Friday, 27 December 2024

உணவைத்தேடி

 

உணவைத்தேடி

உதயசங்கர்



ஒரு வீட்டில் குட்டி ஈ யும் குட்டி எறும்பும் சந்தித்துக் கொண்டன. குட்டி ஈ கேட்டது,

“ ஏய்! எங்கே போறே? எப்ப பார்த்தாலும் வேக வேகமாக அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்து கொண்டே இருக்கிறாய்? “

“ உணவு தேடுகிறேன் குட்டி ஈயே! இதோ மழைக்காலம் வரப்போகிறது.. இப்போதே உணவைச் சேகரித்து வைக்க வேண்டும். அப்போது தான் எங்கள் குடியிருப்பில் உணவுப் பற்றாக்குறை வராது..  நீ என்ன பண்றே?

என்று குட்டி எறும்பு சொன்னது.

“ எனக்கு அந்தக் கவலையில்லைப்பா.. நான் சாக்கடையிலும் இருப்பேன்.. சாப்பாட்டிலும் இருப்பேன்..

என்று சொன்னது குட்டி ஈ. உண்மையில் அப்போது குட்டி ஈ தரையில் கிடந்த அழுக்கான துணியின் மீது உட்கர்ந்து தன் கால்களால் முகத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது.

“ அது எப்படி? உனக்கு வீடு கிடையாதா?என்றது குட்டி எறும்பு.

“ வீடா? “ என்று குட்டி ஈ யோசித்தது. பிறகு,

“.. எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்வேன்.. எங்கு வேண்டுமானாலும் முட்டை போடுவேன்.. காட்டின் தூய்மைப் பணியாளர்களாக இருந்த எங்களை மனிதர்கள் தான் ஊருக்கு அழைத்து வந்தார்கள்..என்று சொல்லிக் கொண்டே பறந்தது.

“ எங்கே போயிட்டே? “ என்று கேட்டது எறும்பு. தலையை நிமிர்த்தி உயரே பார்த்தது. கழுத்து வலித்தது. அதற்குள் திரும்பி வந்த குட்டி ஈ யின் வாயில் ஏதோ ஒரு உணவின் சிறு துகள் இருந்தது. அதைத் தன் முன்னங்கால்களால் பிடித்துக் கொண்டு சாப்பிட்டது.

“ அட! பரவாயில்லையே.. பறந்து பறந்து நீ உணவு தேடி விடுகிறாய்.. நாங்கள் நாள் முழுவதும் அலைந்து திரிந்தால் தான் உணவு கிடைக்கும்..என்று குட்டி எறும்பு சொல்லிக் கொண்டிருக்கும்போதே குட்டி எறும்பின் உணர்கொம்புகளுக்கு ஏதோ ஒரு சிக்னல் கிடைத்தது. 

“ இரு இரு.. ஏதோ ஒரு இனிப்பு வாசனை வருகிறது..என்று வேக வேகமாக அந்த வாசனை வந்த திசையில் சற்று தூரம் சென்றது. பிறகு அப்படியே நின்று திரும்பியது.

இப்போது குட்டி ஈயைக் காணவில்லை. வீட்டின் பின்வசலில் இருந்த வாய்க்காலின் ஓரம் உட்கார்ந்து அங்கே கிடந்த உணவுத்துகளைத் தின்றுகொண்டிருந்தது குட்டி ஈ.

“ மனிதர்கள் தங்களுடைய வீட்டை, தெருவை, சுற்றுப்புறத்தை, ஊரை, நாட்டை அசுத்தமாக வைத்திருக்கும் வரை எங்களுக்குக் கவலையில்லப்பா..என்று கத்தியது குட்டி ஈ.

நீ சொல்வதும் சரிதான்..என்று சொல்லிக் கொண்டே உணவைத் தேடி தன்னுடைய நீண்ட பயணத்தைத் தொடர்ந்தது குட்டி எறும்பு.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

3.

1 comment:

  1. என்னத்த சொல்ல ... சுத்தம் சோறு போடும்... நம்ம அசுத்தம் நாட்டையே மணக்க வைக்குதுல்ல...

    ReplyDelete