Tuesday, 17 December 2024

யார் அந்தப் பயங்கர விலங்கு?

 

யார் அந்தப் பயங்கர விலங்கு?

உதயசங்கர்

வீட்டுப்பரணில் ஒரு எலிக்குடும்பம் வசித்தது. அந்தக் குடும்பத்தில் லிசா, முசா, குசா, புசா என்று நான்கு குட்டி எலிகள் இருந்தன. அந்தக் குட்டி எலிகள் பிறக்கும்போது வெள்ளை வெளேரென்று பால் நிறத்தில் இருந்தன. இப்போது கருஞ்சாம்பல் நிறத்தில் முடி முளைக்க ஆரம்பித்தது. அம்மா எலி கொண்டுவந்து கொடுக்கும் தீனியைச் சாப்பிட்டு பரணிலேயே சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன குட்டி எலிகள்.

ஒருநாள் அம்மா எலி நான்கு எலிக்குட்டிகளையும் அழைத்தது.

குழந்தைகளே! இன்று நீங்கள் வெளியே போய் சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் வாருங்கள்.. உலகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்..

என்று சொன்னது. லிசா, முசா, குசா, புசா நான்கு குட்டி எலிகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. உடனே புறப்பட்டன.

குட்டி எலிகளை அனுப்பி விட்டு அம்மா எலி கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தது.

போன ஒரு மணிநேரத்தில் லிசா குட்டி எலி ஓடி வந்தது.

அம்மா எலி, “ சொல்லு லிசா.. என்ன பார்த்தாய்? “ என்று கேட்டது.

“ ஒரு பயங்கரமான பறவையைப் பார்த்தேன்… அது வானத்தில் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.. திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து என்னைக் கால்களால் கவ்வப் பார்த்தது.. நான் அருகிலிருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்து தப்பித்து விட்டேன்..

என்று லிசா குட்டி எலி சொன்னது.

“ எப்போதும் நாலாபுறமும் மேலும் கீழும் கூட எச்சரிக்கையாக பார்த்துப் போக வேண்டும்..அந்தப் பறவை பருந்து நல்லவேளை நீ தப்பித்து விட்டாய்

என்று அம்மா எலி சொன்னது.

மத்தியானம் முசா வந்தது.

“ என்ன நடந்தது முசா? “ என்று கேட்டது அம்மா எலி.

“ நான் ஒரு பயங்கரமான விலங்கைப் பார்த்தேன்… அதிலிருந்து கருவாட்டு மணம் வந்தது.. அது ஒரே இடத்தில் அசையாமல் இருந்தது. அதன் வயிறோ வாயோ திறந்திருந்தது. வயிற்றுக்குள்ளே ஒரு சிறு துண்டுக்கருவாட்டை ஒரு இரும்புக்கம்பியில் வைத்திருந்தது… அந்த மணம் என்னை அப்படியே இழுத்தது.. அப்போது இன்னொரு எலி அதில் நுழைந்து கருவாட்டைக் கடித்தது.. அவ்வளவு தான்.. டமாரென்று திறந்திருந்த அதன் வாய் மூடிக் கொண்டது. அந்த எலி அதன் வயிற்றுக்குள் மாட்டிக் கொண்டது..

என்றது முசா எலி.

“ எதற்கும் அவசரப்படக்கூடாது.. நமக்குப் பிடித்ததாக இருந்தாலும் அதனால் ஏதாச்சும் ஆபத்து இருக்கிறதா என்று யோசித்து முடிவெடுக்கவேண்டும்.. நீ பார்த்தது விலங்கு இல்லை.. எலிகளைப் பிடிக்கிற எலிப்பொறி..

என்றது அம்மா எலி.

பின் மதிய நேரத்தில் புசா ஓடி வந்தது.

“ என்ன நடந்தது புசா? “ என்று அம்மா கேட்டது.

