப் பின்னால் வந்த காட்டுப்பூனையைக் கவனிக்கவில்லை. லபக் கென்று காட்டுப்பூனை சேவலை வாயில் கௌவிக் கொண்டு ஓடியது. ஒரு புதருக்கடியில் சேவலைப் போட்டு அதன் கழுத்தைக் கடிக்கப் போனது.

சேவலுக்கு உயிரே போய் விட்டது. ஆனாலும் அது கலங்காமல்,

“ பூனையாரே.. யாரைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் தெரியுமா? நான் காலையில் கூவாவிட்டால் சூரியன் அவனுடைய வீட்டிலிருந்து வெளியில் வரமாட்டான்.. “

என்று சொன்னது.

“ என்ன கதை விடறியா? சேவலே.. மியாவ்வ்வ் “ என்று கட்டைக்குரலில் கத்தியது காட்டுப்பூனை.

“ சரி பார்க்கலாம்.. நாளைக் காலையில் நான் கூவாமல் உன் வீட்டிலேயே இருக்கிறேன்.. சூரியன் வந்து விட்டால் நீ என்னை நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிடு.. நான் கூவிய பிறகு தான் சூரியன் வந்தால் என்னை விட்டு விட வேண்டும்..

என்று தைரியமாகச் சொன்னது சேவல். காட்டுப்பூனைக்குக் குழப்பமாகி விட்டது. சூரியன் வராவிட்டால் உலகமே இருண்டு போகுமே. உண்மையாக இருக்குமோ!

“ சரி நீ சொன்னதைப் போல நாளை காலையில் சூரியன் வருகிறானா இல்லையா என்று பார்க்கலாம்..

என்று சொல்லி விட்டு அங்கேயே சேவலைக் கட்டிப் போட்டது காட்டுப்பூனை.

இரவு முடியப் போகிறது. காட்டுச்சேவல் வானத்தைப் பார்த்தது. இருண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டேயிருந்தது. சூரியன் வரவில்லை. எங்கும் இருட்டாகவே இருந்தது.

சேவல் ஒரு கண்ணை பூனை மீதும் ஒரு கண்ணை வானத்தின் மீதும் வைத்திருந்தது. எதுவும் பேசவில்லை. கம்மென்று அமைதியாக இருந்தது. பூனையாருக்குப் பயம் வந்துவிட்டது. புதருக்கு வெளியில் போய் பார்க்கும். உள்ளே வந்து காட்டுச்சேவலைப் பார்க்கும்.

சூரியனைக் காணவில்லை. கருகரு என்று மேகங்கள் சூழ்ந்திருந்தன. அது மழைக்காலம். லேசாய் மேகங்கள் கலைய ஆரம்பித்தன. உடனே சேவல் இப்போது கொக்கரித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தது. 

அதற்குள் காட்டுப்பூனை தயக்கத்துடன்,

“ சேவலே.. சூரியனைக் காணவில்லையே நீ வேணா கூவிப்பாரேன்.. வருதான்னு பார்க்கலாம்..என்று சொன்னது.

அதைக் கேட்ட சேவல்

“ முதலில் கட்டை அவிழ்த்துவிடு.. “ என்று அதிகாரமாய் கத்தியது. காட்டுப்பூனை சேவலின் கட்டை அவிழ்த்து விட்டதும், சேவல் வெளியே வந்து நான்கு திசைகளிலும் பார்த்தது. பிறகு,

“ கொக்கரக்கோ.. கொக்கரக்கோ.. விடிஞ்சிருச்சி.. சீக்கிரம் வா.. க்க்கௌ..

என்று கூவியது. என்ன ஆச்சரியம்! சில நிமிடங்களில் இருண்டிருந்த வானத்தில் வெளிச்சம் தெரிந்தது. சூரியன் அவனுடைய வீட்டிலிருந்து வெளியில் வந்தான்.

“ ஏன் இன்னிக்கு இவ்வளவு தாமதமாக எழுப்பினாய் சேவலே? “ என்று சூரியன் கேட்பதாகச் சேவல் சொன்னது. பிறகு கொண்டையைச் சிலுப்பிய காட்டுச்சேவல் பூனையைப் பார்த்தது.

பூனை வாலைக் காலுக்கிடையில் செருகிய படி தலை குனிந்து நின்றது.

சேவல் கம்பீரமாக மீண்டும் கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று கூவிக் கொண்டே நடந்தது.

கூடவே சூரியனும் நடந்தது.


நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

No comments:

Post a Comment