Thursday, 26 December 2024

எல்லோரும் தேவை

 

எல்லோரும் தேவை

உதயசங்கர்




ஒரு தோட்டத்தில் குளவியும் தேனீயும் நண்பர்களாக இருந்தன. தேனீ பூக்களில் தேனை உறிஞ்சும். குளவி செடிகளில் புழுக்களைச் சாப்பிடும். தேனீயின் கூடு அழகான கட்டிடம் மாதிரி இருந்தது. குளவியின் கூடு மண்ணைக் குழைத்து பூசிய பொந்து மாதிரி இருந்தது. குளவி கேட்டது,

“ உனக்கும் கொடுக்கு இருக்கிறது. எனக்கும் கொடுக்கு இருக்கிறது. நீயும் கொட்டுகிறாய் நானும் கொட்டுகிறேன்.. ஆனால் உன்னை மனிதர்கள் விரும்புகிறார்கள்.. என்னை வெறுக்கிறார்கள் ஏன் நண்பா? “

“ என் கூட்டில் மனிதர்கள் விரும்பும் தேன் இருப்பதால் நான் கொட்டினாலும் அவர்கள் வெறுப்பதில்லை.என்று தேனீ சிறகுகளை விர்ர்ரென்று அடித்துக் கொண்டே சொன்னது.

சரிதான்.. என்னால் தேனை உருவாக்க முடியாது..என்று வருத்தத்துடன் சொன்னது குளவி.

 பூக்களின் மகரந்தசேர்க்கைக்கும் உதவுகிறேன்.. நான் இல்லையென்றால் இந்த உலகம் சீக்கிரமாக அழிந்து விடும் என்று மனிதர்களுக்குத் தெரியும்

என்று காற்றில் வட்டமாக நடனமாடிக் கொண்டே சிரித்தது தேனீ. குளவிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. யோசித்துக் கொண்டே ஒரு செடியில் போய் அமர்ந்தது. அதன் கண்களில் பூவைத் தின்று கொண்டிருந்த ஒரு குட்டிப்புழு தெரிந்தது. நேரே அதை நோக்கிப் பாய்ந்தது.

அப்போது குளவி சொன்னது,

“ நான் இல்லையென்றாலும் உலகம் அழிந்து விடும்.. தெரியுமா? “

இப்போது தெனீக்குப் புரியவில்லை.

“ என்ன சொல்கிறாய்? “

“ ஆமாம் நண்பா.. நான் இல்லை என்றால் புழுக்களின் எண்ணிக்கை பெருகி செடிகளை, பூக்களை அழித்து விடும்.. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நாங்கள் உதவுகிறோம்.. தெரிந்ததா?

என்று குளவி சொன்னதைக் கேட்டது தேனீ. தன்னுடைய கர்வத்தை நினைத்து வெட்கப்பட்டது. உடனே குளவியிடம்,

“ மன்னித்துக் கொள் நண்பா! நான் கொஞ்சம் கர்வமாகப் பேசி விட்டேன்.. ஆமாம்.. நீயும் இந்த உலகமும் இயற்கையும் அழிந்து விடாமல் பாதுகாப்பதற்கு உதவுகிறாய்.. என்று பணிவுடன் கூறியது.

“ இயற்கையில் யாரும் தேவையில்லாதவர்கள் கிடையாது.. எல்லாருக்கும் வேலை இருக்கிறது.. வா.. நண்பா.. நீ அந்தப் பூவில் இருக்கும் தேனைக் குடி.. நான் புழுக்களைத் தேடுகிறேன்.. என்ன சரிதானே..

என்றது குளவி.

“ ஆகா.. அப்படியே நண்பா.. என்று சொல்லியபடி தேனீயும் குளவியும் விர்ர்ர்ர்ர்ர்ரென்று பறந்தன.

 நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

1 comment:

  1. உலகில் தேவையில்லாதவர்கள் யாரும் கிடையாது... எத்தனை அழகான உண்மை... இதைப் புரிந்துகொண்டால் வாழ்வில் யாரும் யாருக்கும் எதிரியில்லை...

    ReplyDelete