குண்டான்
தவளையும் சுண்டான் எலியும்
உதயசங்கர்
ஒரு குளக்கரையில்
சுண்டான் எலியும் குண்டான் தவளையும் நண்பர்களாக இருந்தனர். பகலில் சுண்டான் எலி தன்னுடைய
வளைக்குள் தூங்கும். குண்டான் தவளை குளத்தின் ஆழத்தில் மூழ்கி பாசிகளைச் சாப்பிடும்.
, சிறு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடும்.
இரவானதும்
சுண்டான் எலி வளையிலிருந்து வெளியில் வந்து அருகிலிருக்கும் வயலின் கதிர்களை
பற்களால் வெட்டும். அதை வளைக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.
நள்ளிரவுக்குப்
பிறகு இரண்டு பேரும் ஓய்வாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருந்த புளிய மரத்தில்
ஒரு ஆந்தை உட்கார்ந்திருக்கும்.. எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்துக்
கொண்டிருக்கும்.
அன்று
இரண்டும் உட்கார்ந்து குசுகுசுன்னு ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று
மழைத்தூறல் விழுந்தது. உடனே சுண்டான் எலி,
“ என்னடா
திடீரென்று மழை பெய்யுது..” என்று
சொன்னது.
உடனே
குண்டான் தவளை “ நான் சத்தம் கொடுக்காமல் மழை வரக்கூடாதே.. எப்படி வந்தது..கொர்ர் கொர்ர்
கொர்ர்ர் ” என்று கத்தியது. அது கத்தியதைக்
கேட்ட மற்ற தவளைகளும் கொர் கொர் கொர் கொர் என்று கத்தின.
சுண்டான்
எலி சிரித்தது.
“ இயற்கையை
நீ எப்படி கட்டுப்படுத்தமுடியும்?.. மழைக்காலத்தில் குளம் குட்டை கிணறு ஆகியவற்றில்
நீர் நிரம்பும்.. அது தான் உங்கள் இனம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலம் என்று
உனக்குத் தெரியும்.. அப்போது ஆணும் பெண்ணும் மாறி மாறிக் கூப்பிடுவீர்கள்.. மற்றபடி
நீ கத்தினால் மழை வரவேண்டும் என்பது கொஞ்சம் ஓவர்..”
என்றது
சுண்டான் எலி. அதைக் கேட்ட குண்டான் தவளைக்குக் கோபம் வந்தது. சுண்டான் எலி மீது பாய்ந்தது.
சுண்டான் எலியோ வளைக்குள் ஓடப் பாய்ந்தது. அப்போது விர்ரென்று பறந்து வந்த புளிய மரத்து
ஆந்தை இரண்டு கால்களால் இரண்டு பேரையும் தூக்கிக் கொண்டு பறந்தது.
அப்போதும்
குண்டான் தவளை சுண்டான் எலியைப் பார்த்து,
“ பாரு நான் உன்னை என்ன பண்றேன்னு..” என்று கத்தியது.
சுண்டான் எலியும், “ போடா உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது..வெவ்வே வெவ்வே..”
என்று வக்கணை காட்டியது.
ஆந்தை
பசியுடன் காத்திருக்கும் தன் குஞ்சுகளை நினைத்து வேகமாகப் பறந்தது.
நன்றி - மந்திரத்தொப்பி
வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்
Super sir
ReplyDeleteஉங்கள் எல்லா கதைகளையும் படித்தேன் அனைத்தும் மிக மிக அருமை
ReplyDeleteஐயா
ReplyDelete