“ நான் ஒரு அழகான விலங்கைப் பார்த்தேன்.. அது வெள்ளையும் கருப்பும் கலந்த நிறத்தில் புஸு புஸுன்னு முடியுடன் படுத்துக்கிடந்தது. சோம்பேறி மாதிரி பச்சை நிறக்கண்களுடன் குழந்தை மாதிரி மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டிருந்தது. நான் அதனுடன் விளையாடலாம் என்று நினைத்து அருகில் போனேன்.. அதற்குள் அதை ஒரு குழந்தை தூக்கிக் கொண்டு போய் விட்டது.. இருந்திருந்தால் இன்று ஒரு புதிய நண்பன் கிடைத்திருப்பான்..

என்றது புசா.

“ நல்லவேளை நீ தப்பித்தாய்.. அந்த அழகான விலங்கு தான் நம்முடைய பரம்பரை எதிரி.. ஒரு போதும் அதன் கண்ணில் பட்டு விடக்கூடாது.. சிக்கினால் நார் நாராய்க் கிழித்து சாப்பிட்டு விடும்.. நம்மைப் போன்ற எலிகளைப் பிடிப்பதற்காகவே மனிதர்கள் அதை வளர்க்கிறார்கள்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. அழகைக் கண்டு மயங்கி விடக்கூடாது..

என்று அம்மா எலி சொன்னது.

இரவாகி விட்டது. இன்னும் குசாவைக் காணவில்லை. அம்மா எலிக்குக் கவலை. குசாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லையே. போய்ப் பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டது.

அப்போது குசா மெல்ல சோர்வாய் ஓடி வந்தது.

“ என்ன ஆச்சு குசா?..ஏன் இவ்வளவு தாமதம்.? “ என்று அம்மா எலி கேட்டது.

“ நான் ஒரு இரண்டு கால் விலங்கைப் பார்த்தேன்.. அதனிடமிருந்து தப்பித்து வரத் தாமதமாகி விட்டது.. அந்த விலங்கு உயரமாய் சட்டை பேண்ட் போட்டிருந்தது.. தலைமுடியை வாரி, பவுடர், செண்ட் போட்டு டீசென்டாக இருந்தது.. நான் அந்த விலங்கின் நாகரீகமான தோற்றத்தைப் பார்த்து அருகில் போய் விட்டேன்.. அவ்வளவு தான்.. கொலைவெறியுடன் கையில் கிடைத்த பொருட்களை எல்லம் எடுத்து என் மீது எறிந்தது.. அந்த விலங்கிடமிருந்து தப்பித்து வர இவ்வளவு நேரமாகிவிட்டது… “

“ உங்கள் நான்கு பேரில் நீ பார்த்தது தான் கொடிய விலங்கு.. அந்த விலங்கின்பெயர் மனிதன்.. தான் மட்டும் தான் வாழவேண்டும் என்று நினைக்கிற விலங்கு.. தான் வாழும் இந்த பூமியைப் பற்றியோ, இயறகையைப் பற்றியோ, மற்ற உயிரினங்களைப் பற்றியோ கவலைப் படாமல் அனைத்தையும் அழிக்கிற விலங்கு…. அந்த விலங்கிடம் தான் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… மற்ற விலங்குகள் பசித்தால் மட்டும் தான் சாப்பிடும்.. ஆனல் மனிதன் என்ற இந்த விலங்கு சும்மா விளையாட்டாய் மற்ற விலங்குகளைக் கொன்று மகிழ்ச்சியடையும்.. என்ன தெரிந்ததா? என்றது அம்மா எலி.

“ அம்மா அம்மா நாங்கள் எங்கேயும் போகவில்லை.. இங்கேயே இருந்துக்கிறோம்.. நீயே தீனி கொண்டு வந்து கொடு.. எங்களுக்குப் பயமாயிருக்கு…

என்று லிசா, முசா, குசா, புசா சேர்ந்து கத்தின.

அம்மா எலி சொன்னது,

“ அட அசடுகளா? வாழ்க்கை என்றால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும்.. ஆபத்து, விபத்து எல்லாவற்றையும் கடந்து தான் வாழ வேண்டும்.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. எதற்கும் பயப்படக்கூடாது..

என்று அன்புடன் சொன்னது அம்மா எலி. 

லிசா, முசா, குசா, புசா, நான்கு குட்டி எலிகளும் உற்சாகமாகத் தலையாட்டின.



நன்றி - நான் யார்?

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

No comments:

Post a Comment